பக்கங்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (12)

சிவராசன் கூறியதைக் கேட்ட சிவசோதியின் மனம் கொதித்தது.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?
சும்மா கிடந்தவனை வலிய அழைத்து விருந்து கொடுத்து மனதை மாற்றி, அதில் ஆயிரமாயிரம் ஆசைகளை விதைத்துவிட்டு, திடீரென்று எப்படி இவர்களால் தூக்கி எறிய முடிந்தது?!
பாம்பு செட்டையைக் கழற்றிவிடுவதுபோல எப்படித்தான் இவர்களால் மனித உறவுகளை மாற்றியமைக்க முடிகிறது? மனச்சாட்சியை அடகுவைத்து ஆதாயம் தேடும் பச்சோந்திகள்.
எவ்வளவு ஆசையோடு வந்தான். எவ்வளவு கற்பனைகளைச் சுமந்து கொண்டு வந்தான். அத்தனையையும் கசக்கிப் பிழிந்து அவனைச் சக்கையாக எறிய அவர்களால் எப்படித்தான் முடிந்தது?!
காரின் பின் சீற்’றில் அவன் அகல்யாவுக்காக ஆசையோடு வாங்கிய சட்டை அனாதையாக அலங்கோலமாகக் கிடந்தது.

''நான் சட்டையைக் கொடுக்கேக்கை வாங்கினாள். ஆனால் அவையள் பிறந்தநாளாலை வந்தவுடனை அகல்யாவை உள்ளுக்குக் கூட்டிக்கொண்டு போய் கனநேரமாய்க் கதைச்சினம். சட்டையைத் திருப்பித் தந்துவிட்டாள்!"
''ஏனெண்டு கேட்கேல்லையே?!"
''அளவில்லையாம். கலர் சரியில்லையாம். அதை வாங்கின கடையிலையே திருப்பிக் கொடுக்கச் சொன்னாள். அதுக்குப் பிறகு அவள் வெளியாலை வரவே இல்லை."
குரலில் விரக்தி.
''நீ என்னவாலும் பிழையாய்க் கதைச்சனியே?"
''அவள் கதைச்சால் எல்லே என்னவாலும் கதைக்க....  கொழும்பிலை இருக்கேக்கை கதைச்சாள்.... அவளா இவள்? நம்ப முடியேலை.... ஒரு மாதம் மொஸ்கோவிலை நிண்டாள். என்னாலையும் தொடர்புகொள்ள முடியேலை. அதுக்கிடையிலை இப்பிடி மாறிவிட்டாள்!"

சோகமாகக் கூறினான் சிவராசன்.
திருமணம் புரியவென வெளிநாட்டிற்கு வரும் சில பெண்கள் வருகிற வழியில் தங்கும் நாடுகளில் வேறு தமிழ் இளைஞர்களுடன் காதல்வசமாகிப் பாதை மாறிய பறவைகளானதை அறிந்துள்ளான் சோதி.
'அப்படி அகல்யாவும்...?’

மனதில் எழுந்த அபிப்பிராயத்தைச் சிவராசனிடம் தெரிவிக்க முடியாது. பாவம். அவனின் மனம் சங்கடப்படும்.
உதடுவரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

''சிவா! இதிலை என்னவோ இருக்குது. சிலவேளை கனகரத்தினமும் பவளமும் அகல்யாவின்ரை மனதை மாத்தியிருக்கலாம்...!"
''எப்படி.... எப்படி.... அவைதானே அவள் ஜேர்மனிக்கு வந்ததை எனக்கு அறிவிச்சவை. கனகரத்தினம் அண்ணைதான் என்னைத் தனிய கூட்டிக் கொண்டுபோய் சொன்னார் அவளுக்கு என்னைப் பிடிக்கேல்லை எண்டு!"
''ஏனெண்டு கேட்டனியே?"
''கேட்டன்.... என்னவோ பிடிக்கேலையாம்."
''இவையளாலும் அவளோடை கதைச்சு மனதை மாத்தியிருக்கலாம் எல்லே..."
''அதுதான் எனக்கும் விளங்கேலை. தங்கடை பேச்சை அவள் தட்டமாட்டாள் எண்டு சொன்னவைதான் அவை. இப்ப அந்தக் கதையில்லை. அவளுக்குப் பிடிக்காட்டி எங்களாலை ஒண்டும் செய்யேலாது எண்டு கையை விரிக்கினம். என்னாலை அவள் இப்பிடிச் சொல்லியிருப்பாள் எண்டு நம்ப முடியேலை..."
''நீ அவளிட்டையே நேரை கேட்டிருக்க வேணும்!"
''அவள் வெளியாலை வந்தால்தானே.... அறையுக்கை போய் கதவைச் சாத்தினவள் பேந்து வரவே இல்லை...!"
''நினைச்சவுடனை மாட்டுறத்துக்கும் பிடிக்காட்டிக் கழட்டி எறியவும் நீ என்ன உடுதுணியா? இதை இப்பிடியே விடக் கூடாது. ரண்டிலை ஒண்டு பார்க்க வேணும்.... அப்பதான் புத்தி வரும்."

கோபத்துடன் கூறினான் சோதி.

''அவள் மாட்டன் எண்டு சொல்லேக்கை என்னடா செய்ய முடியும்? இனி அவளை வற்புறுத்திச் சம்மதிக்க வைச்சாலும் அப்பிடி அமையிற வாழ்க்கை ஒரு வாழ்க்கையே? எனக்கும் கலியாணத்துக்கும் பொருத்தமில்லைப் போலை!" என்று தழுதழுத்தான் சிவராசன்.

கண்கள் கலங்கி நீரைக் கொட்டத் தயாராகின.

''சிவா, நீ எதுக்கும் கவலைப்படாதை. ரெலிபோனிலை நல்ல மாதிரிக் கதைச்சவள், கடிதங்களிலை கனவுகளை எழுதினவள், நீ இலங்கைக்கு அனுப்பின பரிசுகளை மறுக்காமல் ஏற்றுக் கொண்டவள் திடீரெண்டு மனதை மாற்றினாள் எண்டாள்.... இதிலை என்னவோ இருக்கு. அது என்னெண்டு தெரிய வேணும். இவ்வளவு நாளாய் உன்னோடை நெருங்கி வந்த ஒருத்தி திடீரெண்டு மனதை மாற்றிக் கொள்ள மாட்டாள். அதாலைதான் சொல்லுறன்.... கொஞ்ச நாளைக்கு நீ எதுக்கும் யோசிக்காமை இரு. நான், பாலன், கேசவன் எல்லாரும் அவையை நேரிலை சந்திச்சு என்னெண்டு கேக்கிறம்..."

உறுதியாகக் கூறியபோது சற்று நம்பிக்கை பிறந்தது.
+++++++

சோதி, கேசவன், பாலன் எல்லோரும் கனகரத்தினத்தின் வீட்டிற்குச் சென்றார்கள்.
அவர்கள் கூட்டமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
'உள்ளே வரச் சொல்வோமா?’ என்று தீர்மானிப்பதற்குள்ளாகவே நுழைந்தார்கள்.
''தம்பியவை..."
''நாங்கள் ஏன் வந்திருக்கிறம் எண்டது உங்களுக்குத் தெரியும்... கூப்பிடுங்க அகல்யாவை. ஏனிப்படி ஒருத்தன்ரை வாழ்க்கையோடை விளையாடினவ எண்டு கேக்க வேணும்."
''தம்பியவை வீணாய் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம்...."
''நாங்கள் பிரச்சினை கிளப்ப வரேல்லை. நீங்கள்தான் பிரச்சினையளை வளர்த்துக்கொண்டு போறீங்கள். நம்பினவனைக் கழுத்தறுத்துப் போட்டீங்கள். ஒருத்தனைப் பைத்தியக்காரனாக்கப் பாக்கிறீங்கள். இது என்ன நியாயம்?"
''அகல்யாவுக்குப் பிடிக்கேல்லை. இதுக்குப் பிறகு எங்களாலை என்ன செய்ய முடியும்? மனதுக்குப் பிடிக்காதவனை வில்லங்கமாய்க் கட்டிவைக்கச் சொல்லுறியளோ?"
''எதுக்கும் நேரிலை வந்து சொல்லச் சொல்லுங்கோ!"
''என்ன நேரிலையோ...?" என்று கோபமாகக் கேட்டவர்,
''ஒரு குமர்ப்பிள்ளையை உங்களுக்கு முன்னாலை வந்து சொல்லச் சொல்லுறியளோ?" என்று கத்தினார்.
''குமர்ப்பிள்ளை கடிதம் எழுதலாம். ரெலிபோனிலை கதைக்கலாம். அதிலை பிழை இல்லை. இப்ப எங்களுக்கு முன்னாலை வாறதுதான் பிழையோ?" என்று பதிலுக்குக் கேட்டான் கேசவன்.
''சும்மா பூச்சாண்டி காட்டாதேங்கோ... ஒருத்தன்ரை இல்லாத பொல்லாத ஆசைகளை வளர்த்து இப்ப புண்ணாக்கிப்போட் டு வாழலாம் எண்டுமட்டும் கனவு காணாதேங்கோ. அவனிலை என்ன குறை? என்ன தகுதி இல்லை? அதைச் சொல்லுங்கோ. வேறை இடத்திலை கலியாணம் கட்டி வைக்கலாம் எண்டுமட்டும் நினைச்சுப் பாக்க வேண்டாம். போஸ்டர் அடிச்சு ஒட்டுவம். அவனுக்கு இதிலை விருப்பமில்லாட்டியும் அகல்யா எழுதின காகிதங்களைப் போட்டோக் கொப்பி எடுத்து எல்லா இடமும் கொடுப்பம். பேந்து உங்களாலை தலைநிமிர்ந்து நடக்கேலாது" என்ற சோதியின் சீற்றத்தின் முன்னால் விக்கித்து நின்றார் கனகரத்தினம்.
''அவசரப்படாதேங்கோ தம்பியவை.... முதலிலை இருங்கோ.... இந்தாளுக்கு என்ன பேச வேணுமெண்டே தெரியாது" என்றவாறு இடையே வந்தாள் பவளம்.
''தம்பியவை.... உங்களிட்டை ஒண்டு கேக்கிறம். அதுக்குப் பதிலைச் சொல்லிப்போட்டு நியாயத்தைக் கதைப்பம்."
''சொல்லுங்கோ!"
''இப்ப நாங்கள் பத்தாயிரம் மார்க்குக்கு மேலை செலவழிச்சுக் கூப்பிட்டம். இனி கலியாணத்துக்கு இன்னும் ஒரு பத்தாயிரமாலும் வேணும். அவள் எங்கடை பிள்ளை.... மணவறை வீடியோ எண்டு சிறப்பாய்த்தான் செய்ய வேணும். அவராலை அவ்வளவு சிறப்பாய்ச் செய்ய முடியுமே?"

கேசவனும் சோதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

''அவர் இப்பவே கடனோடை இருக்கிறார். இன்னும் அவர் தன்ரை குடும்பத்துக்காகச் செய்ய வேண்டியது நிறைய இருக்குது. இந்த லட்சணத்திலை இவளையும் அங்கை தள்ளச் சொல்லுறியளே?"
''இதை நீங்கள் முதலிலையெல்லே யோசிச்சிருக்க வேணும்..."
''அப்ப நீங்கள்தான் இந்தக் கலியாணத்தை விரும்பேல்லை..?"
''ஓம். நாங்கள்தான். இது நாங்களாய் யோசிச்சு எடுத்த முடிவில்லை. மற்றச் சனங்கள் சொல்லிச்சுதுகள். அதாலை யோசிச்சம். சரியாய்ப்பட்டுது. நாளைக்கு எங்கடை சொந்தக்காரச் சனங்கள் பெறாமகள் எண்டதாலைதானை இப்பிடி ஒரு சம்பந்தத்தைச் செய்தவை எண்டு கதைக்கக்கூடாது. அதாலைதான் இப்பிடியொரு முடிவெடுத்தம்!"
''உண்மைதான். நீங்கள் முடிவெடுத்ததிலை பிழை இல்லை. ஆனால் காலங்கடந்து எடுத்த முடிவு. இதாலை இன்னொருத்தன்ரை வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படும் எண்டதை நினைச்சுப் பாருங்கோ. ஒருத்தன்ரை அழிவிலைதான் உங்கடை பெறாமகளின்ரை வாழ்க்கை அமைய வேணுமா?"
''இன்னொண்டு.... அகல்யாவும் சிவராசனிலை ஆசைப்பட்டிருக்கிறா. அவவின்ரை ஆசாபாசங்களையும் அழிக்க நினைக்கிறியள்...."
''அவள் எங்களிட்டை இதைப்பற்றி ஒரு மூச்சுக்கூட விடேல்லை...."
''நீங்கள் செய்த உதவியளை நினைச்சுப் பேசாமல் இருக்கலாம்!"
''தம்பியவை, ஏதோ நடந்துபோச்சு. அகல்யாவும் சிவராசனிலை ஆசைப்பட்டிருந்தால் அதுக்குமேலையும் நாங்கள் குறுக்கை நிக்கமாட்டம். ஆனால் ஒண்டு.... நாங்கள் அவளிலை அக்கறைப்பட்டவங்கள். அவள் கண் கலங்காமை வாழவேணும்...."

தொண்டையைக் கனைத்துக்கொண்டு தொடர்ந்தார் கனகரத்தினம்.

''நாலுபேர் நாலுவிதமாய்க் கதைக்கக்கூடாது. அந்த நல்ல எண்ணத்திலைதான் முதலிலை பின்வாங்கின்னாங்கள். இப்ப கலியாணம் செய்து வைக்கிறம். ஆனால் அதுக்கை சிவராசன் ஒண்டு செய்யவேணும்."

எல்லோரும் அவரைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்கள்.

''அகல்யாவின்ரை பெயரிலை பத்தாயிரம் மார்க் 'பாங்க்’கிலை போடவேணும். இது அகல்யாவின்ரை எதிர்காலத்துக்கு..."
''பத்தாயிரம்.... அவன் போடுவான்!"
''எப்பிடி?" என்று நம்பாமல் பார்த்தார் கனகரத்தினம்.
''நாங்கள் இருக்கிறம். இந்தப் பத்து வருசமாய் அவனோடை பழகினவங்கள் நாங்கள். நாங்கள் சொந்தமில்லை. ஆனால் இந்த அந்நிய மண்ணிலை ஒருவர்மேலை ஒருவர் அக்கறைப்பட்டவங்கள். எங்களுக்கு ஒண்டெண்டால் அவன். அவனுக்கு ஒண்டெண்டால் நாங்கள். இது சொந்தத்துக்கு மேலான பந்தம். இதுக்காகப் பத்தாயிரமென்ன, இருபதாயிரம் கேட்டாலும் தருவம். நீங்கள் கலியாணத்துக்கான அலுவல்களைக் கவனியுங்கோ.... நாங்கள் காசோடை வாறம்.."

அவர்கள் போய்விட்டார்கள்.

''ஏனப்பா பத்தாயிரமெண்டு கேட்டனீங்கள்? என்ன நினைப்பாங்கள்?"
கடிந்தாள் பவளம்.
’'காசாசையாலை கேட்கேல்லை. இதொரு பரீட்சை.... இப்பிடி நாலு சிநேகிதர் இருந்தால் சிவராசன் முன்னேறிவிடுவான்!"


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!