ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (4)

''கேசவன்! கொழும்புக்கு ஒருக்கா ரெலிபோன் எடுக்க வேணும். அப்பா வந்து நிக்கிறார்."
"உன்ரை ரெலிபோனுக்கு என்ன நடந்தது? காசு கட்டேல்லையே?"
"இவன் தம்பியின்ரை அலுவலாய் கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் மாறிமாறிக் கதைச்சதிலை எக்கச்சக்கமாய் பில் ஏறீத்து."
"இப்ப தம்பி எங்கை? கனடாவுக்குப் போவிட்டாரோ?"
"எங்கை போனான்? கனடாவுக்கு அனுப்புறன் எண்டு சிங்கப்பூருக்குக் கூட்டிக் கொண்டுபோய் ஏஜென்சிக்காரன் காசோடை ஏமாத்திப் போட்டான். இப்ப கொழும்பிலைதான் நிக்கிறான்."
"உனக்கும் மாறிமாறிச் செலவுதான்" என்று
சிவராசனுக்காகப் பரிதாபப்பட்டான் கேசவன்.

சிவராசனின் தம்பி வரதராஜன் ஒருமுறை கடிதம் போட்டிருந்தான்.

’ஊரிலே எங்கும் ஆயுதங்களால் அழிவுகள். பஞ்சத்தின் கோரத் தாண்டவம். இளைஞர்களின் தலைமறைவு. இராணுவத்தின் சுற்றிவளைப்பு. மரத்தொழிலை மறந்து பல நாட்களாகிவிட்டன. கொழும்புக்கு வந்தால் ஏதாவது சில்லறைக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன்’ என்று உதவி கோரினான்.
இந்த நேரத்தில் உதவாமல் விடமுடியுமா?

தன்னிடமுள்ள காசை அனுப்பினான்.
கொழும்புக்கு வந்து பலசரக்குக் கடை ஒன்றை ஆரம்பித்த வரதராஜன், வியாபாரம் நன்றாக நடைபெறுவதாக அறிவித்தபோது, தனது உதவி வீண் போகாததை எண்ணி அகமகிழ்ந்தான் சிவராசன்.
தானும் வரதராஜனும் சம்பாதிக்கும் பணத்தில் சகோதரிகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைக்கலாம் என நம்பினான். பெற்றோரின் இறுதிக்காலத்தில் அவர்களைச் சந்தோசமாக வைக்கலாமென எண்ணினான்.
எண்ணங்களும் நம்பிக்கைகளும் வருங்காலக் கனவுகளும் திட்டமிட்டபடி நிறைவேறினால் வாழ்க்கையிலே அர்த்தம் இல்லை என விதி நினைத்ததுபோலும். மாதா மாதம் வரதராஜனிடமிருந்து வரும் கடிதங்கள் திடீரென்று நின்று போயின.
’கொழும்பில் கைதாகும் அப்பாவித் தமிழர்களின் வரிசையில் வரதராஜனும் சேர்ந்து கொண்டானா?’ எனத் தவித்தான் சிவராசன்.
ஊரிலிருக்கும் பெற்றோருக்குக் கடிதம் எழுதி வரதராஜனைப்பற்றி விசாரித்தான்.
பதில் வந்தது.
திகைத்துவிட்டான்.
நமசிவாயகம்தான் எழுதியிருந்தார்.
வரதராஜன் கொழும்பிலேயே எவளோ ஒருத்தியைத் திருமணம் செய்துவிட்டானாம். வீட்டுடன் தொடர்பு இல்லையாம்.
"அவன் தனக்குப் பிள்ளையே இல்லை" என்று கோபத்தைக் கடிதத்தில் உமிழ்ந்திருந்தார்.

வரதராஜனைச் சொல்லிக் குற்றமில்லை.
வயது இருபத்தைந்துக்கு மேலிருக்கும்.
திருமணம் செய்ய வேண்டிய வயதுதான். சிவராசனால் ஒரு சராசரி வாலிபனது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
கோபம் வரவில்லை.
ஆனால்....
சகோதரிகளைப்பற்றிச் சிந்திக்காமல், வியாபாரத்துக்குப் பணம் கொடுத்த தனக்குக்கூட அறிவிக்காமல் திருமணம் செய்ததைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.
கூடவே எப்படித் தனி ஆளாகக் குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பது என்ற கவலை வேறு அலைக்கழித்தது.
எனினும் வரதராஜன் அவனது சகோதரன். அவனின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையவேண்டும்.
திருமண வாழ்த்து மடலொன்றைத் தபாலில் அனுப்பி விட்டான்.
சில வாரங்களில் நீலநிறமான தபாலொன்று சிவராசனின் தபால் பெட்டியில் கண்சிமிட்டியது.

’அன்புடன் சிவா அண்ணை!
எந்த முகத்துடன் உங்களுக்குக் கடிதம் எழுதுவது என்ற குற்ற உணர்வுடன் இவ்வளவு காலமாகக் கடிதம் எழுதவில்லை. அதற்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னில் தங்களுக்கு எவ்விதக் கோபமும் இல்லை என்பதைத் தாங்கள் அனுப்பிய திருமண வாழ்த்து மடலில் இருந்து புரிந்துகொண்டேன்.
எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. என் மனைவி ஜெனீற்றா மிகவும் நல்லவள். அவளுக்கும் எனது வீட்டாருடன் ஒற்றுமையாக வாழத்தான் ஆசை. ஆனால் அப்பாதான் என்னை மன்னிப்பதாக இல்லை. அவருடைய மனதை மாற்றுவது தங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது.
அண்ணா! கொழும்பிலும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. எந்த நேரம் ஏது நிகழுமோ என்று பயந்தபடிதான் வாழவேண்டி உள்ளது.
எனது கடையில் வியாபாரம் நன்றாக நடந்தாலும் பிரயோசனமில்லை. காடையர்களுக்குக் கப்பம் கட்டியே கடை நடத்தலாம். பொலிசாராலும் சோதனை அது இதென்று பல கஸ்டங்கள். இந்த நிலையில் நானும் இங்கிருப்பதில் எவ்விதப் பலனும் இல்லை. எனவே கடையை விற்று கனடாவுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன்.
கனடாவில் இருந்து ஒருத்தர் வந்து ஆட்களைக் கூட்டிக் கொண்டு போகிறார். கடையை விற்று வரும் காசு காணாது. மிகுதியை நீங்கள் தந்து உதவினால் எனது எண்ணம் நிறைவேறும்.
தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புத்தம்பி,
ந.வரதராஜன்.’

கடிதத்தை வாசித்த சிவராசனின் தலைவலித்தது.
காசு.... காசு.... காசு....
இதற்குத்தான் எவ்வளவு தேவைகள்?!

காசின் வருகைக்கு ஏற்றவாறு தேவைகளும் அதிகரிக்கத் தானே செய்கிறது!!
ஆனால் சிவராசனைப் பொறுத்தமட்டில் வரவிற்கு மேலாகவே செலவுகள் அதிகரித்தன. உறவுகள் அவனிடம் பலவழிகளிலும் எதிர்பார்த்தனர்.

அவற்றிற்கெல்லாம் ஈடுகொடுக்க அவனின் வருமானம் போதவில்லை. ’இயலாது’ என்று ஒதுங்கிக் கொள்ளவும் முடியவில்லை. தாய்நாட்டின் பிரச்சினைகளிலும் ஒரேயொரு நம்பிக்கை ஒளியாக அவர்களுக்குத் திகழ்பவன் அவன்தானே.
அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. மனம் இருந்தது.
ஆனால் பணம்....?!

வரவிற்கு மேலாகச் செலவுகள் அதிகரித்தபோது கடன்பட்டான்.
ஆனால் கடனுக்கும் ஒரு எல்லை உள்ளதல்லவா?!
ஆரம்பத்தில் பலர் நண்பர்கள். ஆனால் தற்போது அவனை நெருங்கி வரவே பயப்பட்டார்கள்.
எங்கே கடன் கேட்டுவிடுவானோ என்ற பயம்தான் காரணம்.
எனினும் கேசவன் போன்ற ஓரிரு நண்பர்களும் இல்லாமலில்லை.
அந்தத் தைரியத்தில் வரதராஜன் கனடா செல்ல உதவுவதாகச் சம்மதித்தான்.
எப்படியோ பணம் புரட்டி அனுப்பினான்.
வரதராஜனும் கடையை விற்று ஏஜென்சியுடன் கனடா போவதற்காகச் சிங்கப்பூருக்கு வந்தான்.
சிங்கப்பூரில் ஏஜென்சி தலைமறைவாகிவிட்டான்.
அதிர்ச்சியால் நிலைகுலைந்தான் சிவராசன்.
ஏமாற்றத்துடன் நாடு திரும்பினான் வரதராஜன்.
கடையும் இல்லை. காசும் இல்லை. கனடாவும் இல்லை.
’என்ன செய்யப்போகிறான் வரதராஜன்?’
’மீண்டும் உதவி கேட்கலாம்.’

தயக்கத்தில் விசாரிக்கவில்லை.
கடன்கள் பயமுறுத்தின.
செலவுகளைக் கூடியமட்டும் குறைத்தான்.
புது உடுப்பு வாங்கவே மறந்துவிட்டது. வேலைக்கும் வெளிக்கும் பாவிக்க ஒருசோடிச் சப்பாத்துக்களே தஞ்சம். அவைகூட இன்றோ நாளையோ ஆயுளை முடித்துவிடுவதைப்போலப் பயம்காட்டின.
என்னதான் செலவுகளைக் குறைத்தாலும் சிகரட்டை விட முடியவில்லை.
சிகரட்டையும் விட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.
+++++++

''என்ன மச்சான் சிவா! யோசிச்சுக் கொண்டு நிக்கிறாய். கொழும்புக்கு ரெலிபோன் எடுக்கேல்லையே...."
கேசவனின் குரல் கேட்டு சுயநினைவடைந்த சிவராசன் ரெலிபோனை நெருங்கி இலக்கங்களை அழுத்தினான்.
இரண்டு மூன்று முயற்சிகளுக்குப் பின் மறுமுனையில்
தொலைபேசி கிணுகிணுத்தது.

"ஹலோ...."
"ஹலோ... நான் சிவா ஜேர்மனியிலை இருந்து கதைக்கிறன். நமசிவாயகத்தோடை கதைக்க முடியுமே...."
"சிவாவோ....? எப்படியடா சுகமா இருக்கிறியோ.... நான்தாண்டா நந்தன்...."
"நந்தன்.... நீ இப்ப லொட்ஜ்ஜிலையே வேலை செய்யுறாய்?"
"வெளிநாட்டுக்குப் போற அலுவலாய் வந்தனான். ஏஜென்சிக்காரன் இண்டைக்கு அனுப்புறன் நாளைக்கு அனுப்புறன் எண்டு சொல்லிச் சொல்லிப் பயண அலுவல் தள்ளிக் கொண்டே போகுது. இன்னும் உருப்படியாய் வெளிக்கிடுற பாடாயும் காணேலை. வாடகைக்கு லொட்ஜுகளிலை இருக்கிறதெண்டாலும் ஞாயமான காசெல்லே வேணும். கொழும்பிலை எல்லாத்துக்கும் காசுதான் வேணும். அதுதான் வெளிநாட்டு விசயங்கள் சரிவருமட்டும் லொட்ஜ்ஜிலை வேலைக்கு நிக்கிறன்."
"அதுவும் சரிதான்."
"உன்பாடுகள் எப்பிடி? கலியாணம் கிலியாணம் கட்டிப் போட்டியே?"
"கலியாணமோ....? அதுதான் இப்ப இல்லாத குறைச்சல். எனக்கிருக்கிற தலையிடீக்கை இன்னொருத்தியும் வந்து இடிபட வேணுமே....?"
"கஸ்டங்கள், பிரச்சினையள் எல்லாருக்கும் வாறதுதான். அதுக்காக கலியாணம் வேண்டாமெண்டு காலத்தை வீணாக்கிப் போடாதை. அததை அந்தந்த நேரத்திலை செய்துபோடவேணும்...."
"எனக்கும் ஆசை இல்லாமலே.... எல்லாத்துக்கும் நேரம் எண்டு ஒண்டு இருக்கெல்லே. நீ என்னமாதிரி...."
"கலியாணம் கட்டி ரண்டு வருசமாகுது...."
"ஊருக்கையோ....?"
"ஊருக்கைதான். சொந்தத்துக்கைதான். கோமதி எண்டு...."
"உன்ரை மச்சாள்தானே.... நான் வரேக்கை சின்னப் பெட்டையாய் அதுவழியை திரிஞ்சது..."

தொலைபேசியில் ஆச்சரியப்பட்டான் சிவராசன்.

"நீ உங்கை போய் பத்து வருசத்துக்கு மேலையாச்சு. இன்னும் அவள் சின்னப் பெட்டையே...."
சிரித்தான் நந்தன்.

உண்மைதான். தாயகத்தை விட்டு வந்து பத்து வருடங்கள் கழிந்துவிட்டன. சிவராசன் வந்தபோது ஜேர்மனிக்கு வந்தவர்களில் பலர் குடும்பமாகிவிட்டார்கள்.
ஆனால் சிவராசன்....?
அவனால் அப்படியொரு குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?
பெருமூச்சொன்றைத்தான் விட முடிந்தது.

"சிவா.... இஞ்சை உன்ரை அப்பா பக்கத்திலை நிக்கிறார். கதை."
"ஓமோம் நந்தன்.... உன்னோடை பேந்தொரு நாளைக்கு எடுத்து ஆறுதலாய்க் கதைக்கிறன். இப்ப அவரிட்டைக் குடு."

கொடுத்தான்.

''தம்பி சிவராசு... நான்தாண்டா உன்ரை ஐயா கதைக்கிறன்."
"ஐயா! சுகமாய் இருக்கிறியளே....?"

கேட்கும்போதே தொண்டையை ஏதோ அடைத்தது.

"என்ன மோனை.... கொஞ்சம் பிலத்துப் பேசணை. எனக்கும் வயசாய்ப் போச்சு. காதும் சரியாய்க் கேக்குதில்லை."

எத்தனையோ தொழிலாளர்களைச் சத்தம்போட்டு வேலை வாங்கிய குரல் தொலைபேசியில் தடதடத்தது. பாவம் அப்பா. வயதாகிப் போய்விட்டது. குடும்பத்திற்காக உளியோடும் வாளோடும் சீவிலியோடும் போராடிப் போராடியே தளர்ந்து போய்விட்டார்.
குடும்பத்துக்காகத் தேய்ந்த அப்பா, என்னை வளர்த்து ஆளாக்கவென பாசத்துடன் அமுதை ஊட்டிய அம்மா, உறவென்று சொல்லிக் கொள்ள வாழும் சகோதரங்கள். இவர்களை எப்போதுதான் சந்திப்பேன்?
நினைத்தால் உடனேயே போய்ச் சந்தித்து வர விசா வசதி செய்தது. ஆனால் நிதிநிலமை....? விமான ரிக்கற் வாங்கப் பணம் இருந்தால் போதுமா? போகும்போது வெறுங்கையுடன் செல்ல முடியுமா? அப்படிச் செலவழித்துப் போகிற காசுக்கு சகோதரி ஒருத்தியைக் கரை சேர்த்துப் போடலாம்.
  
"தம்பி! என்னடாப்பா ஒண்டும் கதைக்காயாம். நேர வழிக்குச் சாப்பிட்டு உடம்பைக் கவனமாய்ப் பாரடா. சுவர் இருந்தாத்தான் சித்திரம் எழுதலாம். ஊரிலையும் எந்த நேரத்திலை என்ன நடக்குமெண்டு சொல்லேலாது. நீ ஒருத்தனாலும் வெளியாலை சுகமாய் இருக்கிறாய் எண்ட நிம்மதிதான் எங்களுக்கு."
"நான் சுகமாயிருக்கிறன் ஐயா. என்னைப்பற்றி ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ. நீங்கள்தான் உடம்பைக் கவனமாய்ப் பாக்கவேணும். காது கேக்கிறது குறைவெண்டால் கொழும்பிலை ஆராலும் ஒரு டொக்டரிட்டைக் காட்டிக் கொண்டு போங்கோவன்."
"வயசாகிப் போச்செல்லே. அதுதான் காது கொஞ்சம் மந்தம் வைத்தியம் எண்டு போனால் காதோடைமட்டும் முடியிற காரியமில்லை. கண் பார்வையும்தான் குறைஞ்சு கொண்டு போகுது. இரவிலை கை கால்களும் குத்தி உழையுது. உழைப்பில்லை. ஓடியாடித் திரியாமை இருந்தால் நோயள் வருந்தான். இதுகளுக்கெல்லாம் உன்னைக் கஸ்டப்படுத்த மாட்டன். என்னவோ என்ரை பிள்ளையளிலை நீதான் ராசா வெளியாலை இருக்கிறாய். கொண்ணனும் குடும்பம் எண்டு போவிட்டான். அவனுக்கும் உழைப்புப் பிழைப்பு நேர்சீர் இல்லை. என்னவோ தம்பி.... எல்லாப் பாரத்தையும் உன்ரை தலையிலைதான் பொறிச்சுப் போட்டன்...."
நமசிவாயகத்தின் குரல் தழுதழுத்தது.

"இதுக்கேன் ஐயா கவலைப்படுறியள்.... என்னாலை ஆன தை நான் செய்வன்தானே... தம்பியைக் கண்டனீங்களே...."
"ஆர் வரதனையோ?! அந்த நாய்தான் மூத்தவை பெரியவை இருக்கினம் எண்ட பொறுப்பில்லாமை ஆரோ ஒருத்தியைச் சேத்துப்போட்டானே. அவனை எனக்கொரு மகன் எண்டே மறந்துபோனன்...."
குரலில் சிறிது உஷ்ணம் தொனித்தது.

"ஐயா! சொல்லுறன் எண்டு கோபிக்காதையுங்கோ. என்ன இருந்தாலும் அவனும் உங்கடை மகன். ஏதோ காதல்கீதல் எண்டு மாட்டுப்பட்டுட்டான். போனது போகட்டும் எண்டு அவனையும் ஒருக்காப் போய்ப் பாருங்கோ."
"கொழும்பிலை என்னவாலும் வேலை செய்து குடும்பத்துக்கு ஒத்தாசையாய் இருப்பான் எண்டு பாத்தால், ஆரோ ஒருத்தியைக் கட்டிக்கொண்டு குடும்பமெல்லே நடத்துறான். தனக்குப் பின்னாலை ரண்டு குமருகள் குசினிக் குள்ளை கிடந்து முகட்டை முகட்டைப் பாக்குதுகள் எண்ட யோசினையே இல்லை. அறிவுகெட்ட நாய். ஏன் தம்பி.... நீ அவனோடை கதைக்கிறனியே.... நீ கலியாணம் கட்டாமை இருக்கேக்கை அவனுக்கென்ன அதுக்குள்ளை அவசரம்?"
"நடந்தது நடந்துபோச்சு. பாவம் தனியாய் என்ன செய்யிறானோ தெரியாது. அவன்ரை பெஞ்சாதி வீட்டாக்கள் எப்பிடியோ தெரியாது. எதுக்கும் நீங்கள் ஒருக்கா அவனைப் போய்ப் பார்த்தால் அவனுக்கும் சந்தோசமாய் இருக்கும்."
"எனக்கு உன்னைப்பற்றித்தான் இப்ப கவலை. உனக்கும் வயசாய்ப் போச்சு. முந்தி உனக்குப் பேசின சம்பந்தம் அந்தப் பாழ்படுவானாலை குழம்பிப்போச்சு. எத்தனை நாளைக்குத்தான் இப்பிடியே தனிய இருப்பாய்? அந்தப் பாழாய்ப்போவான் குறுக்கை வராட்டி நீயும் குடும்பமாகி இருப்பாய்.... அவன்.... அந்தப் பாழாய்ப்போவான்.... உனக்கு கிட்டத்தான் இருக்கிறானோ....?" என்று சினத்துடன் கேட் டார் நமசிவாயகம்.
"ஓமோம்...."
கூறும்போது சிவாவுக்கு வேதனையாக இருந்தது.

அந்தப் பாழ்படுவான் எனப்பட்ட சண்முகநாதனை நினைக்கும்போது நெஞ்சம் சிறிது வலித்தது.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!