ஞாயிறு, 10 மார்ச், 2013

அவரும் இவரும்..!

ந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன்.

தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார்.

வரப்போகும் பொழுதுகள் மனக்கண்ணிலே வந்து நின்று பயமுறுத்த, எதுவுமே சிந்திக்கத் திராணியற்றவராய் மூளையே விறைத்து மரத்தாற்போன்ற உணர்வுடன் முன்னால் நீண்டு விரிந்துசெல்லும் வீதியைப் பார்த்தார்.

வாகனங்கள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. வீதியின் அருகால் பரபரப்பாகச் செல்லும் மக்கள் கூட்டம் கைகளில் பொருட்கள் நிறைந்த 'பிளாஸ்ரிக்' பைகளுடன் கலகலத்தவாறு போய்க்கொண்டிருந்தார்கள். நத்தார் கொண்டாட்டங்களுக்கான கொள்முதல்களுடன் அந்த மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் சென்றுகொண்டிருக்க, தான்மட்டும் இந்த உலகத்திலிருந்தே தனிமைப்பட்டுச் சோகச்சுமைகளால் நசுக்கப்படுவதான உணர்வுடன் தவித்தார். அந்த உணர்வு அன்ரனிமீது ஆத்திரமாக எழ, மீண்டும் உள்ளே சென்று, அவனது வீட்டுக் கதவைத் தட்டி, பலவந்தமாக அன்ரனியை வெளியே இழுத்து, கன்னத்தில் ஓங்கி இரண்டு அறை கொடுத்து, 'நீயும் ஒரு மனுசனா... நீ வில்லியத்ததுக்குத்தான் பிறந்தனியா...' என்று கேட்கவேண்டும்போல ஒரு வெறி உருவானது.

மறுகணம்.... மனச்சாட்சி விழித்துக்கொண்டு விளைவுகளைப் படம்பிடித்துக் காட்டி வெருட்டிப் பயமுறுத்தியது.

'எப்படிச் சமாளிக்கப் போகிறேன்... இன்னும் ஒரு கிழமை... அந்த ஒரு கிழமைக்கிடையில் சமாளித்தாக வேண்டும்..."
சிந்திக்க முடியவில்லை.

சிந்தையில் எந்தவொரு வழியோ, நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய ஒளியோ தென்படவில்லை.
எல்லாமே சூனியமாகத் தோன்றியது.

அந்தச் சூனியத்துக்கான வித்து பெரிதல்ல. பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் பெரும்பாலும் இடம்பெறும் அம்சம்தான். ஆனால் அந்த வித்து ஆலகால விசமாகுமளவுக்கு வியூகம் வகுத்ததற்குத் தனது தீர்க்கமற்ற, திட்டமற்ற, பொறுப்பற்ற தன்மைதான் காரணம் என்பதை றொபின்சன் புரிந்துகொள்வதற்குள் காலம் கடந்து, பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துவிட்டதென்பதுதான் உண்மை.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்துடன் கூடி வந்த பழக்கங்களுள் ஒன்றான ஏலச்சீட்டுக்கு அந்த நகரில் பிரபலமானவர் சுப்பிரமணியம் அண்ணர். அவரிடம் சில வருடங்களுக்கு முன்னர் இருபத்தையாயிரம் மார்க்குக்கு சீட்டுப் போட்டார் றொபின்சன். மாதம் ஆயிரம் மார்க் கட்ட வேண்டும். மொத்தமாக இருபத்தைந்து பேரின் பங்களிப்பில் இருபத்தைந்து மாதம் அதன் ஆயுட்காலம்.

இரண்டாவது சீட்டை ஏறக்குறைய பத்தாயிரம் மார்க் ஏலத்தில் கழித்து எடுத்தார் றொபின்சன்.

ஜேர்மனிக்கு வந்ததிலிருந்து ஒரேயடியாக அவ்வளவு பணத்தை கையில் வைத்தறியாத றொபின்சனுக்கும் மனைவிக்கும் தலைகால் புரியவில்லை.
பணம் பல தேவைகளை ஏற்படுத்தியது.

தீர்க்கமான திட்டங்கள் எதுவும் இல்லாமல் அந்தச் சீட்டுக் காசு சிட்டாகப் பறந்து, தேவையில்லாத ஆடம்பரப் பொருட்களாக வீட்டை அலங்கரித்தன.

மாதாமாதம் சீட்டுக் கட்டவேண்டும் என்ற எண்ணம் காசெல்லாம் முடிந்த பின்னரே முன்னுக்கு வந்தது.

சுப்பிரமணியம் அண்ணர் காசு விசயத்தில் ஈவிரக்கம் பார்க்கமாட்டார் என்பது அந்த நகரத்துத் தமிழர் அனைவருக்குமே தெரியும்.

சீட்டுக் காசு கட்ட வட்டிக்குக் கடன் வாங்க ஆரம்பித்து, வட்டி முதலுடன் போட்டிபோட்டு வளர்ந்து, தற்போது குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றப் படாதபாடுதலுக்குட்பட்டு, நிம்மதியும் அமைதியும் தூர விலகிவிட்டன.

'கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சும்மாவா கூறினார்கள்?!
சீட்டுக்காரன் ஒருபுறம்.... சில்லறைக் கடன்காரர்கள் மறுபுறம்.... குடும்பத்தின் தேவைகள் இன்னொருபுறம்...

இவற்றுக்கெல்லாம் ஒரேயொரு வழி அன்ரனியிடம் உதவி கேட்பதுதான் சிறந்ததென்ற முடிவில், அன்ரனியின் வீடு தேடிச்சென்று, அங்கும் அன்ரனி கைவிரித்த நிலையில் தற்போது வழிதெரியாதவராக றொபின்சன் அந்த வாசற்படியில் நின்றிருந்தார்.

அன்ரனியின் தந்தையார் வில்லியம் தாயகத்தில் அந்தக் கிராமத்தில் வள்ளல்தன்மைக்கு பிரசித்தமானவர்.
எந்தப் பொதுக் காரியமானாலும் மனமுவந்து உதவிசெய்வார். கஸ்டப்பட்டவர்கள் அவரை நாடிச் சென்றால் ஒருவேளை உணவாவது கொடுத்தனுப்பத் தவறமாட்டார்.

ஆனால்...
அந்த வில்லியத்துக்குப் பிறந்தவனா இந்த அன்ரனி...?!

பெற்றோரின் அங்க அடையாளங்கள் பிள்ளைகளுக்குச் சென்றடைவதுபோல, அவர்களின் குண இயல்புகளும் பிள்ளைகளுக்குச் சென்றடையும் என்பார்களே?! மொத்தத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளின் உருவத்தில் வாழ்வார்கள் என்ற நினைப்பில் அவனது வீடு தேடிச் சென்ற றொபின்சனுக்கு, அன்ரனியின் போக்கு 'வில்லியத்தின் மகன்தானா அவன்?' என எண்ணவைத்தது என்னவோ உண்மைதான்.

அன்று....
மார்கழி இருபத்தினான்காம் திகதி.
இரவு பதினொரு மணியிருக்கும்.

அது சென் பீற்றர்ஸ் தேவாலயம்.

யேசு பிரானின் பிறப்பையொட்டி அந்த இரவு நேரத்தில் ஆரம்பமாகும் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவென அங்கே திரண்டிருந்த பெரும்பாலான ஜேர்மன் மக்களுடன் வேறு பல வெளிநாட்டவர்களும் கூடியிருந்தார்கள்.
றொபின்சனும் தனது குடும்பத்துடன் போயிருந்தார்.

அன்ரனியும் தனது குடும்பத்தினருடன் அங்கு வருவான் என்று தெரியும்.
அதனால் அவனுடனோ அல்லது அவனது குடும்பத்தினருடனோ எவரும் உரையாடக் கூடாது எனத் தனது குடும்பத்தினருக்கு ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

அன்று அன்ரனி உதவிசெய்யாத ஆத்திரம்....!
எனினும், யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாரோ... அவன் வந்திருக்கிறானா என அறிய அலைபாயும் கண்களுக்குத் தடைபோட அவரால் முடியவில்லை.

அன்ரனியை அங்கே காணவில்லை.
அவனது மனைவியும் பிள்ளைகளும்தான் அங்கே நின்றிருந்தார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெறும் பிரார்த்தனைகளையே தவறவிடாத அன்ரனி, இன்று ஏன் வரவில்லை?!

ச்சே... உதவி செய்யாமல் உசாதீனம் செய்தவனின் நினைப்பு இப்ப எதுக்கு?!

குரங்காய்த் தாவிய மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு பிரார்த்தனையில் கவனம் செலுத்தினார்.

மணி நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. 

பாலனின் பிறப்பை ஒட்டிய பிரார்த்தனைகள் முடிந்து மக்கள் 'கலகல'ப்பாக தேவாலயத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
தேவாலயத்தின் வாசற்புறம் பனிப்புகாரிலும் வெளியே கப்பியிருந்த இருளிலும் மங்கலாகத் தெரிந்தது.

அங்கே வாசலின் பெரிய மரக்கதவு நிலைக்கு மேலே ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழின் ஒளியின் கீழே ஒரு உருவம் முழந்தாழிட்டு மண்டியிட்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.

பரபரப்பாக வெளியேறிக் கொண்டிருந்த பலரும் அந்த உருவத்தின் அருகே சென்றதையும் ஒருகணம் தாமதித்து நிற்பதையும், அவ்வுருவம் இரு கைகளாலும் ஏந்தியிருந்த பாத்திரத்தில் பணம் போடுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

'மனித குலத்தின் பாவங்களுக்காக இரத்தம் சிந்திய யேசுபிரானின் பிறப்பைக் கொண்டாடும் இந்தவேளையில், அதுவும் தேவாலய வாசலிலே குளிரில் முழந்தாழிட்டுப் பிச்சை எடுப்பவன் யாராக இருக்கும்?' என்று அறியும் ஆவலுடன் அவ்வுருவத்தை நெருங்கினார் றொபின்சன்.

காதுவரை மூடியிருந்த தொப்பிக்குக் கீழாகத் தெரிந்த அந்த முகத்தைக் கண்டு அதிர்ந்துவிட்டார்.

அங்கே முழந்தாழிட்டப் பிச்சையேற்பது அன்ரனியேதான்...!
அவனது கழுத்தில் ஜேர்மன் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கடதாசி மட்டையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.

"தினம் தினம் பசியாலும் பட்டினியாலும் நோயாலும் இரத்தம் சிந்தாமல் அழிந்துகொண்டிருக்கிற எனது தாய்நாட்டு மக்களான ஈழத் தமிழருக்கு உதவுவீர்களா?
ஈழத் தமிழனாய்ப் பிறந்த ஒரே நிகழ்வுக்காக மரணத்துக்குள் வாழ்கின்ற என் நாட்டுப் பிஞ்சுகளுக்கு ஒருவேளைக் கஞ்சிக்காவது உதவுவீர்களா?....."
அதற்கு மேலும் றொபின்சனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.

கண்கள் குளமாகின.
கண்களில் பெருக்கெடுத்த நீர்த் திவலையினூடே அங்கே அன்ரனி தெரியவில்லை.
வில்லியம் தெரிந்தார்!

*****
(பிரசுரம்: பூவரசு கார்த்திகை- மார்கழி 1999)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!