வியாழன், 10 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (1)

திகாலைப் பொழுது.

தொலைபேசி அலறியது.
இரவு வேலையால் வந்த அலுப்பு கண் இமைகளை அழுத்தி  எரிச்சலாக்கியது.
படுக்கையில் இருந்து எழ மனமில்லை.
தொலைபேசி விடாமல் அலறியது.
’யாராக இருக்கும் இந்த நேரத்தில்?!’
’நிம்மதியாகத் தூங்கக் கூட விடமாட்டாங்கள்!’
’சுள்’ளென்று கோபம் எட்டிப்பார்க்க, தொலைபேசியை நோக்கிக் கையை நீட்டினான்.
"ஹலோ! ஆர் சிவராசனே?"
"ஓமோம்.... நீங்கள் ஆர் கதைக்கிறியள்?"
"எட என்னைத் தெரியேல்லையே...? ஆரெண்டு சொல்லு பாப்பம்....!"
’இதென்னடா கரைச்சல்.... இரவு வேலையால் நேரம் பிந்தி வந்தவனை விடிய வெள்ளண்ண எழுப்பி, ஆரெண்டு கண்டுபிடி எண்ட புதிர்வேறை....’
’எங்கடை சனங்களுக்கு எந்த நேரத்திலை என்ன கதைக்க வேணுமெண்ட விவஸ்தையே கிடையாது.’

எட்டிப்பார்த்த கோபம் தலைக்கேறியது.                          

"என்ன விளையாடுறியளே.... நீங்கள் ஆரெண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? இதைக் கேக்கத்தான் காலங்காத்தாலை காசைச் செலவழிச்சு ரெலிபோன் எடுக்கிறீங்களா?"
"எட சிவா! எவளவு நாளாய் பழகியிருக்கிறம். வெளி நாட்டுக்கு வந்தவுடனை பழசுகள் எல்லாத்தையும் மறந்து போனியே?"
’ஆரோ உரிமையோடை கேக்கிறான்.... கோபிக்கிறதாலை இருக்கிற தொடுசல்கள் அறுந்தாலும் அறுந்துபோம். தெரியேலை எண்டால் வெளிநாட்டை இழுத்து ஒரு குத்தல்.... ஆராய் இருக்கும்?!’

கோபம் தணியத் தலையைப் பிய்த்துக் கொண்டான் சிவராசன்.
நினைவில் குரல் அடையாளம் புரியவில்லை.

"திடீரெண்டு கேட்டால் எப்பிடித் தெரியும் எண்டு சொல் ல முடியும்?"
"அதுவும் சரிதான். நீயும் ஜேர்மனிக்கு வந்து பத்து வருசத்துக்கு மேலையிருக்கும். மறந்து போயிருப்பாய். என்ன இருந்தாலும் உன்ரை முன் வீட்டுக்காரனான இந்தச் சிவநேசனை ஞாபகத்திலை வைச்சிருக்கிறியோ எண்டு அறியத்தான் கேட்டனான்."

அட சிவநேசன் அண்ணை. தூரத்துச் சொந்தம்.

"அண்ணை சத்தியமா உங்கடை குரலை அடையாளம் தெரியேலை. குரல் சரியா மாறிப்போச்சு...!"

தூக்கம் தூர விலகி நின்றது.

"என்ரை குரல் மாறிப் போச்சோ.... இல்லாட்டி உன்ரை நிலமையளோ?!"
"அண்ணை உங்கடை குரல் மாறினாலும் உந்தக் குத்தல் கதை இன்னும் மாறேலை.... இப்ப எங்கை நிக்கிறியள்?"
"என்ன இலங்கையிலை இருந்து வேலை மெனக்கெட்டு ரெலிபோன் எடுத்தனான் எண்டே நினைக்கிறாய்? நானும் ஜேர்மனியிலைதான் இருக்கிறன்...."
"என்னண்ணை.... எனக்கு இவ்வளவு நாளாய்த் தெரியேலை... எப்ப ஜேர்மனிக்கு வந்தனீங்கள்?"
"மெய்யாய்த்தான் கேக்குறியோ.... இல்லாட்டித் தெரியாத மாதிரி நடிக்கிறியோ...? உன்ரை கொப்பர் கொம்மாவை நான் ஜேர்மனிக்கு வந்ததைப்பற்றி எழுதேலையே?"
"அதுகள் இதையெல்லாம் எழுதினால் நான் ஏன் கேக்கிறன் அண்ணை?! நான் எவ்வளவுதான் ஊரிலை என்ன புதினங்கள் எண்டு கேட்டு எழுதினாலும்கூட எழுதாதுகள்.."
"உதுகளை ஏன் எழுதப் போகினம்.... காசுபணம் அனுப்பு எண்டுதான் எழுதுவினம்...."
"முந்தி ஒருக்கா எழுதின கடிதம் ஒண்டிலை நீங்கள் குவைத்திலை வேலை செய்யுறியள் எண்டு எழுதினவை... பேந்து ஒண்டும் உங்களைப்பற்றி எழுதேலை..."
"ஓ.... குவைத்திலை வேலை செய்யேக்கை ஈராக் பிரச்சினை வந்தீட்டுது. ஒரு மாதிரிக் கஸ்ட்டப்பட்டுப் பிரச்சினையளுக்காலை தப்பி ஊருக்குப் போய் ரண்டு மூண்டு மாதம் மெனக்கெட்டன்.... பாத்தன்.... அங்கை இருந்தாலும் சீவியத்துக்கு வழி ஒண்டும் தெரியேலை.... நான் தனிய எண்டாலும் பரவாயில்லை. என்னை நம்பி மூண்டு சீவன் இருக்குதே....."
"அண்ணை.... கலியாணமும் கட்டிட்டீங்களே?!"
"எனக்கிப்ப எத்தினை வயது? இந்த வயதுமட்டும் கலியாணம் செய்யாமைச் சந்நியாசமே வாங்கிறது?! கலியாணம் செய்து ரண்டு பிள்ளையள் பிறந்த பேந்துதான் குவைத்துக்குப் போனனான். குவைத்தாலை போய் பெண்டில் பிள்ளையள் மூண்டையும் இழுத்துக் கொண்டு ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தன். இங்கை வந்து ஒண்டு பிறந்து இப்ப என்னை நம்பி நாலு. என்னோடை மொத்தம் ஐஞ்சு உருப்படி."
"ஐயோ அண்ணை! எனக்கு ஒண்டும் தெரியாது. நீங்கள் இங்கை வந்து கனகாலமே?"
"நாலு வருசம் முடிஞ்சுபோச்சு...."
"அப்ப ஏன் இவ்வளவு நாளாய் என்னோடை தொடர்பு கொள்ளேலை?"
"எனக்கே இண்டைக்குத்தான் உன்ரை ரெலிபோன் நம்பர் கிடைச்சுது. இஞ்சை பார். கதையோடை கதையாய் சொல்ல வந்த விசயத்தை மறந்துபோனன். சிவா, உன்ரை கொப்பர் கொழும்பிலை வந்து நிக்கிறார். நான் கொழும்புக்கு ஒரு அலுவலாய் ரெலிபோன் எடுத்தனான். அப்பதான் கொப்பரும் அங்கை நிண்டு உனக்கொருக்கா அடிச்சுச் சொல்லச் சொல்லி நம்பர் தந்தவர்...."
"அப்புவோ.... கொழும்பிலை நிக்கிறாரோ?" என்று பரபரப்புடன் கேட்டான் சிவராசன்.
"வேறை என்ன.... ஏதாகிலும் காசு கீசுக்குத்தான் வந்திருப்பர்."
"ம்....!"
"என்னடாப்பா பெருமூச்சு விடுறாய்.... பத்து வருசமாய் ஜேர்மனியிலை இருக்கிறாய்.... பாத்துக்கீத்து அனுப்பிவிடன். ஊர் நிலமையள்  தெரியுந்தானே? தொட்டதுக்கு எல்லாம் காசுதான் வேணும்...."
"கையிலை இருந்தால்தானே அனுப்புறத்துக்கும். இப்பவே கடனிலை ஓறடுன். முந்திச் சோசல்காசிலை இருக்கேக்கை எண்டால் கையிலை காசு பிழங்கிச்சு. பாத்துப்பாராமை அனுப்ப முடிஞ்சுது.... இப்ப வீட்டு வாடையிலை இருந்து தண்ணிவரையும் கையாலைதானை போகுது. சம்பளமும்  அப்படி இப்பிடித்தான்."
"உண்மைதான்.... ஊரிலை இருக்கிறதுகளும் நாங்கள் வெளிநாட்டிலை  இருக்கிறம் எண்ட நம்பிக்கையாலைதானை பல கஸ்டங்களுக்காலை கொழும்புக்கு வரூதுகள்.... என்னவோ வயசான காலத்திலை கொப்பரையும் கொம்மாவையும் சந்தோசமாய் வைச்சிருக்கிறதுதான் உன்ரை கடமை. அதுசரி, ஒரு நாளைக்கு வீட்டுப்பக்கம் வாவன்."
"கட்டாயம் வருவன் அண்ணை.... உங்கடை ரெலிபோன் நம்பரைத் தாருங்கோ...."
"சொல்லுறன்.... எழுது.... அட்ரசையும் எழுது....!"
"சொல்லுங்கோ...."
"கெதியாய் வரப் பார்."
சிவநேசனின் விலாசத்தை எழுத ஆரம்பித்தான் சிவராசன்.
++++++++

'சனியன் இந்தநேரம் பார்த்து ரெலிபோனும் "கட்"டாய்ப்போச்சு.’
மாதாந்த பில் கட்டாததால் தொலைபேசி   தற்காலிகமாக இயங்கவில்லை.
வெளியிலிருந்து எவராவது தொடர்பு கொண்டால் பேசலாம். அவனாக எவருடனும் தொடர்பு கொள்ள முடியாது.
கையிலும் பணம் இல்லை. மாதக் கடைசி. எவருடைய  தொலைபேசியிலாவது கடனாகத்தான் கதைக்க வேண்டும்.
ஐம்பது, நூறு, ஆயிரம் என்று பலரிடம் கடன் வாங்கியாகிவிட்டது. இனியும் கடனாக ரெலிபோன் தரச் சம்மதிப்பவர்கள் உள்ளனரா எனச் சிந்தித்தான்.
கேசவனைக் கேட்டால் நிச்சயம் சம்மதிப்பான்.
உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருந்தது.
அவசர அவசரமாக முகத்தை அலம்பி, உடைகளை மாற்றிக் கொண்டு கேசவனின் வீட்டை நோக்கி விரைந்தான. ஆதரவு நாடிவந்த தந்தைக்கு அனுப்பக் காசுக்கு எவரிடம் போவது?
அதற்கும் வழி பிறக்காமலா போய்விடும்?!
இப்படியே வீடும் கடனும்தான் வாழ்க்கை என்றால்.... வாழ்வதற்கே வெறுப்பாக இருந்தது.       
எனினும் பெற்றோரை சகோதரங்களை.... அவர்களால் ஏற்பட்ட சுமைகளைப் பாசமாக நினைத்தபோது வாழத்தான் வேண்டும் போலிருந்தது.
கேசவன் வீட்டில்தான் இருந்தான்.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!