வெள்ளி, 11 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (2)

சுழிபுரம்!

குடிமனைகளும் வயல்வெளிகளும் கோவில்களும் நிறைந்த கிராமம். கூடவே வடபுறத்து எல்லையில் நீல நிறத்தில் வெண்ணிற அலைகளை முட்டி மோதவிட்டு வேடிக்கையாக ஆர்ப்பரிக்கும் பரந்து விரிந்த கடல் வலயம்.
அக்கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மனின் ஆலயம் மிகவும் பிரபல்யமானது. அவ் ஆலயத்தின் அருகில் வசிக்கும் ஒரு சிறு குழந்தையைக் கேட்டால்கூட, நமசிவாயகம் வீடு எது என்பதைச் சுட்டிக் காட்டிவிடும்.
நமசிவாயகம் மரவேலையில் மிகவும்
பிரசித்தமானவர். வீட்டு வேலைகளில் இருந்து கோவில் வாகனங்கள்வரை அவரின் திறமைக்குச் சான்றாகப் பலவற்றை அங்கே காணலாம்.
ஒருகாலத்தில் அவ்வூரில் எவராவது புதுவீடு கட்டுவது என்றால் அவரிடம்தான் வருவார்கள்.
கதவு, யன்னல், வளை, முகடு என்று குறித்த நேரத்தில் சொன்ன மாதிரியான வேலைகளை நாணயமாக முடித்துக் கொடுத்துத் தனக்கென ஒரு பெயரைத் தக்க வைத்திருந்தார்.
நமசிவாயகத்துக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தது மூன்றும் பொடியன்கள். மூத்தவன் நடராஜன் தந்தை வழியிலேயே தொழிலைக் கற்று, கூடவே மரவியாபாரமும் செய்கிறான்.
எனினும் நாட்டுப் பிரச்சனைகளின் மத்தியில் எந்தத் தொழிலைத்தான் ஒழுங்காகச் செய்ய முடிகிறது? நடராஜனுக்கும் திருமணமாகிக் குடியும் குடித்தனமுமாகத்   தனியாகப் போய்விட்டான். ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள்.
மூன்றாவது சிவராசனின் தம்பி வரதராஜன்.
அடுத்தது இரண்டும் பெண்கள் - குமுதினி, சாந்தினி.
சிவராசன் அப்போது எஸ்.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தான். நமசிவாயகத்துக்கு ஒரு மகனையாவது நன்றாகப் படிப்பித்து உத்தியோகம் பார்க்க வைக்க வேண்டுமென்று தீராத ஆசை.
சிவராசனும் வீட்டில் உள்ளவர்களிலும் பார்க்க கல்வியில்  கெட்டிக்காரன்தான். அதனால் அவனின் படிப்பிற்கு இடையூறாகி விடுமோ என்ற எண்ணத்தில் சிவராசனை மர வேலையில் ஈடுபடுத்தவில்லை. தன்னுடைய ஆசையை அவன்மூலமாக நிறைவேற்ற முடியும் என உறுதியாக நம்பினார். கல்விக்காக சிவராசன் கேட்டவற்றை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். நடராஜன்தான் அப்போது நமசிவாயகத்துக்கு உதவியாக இருந்து வேலை பழகினான.
சிவராசனும் எஸ். எஸ். சி. வரை ஒழுங்காகத்தான் கல்வி கற்றான். அதன் பின்னர்தான் நண்பர், சினிமா என்று வாலிப வயதின் துடுக்குத்தனங்கள் அவனையும் பற்றிக் கொண்டன.
அப்போது ’மூன்று முடிச்சு’ என்ற படம் வந்தாலும் வந்தது. ரஜனி ஸ்டைலில் சிகரட்டைத் தூக்கிப் போட்டு உதட்டால் கவ்விப் பிடித்ததில்...  ஏதோ சாதனை செய்து விட்டதாகக் குதூகலம் அடைந்ததில்  சிவராசனுக்குப் புகைப் பழக்கமும் தொற்றிக் கொண்டது.
மீசை அரும்பிய பருவம். கூட்டாளிகளில் மனோகரன் என்பவன்  அவனுடன் மிகவும் ஒட்டு.
தந்தையிடம் ரியூசனுக்குப் போக வேண்டுமெண்டு அடம் பிடித்துப்  புத்தம்புதிய பச்சை நிறத்தில் ஆசியா (Asia) சைக்கிள் ஒன்று வாங்கிக்  கொண்டான்.
அப்படி ஒரு ’ஆசியா’  சைக்கிள் மனோகரனிடமும் இருந்தது.
"சிவா! நாளைக்கு நுணசைக் கோவில் தேர். வாறாய்தானே?" எனக் கேட்டான் மனோகரன்.

மாதகலில் நெற்கதிர்கள் புதுமணப் பெண்ணாகித் தலை சாய்க்கும்  வயல்களின் நடுவே கம்பீரமாக அமைந்திருந்தது நுணசை முருகன்  ஆலயம். நுணசையில் தேர்த்திருவிழா என்றால் பல்லாயிரக்கணக்கான  மக்கள் நாலாபுறமும் இருந்து வந்து குழுமுவார்கள்.
விதம் விதமான காவடிகள் வரும். அதற்கும் மேலாக அவர்கள் எதிர்பார்க்கும் பாவாடைக் கூட்டங்கள் காலில் கொலுசு குலுங்க ஓடியாடித் திரியும். அவர்களுக்குப் பின்னால் சென்று, கூட்டத்தோடு கூட்டமாக வளையல் கடைகளுள் முட்டி மோதுவதில் நெஞ்சம் இனம்புரியாத உணர்வுகளின் தாக்கத்தில் குறுகுறுக்கும். அந்தக் குறு குறுப்பில் திமிறிப் பிறக்கும் ஆனந்தமே அலாதி ஆனந்தம்தான்.

"என்னடா சிவா! நான் கேட்டுக் கொண்டிருக்கிறன். நீ என்னெண்டால் என்னத்தையோ பிடிக்கப் போறவன்போலை யோசிச்சுக் கொண்டிருக்கிறாய்!"
"நுணசைத் தேர் எண்டால் சும்மாவே? எனக்கும் வாறத்துக்கு ஆசைதான். ஆனா...."
"என்னடா ஆனா.... ஆவன்னா...."
"வெறுங்கையோடை எப்படியடா வாறது? செலவுக்குக் காசு வேணுமெல்லே?!"
"வீட்டிலை கேட்டுப் பாரன்...."
"அப்பரிட்டைக் கேட்டால் முறையாய் ஏச்சுத்தான் விழும். அடுத்த வருசமும் தேர் பார்க்கலாம். இப்ப சோதினை வருது. படி எண்டு  துள்ளுவார்."
"அப்பரை விடு. எல்லா அப்பர்மாரும் இப்பிடித்தான். தங்கடை இளமைக் காலத்தை மறந்து கதைப்பினம். உன்ரை அம்மாவிட்டைக் கொஞ்சம் ஐஸ் வைச்சுப் பாரன். அவசரமாய் ஒரு புத்தகம் வாங்க வேணுமெண்டு சொல்லிக் கேள். இதைக் கூட நான் சொல்லித் தர வேண்டிக்கிடக்கு."
"ஊதுபத்திக்கும் காசு வேணும்...."
"ஊதுபத்தியோ.... அட ஓமோம்.... பிறிஸ்டல் டபிள் பைக்கற் வாங்க வேணும். தேவன், குமார், நந்தன் எல்லாரும் வாறாங்கள். எல்லாம் காய்ஞ்சு வறண்ட பட்டாளங்கள். நீயும் நானும்தான் செலவழிக்க வேணும். எதுக்கும் பாத்துக் கொண்டு வா...."
பணத்துக்குப் பாதை காட்டினான் மனோகரன்.
"அப்ப எத்தினை மணிக்கு எங்கையிருந்து வெளிக்கிடுறது?"
"சோதர் குஞ்காச்சி வீட்டடிக்கு வா. எல்லாரையும் அங்கைதான் வரச் சொல்லியிருக்கிறன். காற்சட்டையோடை படிக்கப் போறன் எண்டு சொல்லிப்போட்டு வா. சோதர் குஞ்சாச்சி வீட்டிலை கந்தசாமி அண்ணற்றை வேட்டியள் இருக்கும். கட்டிக் கொண்டு போகலாம்."
"அதுவும் நல்ல ஐடியாதான். அப்ப வெள்ளண்ணப் பத்து மணிக்கு வந்தால் காணுந்தானே?!"
"பத்து மணிக்கோ.... நல்ல கதை. எட்டு மணிக்கு அங்கை நில். அப்பிடியே போற வழியிலை சில்லாலைக்கை கள்ளுக் கொஞ்சம் அடிச்சுப் போட்டுப் போனால்தான் உசாராய் இருக்கும். கூட்டத்துக்கை புகுந்து விளையாடலாம்."
"மனோ, கள்ளடிக்கிறது சரி. மாதகல் ஆக்கள் பொல்லாதவங்கள். கோவிலுக்கை நிதானமில்லாமை என்னவாலும் சேட்டை செய்தால் சும்மா கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பாக்கமாட்டாங்கள். தேர்ச் சில்லுக்கை போட்டு நசிச்சுப்போடுவாங்கள். கவனம்...."
"ஏண்டா தொட்டதுக்கெல்லாம் பயப்பிடுறாய். அவங்கள் பொல்லாதவங்கள் எண்டால் நாங்கள் சுழிபுரத்தாங்கள்.... நாங்கள் என்ன பெட்டைப்பசங்களே.... எதுக்கும் நாளைக்குச் சோதர் குஞ்சாச்சி வீட்டை வந்து சேர். ஆனா ஒண்டு.... புத்தக அலுவலை மறந்து போகாமை கொம்மாட்டை செலவுக்கு வாங்கிக் கொண்டு வா."

கோவிலுக்குப் போய் நண்பர்களுடன் கும்மாளம் போட, பொய் சொல்லித் தாயை ஏமாற்ற வேண்டியுள்ளதை நினைத்துச் சிவராசனின் மனம் சற்றுச் சங்கடப்பட்டது. என்றாலும் அவனது இளரத்தம் நண்பர்களுடன் சந்தோசமாய் பொழுதைக் கழிக்கப் பொய் கூறுவதில் தவறில்லை என முடிவெடுத்தது.
பொய் உண்மையாகித் தாயை நம்ப வைத்ததற்கு அறிகுறியாக, நமசிவாயகத்தின் மடியிலிருந்து சில தாள்கள் வெளிக்கிளம்பின.
மறுநாள் குதூகலத்துடன் சோதர் குஞ்சாச்சியின் வீட்டை அடைந்தான் சிவராசன்.
+++++++

ங்கே....
சோதர் குஞ்சாச்சியின் வீட்டு முகப்பை அடைத்தால்போல் ஓங்கிப் படர்ந்து வளர்ந்திருந்த புளியமரத்தடியில் மனோகரன், தேவன், குமார், நந்தன் எல்லோரும் சிவராசனின் வரவிற்காக காத்திருந்தனர்.
 
"குஞ்சாச்சி.... எணோய்...."
"என்ன அப்புவவை.... என்ன கூட்டமாய் நிக்கிறியள்? எந்த வீட்டுக் கூரையைப் பிரிக்கிற யோசினை?"
"குஞ்சாச்சிக்கு எப்ப பாத்தாலும் கிண்டல்தான். நுண சைக்குப் போகப் போறம்...."
"ஓமோம்.... அதுதான் குமரியளெல்லாம் அள்ளுப்பட்டுக் கொண்டு வயலுக்காலை ஓடுறாளவை. அதுக்கேன் புளியடியிலை நிண்டு மெனக்கெடுகிறியள்.... நேரவழிக்கு வெய்யில் ஏற முந்திப் போங்கோவன் பொடியள்...."
"அதிலை ஒரு சிக்கலணை. கோவிலுக்குப் போக வேணும் எண்டு வீட்டிலை கேட்டால் சண்டைக்கு வரூதுகள்.... வீட்டுக்காரரோடை பெரிய வில்லங்கமாய்ப் போச்சு."
"மெய்யாயோ....?!"
"நாங்கள் என்ன பொய்யே சொல்லுறம்.....?!"
"அப்பா! நுணசைக் கந்தா! இதென்ன கலிகாலமாக் கிடக்குது. கோவிலுக்குப் போக வேண்டாமெண்டு சொல்லீனமோ? கலிகாலம் முத்திப்போச்சடா தம்பியவை. நான் போய் ஒருக்கா உங்கடை கோத்தையவையைக் கேட்டுக் கொண்டு வரட்டே...."

அவசரப்பட்டுத் தடுத்தான் நந்தன்.

"குஞ்சாச்சி.... சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்காதையணை. பேந்து நாங்கள் தேருக்குப் போன மாதிரித்தான்."
"அப்ப தேருக்குப் போகேலையே?"
"நீங்கள் இருக்கேக்கை எங்களுக்கென்ன கவலை. குஞ்சாச்சி! இப்ப நீங்கள்தான் எங்களுக்கு உதவி செய்யவேணும்..."
"என்ன செலவுக்கு காசு கீசு வேணுமே? ஐயோ தம்பியவை, இன்னும் அந்தாள் காசனுப்பேல்லை. அரிசி, மா, சீனி எண்டு கந்தையா கடைக் கொப்பியிலையும் கடன் ஏறிக் கொண்டு போகுது. கோழிமுட்டை மூண்டு இருக்கு தாறன். கந்தையான்ரை கடையிலை குடுத்து ஏதாலும் காசு வாங்கிக் கொண்டு போங்கோவன்...."

ன்னதான் இருந்தாலும் சோதர் குஞ்சாச்சியின் மனமே தங்கம்தான். எவர் கேட்டாலும் இல்லை என்று கூறாமல்  உள்ளதைப் பகிர்ந்து கொடுத்து உதவும் குணம்.

"குஞ்சாச்சி! எங்களுக்குக் காசு தேவையில்லை. கோவிலுக்குக் காற்சட்டையோடை போறது வடிவாயே இருக்கும். கந்தசாமி அண்ணற்றை வேட்டி இருந்தால் தாங்கோவன். கட்டிப் போட்டுக் கொண்டு வந்து தாறம்...."
"தாறத்திலை ஒண்டுமில்லை.... வேட்டி பவுத்திரம். பிசக்கினாலும் பறுவாயில்லை. தோய்ச்சுப் போடலாம். கிழிச்சுப் போடாதையுங்கோ. பேந்து அந்தாளோடை காலந்தள்ளேலாது. ஆரைக் கேட்டடி குடுத்தனி எண்டு நாய் மாதிரிக் குரைக்கும்...."

சோதர் அவர்களுக்குக் குஞ்சாச்சி. அவளின் கணவர் அண்ணர். என்ன உறவு முறையோ? - ஊர் அவ்வாறுதான் அழைத்தது. அவர்களும் அழைத்தார்கள்.
அகலக் கரைவைத்த நாலுமுழப் பருத்தி வேட்டிகளில் பக்திமான்களாக ஐவரும் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு வெளியேற ஆயத்தமானபோது, தேவன் தலையைச் சொறிந்தான்.

"குஞ்சாச்சி...."
"என்னடா...."
"அந்த முட்டை மூண்டு...."


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!