ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

அதில் என்ன தவறு?!

வெள்ளைத்தோல்கள், பழுப்புத்தோல்கள், கறுப்புத்தோல்கள் எனப் பலதரப்பட்ட பன்னாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாகத் தாறுமாறாக- அவசர அவசரமாக வாகனங்களோடு வாகனங்களாக- இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அது பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம். 

முன்வாசலில் வலப்புறமாக நிரையாக டக்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இடத்துக்காக முன்நகர- அதை ஒட்டிய தொலைபேசிக் கூண்டுகளின் பக்கத்தில் நிரம்பி வழியும் சைக்கிள்கள்.

பியர் ரின்களுடன் தள்ளாடிவந்த இரண்டு செம்பட்டைப் பரட்டைத் தலைகள் முரட்டுச் சப்பாத்துக் கால்களால் முன்னால் நின்ற சைக்கிள்களில் ஒன்றை உதைத்து நெளித்து, தமது போதைக்குக் குறியீடு வைத்து நகர, சைக்கிள் உரிமையாளரின் வருகைக்காக அனாதையாய்க் கிடந்தது.

சற்றுத் தள்ளி இருந்த பெட்டிக்கடைகளில் இரண்டு பெண்கள் வியாபாரம் செய்வதில் தம்மை மறந்திருந்தார்கள். அந்தப் பெட்டிக்கடைகளொத்த சிற்றுண்டிச்சாலைகளின் முன்னால் உள்ள இரும்புப்பாதைகளில் ‘கிறீங், கிறீங்’ என்ற அபாய ஒலியால் மக்களை விலத்தியபடி, ‘ட்ராம்’ வண்டிகள் பாம்புகளாக நெளிந்து கொண்டிருந்தன.

தூரத்தே தெரிந்த ‘மக்டொனால்’டின் விளம்பர எழுத்துக்கள் பசிக்காதவர்களையும் புசிக்கத் தூண்டியது. புகையிரத நிலையத்தின் முன்புறமிருந்த ஒன்றிரண்டு காவியேறிய வாங்கில்களில், சில வெள்ளைத்தோல்கள் அரைகுறையாகச் சிதைக்கப்பட்டுக் கண்டபடி நிறங்களைக் கடுமையாக அப்பிய தலைமுடிகளுடன் ஒருவர்மீது ஒருவர் உரசியவாறு, ஏதோ ஒருவித மயக்கநிலையில் உளறிக் கொண்டிருந்தனர்.

அவர்களுடனிருந்த ஒரு வயதான பெண்மணி, கையில் வைன் போத்தலொன்றை உயர்த்திக்காட்டி ஏதோ பாடலை உரத்த குரலில் சிதைத்தபடி, விகாரமாக உடம்பை நெளித்து ஆடுவதுபோல் பாவனை செய்துகொண்டு இருந்தாள்.

வேறு இரு இளம்பெண்கள் ஒருத்தியின் தோளை மற்றவள் தாங்கியபடி தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். அந்த நீல விழிக்கண்கள் மயங்கிவிடத் தயாரானவைபோல மேலே செருகிக் கொண்டிருந்தன.

அவர்களில் ஒருத்திக்கு வயது இருபதுக்குள்தான் இருக்கும். செந்நிறக் கூந்தல் ஒழுங்காக வாரிவிடப்படாமல், ஒற்றைக் காலில் பாதணிகூட இல்லாமல், கீழே விழுந்துவிடத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அவளை உற்றுப் பார்க்க வேண்டும்போலிருந்தது.

பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம்போன்ற முகம். மாசுமருவற்ற கண்கள். மேலோட்டமாகப் பார்க்கையில் அப்பழுக்கில்லாத அழகுச்சிலை. திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் தோற்றம். ஆனால் மற்றவளின் பிடியில் தள்ளாடிக் கொண்டிருந்தாள்.

மற்றவள் அவளை எச்சரித்தாள்.

“அன்யா கவனம்.... சமாளித்துக் கொள்!”
“என்னால் முடியாது.... என்னால் நிற்க முடியவில்லை.... காற்றில் பறப்பதுபோலிருக்கிறது.... வீட்டுக்குக் கூட்டிப்போ! இப்படியே படுக்கவேண்டும் போலிருக்கிறது."
“உளறாதே... பொலீஸ் கவனிக்கிறாங்கள்! கோப்பி குடிப்போம். உனக்குச் சரிவரும்....!"
“இல்லை வீட்டை போவோம்....!"
“எப்படிப் போவது...? கையில் அவ்வளவு பணம் இல்லை. கோப்பிக்கு மாத்திரம்தான் போதும்!"
“இல்லை.... நான் வீட்டுக்குப் போய்ப் படுக்கவேண்டும்."
“கொஞ்சம் பொறு.... மாக்கூஸ் வருவான். பணம் தருவான்."
“மாக்கூஸா...? அவனிடம் பணம் வாங்காதே! நேற்று என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். சனியன்.... இதோ பார் காயத்தை.... அவன் ஒரு மிருகம்...!"
“அப்போ எப்படி வீட்டை போவது...?" என்றவாறு போதை நிறைந்த விழிகளைப் பெரிதாக்கிச் சுற்றுமுற்றும் நோட்டமிட்டாள்.

அவளது விழிகள் என் விழிகளைச் சந்தித்தபோது, நான் தலையைத் திருப்பிக்கொண்டாலும், செவிகள் என்னவோ அவர்களின் உரையாடலையே ஒட்டுக் கேட்க விழைந்தன.

“அந்தக் கறுப்பன் எங்களைத்தான் உற்றுப் பார்க்கிறான்!"
“இதற்கு முன் பெண்களைப் பார்த்திருக்கமாட்டான்!"
“சிலவேளை அவனிடமும் ஈயப்பொட்டலம் இருக்கும்... கேட்டுப் பார்ப்போம்...!"
“காசில்லை...!"
“காசில்லை என்றால் என்ன? படுக்கக் கேட்பான்...."
“சிலவேளை வெறும் ஈயச்சுருளைக் காட்டி ஏமாத்திவிடுவான். உள்ளே ஒன்றும் இருக்காது...!"
“அதுவும் சரிதான்...!"

எனக்கு என்னவோபோலிருந்தது. மேலும் அங்கே நின்று என்னைப்பற்றிய விமர்சனங்களைக் கேட்குமளவிற்குத் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.
போதைக்கு அடிமையாகி, சுத்தத்தை சுத்தமாக விரட்டி, அசுத்த ஆடைகளுடன் தள்ளாடுபவர்களுக்கு நான் ஒரு காமுகனாம். வேடிக்கையாக இருந்தது.
கூடவே என் நிலையை எண்ணிப் பார்க்கையில் வேதனையாகவும் இருந்தது. தாயகத்தில் எப்படியெல்லாமோ நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்துவிட்டு, இங்கே இப்படி இவர்களின் பார்வையில் காமுகனாக, பெண்களையே பார்த்தறியாதவனாக உருவகமானதை என் விதி என்பதா? அல்லது என் இனத்தின் விதி என்பதா?
என்னைப்போல் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இப்படியாக...!!

அங்கிருந்து மெதுவாக ‘ட்ராம்’ பாதைகளைத் தாண்டி, தபால் கந்தோர் பக்கமாக வந்தேன். அங்கே ஒரு தார் பரப்பிய முற்றத்தில் சிலமரங்கள். அவற்றின் அடியில் சில வாங்கில்கள். ஒரு வாங்கிலில் ஒரு மெல்லிய உருவம் என்னையே உற்று நோக்கியவாறு இருந்தது.
++++++

ன்னங்கரிய தலைமுடி நீண்டுவளர்ந்து காதுகளை மூடி நெற்றிவரை கசிந்திருந்தது. ஏதோ பழங்கால முனிவர்களைக் கண்முன்னால் கொண்டு வருவதுபோல் தாடியும் மீசையும் நீளத்தில் ஒன்றையொன்று போட்டிபோட்டவாறு முகத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தன. 

கறுப்புநிற உடைகள் அழுக்கடைந்திருந்தது. விழிகள் இரண்டிலும் இரத்தச் சிவப்பு. கையிலே பியர் ரின் பச்சை நிறத்தில். 

தாடியைத் தடவுவதும் வானத்தை அண்ணாந்து பார்த்துச் சிரிப்பதும், பின்னர் என்னை உற்று நோக்குவதுமாக...!!

இப்படியே மீண்டும் மீண்டும்....

இலங்கையனாக இருக்கவேண்டும். எனினும் வலிய நெருங்கிச் செல்ல மனம் ஒப்பவில்லை. காரணம் அழுக்கு உடைகளும் தாடியும் மீசையும் காவியேறிய பற்களும் சிவந்த கண்களும் சராசரி இலங்கையனிலிருந்து வேறுபட்டிருந்தது. 

ஆனால் அந்த மனிதன் திடீரென எழுந்து என்னை நோக்கி நெருங்கினான். 

பைத்தியமாக இருப்பானோ? மனதிற்குள் பயமாக இருந்தது.

“நீ.... இலங்கையன்...?"
டொச்சில் தெறித்தன வார்த்தைகள்.

“இல்லை!" - அவசரமாக மறுத்தேன். 

நம்பாமல் பார்த்தான். 

சிறிதுநேரம் நின்று யோசித்து, தனக்குள் சிரித்துத் தலையாட்டியவாறு நகர்ந்தான்.

ச்சீ.... எனக்கே என்மேல் வெறுப்பாக இருந்தது.

நான் ஏன் இலங்கையன் இல்லை என்று பொய் கூறினேன்?! அப்படிப் பொய் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.

திடீரென்று வந்து விழுந்த கேள்விக்கு என்னை அறியாமல் கூறிய பதில் அது.
அவன் நிச்சயம் இலங்கையனாகத்தான் இருக்கவேண்டும். என்ன கவலைகளால், எந்தச் சூழ்நிலைகளால் இப்படி மாறினானோ?

நான் என்னை இலங்கையன் என்று அடையாளம் காட்டியிருந்தால், அவனின் வாழ்வின் அனுபவங்களைக் கதையாகக் கேட்டு, அவனுக்காகப் பரிதாபப்பட்டிருக்கலாம் அல்லது பரிகசித்திருக்கலாம்!

ஆனால் நான் ஏன் வலிய வந்தவனிடமிருந்து அந்நியன்போல விலகிக் கொண்டேன்?

அவனது தோற்றம் என்னை அவனது நாட்டுக்காரன் என்று சொல்ல மறுத்ததா? அல்லது அவனுடன் கதைத்தால் அவனைப்போல்தான் நானும் என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படுவேன் என்ற பயமா? அல்லது அவனிலும் பார்க்க நான் உயர்ந்தவன் என்ற அகம்பாவமா?

புரியவில்லை!

புகையிரதநிலையத்தில் யாரோ இரு ஜேர்மன்காரிகள் குடிபோதையில் என்ன பேசுகிறார்கள் என ஆர்வமாகச் செவிசாய்த்த நான், வலிய வந்து அறிமுகம் செய்ய விரும்பியவனை விலத்திநின்ற போக்கு எனக்கே விளங்கவில்லை.

எனக்கே எந்நாட்டவனின் அறிமுகம் வேண்டாதபோது, வேறு நாட்டவர்கள் என்னைப்பற்றிக் கண்டபடி விமர்சிப்பதில் என்ன தவறிருக்கமுடியும்?!


(பிரசுரம்: பூவரசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!