வியாழன், 3 செப்டம்பர், 2015

பாதை தெரியாத பயணங்கள் (குறுநாவல்)

"என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. 

"ஆள் 'றெயினா'லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். 

சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். 

சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனியே அமைக்கப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் வசிப்பவன். ஜேர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி ஏறக்குறைய இரண்டு வருடங்களாவது இருக்கும். ஜேர்மன் மண்ணை மிதித்த முதல்நாள்....