வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

அகத்தில் அரும்பிய ஆரூடம்

முடிவு ஆரம்பம், ஆரம்பம் முடிவு. ஆக்கம் அழிவு, அழிவு ஆக்கம். இரவு பகல், பகல் இரவு. ஒன்றின் எல்லையைத் தொட்டவாறு அதன் எதிர்மறையின் எல்லை. இந்த எல்லைகளின் விரிவும் சுருக்கமும் ஒரு உயிரினது சூழ்நிலையினது, மொத்தத்தில் உலகினது போக்கையே நிர்ணயிக்கின்றது. ஒவ்வொன்றின் முடிவும் தோற்றமும் வித்தியாசமானவை. அதேபோல் ஒன்றின் ஆக்கம் மற்றதின் ஆக்கத்தில் இருந்து வேறுபட்டது. அதேபோல் எல்லா இரவும் ஒரேமாதிரியானவையல்ல. பகலும் அவ்வாறே. அளவால் தன்மையால் வேறுபட்டவை. ஆனால் எல்லாம் ஆரம்பம்தான். முடிவுதான். ஆக்கம்தான் அழிவுதான். இரவுதான் பகல்தான்.

இத்தகைய நிகழ்வுகளின் முன்னால் இன்பம் துன்பம், துன்பம் இன்பம்- இது சர்வசாதாரணம்.
ஆனால் இந்தச் சாதாரண சங்கதிக்குள் தமது வாழ்க்கையையே அடகுவைத்த, உலகின் நியதிகளுக்குப் பயந்து முடங்கும் மனித உயிர்கள்தான் எத்தனை?

இவர்கள் வாழப் பிறந்தவர்கள்.

வாழவெனக் கருவில் உருவாகிச் சதையாகி அவயங்களால் அலங்கரிக்கப்பட்டு பாசக்கரங்களில் பற்பல எதிர்காலத் திட்டங்களைச் சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டவர்கள்.

ஆனால் இந்தச் சிலரால் ஏன் வாழமுடியாமல் போகிறது? 

ஏன் வாழ்க்கையோடு போராடி வெல்ல முடியவில்லை?

இவர்களும் வாழப் பிறந்தவர்கள். ஏன் இவர்களால்மட்டும் தோல்வியையே சந்திக்க முடிந்தது? யாரால் தோற்கடிக்கப்பட்டார்கள்? தங்களால்தான். தாங்களே தங்களைத் தோற்கடித்து வாழ்வைத் தொலைத்தவர்கள்....

அதோ....

ஜேர்மனியில் ஒரு நகரம். தொழில் வளர்ச்சியில், நாகரீகத்தில் முன்னேறிய நகரம். எங்கு நோக்கினும் முன்னேற்றத்தையே எடுத்தியம்பும் செயற்பாடுகள். அதையும் தாண்டித் தபாற்கந்தோர்ப் பக்கமாக பார்வையைத் திருப்பினால் சற்றுத் தள்ளிப் பலமரங்கள் பசுமைகளால் குளுமையை அள்ளி வீசியவாறு அடர்ந்திருக்க, சிறுவர்களைக் களிபூட்டவெனச் சில விளையாட்டுச் சாதனங்களைத் தன்னகத்தே அடக்கியவாறு ஒரு அழகிய பூங்கா. அந்த நகரத்தின் மிகப் பெரிய பொழுதுபோக்குப் பூங்கா அது. அதனுள் ஓங்கி உயர்ந்து கிளைகளைப் பரப்பியவாறு இறுமாந்து நிற்கும் ஒரு வயதான உறுதிமிக்க மரம். அந்த மரத்தின் பலமான கிளை ஒன்றில் இறுகப் பிணைக்கப்பட்ட நைலோன் கயிறு.

தலைகீழாகத் தொங்கிய அக்கயிற்றின் மறுமுனை கழுத்தை நெரிக்க, பிளந்திருந்த வாய்வழியாக நாக்கு வெளியே தள்ளியவாறு ஒரு உடல் அசைந்தாடுகிறது. அந்தச் சடலம் தன்னை ஒரு இலங்கையனின் உடல் என அடையாளம் காட்டவெனப் பல குறியீடுகளைக் கொண்டிருந்தது.

சுற்றிலும் நீல நிற வெளிச்சத்தை மினுக்கியவாறு பச்சைநிற பொலிஸ்கார்களும், சிவப்புநிற அம்புலன்ஸ் வண்டிகளும். வேடிக்கை பார்க்கவெனச் சூழ்ந்த பலநூறு மக்கள் கூட்டம். அவர்களோடு முண்டியடித்துக்கொண்டு கடமையைக் கவனிக்கும் பத்திரிகை நிருபர்களும் புகைப்பட நிபுணர்களும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு மரமும் அதில் தொங்கும் கயிறும் பிணமும் பழசு. ஆனால் ஜேர்மனிக்கு இந்த மரத்தில் அசையும் உடல் புதிது. அதுவும் பிரபலமான பொதுப்ப+ங்காவில் ஒரு அந்நிய நாட்டவனின் கொடூரமான உயிர்த்துறப்பு.

சுற்றிலும் ஒரே பரபரப்பு.

சில முதியவர்களின் பயம் கலந்த அலறல் ஒலிகள்.

பிள்ளைகளின் கண்களைப் பொத்தியவாறு அப்பால் விலகி ஓடும் தாய்மார்கள்.

முகம் வியர்க்க கண்கள் மேலே செருக ஒரு ஜேர்மன் மாது மயங்கி விழ, அவளைச் சுமந்தவாறு விரைந்தது சிவப்புநிற வண்டியொன்று.

“சைஸ அவுஸ்லாண்டர்...."
“சாவதற்கு ஜேர்மனிக்கா வர வேண்டும்...."
“கறுப்பன்... எமது தந்தைநாட்டை அசிங்கப்படுத்தி விட்டான். வீதியைக் குப்பையாக்கினார்கள். புல்லை மிதித்தார்கள். பொது இடங்களில் துப்பினார்கள்.... இப்போது பொது இடத்தையே மயானமாக்குகிறார்கள்...."
“எல்லோரையும் துரத்த வேண்டும். இது ஜேர்மனியரின் நாடு...."

“சற்றுப் பொறு நண்பனே.... அந்த உடலின் வாயில் இருந்து வழியும் இரத்தத்தைப் பார். சிவப்பு.... சிவப்பு.... எமது நாட்டுக் கொடியிலும் சிவப்பு உள்ளது."
“அதற்காக இப்படியா.... உயிரின் பெறுமதியே ஒரு நைலோன் கயிற்று முடிச்சில் என்பதுபோல்.... காட்டு மிராண்டித்தனம்...."

அந்த உடல்.... தெரிகிறதா?

இலங்கையன்.

அகதியாக அடைக்கலம் தேடிவந்து நாதியற்று ஒரு நகரத்தில் சவமாகக் கிடக்கும் தமிழன். தனக்கென நாடு ஒன்றில்லாத இலங்கைத் தமிழன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஜேர்மனியில்தான், அந்த நகரத்தில்தான் வாழ்கிறான். இப்போது தெரிந்திருக்குமே?!

அந்த உடலின் பெயர்தான் அமரர் சந்திரன்.
+++++++++

“ஏன் இப்பிடிச் செய்தனி? இத்தினை வருசமாய் இந்த அகதி முகாமிலை ஒண்டாய் வாழுறம். ஒருத்தருக்கு ஒரு பிரச்சினை எண்டால் மற்றவர் உதவி செய்யுறம். ஒருத்தனுக்கு வருத்தமெண்டால் மற்றவன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போறதிலை இருந்து சாப்பாடு கொடுக்கிறதுவரை கவனிக்கிறான். இப்பிடி ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு உதவியாய் இருக்கேக்கை நீ ஏன் இப்பிடிச் செய்தனி?"

“இலங்கையிலை திக்குத்திக்காய் வாழ்ந்து ஜேர்மனிக்கு வந்தம். இந்த அகதி முகாமிலை ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திக் கொண்டம். பாசை தெரியாமைக் கூட்டம் கூட்டமாய் "ராத்தவுஸ{"க்கும் கடையளுக்குமாய் அலைஞ்சு திரிஞ்கம். ரின் இறைச்சி எண்டு நினைச்சு நாய்ச் சாப்பாட்டைக்கூட வாங்கிக்கொண்டு வந்தம். கொஞ்சக்காலம் போகப் பழைய சைக்கிள்களை வாங்கி ஓடித் திரிஞ்சம். வேலை தேடினம். குடிச்சு வெறிச்சம். ‘பேர்த்டே’ கொண்டாடினம். ‘பொலிபோல்’, ‘புட்போல்’ விளையாடினம். கார் வாங்கினம். இப்ப கொஞ்ச நாளாய் பெஞ்சாதி பிள்ளையள் எண்டு குடும்பங்களைக் கூப்பிடத் தொடங்கிவிட்டம். இப்பிடி ஒருத்தருக்கொருத்தர் ஒரு குடும்பமாய் வாழ்ந்து மற்றவற்றை முன்னேற்றத்துக்கு உதவிசெய்து வாழேக்கை.... ஒருத்தரிட்டையும் சொல்லாமை இப்பிடி ஏன் செய்தனீ....? உனக்கு அப்பிடி என்ன பிரச்சினை சந்திரன்?!"

“எல்லாரும் எனக்கு எதிரியாயிட்டாங்கள். ஒட்டி நிண்டு கழுத்தறுக்கத் திரியுறாங்கள்.... ஆரை நம்புறது எண்டு தெரியேல்லை.... உனக்குத் தெரியாது. போனமாதம் ஒரு சனிக்கிழமை.... இரவு எட்டு மணியிருக்கும்..... எல்லாரும் ‘புட்போல் மாட்ச்’ எண்டு போவிட்டாங்கள். நான் மட்டும்தான் தனிய.... படுத்திருந்தனான்.... ஒரு கார்வந்து நிக்கிற சத்தம் கேட்டுது. யன்னலாலை எட்டிப் பாத்தன்.... நாலைஞ்சுபேர்.... கையளிலை கத்தி.... பொல்லு.... கம்பி.... என்னைத்தான்.... ஓமோம்.... என்னைத்தான் அடிக்க வந்தவங்கள்.... நல்ல காலம். நான் கட்டிலுக்கடியிலை ஒளிச்சதாலை தப்பிச்சன்.... அறையுக்கை வருவாங்கள் எண்டு பாத்தன். வரேலை. கொஞ்ச நேரத்தாலை கார் போன சத்தம் கேட்டுது. இனியும் தனிய அங்கையிருக்க எனக்கென்ன விசரே.... பேசாமை வேறை சிற்றிக்குப் போவிட்டன்...."

“என்னடா கதை உது?! உன்னை அடிக்க ஏன் காரிலை வரவேணும்.... கண்டதை நினைச்சு மனதைக் குழப்பாதை....!"

“இல்லை.... நீ நம்பாய்.... எனக்கு நல்லாய்த் தெரியும். என்னைத்தான் அடிக்க வந்தவங்கள்...."

“காரிலை வந்தாக்களைத் தெரியுமே?"

“தெரியாது.... ஏன் தெரியாத ஆக்கள் வரப்படாதே? ஏவல்.... ஏவல்.... ஏவி விட்டிருக்கிறாங்கள்.... பக்கத்துக் கட்டிலிலை படுத்திருக்கிறவனையே நம்ப முடியேலை. நித்திரை கொள்ளேக்கை என்ன செய்வானோ தெரியாது.... அதாலைதான் கட்டிலுக்கடியிலை கம்பி ஒண்டு வைச்சிருக்கிறன்.... கிட்ட வந்தால் மண்டை ஓடு வெடிக்க ஒரே போடு...."

“சந்திரன்! நீ உன்ரை பாட்டிலை எதையோ கற்பனை பண்ணிக் கொண்டு சொல்லாமைக் கொள்ளாமை எங்கையோ போவிட்டு, இப்ப வந்து கதை அளக்கிறாய். வேலைத்தலத்துக்குக்கூட அறிவிக்கேலை. இந்த நேரம் வேலையும் போயிருக்கும்...."

“வேலை.... கண்டறியாத வேலை.... என்னைக் கொல்ல எல்லாரும் திட்டம் தீட்டுறாங்கள். நான் எங்கையோ போய் ஒளிஞ்சிருந்துபோட்டு வந்திருக்கிறன். நீ என்னடாவெண்டால் வேலையைப்பற்றிக் கதைக்கிறாய்...."

“ஆர் உன்னைக் கொல்லப் போறவன்?"

“இந்த முகாமிலை இருக்கிற எல்லாரும்...."

“நானுமா....?!"

“நீ இல்லை. மற்ற எல்லாரும்...."

“நம்ப முடியேலை சந்திரன்.... நானும் உன்னோடை இந்த அகதி முகாமிலைதான் இருக்கிறன். இன்னும் பத்துப் பேர். ஒரு குடும்பம். இப்பதான் மனுசியைக் கூப்பிட்டுக் குடும்பமாயிருக்கிறான். அந்தக் குடும்பமும் பிறிம்பாக வீடு தேடுது. கிடைச்சவுடனை போவிடும். இந்த முகாமிலை எங்களைத் தவிர வேறை வெளிநாட்டவரும் இல்லை. நீ என்னடாவெண்டால் கொலையைப்பற்றிக் கதைக்கிறாய்.... கனவு கினவு கண்டனியே?"

“நம்பு.... என்னை நம்பு.... நான் சொல்லுறது உண்மையடா. உவங்கள் எல்லாம் பசுத்தோல் போத்தின புலியள்.... சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறாங்கள்.... எம்பிட்ட இடத்திலை மாட்டிப்போடுவாங்கள்...."

“ஏன்.... என்ன காரணம்?"

“காரணம்.... இந்த முகாமுக்கை எண்டைக்கு ஒரு பெண் வந்தாளோ.... அதுதான்.... அதுதான் காரணம்!"

“அந்தக் குடும்பமோ....?"

“ஓம்.... உங்கள் எல்லாருக்கும் பகல் வேலை.... எனக்கு இரவிலை. பகல் வேளையிலை இங்கை நானும் அவளும்தான்.... அதாலை சந்தேகம்....!"

“ஆர் சந்தேகப்படுறது....?"

“புருசன்காரன்.... அவனோடை சேர்ந்து மற்றவங்களும் என்னைக் கொல்ல நிக்கிறாங்கள்...."

“எட சந்திரன்.... அவனும் இவளும் ஊரிலையே காதலர்கள். இப்பதான் அவளை இங்கை கூப்பிட்டிருக்கிறான்.... அவளைப் பார்த்தால் எவ்வளவு நல்ல குணமானவள்போலை இருக்கு.... அவனும்தான். நீ சும்மா கதைச்சுக் கரைச்சலை விலைக்கு வாங்காதை...."

‘நீயும் எனக்கு எதிரியா?’ என்பது போலிருந்தது சந்திரனின் பார்வை.

சந்திரனின் வார்த்தைகளில் ஏதோ ஒரு நெருடல் தொனித்ததை உணர முடிந்தது.

சந்திரனின் பிரச்சினையைப்பற்றி எவரிடமாவது ஆலோசனை கேட்க வேண்டும். சிலவேளை அவனுடைய பிரச்சினை உண்மையாக இருக்குமோ? ஒருவன் அடிக்க நினைக்கலாம் அல்லது கொல்ல முயற்சிக்கலாம். ஆனால் ‘எல்லோரும் எதிரி’ என்று அவன் கூறும்போது நம்ப முடியவில்லை.

“சந்திரனோ....? அவன்ரை கதையை விடு. இப்பிடித்தான் எல்லாரிட்டையும் சொல்லிக்கொண்டு திரியுறான்.... இதாலை பாவம் அந்தக் குடும்பத்துக்குத்தான் கெட்டபேர். இப்ப உன்னோடை கதைக்கேக்கை நீமட்டும்தான் நல்லவன் என்பான். பேந்து என்னோடை கதைக்கேக்கை நீயும் தன்னைக் கொல்லத் திரியுறாய் என்பான்...."

“ஏன் இப்பிடி?"

“அவனுக்குள்ளை ஒரு தாழ்வு மனப்பான்மை...."

“விசர் என்கிறியோ....?"

“இல்லை. இது சட்டையைப் பிச்சு மண்டையைப் பிசையுற விசயம் இல்லை. மனசை விடுற விசயம்.... ஒருவகை மனோவியாதி.... தன்னோடை இருக்கிறவங்கள் எல்லாம் குடும்பமாகேக்கை தான்மட்டும் தனிச்சுப் போவனோ எண்ட பயம்.... முப்பத்தைஞ்சு வயசாச்சு.... இனி ஒரு வாழ்க்கை அமையுமோ எண்ட ஏக்கமாய்க்கூட இருக்கலாம்...."

இப்படி இருக்குமோ....?

ஒவ்வொருவனின் பரிவைப் பெறுவதற்குத்தான் இத்தகைய கதை அளப்போ? மனித வாழ்வில் தினமும் புதுப்புது அனுபவங்கள்.... அதனால் எழும் பாதிப்புக்கள், தாக்கங்கள். இவற்றின் தாக்குதலால் பலவீனமடையும் மனித மனங்களில் ஒன்றுதானா சந்திரனின் மனம்? இவ்வாறே போனால் அவனது மனோவியாதி வளர்ந்து அவனையே அழித்துவிடும்.

இதற்கு மருந்து....?!

மனம்திறந்து பேசிப் பார்க்கலாம்!

முகாமில் சந்திரனைக் காண்பதே அரிதாகிவிட்டது.

மாலைவேளைகளில் நகரத்தின் நடுவே உள்ள பெரிய தபாற்கந்தோருக்கு அருகிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவில் (Freizeit Park) தினமும் ‘பியர்’ போத்தல்களுடன் இருப்பதாகக் கேள்வி. சந்திரன் இப்பொழுதெல்லாம் தனிமையை நாடத் தொடங்கிவிட்டான். நெருங்கிச் சென்றவர்களையும் அவனாகவே விலத்த ஆரம்பித்தான்.

“சந்திரன்! உனக்கொரு அண்ணன் ஊரிலை இருக்கிறார். அவருக்கு ரண்டு பிள்ளையள். முந்தி மாஸ்டராக இருந்தவர். இப்ப வேலை இல்லாமை உன்ரை உதவியிலை வாழுறார். வயசான அப்பா அம்மா.... உன்னை நம்பி வெளிநாட்டுக்கு வரவெண்டு கொழும்பிலை வந்து நிற்கிற உன்ரை தம்பி.... இவளவு பேரையும் மறந்து ஏன் இப்பிடித் திரியுறாய்?"

வெறுமையாகப் பார்த்தான்.

“அதுகளுக்கு உன்னைவிட்டால் வேறை ஆர் இருக்கினம்... நீ இருக்கிறாய் எண்ட நம்பிக்கையிலைதானே வாழுதுகள். ஏதாலும் ஒரு வேலையைத் தேடிச் செய்யாமல் ஏன் இப்பிடி அழியுறாய்?"

“வேலை....?" என்றவாறு வெறுப்புடன் பற்களைக் கடித்தான்.

“எத்தினையோ வேலைக்குப் போனன்.... ரண்டு நாள்... மூண்டு நாள்... பேந்து எல்லாரும் என்னோடை கதைக்கவே பயப்பிடுறாங்கள்.... என்னைக் கண்டவுடனை தூர நிக்கிறாங்கள்...."

“ஏன்....?"

“நான் வேலைக்குப் போற இடத்திலை எல்லாம் உவங்கள் எனக்கு விசர் எண்டு ரெலிபோன் அடிச்சுச் சொல்லுறாங்கள்."

“நீயாய் எதையோ கற்பனை பண்ணுறாய். ரெலிபோன் அடிச்சுச் சொன்னாப்போலை நம்புவாங்களே.... டேய் சந்திரன்! சும்மா தேவையில்லாததுகளை நினைச்சு உன்னையும் உன்ரை சொந்தங்களையும் பாழாக்கிப்போடாதை!"

“உனக்கென்ன.... சொல்லிப் போட்டாய்.... நீகூட அவங்கடை பக்கம்தான் கதைக்கிறாய்.... உன்னையும் நம்பேலாது....!" என்று முகம் சிவக்கக் கூறியவன் தொடர்ந்தான்.

“நீ இனிமேல் என்னோடை கதையாதை. நீயும் அவங்கடை ஆள். எனக்குத் தெரியும் என்னைப் பார்த்துக் கொள்ள....!"

“நான் உன்ரை எதிரியாயே இருந்துபோட்டுப் போறன். ஆனால் ஒண்டு.... நீ இன்னும் கனகாலத்துக்குச் சிறப்பாய் வாழவேண்டியவன். முப்பத்தைஞ்சு வயது பெரிய வயசில்லை. காலாகாலத்திலை ஒரு கலியாணத்தைக் கட்டி உருப்படுற வழியைப் பார்...."

சந்திரனின் தனிமையானபோக்கு அவனது வாழ்க்கையையே சூன்யமாக்கிவிடும் என்பது நடைமுறையில் காணும் சாதாரண நிகழ்வு.

அவனின் தனிமையைப் போக்க மிகவும் எளிதான வழி, உடனே அவனுக்கொரு வாழ்க்கைத் துணையைத் தேடுவது.

முடியுமா?!

முயற்சிப்பதில் தவறென்ன?!

அவனுடைய பெற்றோர், சகோதரங்களுடன் தொடர்பு கொள்ளலாமா?

“மடையா, உனக்கேன் தேவையில்லாத வேலை? அதுகள் நாட்டிலை வாழ வழியில்லாமை இவன்ரை உதவியை எதிர்பார்க்குதுகள். இந்த நிலைமையிலை அதுகள் எங்கை பொம்பிளை தேடும்.... அப்பிடித் தேடினாலும் இங்கை கூப்பிடுறதெண்டது எவ்வளவு கஷ்டமான காரியம்...."

“அப்ப இங்கையே ஒண்டைத் தேடினால்....?"

“ஆரை.... எங்கை.... கார் இருக்கோ.... சொந்தவீடு இருக்கோ.... வேலை செய்யிறாரோ.... இல்லாட்டிக் காலவரையற்ற விசா கிடக்கோ.... சரி போகட்டும். வங்கியிலை எவ்வளவைத் தாண்டும்?"

“என்னடா இது....?!"

“இப்பிடித்தான் கேப்பினம்...."

“அப்ப இதுக்கு வழி?"

“இந்த உலகத்திலை ஒருத்தனுக்கு எண்டு ஒருத்தி எங்கையோ பிறந்துதான் இருக்கிறாள்.... சமயசந்தர்ப்பம் கூடி வரேக்கை இதுகள் எல்லாம் சரிவரும்...."

“அதுமட்டும் சந்திரன்ரை நிலை?"
++++++++

டியடங்கும் வாழ்க்கையடா....
ஆறடி மண்ணே சொந்தமடா....

அந்தப் பூங்கா.... அந்த அடர்த்தியான மரம்.... எல்லாம் அப்படியே.

ஆனால் சந்திரன்....?

வாழ்வையே தம் மன ஆரூடங்களின்படி மாற்றியமைக்கும் சந்திரன் போன்ற இளைஞர்களால் தோற்றத்தின் காரணம் வெறுமையாக அர்த்தப்படுகிறதோ?


(பிரசுரம்: பூவரசு)

2 கருத்துகள்:

  1. (இவர்களும் வாழப் பிறந்தவர்கள். ஏன் இவர்களால்மட்டும் தோல்வியையே சந்திக்க முடிந்தது? யாரால் தோற்கடிக்கப்பட்டார்கள்? தங்களால்தான். தாங்களே தங்களைத் தோற்கடித்து வாழ்வைத் தொலைத்தவர்கள்) உங்களின் சமுதாய அக்கறையும். ஆழமான தேடுதலும் இந்த வாக்கியங்களின் வெளிப்பாடாகும்.

    பதிலளிநீக்கு

மிகவும் நன்றி!