செவ்வாய், 7 ஜூலை, 2015

தனக்கென வேறு

மாலைநேரம். கீழ்வானத்துச் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் யன்னல் கண்ணாடிகளால் பொசிந்து தரையை அலங்கரித்த செங்கம்பள விரிப்பில் மஞ்சள் கோலமிட்டன.

தொலைக்காட்சியில் திருமணவிழா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாலனும் அவனது மனைவி பிள்ளைகளும். நண்பன் பாலனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் ஆறு அல்லது ஏழு வயதுக்குள்தான்.

கடை ஒன்றினுள் சந்தித்தான் பாலன்.


"கனகாலம் வீட்டுக்கு வரேலை. எங்களை எல்லாம் மறந்து போனாய்!" என்று குற்றம் சாட்டினான்.

"எனக்கு லீவு எண்டால் உனக்கு வேலை. உனக்கு லீவு எண்டால் எனக்கு வேலை!" என்று அலுத்துக்கொண்டான் கணேஸ்.

"மனமிருந்தால் இடமுண்டு. சாக்குப்போக்குச் சொல்லாமல் வாடா" என்று உரிமையுடன் அழைத்தான்.

அன்று பாலன் வீட்டிற்குப் போகவேண்டும் போலிருந்தது. மனைவி விமலாவையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தான்.

"வாடாப்பா வா..."
வாயெல்லாம் பல்லாக வரவேற்றான் பாலன்.

"என்ன எந்த நேரமும் படம்தானா?" என்று ரீவியைப் பார்த்தவாறு கேட்டான் கணேஸ். 
"படம் இல்லை. எங்கடை கலியாணவீடு. கனகாலமாய் போட்டுப்பாக்காமல் கொப்பி பழுதாப்போச்சு."
"எல்லாத்துக்கும் ஒரு காலம் இருக்குதானே? குறிப்பிட்ட காலம் வந்தால் வீடியோக் கொப்பியளும் பழுதாகும்தான். முழுக்கப் பழுதாக முந்தி வேறையொரு புதுக் கொப்பியிலை அடிச்சு வை."

"ஊரை ஊர்ச்சனங்களைப் பார்க்கேக்கை எவ்வளவு ஆசையாய் இருக்கு. இப்ப உதிலை எத்தினை உயிரோடை இருக்குதோ தெரியேலை..."
"ஊரிலை சிறப்பாய்த்தான் கலியாணவீடு செய்திருக்கிறாய்!"

பாலனின் மனைவி தேனீர் கொண்டு வந்தாள்.

"எட்டு வருசம் இருக்குமா?"
"பத்து வருசம். நேற்று நடந்தமாதிரி இருக்குது!"
"மலரும் நினைவுகளாக்கும். என்ன சுலோக்குட்டி ஏன் அழுகிறாள்?" என்று பாலனின் மகள் சுலோசனாவைச் சுட்டிக்காட்டினான் கணேஸ்.

"அதையேன் கேக்கிறாய்? கலியாணவீட்டுக் கொப்பியிலை தன்னைக் காணேலையாம். ஏன் தன்னைவிட்டுப்போட்டுப் படம் பிடிச்சவை எண்டு கேட்டு ஒரே அழுகை" என்ற பாலனுடன் சேர்ந்து சிரித்தான் கணேஸ்.

திருமணத்தை நடத்திவைத்த குருக்கள் காவி வேட்டியும் தாடி மீசையுமாக ஒரு முனிவரைப்போலக் காணப்பட்டார்.

"என்னடா... இவர் குருக்களா? முனிவரா?"
"இவர் ஊரிலை பிரபலமானவர். இவருக்கு எத்தினை வயதிருக்கும் எண்டு சொல்லு பாப்பம்?"
"ஐம்பது...?"
"ஓமோம்... அப்ப ஐம்பதெண்டால் இந்தப் பத்து வருசத்திலை அறுபது இருக்குமெல்லே?"
"அதுக்கு என்னடா இப்ப?"
"இந்த அறுபது வயசிலை பிள்ளைப் பெத்திருக்கிறாரடா..."

நம்பாமல் பார்த்தான். இந்த வயதில் பிள்ளை பெறுவது சாத்தியமா?
"நம்படா. மூண்டு வருசத்துக்கு முந்தி இவற்றை மனுசி செத்துப்போச்சு! போனவருசம் ஒரு பதினெட்டு வயசுப் பெட்டையைக் கட்டி இப்ப ஒரு பொம்பிளைப் பிள்ளை பிறந்திருக்கு" என்று வியப்புடன் கூறினான் பாலன்.

கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் சற்று யோசித்துப் பார்த்தபொழுது இதிலென்ன தப்பென்று தோன்றியது. எத்தனையோ மனிதர்கள் கட்டிய மனைவி உள்ளபோதே கண்டநிண்ட இடங்களுக்கெல்லாம் அலையும் வேளையில் முதல் மனைவியை இழந்த பின்புதானே இவர் மறுமணம் செய்திருக்கிறார்.

"இப்பிடியும் ஒரு ஐயர் இருப்பாரே? இந்த வயசிலை இவருக்கு இப்பிடி ஒரு ஆசை தேவையே?" என்ற விமலாவை முறைத்தான் கணேஸ்.
"இதிலை என்ன தப்பு? ஐயருக்கு இந்த வயசிலை ஒரு துணை தேவைப்பட்டிருக்கும். தேடிக்கொண்டார். ஒரு மனைவியை இழந்த கணவனோ, ஒரு கணவனை இழந்த மனைவியோ வயசான காலத்திலை மற்றவையின்ரை ஆதரவை எதிர்பார்த்துக் கஸ்டப்படுறது என்ன நியாயம்?"

"நீங்கள் சொல்லுறது நல்லாய்த்தான் இருக்கு.... இதையே ஒரு பெண் செய்தால் இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா?"
"ஏற்றுக் கொள்ளும். பணக்கார வர்க்கத்திலையோ அல்லது பாட்டாளி வர்க்கத்திலையோ இதெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கு. இதுகள் பெரிசுபடுத்தப்படேலை. ஆனால் நடுத்தர வர்க்கத்திலைதான் இப்பிடியான விசயங்கள் பூதாகாரமாய் விசுவரூபம் எடுக்கிது" என்ற கணேஸின் கூற்றில் நியாயமிருப்பதாகப்பட்டது பாலனுக்கு.

என்றாலும் ஒரு விசயம் மனதை உறுத்தியது.
"அதுக்காக ஒரு வயசான மனுசனுக்கு ஒரு இளம் பெண்தான் துணையாக வரவேணுமா? ஒரு வயசான பெண்ணைத் துணையாக ஏற்றுக்கொண்டால் என்னவாம்? இன்னும் ரண்டு மூண்டு வருசத்திலை ஐயர் செத்தால், அந்த இளம் பெண்ணின்ரையும் குழந்தையின்ரையும் எதிர்காலம் நாசமாக வேண்டியதுதான்."
"உண்மைதான். ஆனால் ஒரு மனுசனிட்டை எல்லா நல்ல குணங்களையும் எதிர்பார்க்க முடியாது. ஐயர் முன் மாதிரியாய் இருக்கவேணும் எண்டு எப்பிடி எதிர்பார்க்கலாம்?! சிலவேளை ஒரு இளம் துணையாலைதான் தன்ரை முதுமையை மறக்கமுடியும் எண்டு நினைச்சிருக்கலாம். அதேமாதிரி பொருளாதாரரீதியிலும் அவர்களின்ரை பின்னடிக்கு ஏதாலும் ஒழுங்கு செய்திருக்கலாம்..."

"நான் கேள்விப்பட்டது வேறை."
"என்ன அது?"
"மனைவியை இழந்த குருக்கள்மார் சமயசம்பந்தமான கிரியைகளைச் செய்ய முடியாதாம். அதுக்காகத்தான் கலியாணம் கட்டினவராம்!"
"அப்பிடி வா வழிக்கு. மனைவியை இழந்ததாலை தொழில் இல்லை. அதனால் வருமானம் இல்லை. மறுபுறம் முதுமையும் தனிமையும். இந்த நிலமையிலை ஒரு துணையைத் தேடினதிலை என்ன பிழை?!" என்று நிதானமாகக் கூறினான் கணேஸ்.

என்னதான் கணேஸ் அப்படிக் கூறினாலும், பாலனுக்கு குருக்கள் அறுபது வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தையானதை நினைக்கும்போது அதிசயமாக இருந்தது.

தினமும் நீராடிச் சுத்தமான ஆடைகளை அணிந்து நேரம் தவறாமல் மந்திரங்களை உச்சாடனம் செய்வதுதான் அவரது இளமைக்குக் காரணமோ?
இருக்கலாம்.

இளமை என்பது உடலைப் பொறுத்ததல்ல. மனிதனின் செயற்பாடுகளைப் பொறுத்தது. செயற்பாடுகளின் மூலப் பொருள் மனம். எனவே மனம் என்ற அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில் வியப்பென்ன?      

முதற்தடவையாக எண்ணினான் பாலன்.
++++++++

கரத்தின் மையத்தில் உள்ள அழகிய பூங்கா. குளிர்காலத்தில் வாடிவதங்கி அழகிழந்து சுருங்கிப் போயிருந்த பூங்கா, சூரியனைக் கண்டதும் பசுமைகளால் வளைவுகள் அமைத்துக் குதூகலத்துடன் வரவேற்புக் கூறுவதுபோல் செழுமையாகக் காட்சியளித்தது.

சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என எங்கும் கலகலப்பு.

அருகே ஓடுகின்ற சிற்றருவியில் பாதங்களை அலம்பியவாறு இயற்கை அன்னையின் விநோதத் தழுவலில் தம்மை மறந்திருந்தனர் சிலர்.

ஆங்காங்கே பல காதல்சோடிகள் கட்டிப் புரள்வதும் இதழ் சேருவதுமாகக் கிளுகிளுப்பை ஊட்ட, சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு சோடி, பாலனின் கவனத்தைக் கவர்ந்தனர்.

தலை நரைத்த வயதான தம்பதிகள். ஒருவர் கரத்தை மற்றவர் பற்றியபடி ஏதோ தமக்குள் கதைப்பதும் தோளோடு தோள் சேர்த்து உரத்த குரலில் சிரிப்பதுமாக அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு அறுபது வயதுக்குமேல் இருக்கும். எனினும் இளைஞர்களுக்குத் தாம் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இருந்தது அவர்களது செய்கை. முதலில் பார்த்தபோது அவர்களது செய்கை சிரிப்பை மூட்டியது.

மீண்டும் நோக்கியபோது அதில் என்னவோ பொதிந்திருப்பதாகத் தென்பட்டது. சற்றுநேரம் கவனித்தபோது அதில் புனிதம் தெரிந்தது. அந்தப் புனிதத்தில் அன்பு ஒன்றே ஜீவனாகப் பிரகாசித்தது.

அவர்களில் இளைஞர்களைப்போல் கவர்ச்சி இல்லை. தோற்றத்தில் கௌரவமான தன்மை தெரிந்தது. செய்கைகளில் அவர்கள் இளைஞராயினர். 

இப்படியொரு வயதான சோடி எமது தாயகத்தில் இருந்தால்- ஏன் இந்நாட்டில் தமிழருள் இருந்தால்- அதுவும் இம்மாதிரியான பொது இடத்தில் தம்மை மறந்தநிலையில் இருந்தால்- எத்தனையோ பேரின் கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகி அவமானப்பட்டிருப்பார்கள். அந்த அவமானங்களுக்குப் பயந்தே தமக்குத்தாமே கட்டுப்பாடுகளை விதித்தவர்களாய், தமது சுய உணர்வுகளையும் ஆசாபாசங்களையும் அமுக்கியவர்களாய் மனதிற்குள்ளேயே மறுகுவார்கள்.
ஆனால் இங்கே....

இந்தத் தம்பதிகளைப்போல் எத்தனையோ பேர் வீதிகளிலும் பூங்காக்களிலும் கடைகளிலுமாக....!
தினசரி பத்திரிகைகளைப் புரட்டினால், ‘ஐம்பது வயது மாது நல்ல துணையைத் தேடுகிறாள், எழுபது வயதானவர் நல்ல சிநேகிதியையோ தகுந்த துணையையோ தேடுகிறார்’ என்ற விளம்பரங்கள் பக்கம் பக்கமாக...!!

வீதிகளில் இறங்கினால், கிழவர்களை விளிக்கும் கிழவிகளின், ‘இளைஞனே... இளைஞனே…' என்ற ஒலிகள்…!!

இளவயதில் வாழ்வின் வரம்புகளை மீறிப் பட்டாம்பூச்சிகளாய்ச் சிறகடித்தவர்களுக்கு வயதாகத்தான் மனித மனங்களின் தேவையும் அருகாமையும் எவ்வளவு அவசியமானவை என்ற உண்மை புரிய ஆரம்பிக்கிறது. அதற்காக அவர்கள் தொலைந்துபோனவைகளைத் தேடாமல் வருவனவற்றை வாஞ்சையோடு வரவேற்று அனுபவிக்கும் செய்கை பாலனைப் பொறுத்தவரையில் ஒரு படிப்பினையாகத் தோன்றியது.

மனிதமனங்களின் பரிமாற்றத்தால் ஏற்படும் மனிதநேயத்தால் அந்த வயோதிபர்களின் செயற்பாடுகளில் தோற்றமாகும் இளமையான உணர்வுகளை அவதானித்தவாறே வீதியை நோட்டமிட்டவனின் பார்வையில் கணேஸ் தென்பட்டான்.

"கணேஸ்...." என்று அழைத்தவாறே வீதியை நோக்கி ஓடினான் பாலன்.

கணேஸின் முகம் வழமையான மலர்ச்சியின்றி இருண்டிருந்தது.

"என்னடா? என்ன கோலம் இது...? வீட்டிலை ஏதாலும் பிரச்சினையே?"
"வீட்டிலை இல்லை. ஊரிலை. எல்லாம் என்ரை அப்பாவாலை...!"
வெறுப்புடன் கூறினான் கணேஸ்.

"அப்பாவுக்கு என்ன?" என்று பதட்டத்துடன் கேட்டான் பாலன்.
"அவருக்கென்ன.... பிள்ளை இல்லாத வீட்டிலை துள்ளிக்குதிச்சுதாம் கிழம்.... இந்த வயசிலை ஒரு கொழுப்பு. மண்டையைப் போடுற வயசிலை ஒருத்தியைக் கலியாணம் கட்டிக்கொண்டு கூத்தடிக்கிறாராம்...!" என்று சினந்தவனை வியப்புடன் பார்த்தான் பாலன்.

‘அன்றைக்குக் குருக்கள் செய்தது நியாயமென்று வாதிட்ட கணேஸா இப்படி வெறுப்பை உமிழ்கிறான்?!’

"ஏன்டா கணேஸ், இதிலை என்ன தப்பு? ஊரிலை ஆள் உதவி இல்லாமைக் கஸ்டப்படாமை இப்பிடி ஒரு துணையைத் தேடுறது என்ன தவறு? நீகூட அண்டைக்குக் குருக்கள் செய்தது நியாயமெண்டாய்.... இப்ப...?"
"அது குருக்கள்.... இது என்ரை அப்பா.... நாளைக்கு ஊருக்குப் போனால் எனக்கெண்டு வீடு, வளவு, காணி இருக்கெண்டு நினைச்சன். இப்ப அதுகளைப் பங்குபோட ஒருத்தி வந்திட்டாள்.... இதை நான் விடமாட்டன்.... சொத்துக்கு ஆசைப்பட்டுத்தானை இந்த வயசான கிழவனைக் கட்டினவள்..." என்று ஆக்ரோசமாகக் கூறியவனைப் பார்க்க வெறுப்பாக இருந்தது.

‘என்ன மனிதர்கள் இவர்கள்? தனக்கென வந்ததும் தடம் புரள்கிறார்களே?
வயதானவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் நசித்து, அவர்களை முடமாக்கி முடங்க வைக்க, எமது சமுதாயத்தின் பொருளாதாரத்தை ஒட்டிய சுயநலம்தான் முக்கிய காரணமோ?!’

(பிரசுரம்: பூவரசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!