பக்கங்கள்

சனி, 19 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (10)

ன்பின் சிவா!
உங்களுக்கு எதை எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. ரெலிபோனில், ஏதாவது எழுதச் சொன்னீர்கள். நானும் எழுதுவதாகச் சொல்லிவிட்டேன்.
எழுத உட்கார்ந்தால் என்ன எழுதப் போகிறோம் என்பதே மறந்துவிடுகிறது. எழுதுவதற்கு முன்னால் எழுந்த கற்பனைகள், எண்ணங்கள் யாவும் பேனையைக் கையில் எடுத்ததும் வெறுமையாய் வெண்மையாய் மறைந்து போகின்றன. எனினும் எழுத வேண்டும்.
இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். என்னில் எரிச்சலாகக்கூட வரும்.
சிவா! கொழும்புக்கு வந்ததிலிருந்து மனது அமைதியற்ற கடலைப்போல் அலைபாய ஆரம்பித்துவிட்டது. முதன்முதலில் ரெலிபோனில் உங்களின் குரலைக் கேட்டவுடனேயே என் சுயசிந்தனைகள் யாவும் மட்டுப்பட்டுவிட்டன. மறுநாள் கதைத்தபோது
உங்களைப்பற்றிய தேடலில் மனம் விழைந்தது.
பவளம் சித்தி கடிதத்தில் எழுதினா, 'ரொம்ப நிதானமான பையன். வெட்கப்படாமல் தெளிவான சிந்தனையோடு இருக்கிறான். அவனிடம் ஒளிவு மறைவு இல்லை’ என்று.
என் மனம் கடிவாளத்தில் இருந்து தப்பிய குதிரையாகத் தங்களை நோக்கிப்பாய ஆரம்பித்துவிட்டது. அம்மா கூடக் கேட்டா, 'என்னடி சோர்வாக இருக்கிறாய்? பிரிந்து வேறு நாடு போற கவலையா?’ என்று.
என்ன பதில் சொல்வேன்! சிரித்த மழுப்பிவிட்டேன். அவவுக்குத் தெரியும் என்னில் ஏற்பட்ட மாற்றம். ஆனால் காட்டிக் கொள்ளமாட்டா.
நீங்கள் அனுப்பிய போட்டோ கிடைத்தது. அதுமுதல் உங்களின் உருவம் போட்டோவில் அல்ல. என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் உங்களைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று என்னையே ஏமாற்றிக் கொள்ளமாட்டேன். உங்களுடன் சிநேகிதம் ஆகிவிட்டேன் என்று வேண்டுமானால் இப்போதைக்குக் கூறிக் கொள்ளுகிறேன்.
வெறும் சிநேகிதம் அல்ல. மனதால் மகிழ்ந்து நினைத்துக் கற்பனைச் சிறக்கைகளை அகலவிரித்துப் பறக்கவிட்டுக் கற்சிலையாக்கும் போதை கலந்த பேதையாக்கும் சிநேகிதம்.
சிவா! பலவீனம் பெண்களுக்குமட்டும்தானா? ஏன் ஆண்களாகிய உங்களுக்கு இல்லையா?
உங்களுக்கு இவ்வாறு எழுதத் தோன்றவில்லையா? எதையும் தாங்க முடியாத பிறவியா பெண்? இல்லாவிட்டால் என்னால் எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது? இற்றைவரை பெற்றிராத உணர்வுகள் ஏன் என்னைப் பாதிக்க வேண்டும்?!
நான் கற்பனையுள் வாழ்க்கையை நோக்க ஆரம்பித்துவிட்டேனா?
எந்தன் மனம் நிறைந்த சந்தோசமான கிறுக்கல்கள் இவை. இந்தக் கிறுக்கியின் பேனாவில் முளைத்த வாக்குமூலம்.
வாழ்க்கையின் வழி தந்த நிம்மதியில் பிறந்த வாக்குமூலம்.
உங்கள் நிலை எப்படி? சாதாரணமானவைதானா? அல்லது கற்பனைகளில் என்னை விஞ்சியவராகவா? என் எழுத்துக்களின் இரசிகராகவா? அல்லது இப்படியும் ஒருத்தியா என்று பரிகசிப்பவராகவா? எனக்கு உங்களின் நிலையை ஒளிக்காமல் எழுதுவீர்களா? ஆண் என்ற கர்வத்தை விட்டுக் கீழிறங்கிவந்து உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
ஏஜென்சிக்காரன் வந்தான். 'பாஸ்போட் தயாரானதும் பயணம்’ என்றான்.
மொஸ்கோ வந்துதான் உங்கு வரமுடியுமாம். உங்களைச் சந்திக்கப்போகும் அந்த ஆனந்தமயமான நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
அம்மாவை, சகோதரங்களை, பிறந்த மண்ணை, இத்தனை காலம் பார்த்துப் பழகிய முகங்களை எல்லாம் பிரிந்து அந்நியச் சூழலுக்குள் அடைக்கலமாகப் போகிறேன் என்ற கவலை சிலசமயம் கண்களைக் கலங்கவைத்துவிடுகிறது. தலையணையை நனைத்துவிடுகிறது.
மறுகணமே மனதில் பதிந்த உங்கள் போட்டோ எல்லாத் துயர்களையும் துடைத்தெறிந்து, 'பேதைப் பெண்ணே! ஏன் அழுகிறாய்? வாழ்வில் பிரிவுகள் சகஜம். வாழவேண்டுமாயின் சில விலைகளைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்’ என்று ஆறுதல் கூறி நிற்கும்.
நீங்கள் நிச்சயம் பதில்போடுவீர்களா? ரெலிபோனில் கதைப்பதிலும் பார்க்க எழுத்துக்கள்தான் நிலையாக நிற்கும். அவைதான் ஒவ்வொருவரையும் நெருக்கமாக்கித் தரம் காட்டும்.
எழுதுவீர்களா?
அன்புடன்,
உங்களின் அகல்யா.

சிவராசன் வாசித்தான்.
மீண்டும் வாசிக்கவேண்டும் போலிருந்தது.
வாசித்தான். இன்பக் கிளுகிளுப்பு. முதல் அனுபவம்.
அகல்யா.... அகல்யா....
எங்கும் பரந்து எதிலும் நீக்கமற நிறைந்தாள்.
கடிதத்தை மடித்து இதழ்பதித்துப் பத்திரப்படுத்தியபோது, அழைப்புமணி அலறியது.
+++++++

துரும்பு தூணாகுமா??
ஆகலாம் என்பதை அந்தச் சம்பவம் காட்டி யது.
மாதவன் தன்னுடன் பத்துப் பேரைச் சேர்த்துச் சீட்டு நடாத்தினான்.
ஆளுக்கு ஐநூறு மார்க். பத்து மாதம். மொத்தத்தொகை ஐயாயிரம் மார்க். ஏலச் சீட்டு.

''என்னப்பா...."
''என்னடியாத்தை...?"
''இண்டைக்கெல்லே சீட்டுக் கூறுறது.... போகேலையே?"
''பொறு. நேரம் கிடக்கு."
''ஏதோ தொடங்கிப்போட்டம்.... ஒப்பேற்றும்வரையும் கஸ்டம்தான். இது ஆறாவது சீட்டு. கேள்வி எக்கச்சக்கமாய் வருமோ தெரியேலை.... ஏஜென்சிக்காரன் காசுக்கு நெருக்குறான்.... சீட்டெடுத்தால்தானே முழுக்காசையும் கொடுத்துத் தொலைக்கலாம்."
''எனக்குத் தெரியும். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டு.... தேத்தண்ணி கொண்டு வா.... இண்டைக்கு ஏலத்தைக் கூட்ட ஆர் வாறானோ தெரியேலை" என்று சலிப்புடன் முணுமுணுத்தார் கனகரத்தினம்.

தேனீரைப் பருகிவிட்டு மாதவன் வீட்டிற்குச் சென்றார்.
அங்கே சிவநேசனும் வந்திருந்தார்.

''என்ன சிவநேசர்?"
''சீட்டுக் கேக்கத்தான்!"
''நான் நேத்தைக்கெல்லே சொன்னனான். நான் எடுக்கப் போறன் எண்டு."
''ஓம் கனகு. ஆனால் என்ன செய்யிறது. எனக்கும் வீட்டிலை பிரச்சினை. அவசரமாய்க் காசு தேவைப்படுகுது. இண்டைக்குச் சீட்டெடுக்காட்டி மனிசியோடை தப்பேலாது."
''நான் இண்டைக்குச் சீட்டெடுக்கப் போறனெண்டு தெரிஞ்சுதான் வந்திருக்கிறாய்!" என்று சினந்தார் கனகரத்தினம்.
''கனகு. விசர்க்கதை கதையாதை. எனக்கிப்ப காசு தேவை. நீ வேணுமெண்டால் கேள்வியைக் கூட்டிக் கேட்டு எடன்."
''ஓ.... நீ கேள்வியைக் கூட்டத்தான் வந்திருக்கிறாயாக்கும்...."
''என்ன.... அப்பிடிப்பட்ட ஆள் நானில்லை. எனக்குக் காசுதான் முக்கியம் எண்டால் சீதனம் வேண்டாமெண்டு என்ரை சொந்தக்காரப் பொடியனை உங்களிட்டைக் கொண்டந்து தள்ளுவனே?"
''சிவநேசன்! அதுக்கும் இதுக்கும் முடிச்சுப் போடாதை. பெட்டையைக் கூப்பிடத்தான் சீட்டெடுக்க வந்திருக்கிறன்.... நீதான் இப்ப நந்திமாதிரிக் குறுக்கை நிக்கிறாய்."
''சீதனமில்லாமை மாப்பிள்ளையைக் கொடுத்ததும் பத்தாமை இனி சீட்டு அது இதெண்டு எல்லாத்தையும் விடவேணுமே?"

எகிறிக் குதித்தார் சிவநேசன்.

''உன்ரை சொந்தக்காரப் பொடியன்தான் எங்களுக்கு வேணுமெண்டு இல்லை. இப்பிடி ஆயிரம்பேரை மாப்பிள்ளையாய் எடுக்கலாம். ஏதோ உன்ரை அறிமுகத்தாலை அவனைக் கேட்டம். அதுக்காக அவனைவிட்டால் வேறை ஆள் கிடையாது எண்டு துள்ளாதை!"
''எங்கை பாப்பம்...."
''நான் உன்னோடை சவாலுக்கு வரேலை. உண்மையைச் சொன்னனான்."
''ஓ.... எங்கை இந்தச் சம்பந்தம் நடக்கிறதைப் பாப்பம். நான் நடக்க விடமாட்டன். நீ வேறை ஆரையாலும் பார்த்துக்கொள். நான் பொடியனுக்கு நல்ல சீதனத்தோடை கட்டி வைப்பன்."

கனகரத்தினம் திகைத்துவிட்டார்.
அங்கே துரும்பு தூணானது.
சிறிய விசயம் பெரிய பிரச்சியை ஆனது. நட்பு அஸ்தமனமானது.

'சிவராசனை உடனை பார்க்கவேணும்.’
சிவநேசன் மனதிற்குள் கறுவிக்கொண்டார்.
+++++++

சிவநேசனின் திடீர்வருகையை சிவராசன் எதிர்பார்க்கவில்லை. வரவேற்றான்.
கண்கள் சிவந்திருந்தன.
சிறிது குடித்திருப்பார். பிரயாணக் களைப்பாகக்கூட இருக்கலாம்.
சிவநேசன் நேரடியாகவே விசயத்துக்கு வந்தார்.
இந்தத் திருமணம் வேண்டாம் என்றபோது சிவராசன் திகைத்துவிட்டான்.

''அண்ணை. என்ன விளையாடுறியளே? சும்மா இருந்தவனைக் கலியாணம் எண்டு ஆசைகாட்டிப்போட்டு இப்ப இது நடக்காது எண்டால் எப்பிடி?"
''அட போடா. கலியாணங்களிலை இது சர்வசாதாரணம். ஒண்டு குழம்பும். இன்னொண்டு சரிவரும். எனக்கு அவையின்ரை போக்குப் பிடிக்கேல்லை. திமிர்.... திமிர்...." என்று கொதிப்புடன் கூறினார் சிவநேசன்.
''கலியாணம் பேசுறது சாதாரணமாய் இருக்கலாம். ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யப்போறம் எண்ட நம்பிக்கையிலை பேசுற பேச்சுகள் சாதாரணமானவை இல்லை. ரெலிபோனிலை அகல்யாவின்ரை மனதிலை ஆசைகளை நம்பிக்கைகளை வளர்த்துப்போட்டு, இப்ப ஏலாதெண்டால் முடியுமே?"
"உந்தச் சினிமா வசனமெல்லாம் என்னட்டைக் கதையாதை. இப்ப ரண்டிலை ஒண்டு சொல்லு. என்னை அவமானப்படுத்தின குடும்பத்தோடை சம்பந்தம் வைக்கப்போறியோ இல்லையோ?"

வெட்டொன்று துண்டு இரண்டாகக் கேட்டார் சிவநேசன். அவரது கேள்வி அவனுக்குச் சினத்தை ஏற்படுத்தினாலும் அடக்கிக்கொண்டான்.

''நீங்கள் சொன்னவுடனை வாங்குறதுக்கும், வேண்டாம் எண்டால் தூக்கி எறியுறதுக்கும் இது ஒண்டும் உயிரில்லாத பொருளில்லை. ரண்டு உயிர்கள் சம்பந்தமான  இணைப்பு. எங்கையோ பிறந்து எங்கையோ வளர்ந்த முன்பின் தெரியாத அகல்யாவின்ரை அறிமுகத்துக்கு உங்கள் மூலமாய் வாய்ப்புக் கிடைச்சுது. அண்டைக்கு வற்புறுத்தி என்னைச் சம்மதம் கேட்டீங்கள். முடிவெடுக்க வேண்டியவன் நீ எண்டீங்கள். நானும் ஏதோ நடப்பது நடக்கட்டும் எண்டு சம்மதிச்சன். ஆனா இப்ப....? நானும் அவளும் மனதாலை உணர்வுகளாலை ஒருவரையொருவர் புரிஞ்சு நெருங்கி வாற சமயத்திலை எங்கடை உணர்ச்சிகளை எல்லாம் தூக்கிப்போடச் சொல்லுறியள்."
''உங்கள் ரண்டு பேருடைய பிரச்சினைக்காக சம்பந்தப்படாத நாங்கள் ரண்டு பேரும் பாதிக்கப்படுறது எந்தவிதத்திலை நியாயம்? அகல்யா என்னிலை ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துவிட்டாள். அதுக்கு நான்மட்டும் காரணம் இல்லை. நீங்களும்தான். இப்ப அந்த எதிர்பார்ப்புக்களை இடை நடுவிலை ஏமாற்றங்களாக்கி அவளின்ரை மனதை ஊனமாக்க நான் தயாரில்லை."

உறுதியாகக் கூறியவனை ஆத்திரத்துடன் நோக்கினார் சிவநேசன்.

''ஏதோ உலகத்திலை காணாததைக் கண்டவன்போலை ஆரோ ஒருத்திக்காக என்னையே வெறுக்கத் துணிஞ்சிட் டாய். சிவா! இதுதான் எங்கடை கடைசிச் சந்திப்பு."

என்ன மனிதர் இவர்?!
மற்றவர்களுடைய விருப்பு வெறுப்புகளைப்பற்றிச் சிறிதும் எண்ணிப்பார்க்காமல் தன்வழியில் மற்றவர்களும் வரவேண்டும் என எதிர்பார்க்கும் சுயநலப் போக்கு.
எவ்வளவோ சமாதானம் கூறியும் கேளாமல் கோபமாக வெளியேறினார் சிவநேசன்.
மனிதர்கள் பலவகை. அதில் இவரும் ஒருவகை.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!