பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (11)

''அகல்யா வந்துவிட்டாள்!"
பவளம் ரெலிபோனில் கூறினாள்.
'என் அகல்யா வந்துவிட்டாள்!
சந்தோசத்தில் கூவவேண்டும் போலிருந்தது.
எண்ணாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருந்து எனக்காக, என் உறவுக்காக ஒரு உயிர் பறந்து வந்திருக்கின்றது.
'இதோ வந்துவிட்டேன் அகல்யா...! இனிமேல் என்னால் உன்னைக் காணாமல் இருக்க முடியாது. உன்னைக் காணாத கண்ணும்
கண்ணல்ல. உன்னை நினையாத நெஞ்சும் நெஞ்சல்ல. உடனே உன்னருகே வரவேண்டும். உன் முகத்தை, அதில் கொழுகொழுவென உருண்டோடும் கண்களை, கரிய கூந்தலை, காதில் ஆடும் ஜிமிக்கிகளை, முத்துப் பல்வரிசையை, இத்தனைக்கும் மேலாக உன் சுவாசத்தை நான் அருகிருந்து நுகரவேண்டும்!’

''தம்பி எப்ப வாறீங்கள்.... அகல்யா வந்ததிலையிருந்து பிரமை பிடிச்சவள்மாதிரி இருக்கிறாள்....!"
''ஊர் ஞாபகமாய் இருக்கும்!"
''நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்!"
''நான் எப்பிடியும் இண்டைக்கு வருவன்!"

மனம் படபடத்தது.
ஒரு வேலையும் செய்யத் தோன்றவில்லை.
நேரில் எப்படி இருப்பாள்? என்னைக் கண்டதும் எப்படி வரவேற்பாள்? என்ன கதைப்பாள்? வெட்கத்தோடு ஒளிந்து கொள்வாளா? அல்லது பல நாட்களாகப் பழகியவள்போல் பாசத்துடன் பார்ப்பாளா? ஒரு கண்ணைச் சாய்ப்பாளா? உதட்டைக் கடிச்சுக்கிட்டு மெதுவாகச் சிரிப்பாளா? காலாலே நிலத்திலே கோலம்போட்டுக் காட்டுவாளா?
நினைக்கும்போது ஒருவகைச் சுகானுபவம் உடலெங்கும் பரவிப் பரவசமாக்கியது.

மணியைப் பார்த்தான். காலை பத்துமணி.
இந்த நேரத்தில் எந்தத் தமிழன் வேலையில்லாமல் வீட்டில் இருப்பான்?
அதுவும் காருடன்!
யோசித்தான். சிலவேளை சோதி இருப்பான்.
ரெலிபோனை எடுத்துச் சோதியின் இலக்கங்களை அழுத்தினான்.
சோதி வீட்டில்தான் இருந்தான்.

''சோதி நேரமிருக்கே? அகல்யா வந்திட்டாள்!"
''அடிசக்கை. அப்ப உன்பாடு கொண்டாட்டம்தான்."
''உடனை போய்ப் பார்க்கவேணும்!"
''உனக்கில்லாத உதவியே? பின்னேரம் நாலு மணிக்கு ஆயத்தமாயிரு. வாறன்!"
''இப்ப வாவன்ரா!"
''இப்ப முடியாதுடா. அவசர அலுவலாய் வெளியாலை போறன். இவ்வளவு நாள் பொறுத்தனி, இன்னும் கொஞ்ச நேரம் பொறடா. அகல்யா எங்கையும் ஓடமாட்டாள்!"

மணியை மணியைப் பார்த்தான்.
நிமிடக்கம்பி மெதுவாக ஊர்வது போலிருந்தது.

இப்போது அகல்யா என்ன செய்வாள்? என் வரவை எதிர்பார்த்து அல்லாடுவாளா? பவளத்துடன் பேசிக் கொண்டிருப்பாளா? சாப்பிடுவாளா? புதிய சூழலை ஆச்சரியத்துடன் பார்த்து வியப்பாளா? புதிய உணவின் சுவைகளில் முகம் சுழிப்பாளா?

''என்ன அகல்யா?"
''என்னைப் பிடிச்சிருக்கா?"
சிரித்தான்.
''உண்மையைச் சொல்லட்டுமா?"
''ம்...."
''இஹ் லீப டிஸ் அகல்யா!"
''விளங்கேல...."
''நான் உன்னை விரும்பிறன்."
''நானும்தான் சிவா!"
''இப்பிடித் தனிமையிலை ரண்டுபேரும் சொல்லுறது தவறு!"
''ஏனுங்க...?"
''கிட்டவா சொல்லுறன்...!"
''மாட்டன்!"
''ஏன்?!"
''கிட்ட வந்தால் நீங்கள் நீங்களாக இருக்க மாட்டீங்க...!"
''ஏண்டி...?"

எட்டி விரலைப் பிடித்தான்.

''வேண்டாங்க!"
முகம் குங்குமச் சிவப்பானது.
''நீ என் மனைவியடி!"
''இப்ப இல்லையே...!"
''எப்ப எண்டாலும் என் மனைவிதானே!"

அவள் அருகில் வந்து அவளது கலைந்த கேசத்தைக் கோதினான். அவள் இடுப்பைத் தொட்டான். வளைத்து இழுத்தான். மற்றொரு கையை முதுகில் வைத்து இறுக அணைத்தான்.

கை சுட்டது.
அடிவரை வந்துவிட்ட சிகரட் தணல் கையைச் சுட பதறியடித்துத் துள்ளி நின்றான்.

சே.... கனவு. எல்லாம் கனவு. பகல் கனவு. பசுமையான கனவு.
வெட்கமாக இருந்தது.
சே.... உறவைத் தேடியலையும் காமம். உதிரத்தைச் சூடாக்கும் காமம். காமமே விலகிப் போ!

'எட சோதி! எங்கையடா போனாய்? கெதியாய் வாடா!"
சோதியை மனதினுள் திட்டித் தீர்த்தான்.
சோதி வந்தான். சிவராசனுக்கு முகம் மலர்ந்தது.
கடை ஒன்றினுள் நுழைந்தான்.
அகல்யா எப்படி இருப்பாள்? போட்டோவில் உள்ளது போலேயா? மெலிந்திருப்பாளா? அல்லது பருத்திருப்பாளா? ஒருவழியாக அழகிய சட்டையொன்றை வாங்கிக் கொண் டான். முதற்சந்திப்பின் முதற்பரிசு!
சோதி சிரித்தான்.

''என்னடா?"
''இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தாண்டா. பேந்து பொம்பிளையள் ஒரு ஊசி கேட்டால்கூட வாங்கிக் கொடுக்க மாட்டாய்."
''ஏண்டா?"
''நீயும் ஒரு ஆண்தானே?!"

கார் விரைந்தது.
+++++++

சோதியும் சிவராசனும் போனபொழுது பவளமும் கனகரத்தினமும் எங்கேயோ செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
''பிள்ளை அகல்யா! சிவா வந்திருக்கிறார்" என்று குரல் கொடுத்தாள் பவளம்.
''சிவா! பக்கத்திலை எனக்குத் தெரிஞ்ச ஆக்கள் இருக்கினம். நான் அங்கை போவிட்டு வாறன்!" என்று வெளியேறினான் சோதி.
பவளத்தின் அழைப்பைக் கேட்டும் அகல்யா வரவில்லை.
''தம்பி, இந்தப் பிள்ளை வந்ததிலை இருந்து எதையோ பறிகொடுத்தமாதிரி யோசிச்சுக் கொண்டிருக்கிறாள். எந்த நேரமும் படுக்கைதான். இப்ப பாரும். நான் கூப்பிட்டும் இன்னும் வரேலை. இவளுக்கு என்ன பிடிச்சுதோ தெரியேலை!" என்று கூறிவிட்டு அகல்யா படுத்திருந்த
அறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தாள் அகல்யா.
கூந்தலை அழுத்தி வாரியிருந்தாள். கண்களில் ஒரு தளர்ச்சி. முகம் வாடிச் சிறுத்திருந்தது.
வலிந்து முகத்தில் புன்னகையை வரவழைத்தாள்.
அது அப்படியே தெரிந்தது.
'என்னதான் ரெலிபோனில் கதைத்தாலும் கடிதங்களைப் பரிமாறினாலும் முதற்சந்திப்பில் இப்படித்தான்போலும்!’
தனக்குள் சமாதானம் கூறிக்கொண்டான்.

''சிவா! நாங்கள் ஒருக்கா வெளியாலை போகவேணும். சோமசுந்தரத்தின்ரை மகளுக்குப் பிறந்தநாள். அதுதான் வெளிக்கிட்டுக் கொண்டிருக்கிறம். நீரும் அகல்யாவும் கதைச்சுக் கொண்டிருங்கோ. வரக் கொஞ்சம் நேரமானால் இங்கை படுத்துவிட்டு நாளைக்குப் போகலாந்தானே!"
மௌனமாகத் தலையசைத்தான்.

'நாகரீகம் தெரிந்த மனிதர்கள். தனியே விட்டுத் தள்ளிப் போகிறார்கள்!
மனதிற்குள் நன்றி கூறினான்.

''அகல்யா! தம்பிக்குக் கோப்பி போட்டுக்கொடு!"

அவர்கள் போய்விட்டார்கள்.
அகல்யாவையும் அவனையும் தவிர வேறு எவரும் இல்லை.
அகல்யா தலையைச் சாய்த்தவாறு நின்றிருந்தாள்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கனத்தன.

''அகல்யா..."

நிமிர்ந்து பார்த்தாள். முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. அவனது பார்வையைத் தவிர்த்தாள்.
''இரு அகல்யா..."
சோபாவைக் காட்டினான். அமர்ந்தாள்.
''பயணம் எப்பிடி? மொஸ்கோவிலை ஒரு மாதம் கஷ்டப்பட்டிருப்பீர்.... இப்ப எல்லாரும் மொஸ்கோவிற்குள்ளாலைதான் வரீனம்."

அவளின் முகத்தில் சிறு கலக்கம் தோன்றி மறைந்தது. 
உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

''என்ன அகல்யா.... எதுவுமே கதைக்கமாட்டீராம்..." என்று ஏக்கத்துடன் கேட்டான்.
''இந்தாரும். உமக்காக வாங்கிக்கொண்டு வந்தனான்" என்று கடையில் வாங்கிய புதிய சட்டையைக் கொடுத்தான்.
தயங்கினாள்.
''ஏன்.... வாங்கக் கூடாதா?""

வாங்கினாள். விரல் நுனிகள் பட்டும்படாமல் உரசியது. வெடுக்கெனக் கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.
கடிதத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி எழுதிய அகல்யாவா இவள்? ரெலிபோனில் கலகலத்தவளா இவள்?
ஏனிப்படி அந்நியமானாள்? முதல் அறிமுகம் என்பதாலா?

பொழுது கரைந்தது. அதில் வெறுமை நிறைந்தது.

''கோப்பி குடியுங்கோவன்...!"
மெல்ல வாய் திறந்தாள்.
+++++++

சை யாரைத்தான் விட்டது?
பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற கனகரத்தினத்தையும் பவளத்தையும் ஆசை என்ற மாயை தன் வலையுள் சிக்க வைத்தது. அது நடேசனின் உருவில் வந்தது.
''கனகு...! பெறாமகள் வந்திருக்கிறாளாமே..?!"
''ஓமோம்.... கெதியிலை கலியாணம் நடக்கப் போகுது!"
''பொடியன் வசதியானவனே? காசுபணம் வைச்சிருக்கிறானே? கார் இருக்கே?"
''இல்லை...!"
''காலவரையற்ற விசா...?"
''அதுவும் இல்லை!"
''என்ன கனகு, நீ எந்தக் காலத்திலை இருக்கிறாய்...? கார் இல்லை. நல்ல விசா இல்லை.... இவனை எங்கை பிடிச்சனி?"
''வந்து...!"
''உன்ரை சொந்த மகளாயிருந்தால் இப்பிடி ஒண்டுமில்லாதவனுக்குக் கட்டிக் கொடுப்பியே? ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கேல்லையே?"
''அவன் சீதனமா ஒண்டும் கேட்கேல்லை. நல்ல குணமான பொடியன்!"
''இந்தக் காலத்திலை குணம் எந்த மூலைக்கு? எல்லாத்துக்கும் பணம் பணம். பணமில்லாட்டி ஆரும் மதிக்கமாட் டினம். நீ செலவழிச்சுக் கூப்பிட்டதை ஆரும் சொல்ல மாட்டினம். ஒண்டும் இல்லாதவனுக்குக் கட்டிக் கொடுத்ததைத்தான் கேவலமாய்ப் பேசுவினம்...."

சிந்தனையில் ஆழ்ந்தார் கனகரத்தினம்.

''என்னட்டை ஒரு மாப்பிள்ளை இருக்கு. கார் வைச்சிருக்கிறான்.  காலவரையற்ற விசா. நல்ல வேலை. 'பாங்க்’கிலை எக்கச்சக்கமாகக் காசு வைச்சிருக்கிறான். சீதனம் கேட்க மாட்டான். கலியாணத்தைக் கூட தன்ரை செலவிலை நடாத்துவான்."
''இப்ப சொல்லி என்ன பிரயோசனம்? முந்தித் தெரியாமைப் போச்சே!"

கைகளைப் பிசைந்தாள் பவளம்.

''இப்ப ஒண்டும் குடி முழுகேல்லை. நீங்கள் சரி எண்டு சொல்லுங்கோ. மற்றதை நான் பார்க்கிறன். நீங்கள் ஏஜென்சிக்குக் செலவழிச்ச காசைக்கூட பொடியனிட்டை வாங்கித் தாறன்..."
''மெய்யாயோ...?" என்று ஆச்சரியமாகக் கேட்டார் கனகரத்தினம்.
''பொய்யே சொல்லுறன்?"

ஆசை யாரைத்தான் விட்டது?

மாதவன் வீட்டில், 'சீதனமில்லாமை மாப்பிள்ளை எடுத்துப் போடு பார்ப்பம்’ என்ற சிவநேசனின் சவால் நினைவுக்கு வந்தது.

'சிவநேசா! நடத்திக் காட்டுறன்.’
மனதிற்குள் எக்காளமிட்டார் கனகரத்தினம்.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!