புதன், 23 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (13)

திக்பிரமை பிடித்தவன்போல் நின்றான் சிவராசன்.
உறவென்ற ஆத்மாக்களின் மாற்றீடுகள் கைக்குக் கிட்ட வந்து எட்டச் செல்லும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஏன் விலகிக்கொள்ள ஆசைப்பட்டாய் அகல்யா? ஏன் வெறுத்துப் போனாய் இப்படி? வெட்டொன்று துண்டு இரண்டாய் என் உறவைத் தறித்துக்கொள்ள எப்படி முடிந்தது

செவ்வாய், 22 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (12)

சிவராசன் கூறியதைக் கேட்ட சிவசோதியின் மனம் கொதித்தது.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?
சும்மா கிடந்தவனை வலிய அழைத்து விருந்து கொடுத்து மனதை மாற்றி, அதில் ஆயிரமாயிரம் ஆசைகளை விதைத்துவிட்டு, திடீரென்று எப்படி இவர்களால் தூக்கி எறிய முடிந்தது?!
பாம்பு செட்டையைக் கழற்றிவிடுவதுபோல எப்படித்தான் இவர்களால் மனித உறவுகளை மாற்றியமைக்க முடிகிறது? மனச்சாட்சியை அடகுவைத்து ஆதாயம் தேடும் பச்சோந்திகள்.
எவ்வளவு ஆசையோடு வந்தான். எவ்வளவு கற்பனைகளைச் சுமந்து கொண்டு வந்தான். அத்தனையையும் கசக்கிப் பிழிந்து அவனைச் சக்கையாக எறிய அவர்களால் எப்படித்தான் முடிந்தது?!
காரின் பின் சீற்’றில் அவன் அகல்யாவுக்காக ஆசையோடு வாங்கிய சட்டை அனாதையாக அலங்கோலமாகக் கிடந்தது.

திங்கள், 21 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (11)

''அகல்யா வந்துவிட்டாள்!"
பவளம் ரெலிபோனில் கூறினாள்.
'என் அகல்யா வந்துவிட்டாள்!
சந்தோசத்தில் கூவவேண்டும் போலிருந்தது.
எண்ணாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருந்து எனக்காக, என் உறவுக்காக ஒரு உயிர் பறந்து வந்திருக்கின்றது.
'இதோ வந்துவிட்டேன் அகல்யா...! இனிமேல் என்னால் உன்னைக் காணாமல் இருக்க முடியாது. உன்னைக் காணாத கண்ணும்

சனி, 19 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (10)

ன்பின் சிவா!
உங்களுக்கு எதை எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. ரெலிபோனில், ஏதாவது எழுதச் சொன்னீர்கள். நானும் எழுதுவதாகச் சொல்லிவிட்டேன்.
எழுத உட்கார்ந்தால் என்ன எழுதப் போகிறோம் என்பதே மறந்துவிடுகிறது. எழுதுவதற்கு முன்னால் எழுந்த கற்பனைகள், எண்ணங்கள் யாவும் பேனையைக் கையில் எடுத்ததும் வெறுமையாய் வெண்மையாய் மறைந்து போகின்றன. எனினும் எழுத வேண்டும்.
இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். என்னில் எரிச்சலாகக்கூட வரும்.
சிவா! கொழும்புக்கு வந்ததிலிருந்து மனது அமைதியற்ற கடலைப்போல் அலைபாய ஆரம்பித்துவிட்டது. முதன்முதலில் ரெலிபோனில் உங்களின் குரலைக் கேட்டவுடனேயே என் சுயசிந்தனைகள் யாவும் மட்டுப்பட்டுவிட்டன. மறுநாள் கதைத்தபோது

வெள்ளி, 18 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (9)

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளிலேயே தீர்மானிக்கிறார்கள்.
இது சாத்தியமா? முடியுமா?
எப்படி? எப்படி?
வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பெயர்.
வந்து பத்து வருடங்களுக்கு மேல். கையில் காசில்லை. வரவிற்கு மேல் செலவு. பலரிடம் கடன்.
சொன்னால் நம்பமாட்டார்கள். பொய் என்பார்கள்.
எல்லோரும் பிளேன் ரிக்கற்றுடனும் சில நூறு டொலர்களுடனும்தான் வந்தார்கள். சோசல் காசில்தான் வாழ ஆரம்பித்தார்கள். கார் வாங்கி ஓடுகிறார்கள். பவுண் பவுணாக வாங்கி

வியாழன், 17 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (8)

விண்ணை எட்டிப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் அந்த வீதியில் வரிசையாக நின்றன.
ஒரு கட்டிடத்தில் குறைந்தது ஐம்பது வீடுகளாவது இருக்கலாம். கையிலிருந்த விலாசச் சீட்டில் வீட்டிலக்கத்தைச் சரிபார்த்தான்.
நூற்றியொன்று.
வாசற்கதவில் வரிசையாகப் பொருத்திய பெயர்ப் பொத்தான்களில் பெயரைத் தேடினான்.

'சிவநேசன்.

புதன், 16 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (7)

''நான் போவிட்டு வாறன். லீவு கிடைச்சால் மறுபடியும் வாறன்" என்று சிவராசனிடம் விடைபெற்றான் சண்முகநாதன்.

பாபுவும் சண்முகநாதனும் காரில் ஏறி அமர்ந்தார்கள். பாபு காரைச் செலுத்த ஆரம்பித்தான்.

“என்ன சண்! திட்டமெல்லாம் வெற்றியாக்கும்.'
 மர்மச் சிரிப்புடன் கேட்டான் பாபு.
''வெற்றிதான் பாபு. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனானாம். அந்தக் கதைதான் இது."