சனி, 12 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (3)

வெள்ளை வெளேர் என்று வெய்யிலில் தூய்மையைப் பிரதிபலிக்கும் வேட்டியுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் குழுமியிருந்தார்கள்.
சின்னஞ்சிறிசுகள் ஐஸ்பழ வான்களையும் கச்சான் கடலைக்காரிகளையும் சூழ்ந்து நின்று பெற்றோரிடம் பணம் கேட்டு அலறிப்புரண்டார்கள்.
ஆலயவாசலின் இருபுறமும் வட்டவடிவ வாயை நீட்டிக் கொண்டிருந்த ஒலிபரப்பிகளினூடாக சீர்காழி கோவிந்தராஜன் பக்திக் கானங்களை இசைத்துக் கொண்டி ருந்தார்.

"மனோ! அங்கை பார்...."
’ட்ராக்டர்’ வண்டிகளின் மேலாக அடுக்கிப் பிணைக்கப்பட்ட பனை மரங்களின் நுனியில் தொங்கிய சணல் கயிற்றின் மறுமுனையின் கொழுக்கிகளில் முதுகுத் தோலைக் குத்திக் கொழுவி கையில் பளபளக்கும் கூரிய வேலுடன் புன்னகைத்தவாறு ஊஞ்சலாடும் தூக்குக் காவடிக்காரர்கள்
பக்திக் கானங்களுடன் ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
நாதஸ்வர மேளக்கோஷ்டிகளின் துள்ளல் இசைக்கு ஏற்றவாறு கால்கள் சதிராட, தினவெடுத்த தோள்களில் மயில் இறக்கைகல்ளி சிருங்காரமாய்க் காட்சியளிக்கும் காவடிகளைச் சுமந்தவாறு கூட்டம் கூட்டமாகப் பக்தர்கள் ஆலய வீதிகளை அலங்காரம் செய்தார்கள்.
தலையில் கற்பூரச் சட்டிகளுடனும் கையில் வேப்பிலைக் கட்டுடகளுனும் தோய்ந்த கூந்தலை அள்ளிச் சொருகியபடி பெண்கள் கூட்டம் பக்தியில் பரவசத்தை வெளிக்காட்டியது.

"இந்தமுறை கனக்கக் காவடியள்...."
"ஒவ்வொரு வருசமும் இப்பிடித்தான்டா. நுணசை  எண்டால் காவடிகள்தான் நிறைஞ்சிருக்கும். எத்தனை விதமான காவடிகள் பாத்தியா?!" என்று வியந்தான் குமார்.
"டேய் நந்தன்! அங்கை பார்...."

ஆலயத்தின் இடதுபுறத் தண்ணீர் பந்தலைச் சுட்டிக் காட்டினான் தேவன்.
திரும்பிப் பார்த்தான் மனோகரன்.
அந்தத் தண்ணீர்ப் பந்தலடியில் நாலைந்து பாவாடைத் தாவணிகள் தங்களுக்குள்ளே ஏதோ கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

"அந்தப் பச்சைப் பாவாடையைத் தெரியுமே.... யாழ்ப்பாண ரவுணுக்கை எப்ப பார்த்தாலும் சுத்திக்கொண்டு திரிவாள்" என்று தனது கண்டுபிடிப்பைக் கூறினான் தேவன்.
"அவள் அங்கை ஏதாகிலும் ரியூசனுக்குப் போறவளாய் இருப்பாள்...."
"ரியூசனுக்குப் போனால் பஸ் ஸ்டாண்டுக்கை ஏன்டா அவள் மெனக்கெட வேணும்?! அவளோடை நாலைஞ்சு பொடியள் மாறிமாறிக் கதைக்கிறதைக் கண்டனான்.... அவள் ஒரு மாதிரியான கேஸ்...."
"போடா விசரா. ஒரு பெட்டை பொடியனோடை சும்மா ஏதாகிலும் கதைச்சால் ’கேஸ்’ எண்டு கதைகட்டிப் போடுவாய்...." என்று எரிச்சலுடன் கூறினான் சிவராசன்.
"இவர் பெரியஞானி.... எட சிவராசன்.... அவளின்ரை கண்ணையும் முகத்தையும் பார்.... அங்கை இங்கை குறுகுறெண்டு பாத்துத் தனக்குள்ளை சிரிக்கிறதைப் பார். உனக்கெல்லாம் இந்த விசயத்திலை ஞானமில்லை...." என ஏளனமாகப் பார்த்தான் நந்தன்.
"இவர் பெரிய அறிவுக்கொழுந்து.... வீணாய் அவளோடை சொறியப்போய் அடிபடப்போறாய்....."

நந்தனை எச்சரித்தான் சிவராசன்.

"சும்மா ஏண்டா பயப்படுறாய்.... இப்பிடியானதுகளோடை சேட்டைவிட்டால்தான் ஒண்டும் கதையாதுகள்...."

தேவனும் நந்தனுடன் சேர்ந்துகொண்டான்.
தேநேரம் அந்தப் பச்சைப் பாவாடை இவர்களைச் சுட்டிக் காட்டி சக தோழிகளிடம் ஏதோ சொல்ல, ’கொல்’ என்ற சிரிப்பொலி முத்துக்களாய்ச் சிதறின.
"மச்சான்.... அவளவை எங்களைக் காட்டித்தான் என்னவோ நக்கலடிக்கிறாளவை...."

பரபரத்தான் குமார்.
வாலிப முறுக்கு சினத்தைக் கிளற, அந்தப் பெண்களை நாடிச் சென்றார்கள்.
இளங்கன்று பயமறியாது. அதற்கு அந்தக் காளைகள் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா, என்ன?
அவர்கள் அந்தப் பாவாடைகளை நெருங்க, பாவாடைகளோ ஏளனச் சிரிப்புடன் வளையல் கடைப்பக்கமாக நகர்ந்தன.
அது அந்தக் காளைகளுக்கு வரவேற்புக் கூறுவது போலிருந்தது.


"மச்சான்.... கொஞ்சம் பொறு. வந்திட்டன்...." என்றவாறு கச்சான் கடலைக்காரியை நோக்கி ஓடிய தேவன், கையில் கச்சான் பொட்டலத்துடன் திரும்பி வந்தான்.
"கச்சான் சரையோடை அவளை மடக்கலாம் எண்டு பாக்கிறியோ?!"
"கச்சான் சரைமூலமாய் கதையை ஆரம்பிக்கப்போறன்டா.... எதுக்கும் கொஞ்சம் பொறுத்துப் பார்.... கச்சான்ரை மகிமை புரியும்...."
"கச்சான்சரை எங்கை கொண்டுபோய்விடப்போகுதோ....? எல்லாம் முருகன் செயல்...."
"இதுகளுக்கெல்லாம் முருகனை ஏண்டா இழுக்கிறாய்...."

வளையல் கடைகள் வரிசையாக இருந்த பகுதிக்குள் நுழைந்தார்கள்.
முன்னால் சிறிதுதூரத்தில் அந்தப் பச்சைப்பாவாடையும் வேறு நான்கு பதினைந்து வயதுகளும் சென்று கொண்டிருந்தன....
அந்தப் புள்ளியில்லாத துள்ளி நடைபயிலும் மான்களை நெருங்கிய தேவன், ஆளை ஆள் விலத்த முடியாத கூட்டத்திடையே கையை நுழைத்தான். ஏனையோரின் பார்வையில் தென்படாதவாறு அந்தப் பச்சைப் பாவாடையின் கையில் கச்சான் சரையை அழுத்த, அடுத்தகணம் அவள் வீறிட்டு அலறினாள். கூட்டம் அவர்களைத் திகைப்புடன் நோக்கியது.
திகைத்த பார்வைகள் சூழ்நிலையின் தாக்கத்தை உணர்ந்து சினந்தன. சினம் மேலிட அவர்களை நெருங்கினார்கள்.

"வேறை ஊர்க்காரங்கள் எங்கடை ஊர்ப் பெட்டையளோடை சேட்டைவிடுறாங்களடா!"
மாதகல் இளவட்டங்கள் உருத்திர மூர்த்தியானார்கள்.
"கோவிலை அசிங்கப்படுத்தவென்றே வாறாங்கள்" என்று தங்கள் இளமைக் காலத்தை மறந்து திட்டினார்கள் முதியவர்கள்.
சிவராசனின் முதுகில் பொலபொலவென யாரோ அடித்தார்கள.
நண்பர்கள் எங்கே எனத் திரும்பிப் பார்த்தான். அவர்களுக்கும் கூட்டத்தின் தர்ம அடிகள் தாராளமாகக் கிடைத்தன.

"டேய் மனோ.... ஓடடா."
கத்தினான் குமார்.

’தப்பினோம் பிழைத்தோம்’ என்று எல்லோரும் வயல்களுக்கால் விழுந்தடித்துக்கொண்டு ஓடினார்கள்.

"எல்லாம் இவனாலை வந்தது...."
தேவனைக் குறைகூறினான் நந்தன்.
"சரிசரி... நடந்தது நடந்து போச்சு. விசயம் காதுங்காதும் வைச்சமாதிரி இருக்கவேணும்.... ஊரிலை தெரிஞ்சால் வெளியிலை தலை காட்டேலாது."

ஆனால் இவர்கள் ஊர் போய்ச் சேருவதற்குள்ளாகவே விசயம் ஊருக்குப்  போய்விட்டது.
+++++++

டிப்பான். உத்தியோகம் பார்ப்பான். வாளுடனும் சுத்தியலுடனும் சீவிலியுடனும் உடல்பலத்தை உழைப்பாக்கும் மரத் தொழிலாளர்களின் குடும்பத்தில் இவன் ஒருவனையாவது மேசை நாற்காலியில் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ உயர்த்திவிடலாம் என்ற ஆசையில் பேரிடியொன்று திடமாக இறங்கியதாக உணர்ந்தார் நமசிவாயகம்.

சிவராசனா இப்படி?! நம்ப முடியவில்லை.
இனியும் இவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியுமா?
 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
 அதேபோல பாடப்புத்தகம் வாங்குவதாகப் பொய் சொல்லி நுணசைக்குச் சென்று நண்பர்களுடன் அடிவாங்கிக் கொண்டு வந்த ஒரு செயலே சிவராசனின் போக்கின் தன்மையை அறியப் போதுமானதாக இருந்தது.
ஆசைகள் யாவும் நிராசைகளாகிவிட்ட மனக்குமுறலில் சிவராசனைத் திட்டித் தீர்த்தார் நமசிவாயகம்.

"நீ படிக்க வேணும் எண்டதுக்காகக் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தன். உன்னட்டை ஒரு வேலை சொல்லியிருப்பனே? உன்ரை கொண்ணனைப் பார். எவ்வளவு கஸ்டப்படுறான்? இந்தக் குடும்பத்துக்காக எவ்வளவு உழைக்கிறான் எண்டு பார். நீ என்ன செய்யப் போறாய்? படிப்பையும் குழப்பிக் கொண்டு தொழிலையும் பழகாமை வருங்காலத்திலை எப்பிடி வாழப்போறாய்? சரி.... இந்தக் குடும்பத்துக்காகத்தான் உழைக்க வேண்டாம்.... உன்ரை வாழ்க்கையைப்பற்றி யோசிச்சுப் பார்த்தியா? உன்னாலை ஒழுங்காய்ப் படிக்கேலாதெண்டால் சொல்லிப் போடு. கொண்ணனோடை சேர்ந்து தொழிலைப் பழகலாம்...."

ஆத்திரத்திலும் அறிவுரைகள்தான் தெளித்தன.
தாயார் ஒப்பாரி வைத்தாள்.
"என்ரை பொடியை இந்த விடுகாலியள் கெடுத்துப் போட்டுது. இனிமேல் வீட்டுப்பக்கம் வரட்டும் பாப்பம்...."

என்ன இருந்தாலும் காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு!
சிவராசனால் எதுவும் பேச முடியவில்லை.
எதைப் பேசுவது?
நிமிர்ந்து நேருக்கு நேராய் அவர்களைப் பார்க்க முடியாமல் குற்ற உணர்வுடன் கூனிக் குறுகித் தத்தளித்தான். வெளியே செல்லவும் துணிவில்லை. ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக நேரிடுமோ என்ற பயம்.
படுக்கையில் விழுந்து தலையணையுள் முகத்தைப் புதைத்தான். அப்படியே தனிமையில் படுத்திருக்க வேண் டும் போலிருந்தது.
பசித்தது. சாப்பிடப் பிடிக்கவில்லை. முதன்முறையாகத் தன்னைப்பற்றிச் சிந்தித்தான்.

’என்னால் படித்து அப்பாவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? முடியாது.’
’எனக்கே என்னில் நம்பிக்கை நம்பிக்கையில்லை. பாடப் புத்தகங்களைப் புரட்டவே வெறுப்பாக இருக்கிறது. எனக் குப் பொறுமை இல்லை. படிப்பது மனதில் நிற்க மறுக்கிறது. எல்லாமே மறந்துபோகிறது.’
’இனியும் படிப்பு படிப்பு என்று ஏமாற்றக்கூடாது.’

முடிவெடுத்தான்.
தந்தையின் முன்னே சென்றான். கூறினான். திகைத்து விட்டார்.
யோசித்துப் பார்த்தார்.
கோபம் வரவில்லை. எனினும் அவனது எதிர்காலத்தை நினைக்கப் பயமாக இருந்தது.

"அப்ப என்ன செய்யப்போறாய்? கொண்ணனோடை சேர்ந்து தொழில் பழகப் போறியே?"
"எனக்கு விருப்பமில்லை!"
"என்ன.... விருப்பமில்லையோ....? இப்பிடியே திண்டு திண்டு போட்டு ஊரைச் சுத்தப் போறியோ?" என்று கோபத்துடன் கத்தினார் நமசிவாயகம்.
 "என்னை வெளிநாட்டுக்குப் போகவிடுங்கோ.... இப்ப கன பேர் ஜேர்மனிக்குப் போகினம். நானும் போகப்போறன்" என்று அவன் உறுதியாகக் கூறினான்.
அவனின் முடிவு அவர் எதிர்பாராதது.
அவரால் திடீரென்று ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
எனினும் சிவராசனின் உறுதி அவரைச் சம்மதிக்க வைத்தது.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!