பக்கங்கள்

வியாழன், 17 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (8)

விண்ணை எட்டிப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் அந்த வீதியில் வரிசையாக நின்றன.
ஒரு கட்டிடத்தில் குறைந்தது ஐம்பது வீடுகளாவது இருக்கலாம். கையிலிருந்த விலாசச் சீட்டில் வீட்டிலக்கத்தைச் சரிபார்த்தான்.
நூற்றியொன்று.
வாசற்கதவில் வரிசையாகப் பொருத்திய பெயர்ப் பொத்தான்களில் பெயரைத் தேடினான்.

'சிவநேசன்.


சுட்டுவிரலால் அந்தப் பெயர் எழுதிய பொத்தானை அழுத்தினான்.
''ஹலோ...!"
சிவநேசனின் குரலாகத்தான் இருக்கும்.
''அண்ணை.... நான் சிவராசன்!"
'கிர்’என்ற ஒலிபிறக்க, கதவைத் தள்ளிக் கொண்டு 'லிப்டில்' ஏறினான்.
சிவநேசன் கதவைத் திறந்தவாறு காத்திருந்தார்.
''வாடாப்பா வா. இப்பதான் வழி தெரிஞ்சுதே?" என்றவாறு தோளில் கைபோட்டு மார்புடன் அணைத்தார் சிவநேசன்.
''இரண்டு நாள் விடுமுறை. பாத்துப்போட்டுப் போகலாம் எண்டு வந்தனான்."
''எத்தனை வருசத்துக்குப் பிறகு சந்திக்கிறம். முன் நெத்தியிலை மயிரெல்லாம் போவிட்டுதுபோலை."

தலையைத் தடவியவாறு சிரித்தான் சிவராசன்.

''முதல்லை இரு" என்று சோபா ஒன்றைக் காட்டியவர், உட்பக்கமாகத் திரும்பி,
''இஞ்சேரப்பா.... ஆர் வந்திருக்கிறதெண்டு வந்துபாரும். எங்கடை சிவராசன்" என்று மனைவியை அழைத்தார்.
''வாங்கோ. வாங்கோ. இவர் அடிக்கடி உங்களைப் பற்றித்தான் கதைக்கிறவர்!" என்றவாறு வந்தார் யோகம்.
''இவவைத் தெரியுமே உனக்கு?"
''தெரியாமை என்ன.... யோகம் அக்கா."
''கொஞ்சம் பொறுங்கோ. கோப்பி கொண்டுவாறன்.... பால் விடட்டோ...?"
''எதெண்டாலும் பறுவாயில்லை."
யோகம் அக்கா கோப்பியுடன் வந்தார்.
கூடவே ஒரு தட்டில் பிஸ்கட்டுகள்.
சிவநேசன் சில ஆல்பங்களை எடுத்துப்போட்டார்.
''குவைத்திலை இருக்கேக்கை எடுத்த படங்களும் இருக்கு."

பலவருடப் பிரிவில் நிகழ்ந்த சம்பவங்களைப்பற்றி உரையாடியதில் பொழுது போனதே தெரியவில்லை.

''சிவா.... நாளைக்குக் காலமை பக்கத்திலை ஒரு கலியாண வீடு. நாங்கள் குடும்பத்தோடை போகவேணும். நீயும் வருவாய்தானே?"
''நான் என்னத்துக்கு அண்ணை அங்கை.... நீங்கள் போவிட்டு வாங்கோ.... நான் வீட்டிலை இருக்கிறன்."
''சீச்சீ.... நீயும் வா. இங்கை தனிய என்ன செய்யப்போறாய்? கனகரத்தினம் எங்களுக்கு நல்ல சினேகிதன். அவன்ரை தம்பியாருக்குத்தான் கலியாணம்."
''இங்கை கன தமிழாக்களே?"
''குடும்பங்கள்மட்டும் நாப்பதுக்கு மேலை. ஆனால் ஒருத்தன்கூட ஒற்றுமையாய் இல்லை. சின்னச் சின்ன விசயங்களுக்காகச் சண்டை பிடிக்குங்கள். ஒருத்தரைப் பார்த்து ஒருத்தருக்குப் பொறாமை. ஒருத்தர் புதுக் கார் வாங்கினால் மற்றவனுக்குப் பொறுக்காது. கடன்பட்டாலும் கார் வாங்கிவிடுவான். ஒருத்தன் கடைபோட்டால் மற்றவன் எதிர்க்கடை. களவாய் ஆராலும் வேலைசெய்தால் எங்கடை ஆக்களே காட்டிக்கொடுத்து விடுவாங்கள். ஆம்பிளையள் தான் இப்பிடியெண்டால் பொம்பிளையள் அதுக்கு மேலை. ஒரு கலியாண வீட்டுக்கு உடுத்த சீலையை மற்றக் கலியாணத்துக்குக் கட்ட மாட்டினம்...."
''உது எல்லா இடத்திலையும்தான் அண்ணை!"
''நீ ஏதாலும் பாவிக்கிறனியே?"
''இல்லையண்ணை!"
“ஒரு பியர் எண்டாலும் குடியன். நான் ஆராலும் வந்தால்தான் கொஞ்சம் பாவிக்கிறனான்!"
இரண்டு போத்தல் பியரை உடைத்து வைத்தார்.
+++++++

''அப்பாடா...." என்றவாறு சோபாவில் 'தொப்’பென்று விழுந்தார் சிவநேசன்.
''என்ன கூட்டம்.... என்ன கூட்டம்...."
வாய் முணுமுணுத்தது.
''என்னண்ணை.... களைச்சுப் போனியளே?"
சிவராசன் கேட்டான்.
''இல்லையடா சிவா.... ஒரு இடத்துக்குப் பிள்ளையளோடை போய் வாறதெண்டால் போதும் போதுமெண்டாகி விடுது. இதுகள் மற்றப் பிள்ளையளோடை சேர்ந்தடிக்கிற கொட்டம் தாங்க முடியேல்லை."
''இப்பிடியான இடங்களிலைதானை எல்லாப் பிள்ளையளும் சேர்ந்து விளையாட முடியுது."
''சரியாய்ச் சொன்னீங்கள்.... வீட்டுக்கை அடைஞ்சு கிடக்கிறதுகள் இப்பிடியான இடங்களிலைதான் ஓடித் திரியுதுகள். இந்தாளுக்கு இது விளங்காது" என்று குறுக்கிட்டார் யோகம்.
''அதுக்காக இப்பிடியே சந்தைமாதிரி.... கலியாணவீட்டுக்கு வந்திருந்த சனங்களின்ரை முணுமுணுப்பைக் கேட்டனியெல்லே.... கலியாண வீடு எப்பிடி.... எக்கச்சக்கமாய் செலவழிச்சிருக்கிறாங்கள்."
''ஓமோம்.... நல்லாய் நடத்தியிருக்கினம்."
''கனகரத்தினத்திட்டை நல்ல காசிருக்கு.... தம்பியாற்றை கலியாணந்தானே. பாத்துப்பாராமைச் செலவழிச்சிருப்பான்."
''அந்தாள் நல்ல மனிசன்போலை கிடக்கு. என்னோடையும் கொஞ்சநேரம் கதைச்சவர். சிலபேர் இலேசிலை கதைக்கமாட்டினம். இந்தாள் வலியவந்து கதைச்சுது...."
''புருசனும் பெஞ்சாதியும் பழகிறதுக்கு நல்ல சனங்கள். என்னவாலும் விசேசம் எண்டால் தங்கடை அலுவல்மாதிரி ஓடியாடித் திரிஞ்சு உதவி செய்யுங்கள். கதையோடை கதையாய் மறந்துபோனன்.... இரவைக்கு உன்னையும் கூட்டிக் கொண்டு தங்கடை வீட்டை வரச்சொன்னவர்...."
''என்னட்டையும் சொன்னவர்."
''என்னவோ முக்கியமான விசயமாம்."
''முகத்தைக் கழுவிப்போட்டு கொஞ்சநேரம் படுக்கிறதெண்டால் படு. இல்லாட்டி ரீவி பார். யோகம், சிவாவுக்கு ஏதாலும் நல்ல படமாய்ப்பாத்து எடுத்துக் கொடு. பாக்கட்டும். நான் கொஞ்சநேரம் சரியப்போறன். பகல்லை ஒரு அரைமணித்தியாலமாலும் படுத்தால்தான் உடம்பும் இடம் கொடுக்குது. வயது போவிட்டுதெல்லே...."

சிவநேசன் படுத்து எழும்பி சிவராசனையும் கூட்டிக் கொண்டு கனகரத்தினம் வீட்டுக்குச் சென்றார்.
+++++++

திருமண வீட்டில் கனகரத்தினத்தின் பார்வை சிவராசனைச் சுற்றியே வட்டமிட்டது.
சிவநேசனின் உறவுக்காரன் என அறிந்திருந்தார். பார்த்த உடனேயே அவருக்குப் பிடித்துவிட்டது.
அமைதியான பொடியன். முகத்தில் பணிவு கலந்த வசீகரம். அருகே சென்று கதைத்தார்.
கதையில் கண்ணியம் தெரிந்தது.
மனைவி பவளத்தைக் கூப்பிட்டுக் காட்டினார்.

''பாக்க நல்ல பொடியன்மாதிரித்தான் தெரியுது. பிடிச்சிருந்தால் கேட்டுப் பாருங்கோவன்...."
''சம்மதிப்பானோ தெரியாது."
''இண்டைக்கு இரவுச் சாப்பாட்டுக்கு வீட்டை கூட்டிக்கொண்டு வரச்சொல்லி  சிவநேசனிட்டைச் சொல்லுங்கோ!"
''நீ சொல்லுறதும் சரிதான். வீட்டை வரவிட்டுக் கேட்டுப் பாப்பம். சரிவந்தால் சந்தோசம்...."
கனகரத்தினம் சிவநேசனிடம் சென்று கதைத்தார்.

''வாறம்...."
அன்று இரவு சிவநேசனும் சிவராசனும் வந்தார்கள்.
சாப்பாடு பரிமாறப்பட்டது.
வளம் கனகரத்தினத்துக்குச் சைகை காட்டினாள்.

''பவளத்தின்ரை அக்காவுக்கு ஐஞ்சு பிள்ளையள். உழைப்புப் பிழைப்பில்லாமைக் கஸ்டப்படுகுதுகள். நாங்கள் ஊரிலை இருக்கேக்கை மூத்தபெட்டை அகல்யா சின்னல்லை இருந்தே எங்களோடைதான் வளர்ந்தவள். நாங்கள் ஜேர்மனிக்கு வந்தாலும் அடிக்கடி கடிதம் போடுவாள். நல்ல பிள்ளையவள். எங்களிலை சரியான பாசம். இந்தக் காலத்திலை பிள்ளையள் நல்லாயிருந்தால் மட்டும் காணுமே?! காலாகாலத்திலை கலியாணம் செய்து கொடுக்கக் காசெல்லே வேணும். அதுகள் காசுக்கு எங்கை போகும்?" என்று நிறுத்திவிட்டுப் பவளத்தைப் பார்த்தார் கனகரத்தினம்.
''ஏன் கனகு.... நீங்கள் ஏதாலும் உதவி செய்யிறேல்லையே?" -இது சிவநேசன்.
''ஏதோ இயன்றதைச் செய்யிறம். இப்ப அகல்யாவையும் இங்கை கூப்பிட்டுக் கலியாணம் கட்டிவைக்கலாமெண்டு நினைச்சிருக்கிறம். ஆனால் இங்கை கூப்பிடவே எக்கச்சக்கமான காசு தேவை. பேந்து சீதனம் அது இதெண்டு காசு தேவை. கனக்கக் காசு தேவை எண்டுதான் யோசினையாக்கிடக்கு" என்று தயங்கினார் கனகரத்தினம்.
''ஏன் கனகு, முதலிலை இங்கை கூப்பிட்டால் ஆராலும் சீதனம் வாங்காமைக் கலியாணம் செய்யுற மாப்பிள்ளை கிடைக்காமலே போய்விடுவான்?!"
''கிடைச்சாலும் குணமுள்ளவனாயெல்லே அமையவேணும்.  கலியாணத்தைக் கட்டிப்போட்டுச் சீதனத்தைக் கொண்டு வா எண்டு சித்திரவதைப்படக் கூடாது."
இது பவளம்.

''ஓமோம். வெளிநாட்டிலை எந்தப் புத்திலை எந்தப் பாம்பு இருக்கும் எண்டு தெரியாது. ஊரிலை எண்டால் நாலிடத்திலை விசாரிக்கலாம்."
''அதுதான் சிவநேசன். நீங்கள் இவர் சிவராசனைப்பற்றி முந்தி அடிக்கடி என்னட்டைச் சொல்லியிருக்கிறியள், குடும்பத்தை நல்லாய்க் கவனிக்கிறவர் எண்டு. நாங்கள் நேரிலை பார்த்தும்விட்டம். எங்களுக்குப் பிடிச்சுப் போச்சுது. ஆனால் வந்த இடத்திலை எப்பிடிக் கேக்கிறதெண்டுதான் தயக்கமாயிருக்கு."
''இதிலை என்ன கனகு?"
''இல்லை.... கண்ட ஒருநாளிலையே சீதனமில்லாமைக் கலியாணம் கட்டுறியோ எண்டு எப்பிடிக் கேக்கமுடியும்?"

சிவராசன் திகைத்துவிட்டான்.
எங்கோ சுற்றிச் சுழன்ற சம்பாசணை தன்னைச் சுற்றிப் படரும் என்று எதிர்பார்க்கவில்லை.
'எனக்குக் கலியாணமா?’
எதிர்பாராத வேண்டுகோள்.

''கனகு! சிவராசன் சீதனமில்லாமை இதுக்குச் சம்மதித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். அது அவன்ரை விருப்பம்.... என்ன சிவா?"

திடீரென்று வந்து விழுந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவது?
புரியவில்லை.
சற்றுநேரம் முன்பு வரை நினைத்துப் பாராத ஒரு விசயத்திற்கு விடை தேடுகிறார்கள்.

“இஞ்சை பாரும். இதுதான் அகல்யாவின்ரை படம். கிட்டடியிலை பிடிச்சு அனுப்பினவை."

பவளம் போட்டோ ஒன்றைக் காட்டினாள்.
பரவாயில்லை. அழகாகத்தான் இருந்தாள்.

''நீர்  இப்ப  முடிவைச்  சொல்ல  வேண்டாம். நல்லாய்  யோசிச்சுச் சொன்னால் போதும்."
இது கனகரத்தினம்.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!