வியாழன், 16 ஜூலை, 2015

ஆதியைத் தேடி ஆழியில் சயனம்!

(2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.)

து ஒரு ‘சொக்கலேற்’ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை.

பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக
வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை ‘சொக்கலேற்’ வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளால் சுற்றி பெட்டிகளில் அடைக்கும் பகுதி களஞ்சியப் பகுதி விநியோகப் பகுதி என வேலை செய்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்குக் குறையாது.

அந்த ஆயிரத்தில் ஒருவனாய் அந்தப் பகுதியில் ஒன்றில்... அதாவது வர்ணத் தாளால் சுற்றப்பட்டு வரும் ‘சொக்கலேற்’களுள் தவறாகச் சுற்றப்பட்டவைகளை பிறிம்பாகத் தவிர்க்கும் பகுதியில் எனக்கு வேலை.

கேட்பவர்களுக்கு ‘ப்பூ... இவளவுதானா வேலை.. மிகவும் இலகுவானதாச்சே..’ என்பதுபோல இருக்கும். தப்பில்லை. ஆனால் அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்களைப் பொறுத்து வேலை சுகமாகவோ அல்லது சுமையாகவோ அமையும். இயந்திரங்களின் வேகக் கட்டுப்பாடு பொறுப்பாளர்களின் கையில். தொழிற்சாலை நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவதற்கு ஆசைப்படும் பொறுப்பாளர்கள் இயந்திரத்தின் வேகத்தைக் கூட்டிவிடுவார்கள். வேகம் கூடினால் தப்பானவைகளைத் தவிர்க்கும் வேலையும் கூடும். ஆக இயந்திரத்தின் வேகத்துடன் போட்டியிட வேண்டும்.

அன்று காலை... ‘காட்’டை நேரத்தைக் குறிக்கும் இயந்திரத்தினுள் தள்ள அது நேரத்தைக் குறித்ததற்கு அறிகுறியாக பச்சைநிற குமிழை மினுக்கி ‘காட்’டை வெளியே கக்கியது.

எனது பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். எதேட்சையாக பொதிகளாக்கும் பகுதியில் ஒரு பெண் என் கண்ணில் தென்பட்டாள். அவளை அதற்கு முன் அங்கே கண்டதில்லை.

கருமையான கூந்தல்.. கறுத்தக் கண்மணிகள்... முக அமைப்பு...

நிச்சயமாக எனது நாட்டுக்காரியாகத்தான் இருக்கவேண்டும். அந்தத் தொழிற்சாலையில் இலங்கையர் எவரையும் நான் கண்டதில்லை. ஆகவே நான் ஒருவன்தான் இலங்கை நாட்டவன் என்பது என் கணிப்பு.

இப்போது இவள்.. ஆனால் அவளது சிகை அலங்காரமும், காதணிகளும் சற்று வித்தியாசமாக, அந்தத் தொழிற்சாலைக்குரிய சீருடைக்காலும் ஐரோப்பிய யுவதிகளுக்குரியதாக வித்தியாசம் காட்டியது.

‘சிங்களத்தியோ..?’

‘இல்லை... இல்லை. தமிழிச்சியாகத்தான் இருக்கவேணும்…'

தொழிற்சாலைக்கு புதுவரவு. எனது நாட்டவள். சற்று சந்தோசம் பொங்கியது.

எதேட்சையாக நிமிர்ந்தவளின் பார்வை எனது கண்களைச் சந்தித்தது. முகத்தில் மலர்ச்சி தோன்றியது போலிருந்தது. புன்னகைத்தாளா? புரியவில்லை. ஏதோ ஒருவகை உணர்வு மாற்றம் தெரிந்தது அவள் முகத்தில.

மீண்டும் பார்வையை விலக்கி வேலையில் மும்மரமானாள்.

‘என் நாட்டுக்காரி..!’

அவளைப்பற்றி மேலும் அறிய ஆவல் ஊறியது. நான் எனது வேலைப்பகுதிக்கு விரைந்தேன்.

‘சொக்கலேற்’ வாசம் நாசித்துவாரம் வழியாக மனதை நிறைத்தது.

தற்குப் பின் சில தினங்களாக அவளைக் காண முடியவில்லை. சிலவேளை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது வேலைநேரம் மாற்றமடைந்திருக்கலாம்.

எனினும் அவளைச் சந்திக்கவேண்டும்... அறிமுகமாக வேண்டும்... அவளைப்பற்றி அறிய வேண்டும்... உரையாட வேண்டும் என மேலெழும் ஆசைகளை அடக்க முடியவில்லை. ஆசைகள் மேலெழுந்தால் நிம்மதியின் அழிவு நெருங்குகிறது என்றுதானே அர்த்தம்?! அதே நிலையில் நான்.

வாரம் ஒன்று நகர்ந்தது. அந்த வாரம் எனக்குக் காலை வேலை. காலை ஆறு மணியில் இருந்து பிற்பகல் இரண்டு மணிவரை.

மதியம் பன்னிரண்டு மணி. எல்லோருக்கும் உணவு இடைவேளை. சகல பகுதிக்கும் பொதுவாக அங்கே உணவருந்தவென ‘கண்டீன்' ஒன்றுள்ளது. வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் உணவையும் அங்கே இருநஇது சாப்பிடலாம். அல்லது கண்டீனிலும் தொழிற்சாலை வேலையாட்களுக்கென சலுகை விலையில் விதம் விதமான உணவுவகைகள் விற்கப்படும்.

பொருட்கொள்வனவு, சமைக்கும் நேரம், அதற்கான மின்சாரச் செலவு, உபயோகித்தவற்றை சுத்தப்படுத்தும் நேரம் போன்றவற்றிலும் பார்க்க கண்டீன் சாப்பாடே சிறந்தது என்பது எனது கண்டுபிடிப்பு. அதனால் அங்கே சில உணவுப் பொருட்களை தட்டொன்றில் எடுத்து வைத்தவாறு பணம் செலுத்தும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.

"ஏய் ராணி!"
ஒருத்தி சத்தமாக அழைக்கும் குரல் வந்த திசையை நோக்கினேன்.

அங்கே ஒரு மேசையில் அவளும், அவளுடன் சில பெண்களும் அமர்ந்து எதைப்பற்றியோ பலத்த சத்தமுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

‘ஓ.. அவளது பெயர் ராணியா?!’

அப்போ அவள் இலங்கைப் பெண்தான்.

தீர்மானம் உறுதியாகியது.

அவளின் முன்னால் ஒரு கப் கோப்பி. அவளும் என்னைப் பார்துதுக் கொண்டிருந்தாள். அவளது கருவிழிகளில் மலர்ச்சி. கண்கள் பளபளக்க, ‘சிகரட்’டை உதடுகளில் பொருத்தி, ஆழமாக உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியவாறு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

என்னால் புன்னகைக்க முடியவில்லை. எதிர்பாராத அதிர்ச்சியால் புன்னகைக்க மறந்தவனாய் திகைத்து நின்றேன்.

‘எங்கடை பெட்டை சிகரட் பிடிக்குது. அதுவும் புகையோடை சிரிக்குது..’

என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

எங்களுடைய தமிழ்ப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நானே எனக்குள் போட்டிருந்த கணக்கு தவறாகிவிட்ட புழுக்கம் என்னுள் வியாபிப்பதை உணர முடிந்தது.

தமிழ் ஆண்மகனானவன் பல தவறுகளைச் செய்யும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்னால், அவள் புகைப்பதை ஏன் தாங்க முடியவில்லை?

இதைத்தான் ‘ஆணாதிக்கம்’ என்கிறார்களோ?!

மரியாதைக்காவது பதிலுக்குச் சிரித்திருக்கலாம்.

மனம் குறுகுறுக்க, தலை குனிந்தவாறு உணவுத் தட்டுடன் மேசையொன்றில் அமர்ந்தேன்.

தன் பின்னர் சில நாட்களாக அவளைப்பற்றி எழுந்த எண்ணங்களும் சிந்தனைகளும் என்னையே குதறிக் கொண்டிருந்தன.

‘அவள் சிகரட் பிடித்தால் எனக்கென்ன? வலியச் சிரித்தவளுக்கு பதிலாக புன்னகைக்க முடியாத பண்பாடு துறந்த மனிதனாக எவ்வாறு மாறினேன்?!’

இப்படிப் பலவகையான குதறல்கள்.

அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

வேலை முடிந்து வஸ் நிலையத்தை நாடிச் சென்றபோது, அவளும் நின்றாள்.

எனக்குள் ஒருவகைக் குற்ற உணர்வு குறுகுறுக்க, அவளைத் தயக்கத்துடன் நோக்கினேன். மீண்டும் அதே புன்னகை.

"ஹலோ.."

"எனக்குப் பெயர் ராணி.."
‘டொச்’சில் கூறினாள்.

"நான் ராஜா.."
அதுவும் ‘டொச்’சில்தான்.

"ஓ... நீ அரசன்.. நான் அரசி.."
பலமாகச் சிரித்தாள். பதிலுக்குச் சிரித்துக்கொண்டேன்.

அவளது முகத்தில் சிறிது வாட்டம். கண்களில் சிறு கலக்கம். நெற்றியில் சுருளாக விழுந்து அலையாய அசைந்த கேசத்தை கையால் ஒதுக்கிவிட்டு, கைப்பையைத் திறந்து சிகரட் ஒன்றை உருவிப் பற்றவைத்துக் கொண்டாள்.

"என் பெற்றோர் இந்த அரசியை நாடு கடத்திவிட்டார்கள்..."

"என்ன..?"

"என்னை இந்த நாட்டுப் பெற்றோருக்கு ராணியாக்கிவிட்டார்கள்."

புரியாமல் பார்த்தேன்.

"நான் தத்துப்பிள்ளை."

வியப்புடன் பார்த்தேன்.

"நீ தமிழ் என்று நினைத்தேன்.."

"தழிழ்தான். என் பெற்றோர் தமிழ்தான். ஆனால் அவர்கள் ஜேர்மன் தம்பதிகளை எனக்கு பெற்றோர் ஆக்கிவிட்டார்கள். ராணி... அரசி என்று தெரியும். அதேபோல ராஜா.. அரசன் என்று தெரியும்.."

"பரவாயில்லை.. அதாவது தெரிந்து வைத்திருக்கிறாய்..."

"நிறைய அறியவேண்டும்.. இப்போது உன் அறிமுகம் கிடைத்திருக்கிறது. மேலும் நிறைய அறியவேண்டும்.. உன் மூலமாக..."

ஆர்வத்துடன் கூறினாள்.

அதன் பின்னர் அடிக்கடி என்னைத் தேடி வந்து உரையாடினாள். பார்வையில் குமரியானவள் பலவற்றை அறிவதில் குழந்தையானாள்.

"உன்னுடைய பெற்றோரைப் பார்த்திருக்கிறாயா?"

"படத்தில் பார்த்திருக்கிறேன். அதாவது இருபது வருடத்துக்கு முதல் எடுத்த படத்தில். அந்தப் படமும் இந்த ராணி என்ற பெயரும்தான் என்னோடு கூட வந்தவை.."

"ஓ..."

வெறுமையாகச் சிரித்தாள். கைப்பையை கரம் நாட, விரல்களில் மேலும் ஒரு சிகரட்.

அவள்மீது அன்பா? அனுதாபமா? ஏதோ ஒன்று என்னை அவள் வசம் ஈர்த்தது.

"ராணி! நீ சிகரட் புகைப்பதைப் பார்க்க எனக்குக் கஸ்டமாக இருக்கிறது.."

"ஏன்..?"

"எங்களுடைய பெண்கள் புகைக்கமாட்டார்கள்.."

"ஓ... வேறு..?"

"காதல்... கலியாணம்... குடும்பம் எல்லாம் ஒருவனோடுதான்.."

"ஓ... நோ... சுத்தப் பட்டிக்காட்டுத்தனம்.."

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? அதுதான் ஒழுக்கமான வாழ்க்கை. அத்துடன் நான் எம்மைப்பற்றி பெருமைப்படும் விசயமும்கூட."

அவள் சத்தம்போட்டுச் சிரித்தாள். கேலி செய்வது புரிந்தது. ஆத்திரம் எழுந்தது. அடக்கிக் கொண்டேன்.

"ராஜா... உங்கள் பெண்கள் ஒருவனோடே வாழலாம். ஆனால் பெற்ற பிள்ளையை இன்னொருவருக்குக் கொடுக்கலாம். அப்படித்தானே..?"

கோபத்துடன் கேட்டாள். அவள் வாழும் வாழ்க்கையால் தோன்றிய கேள்வி அது.

"அவர்களுக்கு என்ன கஸ்டமோ? என்ன பிரச்சினைகளோ?" என்று அவளது கொந்தளிப்பைத் தணிக்க முயன்றேன்.

"கஸ்டமும் பிரச்சினையும் வந்தால்... ஒழுக்கம் பண்பாடு எதுவுமே தேவையில்லையா? புருசன் மனைவியை மாற்றலாம். மனைவி புருசனை மாற்றலாம். தாய் பிள்ளையை மாற்றலாம். அப்படித்தானே?"

நான் வாயடைத்து நின்றேன்.

"உனக்குப் புரியுமா என்னுடைய நிலை? என்னால் எதையுமே ஒழுங்காக செய்ய முடியவில்லை. படிக்க முயற்சித்தால் என்னுடைய பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்ற சிந்தனை. என்னை ஏன் பிரித்தார்கள் என்ற சிந்தனை. அவர்களுக்கு நான்மட்டும்தானா பிள்ளை அல்லது வேறு பிள்ளைகளும் உள்ளார்களா என்ற சிந்தனை. அவர்களையாவது தங்களுடன் வைத்திருக்கிறார்களா என்ற சிந்தனை. அவர்கள் என்னை பிரியும் அளவுக்கு என்னில் ஏதாவது குறையோ என்ற சிந்தனை. இப்படி பற்பல சிந்தனைகள். யோசனைகள். இவற்றுக்கால் என் மனதை என்னால் ஒருநிலைப்படுத்த முடிவில்லை. ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. சுதந்திரமாக, சந்தோசமாக, நிம்மதியாக வாழ முடியவில்லை. நான் யார்... எங்கே எப்படிப் பிறந்தேன்... ஏன் இங்கே வந்தேன்... எல்லாமே குழப்பம்... குழப்பம்."

மனதைத் திறந்து கொட்டிவிட்டு, புகைந்து தீர்ந்த சிகரட் அடிக்கட்டையை தூர வீசினாள்.

அவளுக்காகப் பரிதாபப்படுவதா? பரிவு காட்டுவதா? புரியவில்லை. என்னைச் சோகம் கவ்விக்கொண்டது.

"ஆனால் ஒன்று... விரைவில் இலங்கைக்குப் போவேன். அவர்களைத் தேடிப் பிடிப்பேன். அவர்கள் என் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லவேண்டும். அப்போதுதான் எனது குழப்பங்களுக்கு எல்லாம் விடைகிடைக்கும் என்று நம்புகிறேன்..."

அவள் உறுதியுடன் கூறினாள்.

ஆறேழு மாதங்கள் கழிந்திருக்கும்.

"ராஜா..."
குதூகலத்தடன் ஓடி வந்தாள்.

"ராஜா... நாளை நான் இலங்கைக்குப் போகிறேன்.."

"என்ன?"

"என் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறேன்.."

"எப்படித் தேடுவாய்?"

"சகல வழிகளிலும்... ரீவி, பேப்பர் என்று எல்லாவற்றிலும் அவர்களின் படத்தை விளம்பரப்படுத்தி முயற்சிக்கப் போகிறேன்..."
நம்பிக்கையோடு கூறினாள்.

"ராணி! உன் முயற்சி வெற்றிபெற நானும் கடவுளை மன்றாடுவேன்..."

அவளது கண்களில் சிறுகலக்கம்.

"மிகவும் நன்றி. வெற்றியோடு உன்னைச் சந்திப்பேன்."

நான் அவள் வந்து கூறப் போகும் நல்ல செய்திக்காக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அந்தப் பேரிடி என்னைத் தாக்கியது.

இயற்கையின் கோரமுகம் காட்ட ஆழிக்கூத்தாக வடிவெடுத்து ஆசிய நாடுகளில் அவலம் விளைத்ததை தொலைக்காட்சிகள் கண்முன்னே காட்டின. குழந்தைகள், பெண்கள், முதியவரென பலியெடுத்த ‘சுனாமி’ கடற்கொந்தளிப்பின் அனர்த்தத்தினால், மனம் பேதலித்து சோகம் மனதைப் பாரமாக்க தொலைக்காட்சி முன் மணித்தியாலங்கள் கழிவது தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

இப்படி ஒரு அழிவா? இனம் மதம் மொழி என்ற பேதமின்றி மக்களைக் காவு கொண்ட கடலலைக்குள் இத்தனை கொடூரமா?

நினைத்துப் பார்க்கையில் திகைப்பாயிருந்தது.

நிலையில்லா உலகில் நிலைதடுமாறும் மனித குலத்துக்கு இயற்கை அவ்வப்போது புகட்டும் பாடமா? புரியவில்லை.

தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் இருந்து ஜேர்மன் தொலைக்காட்சி அலைவரிசைக்கு மாற்றினேன்.

இலங்கைக்கு உல்லாசப்பயணிகளாகச் சென்று ‘சுனாமி’யில் உயிர்துறந்த சில ஜேர்மனியரின் அடையாள அட்டைகளைக் காண்மித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது... அந்த அடையாள அட்டையில்... அதிலே புன்னகை புரிந்தவாறு கருவிழிகள் பளிச்சிட இருக்கும் கரிய மங்கை... ஓ... அது ராணி அல்லவா? ராணி... ராணியேதான்.

அதிர்ச்சியால் நிலைகுலைந்தவனாய் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பெற்றோரைத் தேடச் சென்றவளையும் கடலலை தன் கோரப் பிடிக்குள் இழுத்துக் கொண்டதா?

என் கண்களில் பெருக்கெடுத்த நீர்த்துளிகளில் தொலைக்காட்சி மங்கலானது.


(பிரசுரம்: பூவரசு - 15வது ஆண்டுமலர் -தை, மாசி 2005)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!