பக்கங்கள்

புதன், 16 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (7)

''நான் போவிட்டு வாறன். லீவு கிடைச்சால் மறுபடியும் வாறன்" என்று சிவராசனிடம் விடைபெற்றான் சண்முகநாதன்.

பாபுவும் சண்முகநாதனும் காரில் ஏறி அமர்ந்தார்கள். பாபு காரைச் செலுத்த ஆரம்பித்தான்.

“என்ன சண்! திட்டமெல்லாம் வெற்றியாக்கும்.'
 மர்மச் சிரிப்புடன் கேட்டான் பாபு.
''வெற்றிதான் பாபு. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனானாம். அந்தக் கதைதான் இது."

உரக்கச் சிரித்தான் சண்முகநாதன்.

“என்னதான் இருந்தாலும் இது நம்பிக்கைத் துரோகமில்லையா?"
''போடா.... இதிலென்னடா நம்பிக்கைத் துரோகம். அவன் தாலி கட்டினானா? இல்லையே. அவளை முன்னை பின்னை காதலித்தானா? இல்லையே. ஊரிலை தாய் தேப்பன் பாத்து நிச்சயித்த பெண்தானே?! சில விசயங்கள் நிறைவேற வேணுமெண்டால் குறுக்கு வழியிலைதான் போகவேணும்."
''இதாலை சிவராசன்ரை கோபத்தைச் சம்பாதிக்கப் போறாய்!"
''அவன்ரை கோபம் என்னை என்ன செய்யும். அவன் கிடக்கிறான் விசரன். கையிலை ஒரு மார்க் காசில்லை. ஒழுங்கான வேலை இல்லை. இந்த லட்சணத்திலை கலியாணம் தேவையாக்கும்.... வந்த நோயோ கான்சர். குணமாச்சுதாம். சும்மா கதை அளக்கிறான். என்னை என்ன இளிச்சவாயன் எண்டு நினைச்சானா? கான்சர் ஆருக்காவது குணமானதெண்டு அறிஞ்சியா? சுத்தப் புலுடா. இந்தக் கான்சர்காரனோடை சுகுணா வந்து கஸ்டப்பட வேணுமே? அவள் என்ரை மச்சாள். ஊரிலை இருக்கேக்கையே அவளைத்தான் கட்டுவன் எண்டு நினைச்சன். சொந்தக்காரங்கள்கூட அவள் எனக்குத்தான் எண்டு கேலிபண்ணுவாங்கள். ஆனா இவன் சிவா முந்திவிட்டான். அதுவும் வீடுதேடிவந்து சுகுணாவைக் கலியாணம் கட்டப்போறனெண்டு சொல்லிப்போட்டுப் போனான். முறை மச்சான் என்னட்டையே சொல்ல என்ன தைரியம் பாத்தியோ?"

ஆவேசத்துடன் கூறினான் சண்முகநாதன்.

''இதோ பார் பாபு. நான் செய்யப்போற விசயம் உனக்குமட்டுந்தான் தெரியும். நீ என்ரை உயிர்ச் சினேகிதன். உன்னிலை நம்பிக்கை வைச்சிருக்கிறன். ஏமாத்திப்போடாதை."
''நான் ஏன்டா மற்றவைக்குச் சொல்லப்போறன். நீ இப்ப ஆஸ்பத்திரியிலை எடுத்த படங்களைச் சுகுணாவின்ரை வீட்டுக்கு அனுப்பப்போறாய். கார் விபத்திலை சிவராசனுக்கு ஒரு காலை எடுத்தாச்சு எண்டு எழுதப்போறாய். தொண்டையிலை எல்லாம் கடுமையான காயம் எண்டு படத்தோடை கதைவிடப்போறாய். ஏதோ உன்ரை திட்டம் சக்ஸஸ் ஆக எனது வாழ்த்துக்கள்!" என்று கண்சிமிட்டினான் பாபு.
“பாபு! ஆயிரம் பொய்யைச் சொல்லியாலும் ஒரு கலியாணத்தை நடத்து எண்டு சொல்லுவினம். நான் ஒரேயொரு பொய்யைத்தான் சொல்லப்போறன். ஏமாற்றத்தாலை துவளப் போற சுகுணாவுக்கு வாழ்க்கை தர நான் தயார் எண்டு சின்னத்தம்பி மாமாவின்ரை மனசிலை இடம் பிடிக்கப்போறன். இந்தக் காலத்திலை மற்றவங்களுக்கெல்லாம் ஈனஇரக்கம் பார்த்தால் வாழேலாது பாபு" என்று கூறிச் சிரித்தான் சண்முகநாதன்.

கார் பளபளப்பான தார் வீதியில் வழுக்கியது.
பாபு கசற் ஒன்றை உள்ளே தள்ளிப் பொத்தானைத் திருகினான்.

’சக்கை போடு போடு ராஜா -உன்
காட்டிலை மழை பெய்யுது....’
+++++++

றுமாதம்....
நம்பமுடியவில்லை.
நாட்களுக்குத்தான் எத்தனை வேகம். எவ்வளவு விரைவாக ஊருண்டோடிவிட்டன.
ஆஸ்பத்திரிக்கு வந்து மொத்தமாக ஆறுமாதங்கள் கழிந்துவிட்டன.
ஆறுமாதங்களைப் படுக்கையில் போக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான் சிவராசன்.
தொண்டையில் சத்திர சிகிச்சை செய்த தழும்புகள் பழுப்பு நிறத்தில் தெரிந்தன. தடவிப் பார்த்தான். அசிங்கமாகக்கூடத் தெரிந்தது.
பழகிப்போனால் சரியாகிவிடும்.
நண்பர்கள் பலர் அவனைப்பார்த்துச் சுகநலம் விசாரிக்க வீட்டுக்கு வந்தார்கள். அவனது குரல் சிறிது மாறிவிட்டதாகக் கூறினார்கள்.
''தலைக்கு வந்தது தலைப்பாகையோடை போய்விட்டது. இனிமேலாவது சிகரட் அது இது என்று உடம்பைக் கெடுக்காமல் எச்சரிக்கையாக இரு!"

சிகரட்டைத் தொடராகக் கரியாக்கும் ஆனந்தன் கூறினான். சிவராசனுக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தால் சினப்பான். அடக்கிக் கொண்டான்.
சீனா ரெஸ்ரோரண்ட் வேலையும் பறிபோய்விட்டது.
“நீ மாதக்கணக்கில் வரவில்லை. வேலை கூட. சமாளிக்க முடியவில்லை. ஆளை எடுத்துவிட்டேன். வேலைக்கு இனிமேல் ஆள் தேவையானால் உனக்குத்தான் அறிவிப்பேன்" என்று கைவிரித்து உறுதியளித்தான் சீன முதலாளி.

'வேலை தேடவேண்டும்.’
'கிடைக்காமலா போய்விடும்.’
'என்ன.... புதுவேலை என்றால் கொஞ்சம் கஸ்டம். புது ஆட்கள். புதிய சூழல். முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வளவுதான்.’

ஊரிலிருந்து கடிதம் வந்தது.
உடைத்தான். வாசிக்க ஆரம்பித்தான். அதிர்ந்தான்.
நிலைகுலைந்தான்.
அப்பா நமசிவாயகம்தான் எழுதியிருந்தார்.
சண்முகநாதன் தீட்டிய திட்டத்தின் வெற்றி கடிதத்தின் ஒவ்வொரு எழுத்திலும் தெரிந்தது.
’காலில்லாமல் எப்படி உங்கே வாழப்போகிறாய்? உடனே ஊருக்கு வந்துவிடு. உங்கே கண்காணாத தேசத்தில் தனியாகக் கஸ்டப்படாதே. என்னாலை உனக்கு ஒரு வயிற்றுக் கஞ்சியாவது ஊத்த முடியும். எங்களோடை வந்து கண்ணுக்கு முன்னாலை இரு ராசா. உன்னை உடனடியாகப் பார்க்க வேண்டுமென்று உனது அம்மா பிடிவாதமாக அழுது கொண்டிருக்கிறாள்’ என்று பக்கம் பக்கமாகக் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்களினதும் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்திருந்தார் நமசிவாயகம்.

'யார் அந்தப் பாவி?’

யோசித்தான். புரிந்தது. சண்முகநாதன்தான். அவன்தான் படம் எடுத்தான்.
'நான் அவனுக்கு என்ன கொடுமை செய்தேன்? ஏன் இப்படிச் செய்தான்?’
கடிதத்தின் இறுதியில் விடை கிடைத்தது.

'ஆறுமாதமாய் உன்னோடையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. உனக்குக் காலில்லை என்று அறிந்தவுடன் சின்னத்தம்பியும் தனது மனதை மாற்றிவிட்டார். அவரையும் பிழைசொல்ல முடியாது. அவருக்கு மகளின் வாழ்க்கை முக்கியம். இறுதியில் சின்னத்தம்பியின் மகள் ஜேர்மனிக்கு வந்து சண்முகநாதனைத் திருமணம் செய்துவிட்டாள்....’

இதயத்துள் உறங்கிக்கிடந்த கோபம் என்ற பூனை முன்னங்கால்களால் பிராண்டியவாறு முதுகு மயிர்கள் குத்திட்டுச் சிலிர்த்தெழ... புலியாக மாறிச் சீறிப்பாய சிவராசனின் தேகம் நடுங்கியது.
உடனே சென்று சண்முகநாதனின் கழுத்தை நெரித்துக் கொன்றால்தான் பூனை மறுபடியும் துயிலும்போன்ற வெறி.
வெறி.... அதனால் விளைந்தது வேகம்.
வேகம்.... வேகம்.... விவேகத்தின் முதல் எதிரி.

சுகுணா....
அவளைச்சுற்றித் தினமும் தனிமையில் படிப்படியாகக் கட்டி எழுப்பிய காதலெனும் கற்பனைக் கோட்டைகள் யாவும் ஒரு சில நொடிகளில் மண்ணோடு மண்ணாய்த் துகள்களாய்ச் சிதைந்து சிதறிப்போனதைச் சிவராசனால் தாங்க முடியவில்லை.
'கடவுளே! இது என்ன சோதனை? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? ஏன் என்னைச் சண்முகநாதனின் உருவில் பழிவாங்கினாய்?!’

மனதிற்குள் குமுறினான்.
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தனக்கேற்படுத்திய கையாலாகாத்தனத்தை நினைத்துக் கட்டிலில் முகம் புதைத்துக் கதறினால்தான் புண்பட்ட மனக் காயத்துக்கு மருந்தாகும்போலிருந்தது.
உள்ளத்தில் குமுறியெழும் உணர்வுகளைத் தாங்க முடியாமல் தலை கொதித்தது. கேசத்தை இரு கைகளாலும் பற்றிப் பிய்த்தெறிய வேண்டும்போல் கொதித்தது. வெப்பம் தாகத்தைத் தந்தது.
தாகம்.... தாகம்....
சேர்ந்திருந்தே கழுத்தறுப்பவர்களால் தூண்டிவிடப்பட்ட தாகம்....
தாகத்துக்கு ஒரு வடிகால் தேவை. இது இரத்தத்தில் கலந்துவிட்ட தாகம். வடிகால் இல்லாவிட்டால் சிரசின் கொதிப்பில் சித்தம் கலங்கிவிடும். நெஞ்சம் வெடித்துவிடும்.... உணர்வுகள் மறந்துவிடும். உலகமே இருண்டு விடும். உயிரின் இயக்கங்கள் அஸ்தமனமாகி விடும். மொத்தத்தில் வடிகாலொன்று அவசியம் தேவை.
அவனுக்குத் தெரிந்த வடிகால் சிகரட், சிகரட்....
அலுமாரியைத் திறந்து பார்த்தான்.
அங்கே ஒரு சிகரட் பெட்டி கிடந்தது.

'இனியாகிலும் சிகரட்டைப் புகைச்சுக் கண்டபடி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதை...!’

நண்பர்களின் அறிவுரை அகன்றது.
உதட்டில் பொருத்தி நெருப்பைக் கொழுத்தி, புகையை உறிஞ்சி வெளிவிட்டான்.
உள்ளம்.... சற்றுத் தணிந்தது.
உணர்வுகள்.... சற்றுத் தளர்ந்தன.
கோபம்.... சற்றுக் குறைந்தது.
புலி மீண்டும் பூனையானது.

நான்.... என் வீடு.... என் சகோதரங்கள்.... என்னை நம்பி இவர்கள்.... எனக்காக இவர்கள்.... இவர்களுக்காக நான்.... தொப்புள்கொடியில் தொடங்கிய உறவுப் பற்றைகள்.... பாதுகாப்பானவை.... இடையில் வந்த ஒருத்தியை நினைத்து உறவை மறப்பதா? எனக்கெனச் சில சுமைகள். அவைகளைச் சுமப்பது எனது கடமை. அவை நிறைவேறும்வரையில் என் ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்கள் யாவும் தூசிக்குச் சமானம்.

அவன் இல்லறவாழ்வைத் துறந்த புத்தனல்ல. உலகப் பற்றற்ற துறவி விவேகானந்தருமல்ல. சூழ்நிலைகளின் தாக்கத்தால் தடுமாறித் தடக்கி விழுந்தாலும் எழுந்து நடக்க முயலும் சிவராசன்.

சிவராசனின் உள்ளம் தெளிந்த நீரோடையானது.
தனது எதிர்காலச் செயற்பாடுகள் என்ன என்பதைப்பற்றி அவனால் சிந்திக்க முடிந்தது.
அவனின் சிந்தனைக்கு முன்னால் இந்த சண்முகநாதன் என்ன.... சுகுணா என்ன.... இவர்கள் இடையில் வந்தவர்கள். நினைக்கப்பட வேண்டியவர்களல்ல. நிறுக்கப்பட வேண்டியவர்கள்.

முதலில் வேலை தேட வேணும்.
'போனால் போகட்டும் போடா -இந்தப்
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?’
+++++++

''அந்தப் பாழ்படுவான் இப்பிடிச் செய்வானெண்டு ஆர் நினைச்சுப் பார்த்தது? துடிக்கப் பதைக்க உனக்குக் காலில்லை எண்டு சொல்ல எப்பிடித்தான் மனம் வந்துதோ...."
''அது பழைய கதை ஐயா.... பழசைக் கிளறுறதாலை இப்ப என்ன வரப்போகுது? இப்ப நீங்கள் ஏன் ஐயா கொழும்புக்கு வந்தனீங்கள்? காசு ஏதாகிலும் தேவையே?"
''உன்ரை மூத்த தங்கச்சி குமுதினியைக் கேட்டு மணியத்தாற்றை பொடியன் துரை தாய் தேப்பனை அனுப்பினவன். பொடியன் நல்லகுணம். சீதனம் ஆதனம் எதுவும் வேண்டாமாம். அவன் குவைத்திலையும் போய் உழைச்சவன்...."
''தங்கச்சிக்கு விருப்பமெண்டால் செய்து வையுங்கோவன். அவளுக்கும் வயதாகிக் கொண்டெல்லே போகுது...."
''அதுதான் உன்ரை விருப்பத்தையும் கேட்டுப் பாக்கலாம் எண்டு வந்தனான். கொண்ணனுக்கும் இந்தச் சம்பந்தத்திலை நல்ல விருப்பம். அவை ஒண்டும் வேண்டாம் பொம்பிளை வந்தால் காணும் எண்டாப்போலை நாங்கள் எங்கடை கௌரவத்தை விட்டுக்கொடுக்க முடியுமே....? நீ முந்தி அனுப்பினதுகளிலை நானும் கொஞ்சம் மிச்சம்பிடிச்சு வைச்சிருக்கிறன். கொண்ணற்றை நிலை உனக்குத் தெரியுந்தானே. நாட்டு நிலைமேக்கை உழைப்பு நேர்சீர் இல்லை" என்று இழுத்தார் நமசிவாயகம்.
''ஐயா, நான் எவ்வளவு அனுப்ப வேணுமெண்டு சொல்லுங்கோ.... எப்பிடியும் அனுப்பிவைக்கிறன்."
''நான் உன்னட்டை இவ்வளவெண்டு கேக்கமாட்டன். ஏதோ உன்னாலை இயன்றதை அனுப்பு தம்பி. மிச்சத்தை நான் பார்த்துக் கொள்ளுறன். உனக்கும் வயசாகிக்கொண்டு போகுது. உங்கை ஆராலும் பொம்பிளையள் தோதாய் வந்தால் கலியாணம் கட்டு. நான் குறைநினைக்கமாட்டன். ஏதோ நீ நல்லாய் இருந்தால் காணும்."
''எனக்கென்ன ஐயா இப்ப அவசரம். முதலிலை நீங்கள் கஸ்டப்படாமை இருந்தா அதுவே போதும்."
''எங்களுக்காக உன்ரை வாழ்க்கையைக் கெடுத்துப் போடாதை."

நமசிவாயகத்தின் குரல் தழுதழுத்தது.

''நான் சிவநேசனிட்டைச் சொன்னனான். உனக்கொரு சம்பந்தத்தைப் பார்த்துப் பேசச் சொல்லி. நீயும் ஒருக்கா அவனைப்போய்ப் பார் தம்பி!"
''சிவநேசன் அண்ணர் வீட்டை போகத்தான் வேணும். வரச் சொன்னவர். ரெலிபோன் யூனிற் ஏறுது. ரண்டு மூண்டு நாளையிலை காசை அனுப்பிப்போட்டு ரெலிபோன் எடுக்கிறன்."
''ஓமோம்.... ரெலிபோனுக்கு அநியாயக் காசு.... வை.... கடிதத்திலை விபரமாய் எழுது."
''எதுக்கும் வரதனையும் ஒருக்காப் போய்ப் பாருங்கோ. பாவம் அவன்."


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!