பக்கங்கள்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (6)

டாக்டர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.
சோதனைக் குழாய்களில் இரத்தம் எடுத் தார்கள். எக்ஸ்ரேப் படங்களாக எடுத்துக் குவித்தார்கள். அவனைச் சுற்றிக் கூட்டம் கூட்டமாக நின்று பேசினார்கள்.
’ஏதோ சூட்டால் இரத்த வாந்தி எடுத்திருக்கலாம்!’ என்று நினைத்தவனுக்கு, மனதில் பயம் இலேசாக எட்டிப் பார்த்தது.
ஆஸ்பத்திரிக்கு வந்து இரண்டு வாரங்களாகிவிட்டன.

இதுவரை எவ்வித மருந்தோ மாத்திரைகளோ தரவில்லை.
சோதனைக் குழாய்களில் இரத்தம் எடுப்பதும் எக்ஸ்ரே எடுப்பதும் வாடிக்கையாகின. சீனா ரெஸ்ரோரண்ட் வேலையை நினைக்கக் கவலை ஏற்பட்டது.
’இந்நேரம் வேறை ஆரையாலும் எடுத்திருப்பான். அதுவும் தமிழனாய்த்தான் இருப்பான். அந்தச் சம்பளத்துக்கு தமிழனைத் தவிர வேறை ஆர் கிடைப்பான்?!’
’இந்த வேலையும் போனால் உள்ள கஸ்டங்களுக்கிடையிலை எப்பிடி வீட்டுக்குப் பணம் அனுப்புவது? எவ்வாறு ஆங்காங்கே வாங்கிய கடன்களை அடைப்பது?!’

வைத்தியசாலைப் படுக்கையொன்றில் கிடந்தவாறு பலவிதமான சிந்தனைகளுடன் புரண்டான் சிவராசன்.
நண்பர்களும் அவனுக்குப் பழக்கமான சில தமிழ்க் குடும்பங்களும் வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள்.
அந்தச் சில மணிப்  பொழுதில்   கவலைகளை மறந்து கலகலப்பாவான்.
அவர்கள் அகல மீண்டும் தனிமை, மீண்டும் கவலைகள்.
சிவராசன் ஜேர்மனிக்கு வரத் தீர்மானித்தபோது உலகப் படத்தில் ஜேர்மனி எங்கே என்றுகூட அறிந்திருக்கவில்லை. எல்லோரும் போவதால் தானும் செல்ல முடிவெடுத்தான். முடிவைச் செயலாக்குவதற்காக ஜேர்மனியில் வசித்த நண்பனொருவனுடன் தொடர்பு கொண்டான்.

"பயப்படாமல் வா! சொர்க்கம் சொர்க்கம் என்பார்களே.... அது ஜேர்மனியிலேதான் உள்ளது" என்று ஆசை காட்டினான் நண்பன்.
"நீ உழைக்க வேண்டிய அவசியமே இல்லை. பணம் உன்னைத் தேடி வரும்!" என்று அரும்பிய ஆசைக்குத் தண்ணீர் ஊற்றினான்.
 
நண்பனின் வார்த்தையை நம்பி ஜேர்மன் மண்ணை மிதித்தபோதுதான், யதார்த்தரீதியில் நண்பனின் வார்த்தைகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்.
உறவு, பந்தம், பாசம் என்று எவ்விதத் தொடர்புகளும் அற்று வாழ்ந்தால் சிலவேளைகளில் இந்த ஜேர்மன் மண் சொர்க்கமாகத் தோன்றலாம்.
ஆனால், பந்தம் பாசம் என்ற உறவுக் கயிற்றினால் பிணைக்கப்பட்டு அவற்றையே சுகமான சுமைகளாக நினைத்துச் செயலாற்ற முயலும்போதுதான் எவ்வளவு இன்னல்கள்.... இடைஞ்சல்கள்.... காலத்துக்குக் காலம் மாறும் விசாக்கள்.... வெளிநாட்டவர்களுக்கெனப் புதிது புதிதாய்த் தோன்றும் சட்டங்கள்.... விலைவாசி ஏற்றம்.... உழைப்புக்குத் தகுந்த ஊதியமின்மை.... கறுப்பர் என்றாலே படிப்பறிவற்றவர் என்ற எண்ணத்துடன் உரையாடும் வெள்ளையர்.... அதைவிட அந்த வெள்ளையர் சிலரின் நிறவெறிக் கண்ணோட்டத்துடனான அணுகுமுறைகள்....
இவ்வாறாக எத்தனை தடைகள்....
இவை யாவற்றையும்  கடந்து  ஏதோ  மிச்சம்பிடித்து கடன்பட்டுக் குடும்பத்தாருக்குப் பணம் அனுப்பினால், அங்கேதான் எவ்வளவு புதுப் புதுத் தேவைகள்?!
தேவைகள் அவனின் உழைப்பை உறிஞ்சும்போது கழியும் காலங்களில் அவனது ஆயுள் படிப்படியாகக் குறைவதைத் தவிர -வேறெதை அவனால் அனுபவிக்க இயன்றது?!
அவனுக்கென்று ஒருத்தி -      அந்த ஒருத்தியால் ஒன்று இரண்டு என மழலைகள் -இந்த இனிய வசந்தகாலம் அவனது வாழ்வில் எட்டிப்பார்க்கும் நேரம்தான் எப்போது கனியும்?!
சுகுணா அவன் மனக்கண் முன்னால் வந்தாள்.
ஆஸ்பத்திரிக்கு வந்ததால் அவளைப்பற்றிய செய்தியைக் கூட அறிய முடியவில்லை.
அவளும் சின்னத்தம்பியும் கொழும்பில்தான் நிற்கிறார்களா? அல்லது சுகுணாவை ஏஜென்சி வெளிநாட்டுக்கு அனுப்பி இருப்பானா?
யாரிடம் விசாரிப்பது? எப்படித் தொடர்பு கொள்வது?!
ஒரேயொரு உறவினன் சண்முகநாதன்.
ஆஸ்பத்திரியிலுள்ள தொலைபேசியில் அவனுடன் தொடர்பு கொண்டான்.

"நீ எதற்கும் கவலையை விடு சிவா..! எல்லாத்துக்கும் நானிருக்கிறன்.... நான் சின்னத்தம்பி மாமாவோடை கதைச்சு நிலமையைச் சொல்லுறன்!"

ஆதரவுக் கரம் நீட்டினான் சண்முகநாதன்.
+++++++

ழுத்தெடுத்த இரத்தங்களுக்கும் ’எக்ஸ்ரே’க்களுக்கும் முடிவு தெரியாமலா போய்விடும்?!
தமிழ் மொழிபெயர்ப்பாளருடன் அவனிடம் வந்தார் டாக்டர்.
டாக்டர் கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியால் நிலை குலைந்தான் சிவரசன்....
வானமே இடிந்து தலைமேல் விழுந்தது போலிருந்தது. வாழ்க்கையே அஸ்தமித்துவிட்ட பிரமையில் தள்ளாடினான்.

’புற்றுநோய்.... அந்த ஆட்கொல்லி நோய் எனக்கா?!’
’டாக்டர்! நீங்கள் பொய் சொல்லுறீங்கள். நன்றாகப் பரிசோதித்தீர்களா? உண்மையைச் சொல்லுங்கள்!’

ஓங்கிக் கத்திக் கதற வேண்டும்போல் தவித்தான்.

"இதொன்றும் பயப்பட வேண்டிய நோயில்லை. நோய் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. புற்றுநோய்களில் பல வகை உண்டு. சிலவற்றுக்கு மருந்து இல்லை. சிலவற்றைக் குணமாக்க முடியும். உங்களுக்குத் தொண்டையில் உள்ள உமிழ் நீர்ச் சுரப்பிகளில்தான் புற்று நோய்க்கான கிருமிகள் தெரிகின்றன. சிறு ஒப்பிரேசன் மூலம் குணமாக்கி விடலாம்" என்று தமிழில் டாக்டரின் விளக்கத்தைக் கூறினார் மொழிபெயர்ப்பாளர்.

எல்லா டாக்டர்களுமே இப்படித்தான். நோயாளியைத் தைரியப்படுத்த எந்த நோயையும் குணமாக்கலாம் என்பார்கள்.
எப்படி நம்புவது?
கண்கள் கலங்கின.

’நான் வாழவேண்டும் டாக்டர். எனக்காக இல்லாட்டிப் போனாலும் என் குடும்பத்துக்காக. என் சகோதரிகளைக் கரைசேர்க்கும்வரையாவது வாழவேண்டும்.’
’என்னை நம்பி அவாகள்.’

நம்பிக்கைகள் பொய்யாகக் கூடாது.

“மிஸ்டர் சிவராசன்! நீர் உண்மையிலேயே அதிர்ஸ்டசாலி. இலங்கையில் என்றால் இதை மாத்தேலாது. இதுக்கான வசதிகள் இல்லை. இங்கை மாத்தலாம். டாக்டர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இப்ப நீர் மனத்தைரியமாக இருப்பதுதான் மிகமிக முக்கியம்" என்று ஆறுதல் கூறி விடைபெற்றார் மொழிபெயர்ப்பாளர்.

நாட்கள் சில நகர்ந்தன.
மீண்டும் இரத்தம் எடுத்தார்கள்.
’எக்ஸ்ரே’ எடுத்தார்கள். ’ப்ரசர்’ பார்த்தார்கள். வேறொரு அறைக்குக் கூட்டிச்சென்று உடல் அமைப்புக்கள்பற்றிய வண்ணப்படமொன்றைக் காட்டி, எந்த இடத்தில் சத்திர சிகிச்சை செய்யப்போகிறார்கள் என விளங்கப்படுத்தினார்கள். கனிவாக நடந்தார்கள். அவனுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக அயராது பாடுபட்டார்கள்.
சிவராசனுக்கு வியப்பாக இருந்தது.

’இவர்களுக்குத்தான் என் நோயைத் தீர்ப்பதில் எவ்வளவு அக்கறை?! இவர்களின் பணிவிடையே மனதுக்கு எவ்வளவு தெம்பைக் கொடுக்கிறது!’

தற்போது சிவராசனின் மனதில் எவ்விதமான சலனங்களுக்கும் இடமில்லை. பயம் இல்லை. கவலை சற்று எட்டப்போனது.

’எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள்’ என்ற நம்பிக்கை வட்டம் சிறிதாக உருவாகிப் பெரிதாகியது.

நம்பிக்கையில்தானே உயிரினங்களின் தொழிற்பாடுகள் அர்த்தமுள்ளதாக அமைகின்றன.
சத்திர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்.
மயக்கமானான். மயக்கத்தில் இடையிடையே சுகுணா வந்து மறைந்தாள்.
விழித்துப் பார்த்தபோது வேறொரு அறையில் படுத்திருந்தான். அருகே நின்ற டாக்டர் வாழ்த்துக் கூறி, ஒப்பிறேசன் வெற்றி என்றார்.
நிம்மதியாக இருந்தது. நன்றியுடன் கண்களில் நீர் மல்கக் கைகூப்பினான்.
தொண்டை சிறிது வலித்தது. தொண்டையைச் சுற்றிப் பஞ்சுத்துணியால் கட்டுப்போட்டிருந்தது.

ஒருநாள் சண்முகநாதன் வந்தான். அவனுடன் வேறொரு தமிழ் இளைஞனும் வந்தான். கையில் சிறிய கமரா ஒன்று தொங்கியது.

“இப்ப எப்பிடி? வரவரவெண்டு இப்பதான் முடிஞ்சுது. லீவு தரமாட்டன் எண்டிட்டாங்கள்...."
  கையில் இருந்த பழங்களைச் சிவராசனிடம் கொடுத்தான்.
 "சின்னத்தம்பி மாமாவும் சுகுணாவும் யாழ்ப்பாணம் போவிட்டினையாம்!"
“ஏனாம்?"
திகைப்புடன் கேட்டான் சிவராசன்.
“நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. ஏஜென்சி அனுப்புறன் அனுப்புறனெண்டு இழுத்தடிக்கிறானாம். அதுதான் கொழும்பிலை நிக்கிறதெண்டாலும் எக்கச்சக்கமான செலவெல்லே. யாழ்ப்பாணம் போவிட்டினம். அலுவல்கள் எல்லாம் சரியான பேந்துதான் கொழும்புக்கு வருவினம்."
“நானும் ஆஸ்பத்திரியிலை இருந்ததாலை ரெலிபோன்கூட எடுத்துக் கதைக்க முடியேலை. என்ன நினைச்சுதுகளோ தெரியேலை" என்று வருந்தினான் சிவராசன்.
“இதிலை என்ன கிடக்கு? நீயும் ஆஸ்பத்திரியாலை போக அவையும் வரக் கணக்காயிருக்கும்."
“நீ எனக்குச் சுகமில்லை எண்டு என்னவாலும் சொன்னனியே?"
பதட்டத்துடன் கேட்டான் சிவராசன்.
“எனக்குத் தெரியாதே என்ன சொல்லவேணும், என்ன சொல்லக் கூடாதெண்டு?! நான் ஏன் இதுகளையெல்லாம் சொல்லப்போறன். பேந்து அதுகள் வீணாய்ப் பயப்பட்டுக் கண்டபடி நினைக்குங்கள்!"
“அதுமட்டுமில்லை சண்.... அப்பாவும் அம்மாவும் அறிஞ்சால் உயிரை விட்டிடுங்கள். நான் ஆஸ்பத்திரியிலை இருக்கிற விசயத்தை ஒருத்தரிட்டையும் அலம்பிப் போடாதை. அங்கை இருக்கிற கஸ்டங்களுக்கை நானுமேன் அதுகளைக் கவலைப்பட வைப்பான்?"
“இப்ப எப்பிடி?"
“நோயை மாத்தியாச்சு எண்டு சொல்லுறாங்கள். எண்டாலும் மாதம் ஒருக்கா செக்கப்புக்கு வரவேணுமாம்."
“நான் நினைக்கிறன் இது சிகரட்டாலைதான் வந்திருக்க வேணும். நீ சிகரட் பத்துறது ஓவர். எதுக்கும் உந்தப் பழக்கத்தை விட்டுப்போடு!"
“இருக்கலாம் சண். சிகரட்டை விடமுடியுமா எண்டுதான் தெரியேலை. பாப்பம். மனம் ஒரு குரங்கு எண்டது உண்மைதான். கூண்டுக்கை வாழுற குரங்காலை எப்பிடிச் சந்தோசமாயிருக்க முடியும்? எல்லா விசயங்களிலையும் குரங்கைக் கட்டுப்படுத்த ஏலாது!" என்று புன்னகையுடன் கூறியவன்,
“உதென்ன கமரா? வேறை எங்கையாகிலும் போகப்போறியளே?" எனக் கேட்டான்.
“இவர் பாபு. இவற்றை காரிலைதான் வந்தனான். வாற வழியிலை கொஞ்சப் படங்கள் எடுத்தம். இப்ப உன்னையும் எடுக்கத்தான்....!"
“இந்தக் கோலத்திலையோ.... வேண்டாம் சண்!"

மறுத்தான் சிவராசன்.

“இதிலை என்ன இருக்கு சிவா. இந்த ஆஸ்பத்திரி ’வாட்’ நல்ல வடிவாய் இருக்கு. நீ ஆஸ்பத்திரியிலை இருந்த ஞாபகமாய் ஒரு படம் எடுப்பம்."

ஒரு படம் என ஆரம்பித்து வெவ்வேறு கோணங்களில் இரண்டு மூன்று படங்கள் எடுத்துக்கொண்டான் சண்முகநாதன்.

“ரொம்ப நன்றி சிவா!"
“இதுக்கு ஏன் நன்றி, சண்?"

’எல்லாம் விசயத்தோடைதான்!’
மனதிற்குள் கூறிக் கொண்டான் சண்முகநாதன்.

சிவராசனுடன் விளையாட ஆசையுற்ற விதி, சண்முக நாதனின் கமரா வடிவில் சிரித்தது.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!