திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி

ங்கடை வீட்டிலை முந்தி ஒரு பழைய சிங்கர் மிசின் கிடந்தது.
முந்தி எண்டால்.. எழுபதுக்கு முந்தியாய்த்தான் இருக்க வேணும்.
ஏனெண்டால் கன விசயங்கள் ஞாபகத்திலை இல்லை எண்டாலும்.. நான் சொல்ல வாற விசயம் நடக்கேக்கை எனக்கு பத்து வயசும் ஆயிருக்கேலை எண்டதுமட்டும் நல்லாய் ஞாபகத்திலை இருக்கு.
இந்த சிங்கர் மிசின் எப்பிடி வந்ததெண்டு தெரியேலை.. ஆனால் எங்கடை வீட்டிலைதான் கிடந்தது. கீழ இருந்துதான் தைக்கிறது. அம்மா தனக்கு
பாவாடை சட்டை தைக்கிறது.. எனக்கு காற்சட்டை சேட்டு தைக்கிறதெல்லாம் அதிலைதான்.. ஓம்.. அப்ப தைக்கிறதுதான்.. எப்பாலும் ஆராலும் மலேசியால இருந்து வந்தா.. சொந்தம் எண்ட பேரில ஏதாலும் வரும்.. மற்றும்படி சின்ன வயசில அம்மாதான் தைக்கிறவ.
கூப்பன் கடையில பப்ளிங் துணி எண்டு ஒரு வெள்ளைத் துணிய வாங்கி அதில ரண்டு சேட்டு.. பேந்து காக்கி துணி எண்டு நினைக்கிறன்.. அப்பிடித்தான் ஞாபகத்திலை இருக்கு.. அது சாக்கு மாதிரி மண்ணிறத்தில இல்லாட்டி வெள்ளைல இருக்கும்.. இல்லாட்டி நீலம்… அதில ரண்டு காற்சட்டை… எப்பிடியும் அதிலை ஒண்டு வெள்ளேலை இருக்கும்.. அதுக்கு ரண்டு பக்கத்திலையும் பச்சை ரிபன் மாதிரி வைச்சு தைப்பா… ஏனெண்டா பள்ளிக்கூட விளையாட்டு போட்டிக்கும் பாவிக்க… நான் அப்ப பச்சை ஹவுஸ்.. அதாலைதான் அப்பிடி ரண்டு கரையிலையும் பச்சை ரிபன் மாதிரி வைச்சு தைக்கிறது.. இடுப்புக்கு பிளாஸ்ரி நாடாதான். இடுப்பிலை பொக்குள் மட்டும் இழுத்துவிட்டால் முழங்கால்மட்டும் நிக்கும்.
ஒருநாள் விடிய எழுப்பி, கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் குளிப்பாட்டி, கொலரில் மஞ்சள் பூசி, தான் தைச்ச சேட்டையும் காற்சட்டையயும் போட்டு பள்ளிக்கூடத்துக்கு விடுவா.
அப்பதான் தெரியும் அண்டைக்கு தீபாவளி எண்டு.
தீபாளி வந்தால் எனக்குச் சந்தோசம்.. ரண்டு சோடி உடுப்புக் கிடைக்குமெல்லோ… அதோடை விளையாட்டுப் போட்டிக்குப் போடவும் ஒரு காற்சட்டை… அப்ப அவளவுதான் தெரிஞ்சது.
நான் தீபாவளிக்கு புது உடுப்பு போட வேணும் எண்டு நினைச்ச அம்மாவை அப்ப தெரியேலை.
அவ புது உடுப்பு எடுத்தாவா எண்டதும் தெரியேலை.
ஆனா இப்ப யோசிக்கேக்கை…
கனக்கத் தெரியுது. அதிலை ஒண்டு…..!!
“ஆசைகளை அடக்கு!”
தீபாவளி வாழ்த்துகள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!