பக்கங்கள்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (9)

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளிலேயே தீர்மானிக்கிறார்கள்.
இது சாத்தியமா? முடியுமா?
எப்படி? எப்படி?
வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பெயர்.
வந்து பத்து வருடங்களுக்கு மேல். கையில் காசில்லை. வரவிற்கு மேல் செலவு. பலரிடம் கடன்.
சொன்னால் நம்பமாட்டார்கள். பொய் என்பார்கள்.
எல்லோரும் பிளேன் ரிக்கற்றுடனும் சில நூறு டொலர்களுடனும்தான் வந்தார்கள். சோசல் காசில்தான் வாழ ஆரம்பித்தார்கள். கார் வாங்கி ஓடுகிறார்கள். பவுண் பவுணாக வாங்கி
மாட்டுகிறார்கள். வட்டிக்குக் கொடுத்து வசூலிக்கிறார்கள். கடை எடுத்து முதலாளியாகிறார்கள். இத்தனையும் இந்தப் பத்துவருடங்களுக்குள் நிகழ்ந்த சாதனைகள்.
அவர்களைப்போல் உன்னால் ஏன் முடியவில்லை?
இயலாமையா?! ஊதாரித்தனமா? அல்லது வேசமா?
இல்லை நம்புங்கள். முடிந்தது இவ்வளவுதான்.
குடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடமைகள் காத்திருக்கின்றன. இவைகளைத் தாண்டித் திருமணத்தை நினைக்க முடியுமா?
ஏற்கெனவே திருமணம் என்ற பெயரில் ஏற்பட்ட ஏமாற்றம் மனதில்  வடுவாகிப்போன  நிலையில் மறுபடியும்  ஒரு திருமணம் என்ற பந்தம் சாத்தியமா?
இவர்களுக்கு என்ன கூறுவது?!

தன்னைப்பற்றிக் கூறினான். தன் நிலையை விபரித்தான்.

''சீதனம் வேண்டுறதிலை எனக்கும் விருப்பமில்லைத்தான். ஆனால் நான் இப்ப கடனாளி. என்னட்டைக் காசு இருக்குமெண்டு நினைக்காதீங்கோ."
''தம்பீ! காசு இண்டைக்கு வரும் நாளைக்குப் போகும். காசென்ன தம்பி பெரிய காசு. எல்லாத்துக்கும் மனம்தான் வேணும்."
''நீங்கள் சொல்லலாம். ஆனால் அகல்யாவின்ரை எதிர்பார்ப்புக்களும் இப்பிடி இருக்குமெண்டு சொல்லேலாதே."
''அவள் எங்களோடை வளர்ந்த பிள்ளை. நாங்கள் சொன்னால் எதையும் தட்டமாட்டாள். உங்கடை படத்தைக்கூட அவளுக்குக் காட்டத் தேவையில்லை. குடும்பத்தின்ரை கஸ்டம் தெரிஞ்சு வளந்தவள். எங்கடை பேச்சை மீறமாட்டாள்" என்று பவளம் நம்பிக்கையுடன் கூறினாள்.
''எல்லாரும் சாதியில்லை எண்டு கதைப்பினம். ஆனால் கலியாணம் எண்டால் என்ன சாதி எண்டுதான் பார்ப்பினம். பேசிச் செய்யுற சம்பந்தங்கள் சாதியெண்ட வட்டத்துக்காலை வெளிய வந்ததில்லை. எங்கடை குடும்பத் தொழில் மரத்தொழில்தான்...."
“எனக்கெல்லாம் தெரியும் தம்பி. சிவநேசன் சொன்னவர்."
''இன்னுமொரு விசயம். எனக்கு முந்தியொருக்கால் கலியாணம் பேசினவை. அத என்ரை சொந்தக்காரன் ஒருத்தனாலை நடக்கேல்லை. நான் இப்ப ஓமெண்ட பேந்து இதுவும் நடக்காமைப் போனால் என்னாலை தாங்கேலாது...."
''தம்பி! நீர் ஏ அப்பிடி நினைக்கிறீர்? பிள்ளை தங்கப் பவுண். அப்பிடி உனக்கு எங்கடை கதையிலை ஐமிச்சமெண்டால், நாங்கள் அகல்யாவைக் கொழும்புக்குக் கூப்பிடுறம். நீர் ரெலிபோனிலை கதையுமன்...."
''இங்கை  பார்  சிவா....  கனகு  எல்லாத்தையும் யோசிச்சுத்தான் கதைப்பார். எதையும் காலாகாலத்திலை செய்யுறதுதான் முறை. உனக்கும் வயதாகுது. குடும்பத்தையும் பார்க்கவேணும். அதுக்காக வாழ்க்கையைத் தொலைச்சுப்போட்டு பின்னடிக்குக் கஸ்டப்படக்கூடாது. உன்ரை கொப்பரும் உனக்கொரு சம்பந்தத்தைப் பேசி முடிக்கச்சொல்லி ஒரே ஆக்கினை. வலியவாற சீதேவியைக் காலாலை மிதிச்சுப் போடாதை!"

சிவநேசன் அர்த்தத்துடன் கூறிவிட்டுச் சிவராசனைப் பார்வையால் ஊடுருவினார்.
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று!
ஒவ்வொன்றின் இயக்கமும் ஒரு சக்தியின் ஏவுதலின் பிரகாரம் செயற்படும்போது, இது இப்படித்தான் நிகழ வேண்டுமென்ற நியதி நியாயமானால், அதை மாற்றி அமைக்கவா முடியும்?
சிவராசனால் மறுக்க முடியவில்லை. அரை மனதுடன் சம்மதம் தெரிவித்தான்.
கனகரத்தினமும் பவளமும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
+++++++

யந்திரமான வாழ்க்கையில் மீண்டும் ஒரு வசந்தகால அழைப்பு.
நிகழ்ந்ததைக் கடிதத்தில் விபரித்துத் தந்தைக்கு அனுப்பினான்.
மறுவாரமே கொழும்புக்கு வந்ததை அறிவித்தார் நமசிவாயகம்.

''ரொம்பச் சந்தோசம் தம்பி. உனக்கொரு இடமும் காலாகாலத்திலை சரிவரேலை எண்ட கவலை தீர்ந்ததிலை ரொம்பச் சந்தோசம். இப்பதான் கடவுள் கண்ணைத் திறந்திருக்கிறார்."
பாசத்துடன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

''ஐயா! அகல்யாவும் தாயும் கொழும்பிலைதான் வந்து நிக்கினம்!"
''நீ கதைச்சனியே....?"
''நேற்றுத்தான் கதைச்சனான். தாய்க்கும் சந்தோசமாம். அகல்யாவுக்கும் இதிலை பரிபூரண சம்மதமாம்...."
''எங்கை நிக்கினம்....?"
''கொட்டாஞ்சேனையிலை ஒரு லொட்ஜிலை. நீங்களும் ஒருக்கா நேரிலை போய்ப் பாருங்கோவன்."
''கட்டாயம் போவன்...."
''வரதன் எப்பிடி இருக்கிறான்? போய்ப் பாத்தனீங்களே?"
''பார்த்தனான்.... அவசர புத்தியாலை கனடாவெண்டு இருந்த கடையையும் வித்துப்போட்டு இப்ப கஸ்டப்படுறான். வேறையொரு கடையிலை வேலைக்கு நிக்கிறான்...."
''எனக்கும் உதவி செய்ய ஆசைதான்...."
''எல்லாருக்கும் கிள்ளித் தெளிக்க உன்னாலை முடியுமே? எல்லாம் ஆண்டவன் விட்டவழி."
''நீங்கள் என்னவாலும் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்தனீங்களே..."
''நான் என்னத்தைக் கொடுக்க.... பார்ப்பம்.... ஊருக்குப் போகேக்கை கையிலை இருந்தாப் பார்ப்பம்...."
''நான் கொஞ்சம் காசனுப்பிறன்.... வரதனுக்கும் ஏதாலும் கொஞ்சம் கொடுங்கோ...."
''எங்களுக்காக நீ உங்கை கண்டபடி கடனாளியாகாதை. இனி உனக்கொரு வாழ்க்கை அமையப்போகுது. வாற பிள்ளையைக் கண்கலங்காமைக் காப்பாத்துறதுதான் உன்ரை முதல் கடமை."

எத்தனையோ கடமைகள்!
அவற்றுடன் ஒரு புதுக்கடமை. தலையாய கடமை. உதிரத்தில் உதிக்கப் போகும் உறவுகளுக்கான உன்னதக் கடமை.
மகனின் உறவு உற்பத்திக்காகத் தேவைகளைத் தியாகம் செய்யத் தயாரான அப்பா.
அப்பாவை நினைக்கப் பெருமையாக இருந்தது.

நேற்றுத்தான் அகல்யாவுக்கு ரெலிபோன் எடுத்தான்.
ரெலிபோனில் தடுமாறினாள்.
முதன்முதலாக என்ன கதைக்க முடியும்?
''உனக்கு இதில் சம்மதமா?"' என்று கேட்டான்.
''கனகுச் சித்தப்பாவிடம் நம்பிக்கை இருக்கிறது!" என்றாளே.

யதார்த்தமான பதில்.
உண்மைதான். அவளுக்கு அவனைத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்து என்ன வரப்போகிறது என்ற அலட்சியம். வாழ்வதற்காகத் தினமும் போராடும் குடும்பத்தின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற  அவதி. அந்த நன்றி அவளின் குரலில் தொனித்தது.

'போதும் உன்கதைகள். நீ முன்பின் அறிமுகமில்லாதவன். என் மனத்துயரைத் துடைக்க முன் வந்தவன். நீரோடையான என் உணர்வுகளில் மூழ்கி முத்தெடுக்க முயல்பவன். நீ என்னைக் குழப்பலாம். நான் குழம்பலாம். ஆனால் இன்றுவரை நான் உன் காதலி அல்ல. நீ என் காதலன் அல்ல. திருமணம் என்ற மனிதவாழ்வின் அத்தியாயத்தில் கவிதை பாட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்."
'ஆகவே முதல் அறிமுகத்திலேயே மனம்விட்டு என்னால் பேச முடியாது. என் விருப்பு வெறுப்புக்களைக் கூற முடியாது. உன்னாலும் அப்படித்தான். ஆனால் என்னிடம் பலவற்றை அறியவேண்டும் என நினைப்பாய். நானும் அப்படித்தான். ஆனால் தொலைபேசி உரையாடல் என்றாலும் என்னால் சரளமாகக் கதைக்க முடியாது. ஏனெனில் இது என் முதல் ஆரம்பம். அதனால் விளைந்தது இந்தத் தயக்கம்.’

''அம்மாவோடை கதையுங்கோ" என்று தயக்கத்துடன் ரெலிபோனைத் தாயாரிடம் கொடுத்து விலகினாள் அகல்யா.
தாய்மனம் நன்றி சொன்னது. அவனைத் தெய்வமாகக் கொண்டாடியது.

''பவளம் அங்கை ஆரோ ஏஜென்சியிட்டைக் காசு கொடுக்கினமாம். பிள்ளை கெதியாய் உங்கை வருவாள். அது மட்டும் லொட்ஜிலைதான் நிப்பம்."
''அப்ப நான் நாளைக்கு எடுத்துக் கதைக்கிறன்."

மீண்டும் மீண்டும் அவளுடன் கதைக்க வேண்டும். புதிய பந்தத்தின் பாசத்தை வளர்க்க வேண்டும்.
தூங்கிய ஆசைக் கனவுகள் மீண்டும் சோம்பல் முறித்து உசாராகியது. இனி அவற்றின் சன்னதங்கள் தொடரும். அந்தச் சன்னதங்களின் பின்னால் காதல் ஊற்றுச் சுரக்கும். அதற்கு முன்னே காமம் வழிசமைக்கும்.
ஒரு ஆணின் மிகக் கேவலமான உணர்ச்சி இதுவாகத்தான் இருக்கவேண்டும் எனச் சிவராசன் உணர்ந்தான். சோர்வுடன் படுக்கையில் சாய்ந்தான்.
ஆனால் இது உண்மை. எங்கோ அடிமனதில் ஆழமாக அமிழ்ந்து கிடந்த காமம் என்ற பலவீனம் சுண்டிவிடப்பட்டு பளீரென்றடிக்கும் மின்னலாகிய உண்மை. காமம் தவறோ? தவறெனில் ஏன் இயற்கை ஆனது? இன்னார்க்கு இன்னாரென்ற போதிலும் ஏன் அவசரமாக அலறிப்புடைத்து எழுகிறது?
இது இயற்கையுடன் விளைந்த போராட்டம்.
இந்தப் போராட்டத்தின் வெற்றிதான் அன்பா? இந்த வெற்றியின் வழியை எவரும் சொல்லித் தரவில்லை.
ஆசானில்லாத அனுபவப் படிப்பு. இதுவரை சொல்லித் தந்தவைகள் யாவும் இந்த விசயத்தில் முரணாக அல்லவா முரண்டு பிடிக்கின்றன.
மோகத்தை இழிவென்றார்கள். மூச்சை நிறுத்தி விடு என்றார்கள். தேகத்தைச் சாய்த்து விடு என்றார்கள். ஆனால் இயற்கை முரணாகவே தோற்றமளிக்கிறது.
படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டான் சிவராசன்.
'நாணிட்டு நல்லறிவிழந்த காமம்
வில்லுமிழ் கணைபோல சேட்படவே.’

அகல்யாவுக்கு அடிக்கடி ரெலிபோன் எடுத்தான்.
தற்போது அகல்யா கூச்சம் தெளிந்தாள்.

''கடிதம் எழுதுவியா?"
''என்ன எழுதுறதெண்டே தெரியேல்லை!"
''உன்னை எழுது. உன் மனதை எழுது. உன் உணர்வுகளை எழுது."

அவர்களின் உரையாடல் வளர்ந்தது. கதைப்பதில் தாராளம் காட்டினாள்.
கள்ளமில்லாமல் கலகலவெனச் சிரிக்கவும் செய்தாள்.
நமசிவாயகமும் கதைத்தார். ரெலிபோனில்தான்.

''நேத்து அங்கை போனனான். தங்கமான பிள்ளை. தாய் மனுசியும்தான். கதைக்கப் பேச நல்ல சனங்கள்."
''ம்...."
''அகல்யாவுக்கு சீலையொண்டு வாங்கிக் கொண்டு போனனான். காய்கறியளும் வாங்கிக் கொண்டு போய் அவையோடை சமைச்சுச் சாப்பிட்டன். பெட்டையின்ரை கையிலை ஆயிரம் ரூபாயும் கொடுத்தன்."
''ம்...."
''நீ இவ்வளவு காலமும் காத்துக்கிடந்ததுக்கு கடவுள் கைவிடேலை. அந்தப் பிள்ளை கஸ்டத்திலை வளர்ந்ததிலையாக்கும் எல்லாத்தையும் கொண்டு நடத்துவாள்போலை தெரியுது!"
''ம்...."
''இதுக்கு சிவநேசனுக்குத்தான் நன்றி சொல்லவேணும்.... அவன் இருந்ததாலைதானை இப்பிடியான இடம் அமைஞ்சது."


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!