புதன், 18 நவம்பர், 2015

நட்பு - நினைவுத்துளி 02

சில நினைவுகள் செத்தாலும் போகாதோண்ட மாதிரி மனசோடையே ஒட்டிக் கொண்டிருக்கும். அப்பிடித்தான் இதுவும்…
ஆறாம் வகுப்பெண்டு நினைக்கிறன்.. வேறை ஒரு பள்ளிக்கூடத்திலை இருந்து அங்க படிக்க வந்திருக்க வேணும்.. அதுவும் சரியா நினைவிலை இல்லாட்டிலும் நான் சொல்ல வாற முக்கியமான விசயம் நல்லா ஞாபகத்தில இருக்கு.
எங்கள் ரண்டு பேருக்கும் இடையில அப்பிடி ஒரு சினேகிதம்… பள்ளிக்கூடம் விட்டால் நான் அவன்ர வீட்டை போறது.. அவன் என்ர வீட்டை வாறது.. உரிமையோடை சாப்பிடுறது… எங்கள் ரண்டு பேற்றை அம்மாமாரும் அப்பிடித்தான்.. அப்பிடி ஒரு அன்பான உபசரிப்பு..

அவன் அப்ப நல்லா பாடுவான்.. கணீர் எண்ட குரல் அவனுக்கு… பள்ளிக்கூடத்திலை இன்ரவல் நேரங்களில பெரிய வகுப்பு பிள்ளையள் அவனை பாடச் சொல்லிக் கேட்பினம்.. அப்ப ஒருநாள் அவன் பாடின ‘நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே..’ எண்ட பாட்டு இப்பவும் நினைவில இருக்கு.
அப்ப நாங்கள் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருந்தனாங்கள். ஒருநாள் ‘மனுநீதிகண்ட சோழன்’ நாடகம் நடிக்க வேணும் எண்டு தீர்மானிச்சம். பள்ளிக்கூடம் விட்டால் அவனோடை அவன்ர வீட்டில போயிருந்து அதைப்பற்றி கதைக்குறதும் எழுதுறதுந்தான் வேலை.. அந்த வயதில எங்கடை தலேக்கை மனுநீதிகண்ட சோழந்தான் நிண்டான்..
அந்த நேரத்திலதான் சொல்லாமைக் கொள்ளாமை பிரச்சினை ஒண்டு எங்களுக்கை பூந்தது. பள்ளிக்கூடத்தில ஆளுக்காள் பட்டப் பெயர் சொல்லி பழிக்குறது தெரிஞ்ச விசயந்தானே.. அப்பிடி நான் அவனை பழிக்க.. அது சீரியசாகி எங்களுக்கிடையிலை சண்டையாப் போய் நீண்ட பிரிவாப் போச்சு.
அதுக்கு பிறகு நானும் எட்டாம் வகுப்போடை வேற பள்ளிக்கூடம்.. அவனோடை கதைக்க வேணும்போலை இருந்தது.. ஆனால் என்னமோ தடுத்திச்சு.. கூச்சமோ.. வெட்கமோ.. என்னமோ ஒண்டு. அவன் நாடகங்கள் போட்டான்.. நாடகங்கள் போட்டான் எண்டால் அவனே எழுதி தயாரிச்சு நடிச்சு.. எங்கள் இருவருக்கும் இடையே தோன்றின அந்த நாடக ஆசையை தானே தனிய செயலிலை காட்டினான். நான் தூரத்தில நிண்டு பாத்துக் கொண்டிருந்தன். கிட்ட போக ஆசையா இருந்திச்சு.. ஆனா என்னமோ தடுத்திச்சு.
ஆகவும் அன்பா நெருக்கமா பழகினவங்களுக்குள்ளை சின்ன பிரிவோ கீறலோ வந்தால் இப்பிடித்தான் எண்டு நினைக்கிறன்.. கதைக்க வேணும்போலை இருக்கும்.. பழக வேணும்போலை இருக்கும்.. ஆனா ஏதோ ஒண்டு தடுக்கும்..!! 
இந்த நிலமை மீசை வளர்ந்து குடும்பமாகி, குழந்தைகளாகி அவன் பிரான்சுக்கும்.. நான் ஜேர்மனிக்குமாய் வயதுகள் ஏறின காலத்திலும் தொடர்ந்திச்சு. அதுக்கும் ஒரு முடிவு வரத்தானே வேணும்.
இந்த முகநூல்தான் எங்களுக்கிடையில இருந்த அந்த அர்த்தமில்லாத பிரிவை அப்பிடியே துடைச்செறிஞ்சு போட்டுது.
ஹாய் பகீர் Pakeerathan Kandasamy.. என்ன மச்சான், உண்மைதானே?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!