திங்கள், 14 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (5)

1989ம் ஆண்டு.
சிவராசன் ஜேர்மனிக்கு வந்து ஐந்து வருடங்கள் இருக்கும்.
சோசலில்தான் இருந்தான். களவாக ஒரு சீனா ரெஸ்ரோரண்டில் வேலை.
காலை ஐந்து மணித்தியாலம். பின்னர் மாலை ஐந்து மணித்தியாலம்.
கிழமையில் ஒரு நாள்தான் விடுமுறை.
பாவித்து அசுத்தமான உடைகளைத் தோய்த்து, அறையைச் சுத்தமாக்கி, சமைத்துச் சாப்பிட்டு
வீடியோவில் விஜயகாந்தையோ அல்லது ரஜனியையோ பார்த்தவாறு கண்ணயர, அந்த ஒரு நாளும் பறந்து போய்விடும்.
மீண்டும் ரெஸ்ரோரண்ட். மீண்டும் கோப்பைகளுடன் சல்லாபம்.
"ஏய்... ஊய்..." என்ற சமையல்காரனின் விரட்டல்கள்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் ஊரில் இருந்து நமசிவாயகத்தின் கடிதம் வந்தது.

தம்பி சிவா!
நாங்கள் சுகம். உன்னுடைய சுகங்களுக்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சின்னத்தம்பி உனக்குத் தன்ரை இளையவளைச் சம்பந்தம் கேட்டு வந்தவர். பெயர் சுகுணாவாம். உனக்கும் அந்தப் பிள்ளையைத் தெரியும் என்று நினைக்கிறேன். சின்னத்தம்பி எனக்கும் ஒருவழிக்கு மச்சான்முறை. பிள்ளையையும் எனக்குப் பிடிச்சுப்போச்சு.
எதுக்கும் மேற்கொண்டு உனது சம்மதத்தையும் செலவுக்குக் கொஞ்சம் பண உதவியையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
உனது ஐயா.’

இரு குமர்கள் கரையேறாமல் வீட்டில் இருக்க, தனக்குத் திருமணம் செய்ய ஆசைப்படும் ஐயாவை நினைக்க ஆச்சரியமாகவிருந்தது.
பொடியன் வெளிநாட்டில் வெள்ளைக்காரிகளுடன் சேர்ந்து கெட்டுப்போய்விடுவான் என்ற கவலையாக இருக்கலாம். அல்லது சின்னத்தம்பியிடம் வாங்கும் சீதனத்தில் ஒருத்தியைக் கரையேற்றலாம் என்ற திட்டமாகக்கூட இருக்கலாம்.

’எனினும் ஐயாவுக்கு என்ரை வாழ்க்கையைப்பற்றிய அக்கறை உள்ளது. என்னுடைய வாழ்க்கையைப்பற்றிச் சிந்திக்கிறார். அதுவே போதும்.’
’எனக்காக அக்கறைப்பட தாயகத்தில் மனிதர்கள் உண்டு. அவர்கள் என் அடி அஸ்திவாரங்களாக அமைகிற பொழுதில் என் சோம்பல்களும் தளர்வுகளும் தள்ளி விழுகின்றன. உற்சாகம் உற்பத்தியாகி என்னைத் தென்புள்ளவனாக்குகிறது.’

சுகுணா....

நினைத்துப் பார்த்தான்.
மனத்திரையில் கலங்கலாக ஒரு உருவம் வந்துநின்றது பொது நிறம். நல்ல முகவெட்டு. ஒடிசல் என்று கூற முடியாத உடலமைப்பு. மொத்தத்தில் அழகான பெட்டை.
அன்று பார்த்தது. இந்த ஐந்து வருடத்தில் அவளிடம் எத்தனையோ மாறுதல்கள் வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கும். அவைகூட அவளின் இளமையைச் செழுமையாக்கி அழகை மேம்படுத்தும்.
சிவராசன் தன் மனதுள் அவளை அழகியாக்கினான்.
தூங்கி எழுந்த உணர்வுகளில் உற்பத்தியான கற்பனை வர்ணங்களால் சித்திரமாக அவளைக் கண்டான்.
கரும்பு தின்னக் கசக்கவா செய்யும்?!

’ஏதோ உங்களுக்கு எது சரியோ, அப்பிடியே செய்யவும்’ என்று தனது உணர்வுகளை அடக்கி, அடக்கமானவனாய் சம்மதத்தைத் தெரிவித்தான் சிவராசன்.

சம்மதம் தெரிவித்து நாட்கள் பல மறைந்தும் ஊரில் இருந்து பதிலைக் காணவில்லை. ஆவலுடன் தினமும் தபால்பெட்டியைப் பார்த்து, அதன் வெறுமையில் ஏமாற்றம் அடைந்து நிம்மதியற்றுத் தவித்தான்.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துவிட்டார்களோ?!
வேலையும் வீடும் என்று இருந்தவனின் இதயத்தில் சுகுணா என்ற விதையை ஊன்றி மௌனமாக உள்ள தந்தையின்மேல் கோபமாக வந்தது.
கோபம் நீண்டநாள் நிலைக்கவில்லை.
சுகுணாவும் அவளது தந்தை சின்னத்தம்பியும் கொழும்பு வந்தார்கள்.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் சிவராசன். ஏஜென்சியிடம் காசு கட்டியாகிவிட்டது. விரைவில் வந்துவிடுவாள். அவளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
சிவராசன் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பங்குபோட்டான். நண்பர்கள் விருந்து என்ற பெயரில் குடித்துக் கும்மாளமிட்டார்கள்.
சிவராசனுக்கு உறவென்று சொல்லிக் கொள்ள ஜேர்மனியில் ஒரேயொருவன்தான் இருந்தான். அதுவும் நூறு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நகரமொன்றில்.
ஒருநாள் அவனை நாடிச் சென்றான்.
"அடடே சிவா.... என்ன கனநாளைக்குப் பிறகு இந்தப் பக்கம்.... இப்பதான் என்ரை ஞாபகம் வந்ததாக்கும்!" என்று வரவேற்றான் சண்முகநாதன்.
"எப்பிடி இருக்கிறாய்? வீட்டுக்குக் காசு அனுப்புறனியே?" என்று விசாரித்தான் சிவராசன்.
"ஆ... ஏதோ அனுப்புறன்.... அதுகளுக்கு எவ்வளவுதான் அனுப்பினாலும் காணாது. எல்லாத்தையும் அனுப்பிப்போட்டு நாளைக்கு நான் என்ன நடுத்தெருவிலை நிக்கிறதே?"
எரிச்சலுடன் கூறினான் சண்முகநாதன்.

"சண்.... ஊரிலை சாமான்கள் எல்லாம் நெருப்பு விலை.... சனங்கள் நாளைக்கு வாழ்வோமோ எண்ட நம்பிக்கை இல்லாமை உயிரைக் கையிலை பிடிச்சுக்கொண்டு வாழுதுகள். அதுகளின்ரை வாழ்க்கைக்கு ஒரேயொரு ஊன்று கோல் நாங்கள்தான். நாங்களும் அதுகளை ஏமாத்தினால் அதுகள் எங்கை போறது?"
"தனக்கில்லாத் தானம் தன் பிடரிக்குச் சேதம்!"
"இது தானமில்லையடா.... கடமை!"
"அதுக்காக நாளைக்கு எனக்குமொரு குடும்பம் எண்டு வரேக்கை வெறுங்கையோடையே நிக்க முடியும்? அதுக்கும் நேரகாலத்தோடை கொஞ்சம் சேர்த்து வைச்சிருக்கவேணும்."

சண்முகநாதனின் பேச்சில் சுயநலம் தொனித்ததைக் கவனித்த சிவராசன் மௌனமானான். அவனுடன் வாதிடுவதில் பலனில்லை என்ற எண்ணமே காரணம்.

"சிவராசன்! விசேசம் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டாய்..."
"ஓமோம்.... விசேசம்தான். எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு."
"சந்தோசமான செய்தி.... எப்ப கல்யாணம்?"
"பெட்டை கொழும்பிலை.... வந்தவுடனை கல்யாணம்தான்."
"ஆர் பொம்பிளை?"
"சுகுணா.... எங்கடை ஊர்தான்...."

சிறிது யோசித்தான் சண்முகநாதன்.

"அடடே.... சின்னத்தம்பி மாமான்ரை மேள்..." என்றவன்,
"டேய் சிவா... உண்மையிலேயே நீ கொடுத்துவைச்சவன்தான்டா.... உன்ரை அப்பா நேரகாலம் அறிஞ்சு கல்யாணம் செய்துவைக்கிறார். அவரை நீ எவ்வளவு போற்றினாலும் தகும். எனக்கும் இருக்குதுகளே ஊரிலை.... அதுகளுக்குக் காசைப்பற்றித்தான் கவலை.... ஒருத்தன் வெளிநாட்டிலை கஸ்டப்படுகிறானே, அவனுக்கும் வயசாகிக் கொண்டு போகுதே.... கல்யாணம் கட்டிவைக்க வேணுமே எண்ட எண்ணம் கொஞ்சங்கூட இல்லை!" என்றவாறு சிவராசனைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் பொறாமை கலந்திருந்தது.
+++++++

குழந்தைக்குப் பிறந்தநாள் என நண்பன் அழைத்திருந்தான்.
சரியாக மாலை ஆறுமணிக்கு ஆரம்பம் என்று மண்டப முகவரியையும் தெரிவித்தான்.
அவனது நகரத்திலே மாதத்தில் எப்படியும் மூன்று நாலு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை.
போயே தீரவேண்டும். இல்லாவிட்டால் கண்டால் கதைக்கமாட்டார்கள்.
வந்த நாட்டில் ஏன் வீணான பகைமைகளை வளர்ப்பான்?
ரெஸ்ரோரண்டில் முதலாளியிடம் கெஞ்சி மாலைவேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டான் சிவராசன்.
கடை கடையாக ஏறி இறங்கி ஐம்பது மார்க் தாளொன்றைச் செலுத்தி ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கினான். பளபளப்பான கடதாசியில் சுற்றி  கொண்டு மண்டபத்துக்குச் சென்றான்.
அப்பொழுது மாலை ஏழு மணியிருக்கும்.
பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடுமோ என்று பரபரப்பாக விரைந்தான். ஏமாந்து போனான். அப்போதுதான் வீடியோக் கமராக்காரர்கள் கமராவைப் பொருத்திக் கொண்டிருந்தார்கள்.
மேசையில் ’கேக்’கைக் காணவில்லை. அதுகூட இனித்தான் வரும்போலும்.
நேரம் மெதுவாக ஊர்ந்தது. ஒவ்வொருவராக மண்டபத்துள் நுழைந்தார்கள்.
குறித்த நேரத்தில் குறித்தவாறு செய்யமாட்டார்கள்.
தாமதம் தமிழர்கள் பண்பாடோ?!              
எட்டு மணிக்குத்தான் பெற்றோர்கள் குழந்தையுடன் நுழைந்தார்கள். அந்த ஒரு வயதுக் குழந்தை அரைத் தூக்கத்துடன் துவண்டு விழுந்து கொண்டிருந்தது. அம்மாக்காரி குழந்தையின் மாம்பழக் கன்னங்களில் தட்டித் தூக்கத்தைக் கலைக்க முயற்சித்தாள். அப்பா கேக்கில் மெழுகுதிரி ஒன்றை நாட்டி எரிய வைத்தார்.
சுற்றி நின்றவர்கள் "ஹப்பி பேர்த் டே டு யூ" என்று கோரஸாக முழங்க, குழந்தை கண்களைச் செம்மியவாறு அப்பாவின் உதவியுடன் கேக்கிற்குள் கத்தியைச் செருகியது.
பக்கத்தில் தயாராக இருந்த ’கனோன்’ கமராக்கள் ஓடியாடிப் ’பளிச் பளிச்’ எனக் கண்சிமிட்டின. குறுக்கும் நெடுக்குமாக நடப்பவர்கள்மீது எரிந்து விழுந்தார்கள் வீடியோக் கமராக்காரர்கள்.
மண்டபம் முழுவதும் ஆரவாரம். அந்தச் சத்தத்தால் எரிச்சலுற்ற குழந்தை அழுது அடம்பிடிக்க, குழந்தையை முறைத்த அம்மாக்காரி விருந்தினரைப் பார்த்து அசடு வழியச் சிரித்தாள்.
பாவம் குழந்தை. புரிந்துகொள்ள முடியாத வயது.
சிற்றுண்டிவகைகள் பரிமாறப்பட்டன.
பிறந்த நாளுக்கு வந்திருந்த ஒரு சில ’டொச்’காரர்கள்கூட தமிழ்ப்பெண்களின் உடுப்புக்களையும் கழுத்துக் கொள்ளாத தங்க நகைகளையும் பரிமாறப்பட்ட உணவு வகைகளையும் பார்த்து ஆச்சரியமானார்கள்.
மண்டபத்தின் ஒருபுறத்தே விஸ்கி, பியர் போத்தல்கள் பிறிம்பாக அடுக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதிக்கு சிவராசனையும் யாரோ இழுத்துப் போனார்கள். இப்பொழுது எல்லாம் சிவராசனுக்குக் குடிவகைகளில் நாட்டமே இல்லை. குடிக்கப் போகிறோம் என்று நினைத்தாலே வயிற்றைப் பிரட்டுவதுபோன்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆனால் சிகரட்டைத்தான் விடமுடியவில்லை. ஒவ்வொரு முயற்சியின்போதும் சிகரட்டுக்களின் எண்ணிக்கைதான் அதிகரித்ததே தவிர முயற்சி பலிதமாகவில்லை.
பிறந்த நாள் விழாவில் குடிக்காவிட்டாலும் கோபிப்பார்கள். அப்படி ஒரு பண்பு நம்மவர்களுக்கு.
பூனைக்குட்டி ’லேபல்’ பொறித்த போத்தலொன்றைத் திருகி வார்த்துக் கோலாவைக் கலந்து நீட்டினார்கள்.
ஒரே மிடறில் கவிழ்த்து வாய்க்குள் ஊற்றியதுதான் தாமதம்- வயிற்றை பிறாண்டிக்கொண்டு ஏதோ ஒன்று தொண்டைக்குழியால் வெளிவரப் போவது போன்ற உணர்வு தாக்க, மலசலகூடத்தை நோக்கி ஓடினான் சிவராசன்.
வாந்தி அணையுடைத்த வெள்ளமாகியது. வாந்தியுடன் சிவப்புத் திரவமாகத் தொட்டியை நிறைத்தபோது.... பக்கத்தில் வந்து எட்டிப்பார்த்த சோதி திகிலுடன் அலறினான்.
"சிவா.... என்னடா என்னடா... உது... ரத்தம் போகுது... கொஞ்சம் பொறு. அம்புலன்ஸுக்குப் போன் செய்துபோட்டு வாறன்..."
"வேண்டாம் சோதி. இது சும்மா சூடாயிருக்கும்!" என்று சிவராசன் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் விரைந் தோடிச் சென்று அம்புலன்ஸை அழைத்தான் சோதி.

(தொடரும்...) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!