பக்கங்கள்

புதன், 23 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (13)

திக்பிரமை பிடித்தவன்போல் நின்றான் சிவராசன்.
உறவென்ற ஆத்மாக்களின் மாற்றீடுகள் கைக்குக் கிட்ட வந்து எட்டச் செல்லும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஏன் விலகிக்கொள்ள ஆசைப்பட்டாய் அகல்யா? ஏன் வெறுத்துப் போனாய் இப்படி? வெட்டொன்று துண்டு இரண்டாய் என் உறவைத் தறித்துக்கொள்ள எப்படி முடிந்தது
உன்னால்?
இது தவறு. உனக்கே உன்னைப் பிடிக்காமல் போனது தவறு.
உன்னுடைய மதிப்பு உனக்குத் தெரியாது. அதை என்னிடம் கேட்டிருக்க வேண்டும். ஒருவரைப்பற்றி மற்றவருக்குத்தான் பலதும் தெரியும்.
யாருக்காகவோ விலகிக் கொள்கிறாய். இந்தச் சமூகத்துக்குப் பயந்து போனாயா? சமூகத்தை விட்டுவிடு. அது சாக்கடை. அதனுள் சந்தணமாக மணக்கும் என்னை ஏன் இனங்காணாமல் விலகிப் போனாய்?
ஒரு நிமிடம் எல்லாவற்றையும் நினைத்துப் பார். என்னைக் கேள். நான் சொல்வதைக் கேள். கொஞ்சம் கவனம் காட்டு.
உன்னைப்போல் ஒரு உயர்ந்த உயிர் இவ்வுலகில் இல்லை. நீ இருப்பதாலேயே நான் இயங்குகிறேன். உன்னை மையமாக்கியே எனது உணர்வுகள் உற்பத்தியாகி என் இயக்கங்களின் மூலாதாரமாகின்றன.
புரிகிறதா? விலகிப் போகாதே அகல்யா. கிட்ட வா! அகல்யா! என்னைவிட்டு விலகுகிறாயே என்று நான் வருத்தம் அடையவில்லை. ஆனால் இவ்வளவு விருப்பத்துடன் விலகுகிறாயே. அதுதான் பிழை என்கிறேன்.
உன்னையே நீ தண்டித்துக் கொள்ளாதே. அதற்கு ஆயிரம் காரணங்களை அர்த்தமாக்கிக் கொள்ளாதே.
சிவராசனின் கையிலிருந்த கடிதம் காற்றில் படபடத்தது.

'சிவா!
மீண்டும் ஒரு கடிதம் எழுத நேர்ந்துவிட்டது. ஏன் நேர்ந்தது?
இப்படி ஒரு நிலை ஏற்படுமென்று எதிர்பார்க்கவில்லை. திருமணம் முதலில் தடைப்பட்டதுமே சஞ்சலமான எனது மனது நிம்மதியானது.
உங்களைவிட்டு விலகிவிட்டேன் என அமைதியானேன். ஆனால் மீண்டும் சஞ்சலம் உங்கள் நண்பர்களின் உருவில் கதவைத் தட்டியது.
அதனால் இந்தக் கடிதம் எழுதுவது அவசியமானது.
பார்த்தீர்களா? கடிதம் எழுதக் கூடாது, உங்களின் முகத்தைக்கூடப் பார்க்கக் கூடாது என்று கடவுளை மன்றாடிய எனக்கு இப்படி ஒரு நிலை. இந்தக் கடித விசயத்தில்கூட நான் நினைத்தது நிறைவேறாதபோது, வாழ்க்கை விசயத்தில் எனது எதிர்பார்ப்புகள் எப்படி நிறைவேற முடியும்?
எதுவுமே எங்கள் கையில் இல்லை.
ஏதோ ஒரு சக்தி.... எல்லாவற்றுக்கும் மேலான சக்தி.... எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கும் சக்தி.... அந்தச் சக்தியின் முன்னால் நானோ நீங்களோ எம்மாத்திரம்?
என்னடா, இந்தப் பைத்தியக்காரிக்கு கடிதம் எழுதிக் குழப்ப நான்தானா கிடைத்தேன் என நீங்கள் நினைக்கலாம்.
சிவா! இப்போது நான் பைத்தியக்காரி ஆகும் நிலையில்தான் உள்ளேன். அதைத் தடுக்கத்தான் இந்தக் கடிதம்.
இந்தக் கலியாணம் வேண்டாம். கலியாணம் என்ற பந்தம் புனிதமானது. பவுத்திரமானது. பாதுகாக்கப்பட வேண்டியது. இதற்கெல்லாம் தகுதியானவள் இல்லை இந்த அகல்யா.
எச்சில் இலை பாவனைக்கு உதவாது. நானும் ஒரு எச்சில் இலை.
மொஸ்கோவில் ஏஜென்சி என்ற காமுகனால் எச்சில்பட்ட இலை. அவனிடமிருந்து தப்பப் போராடினேன். முடியவில்லை. எல்லாமே முடிந்தபோது என்னையே அழிக்க முயன்றேன். முடியவில்லை.
அவசரமாக ஜேர்மனிக்கு அனுப்பிவிட்டான்.
இங்கே யாரிடம் என் நிலையைக் கூறுவேன்? மௌனமாக அழுதேன். தாயை சகோதரங்களைப் பிரிந்துவந்த துயர் என நினைத்தார்கள். உங்களிடம் கூறியிருக்கலாம். சிலசமயம் 'எல்லாவற்றையும் மறந்து வாழ்வோம் என நீங்கள் முன் வரலாம்.
ஆனால் என்னால் உங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?
உங்களின் நெருக்கம் அந்த ஏஜென்சிக்காரனை அல்லவா நினைவுபடுத்தும்? அந்த மனித மிருகத்தின் கசப்பான நினைவுகளுடன் எவ்வாறு ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க இயலும்?!
உங்களை முதலில் நேரிடையாகச் சந்தித்தபோதே விலகிக் கொண்டேன். ஏமாந்திருப்பீர்கள். ஆனால் நான் அறைக்குள்ளே இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் விட்டதை நீங்கள் எங்கே அறிவீர்கள்?
சித்தியும் சித்தப்பாவும் இந்தத் திருமணம் வேண்டாம் என்றபோது கடவுளே வழிகாட்டிவிட்டதாக சந்தோசப்பட்டேன். வருங்காலத்தில் பேசப்படும் திருமணங்களையும் சுலபமாகத் தட்டிக்கழிக்கலாம் என்ற தைரியம் ஏற்பட்டது.
ஆனால் மீண்டும் உங்களுடன் ஒரு உறவு என்றபோது இடிந்துவிட்டேன்.
உங்களின் புனிதம் இந்தப் பாவியால் களங்கப்படக் கூடாது. களங்கம் என நீங்கள் நினைக்காது போனாலும் என்மட்டில் அது களங்கம்தான்.
மனித மனங்கள் உறுதியானவை அல்ல. என்றாவது ஒருநாள் எனக்கும் எதையும் தாங்கும் சக்தி வரலாம். அப்போது ஒரு துணை தேவைப்படலாம். அந்தநேரத்தில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் ந்சதிப்போம்.
அதுவரை என்னைச் சந்திக்க முயற்சிக்காதீர்கள். முயற்சித்து என்னைச் சஞ்சலப்படுத்தாதீர்கள். நிம்மதியற்றவள் ஆக்காதீர்கள் என்று உங்களின் பாதங்களில் விழுந்து கேட்கின்றேன்.
இது கோரிக்கை அல்ல. வரம்.

வரம்வேண்டித் தவமிருக்கும்
அகல்யா."
+++++++

டிதத்தை வாசித்த சோதி கேசவன் எல்லோரும் கவலை தோய்ந்த முகத்தோடு சிவராசனைப் பார்த்தார்கள்.
அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

''சிவா! இப்ப என்ன செய்யப்போறாய்?"

அவர்களை உற்று நோக்கினான்.
நிமிடங்கள் நிசப்தமாகின.
கடகடவெனச் சிரித்தான்.

''நான் குளிக்கப் போறன். உடுப்புத் தோய்க்கவேணும். காயப் போடவேணும். சமைக்க வேணும். சாப்பிட வேணும். படுக்க வேணும். நாளைக்கு வேலைக்குப் போகவேணும்."
''சிவா!"
''எல்லாம் முடிஞ்சுபோச்சு. முடிஞ்சது முடிஞ்சதாக இருக்கட்டும்."

(நிறையும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!