ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆரம்பம்

வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டதுபோன்ற பிரமை சந்திரனை விழுங்கிய அமாவாசைகளாய் பௌர்ணமியை உதறித் தள்ளிவிடும்போல் இருந்தது. விதியின் கொடியகரங்கள் எந்த உருவத்தில் எதைச்செய்யும் என்று எவருக்குத் தெரியும்?அந்த வரிசையில் பரிமளா விதியின் வஞ்சகத்திற்கு இரையாகிவிட்டாள்.

அடிவயிற்றில் ஏதோ ஒரு பிரளயம். இன்னும் சிறிதுநேரத்தில் பிரளயம் எரிமலையாகிச் சுவாசக்குழாய்கள் வழியாகக்
குடல்களை எல்லாம் பிய்த்துப் பிடுங்கிக்கொண்டு வெளியே வரப்போவது போன்ற உணர்வு ஏற்பட, ஓட்டமும் நடையுமாக வீட்டின் பின்புறமிருந்த குப்பைக் கிடங்கை அடைந்தாள்.

முற்றத்தில் முடங்கிக்கிடந்த சொறிநாய் வாலை ஆட்டியவாறு பரிமளாவின் பின்னால் சென்றது. அதைத் தவிர அப்போது அந்த வீட்டில் எவரும் இல்லை. அவரவர் வேலையாக வெளியே சென்றவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் வீடு திரும்பிவிடுவார்கள்.

ஊய்க்.... ஊய்க்.... அணையுடைத்த கட்டாறு வெள்ளம்போல வாய் வழியாகப் பாய்கிறது வாந்தி. பீறிட்டெழும் சத்தத்தைச் சிரமப்பட்டு அடக்க முயல்கிறாள். அவளையும் மீறிச் சிறுசத்தம் வெளிக்கிளம்பியது அந்தச் சத்தத்தைக் கேட்டால் உற்றம் சுற்றம் எல்லாம் அவளை வாந்தியாக்கிவிடும்.

மூச்சு வாங்கியது. முணகத்தான் முடிந்தது. நெஞ்சம் எல்லாம் எரிந்தது. தட்டுத்தடுமாறி வீட்டின் வலப்புறம் அமைந்த ஓலைக் கொட்டிலுக்குள் நுழைந்தாள். அதுதான் அவர்களின் சமையலறை.

நன்றாக இருட்டிவிட்டது. வீட்டில் ஒருவர்கூட இல்லை. முற்றத்தில் அந்தச் சொறிநாய் பசியாலோ அல்லது பரிமளாவின் நிலை அறிந்த பரிதாபத்தாலோ முடங்கிக்கிடந்தது.

மூலையில் இருந்தது மண்ணெண்ணைக் குப்பி விளக்கு. கொளுத்துவதற்கு மனம் இல்லை. வாழ்க்கையே இருண்டுபோன பிறகு விளக்கென்ன வேண்டிக்கிடக்கிறது என்ற விரக்தி.

தட்டுத்தடுமாறி நடந்துசென்று குந்தில் வரிசையாகக் கிடந்த கறள் பிடித்த தகர 'டப்பா'க்களைத் துளாவி இரண்டு உப்புக்கட்டிகளை எடுத்து வாயில்போட்டு உமிழ்ந்தாள். வாந்தியைக் கட்டுப்படுத்தும் முயற்சி.
***

ரிமளா.... செல்லப்பரின் மூத்த மகள். அவளை அடுத்து பெயர் விளங்க ஒரு "பெடியன்" பிறப்பான்.... பிறப்பான் என்று எல்லாம் பெண்களாக, மொத்தம் ஐந்து பெண் பிள்ளைகளுடன் வானம் பார்த்த பூமியை நம்பி ஏரையும் கடகங்களையும் உழவாரங்களையும் ஆயதங்களாக்கி.... கவசங்களாக்கி வயலில் களம் அமைத்து வாழ்வதற்காகப் போராடும் குடும்பம்.

ஏதோ மானத்தை மறைக்கவாவது துணி கிடைக்கிறதே என்ற திருப்தி. வயிறாரச் சாப்பிடாவிட்டாலும் பட்டினி இல்லாத நிம்மதி. மொத்தத்தில் உழைப்பினால் வறுமையை விரட்டுவதிலேயே காலத்தைக் கரைத்துவிட்டு, அதற்கு மேலாக எந்தவிதமான சுகபோகங்களையும் கனவில்கூட நினைத்துப் பார்க்கமுடியாத குடும்பத்தில் மூத்தவளான பரிமளாவிற்குத் தனியாக ஒரு போராட்டம் ஆரம்பமாகிவிட்டது.

ஏட்டில் பாட்டில் பெண்களை உயர்வாக எழுதலாம். விவாதமேடைகளில் உயர்த்திப் பேசலாம். ஆனால் நடைமுறை என்று வந்துவிட்டால் அழகு, அதைவிடப் பணம்- இவற்றையல்லவா பெண்ணிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். அதுவும் பணம் என்று வந்தவுடன் வாய்திறக்கும் பிணங்களாய, பெண் வீட்டில் பாட்டி பேத்தி காலந்தொட்டு என்ன குற்றம் குறை உள்ளதென நுணுக்குக் காட்டிகளாய் ஆராய்ந்து, அதற்கு ஏற்றாற்போல் அல்லவா பேரம் பேசுகிறார்கள்?!

எவர் என்னதான் சீதனம் ஒழிக என்று உரத்துக் கத்தினாலும் இது ஒழியப்போவது இல்லை. அப்படியானால் இதை ஒழிக்க, ஆண்களைப்போன்று பெண்களும் சரிநிகரான உரிமைகளை அனுபவிக்க என்னதான் வழி?!

சட்டங்கள்மூலம்தான் இதை நிவர்த்திக்க முடியும். சட்டங்கள் இருந்தால்மட்டும் போதாது. நேர்மையான அரசு, சுரண்டலற்ற அதிகாரிகள்.... தீரமுள்ள பெண்கள் சமுதாயம்.... இப்படி ஒரு நடைமுறை ஏற்படச் சாத்தியமா? ஆண்களின் தொகையைப்போல அல்லது அதற்கும் மேலாக வாழும் பெண்களால்தான் இப்படியான நடைமுறைச் சாத்தியங்கள் ஏற்பட வழியுண்டு.

தெருவில் பசு மாடொன்று "அம்மா" என்று அலறுகிறது. கூடவே காளை மாடுகளின் சலங்கைச் சத்தம். தோட்டத்திற்குச் சென்ற இரண்டாமவள்.... தாய் தகப்பனுடன் ஒத்தாசையாகச் சென்ற மூன்றாவது.... நாலாவதும் ஐந்தாவதும் எங்கேயாவது பக்கத்து வீடுகளில் சகபெண்களுடன் படித்துக்கொண்டிருக்கும்.

ஒவ்வொருவராக எல்லோரும் வந்துவிட்டார்கள். இரண்டு மூன்று நாட்களாகவே பரிமளாவில் தெரியும் மாற்றம் பெற்றவளுக்குப் புரியாமல் இல்லை. வயது வந்துவிட்டது. கல்யாண ஆசை வந்துவிட்டது என்பதுதான் அவளின் கணிப்பு. நேரடியாக மகளிடம் விசயத்தைக் கேட்கப் பயம்.

தற்செயலாகக் கேட்டால், பரிமளாவும் தயக்கம் இல்லாமல் "திருமணம் செய்து வை" என்று கூறிவிட்டால்.... நடக்கக்கூடிய காரியமா? அன்றாடக் காய்ச்சிகளான அவர்களிடம் பெண் கேட்க எவர் முன்வருவார்கள்? ஏதோ நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம்.

இந்தச் சமுதாயத்தின் விதிவிலக்காக எவனாவது சீதனம் வேண்டாம் என்று வரலாம். அப்படி வந்தாலும் பெண்ணின் அழகுக்காக அல்லது அவள் செய்யும் தொழிலுக்காக வருவான். எல்லாவற்றிற்கும் விதி வேண்டும் என்ற ஆதங்கம்.

குரக்கன் பிட்டும் பசளிக் கீரைக்கறியும் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் உறங்கச் சென்றுவிட்டார்கள். வயலில் வேலை செய்த களைப்பு. மாட்டுக்கொட்டிலுக்கு அருகிலுள்ள வேப்ப மரத்தடியில் சாக்குக் கட்டிலைப்போட்டுப் படுத்த செல்லப்பரின் குறட்டை ஒலி கேட்க ஆரம்பித்துவிட்டது.

கழுத்துடைந்த மண் சட்டி பானைகளையும் நெளிந்துபோயிருந்த அலுமினியக் கோப்பைகளையும் குருமணல்போட்டு வாளித் தண்ணீரில் கழுவிய பரிமளாவின் மனதில் ஒரு தீர்க்கமான முடிவு தோன்றியது. இனியும் வாழ்ந்து என்னத்தைக் காணப்போகிறேன் என்ற விரக்தி. தான் வாழ்ந்தால் அதுவே மற்றைய சகோதரிகளின் வாழ்வு சிதையக் காரணமாகிவிடும் என்ற எண்ணம் சுடுநீராய் நெஞ்சத்தை எரிக்க, வெப்பியாரமாகிக் கண்களில் திரண்டெழுந்த கண்ணீர்முத்துக்கள் கன்னங்கள் வழியாகக் கால்களை முத்தமிட்டன. வழிந்த கண்ணீரைச் சேலைத் தலைப்பால் அழுத்தித் துடைத்தாள். இந்தப் பாழும் உலகில் இருந்து தன்னையே துடைத்தெறிய முடிவெடுத்தாள்.

சட்டி பானைகளை மண் குந்தில் வரிசையாகக் கவிழ்த்து அடுக்கினாள். அடுப்புச் சுள்ளிகளை அப்பால் எடுத்துவிட்டு, தணலுக்குத் தண்ணீர் ஊற்றினாள். அதில் இருந்து எழுந்த புகையைப்போல், அவள் அணைந்த பின்னர் நாளைய தினம் பல செய்திகள் எழலாம். ஆனால் அவை எல்லாம் ஊர்ஜிதமற்றவைகளாய் விட்டில்பூச்சிகளைப்போல் விரைவில் அற்ப ஆயுள்களாகிவிடும்.

'என்னைச் சுற்றிய புகை மண்டலங்கள் என் குடும்பத்தைச் சுற்றிப்பிடித்துக் கரியைப் பதிக்க அனுமதிக்கமுடியாது.'

கசங்கி ஆங்காங்கே பொத்தல் விழுந்து உக்கிப்போன சேலையை வரிந்து கட்டிக்கொண்டு வெளியே வந்த பரிமளா, அமைதியாகத் துயிலும் பெற்றோரை, உடன் பிறப்புக்களைக் கண்கலங்க நோக்கினாள். வாங்கிலில் இருந்த குப்பி விளக்கின் சுவாலை காற்றுக்கு அசைந்து ஊடுபத்திக்கொண்டு இருந்தது. இன்னும் சிறிதுநேரத்தில் நூந்துவிடும்.

கண்கள் ஆறாக, முற்றத்தில் இறங்கித் தட்டிப் படலையைத் திறந்தாள். 'கிறீச்' என்ற சத்தத்துடன் திறந்துகொள்ள, முற்றத்தில் படுத்திருந்த சொறிநாய் புழுதியை உதறியவாறு எழுந்து நின்று மேற்கே நோக்கி ஊளையிட்டது.

மாட்டுக் கொட்டிலில் கன்றுடன் விளையாடிக்கொண்டிருந்த தாய்ப்பசு.... அம்மா.... என்று ஓலமிட்டது. கறையான் அரித்து மூரி மட்டைகளாய்த் தெரிந்த வேலிப்பக்கமிருந்து 'சில்' வண்டுகள் ரீங்காரமிட்டன. ஆங்காங்கே சில மின்மினிப்பூச்சிகள் வானத்து நட்சத்திரங்களாக முயற்சித்தன. வானத்தில் நட்சத்திரங்களைக் காணவில்லை. இருண்டு வெறிச்சோடிக் கிடந்தது.

சன சந்தடியற்றுக்கிடந்த தெருவில் இறங்கி நடக்கலானாள். பக்கத்துவீட்டுச் சிவபாதத்தாரின் செருமல் சத்தம் விடாமல் ஒலிக்கிறது. பாவம்.... உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்துவிட்டார். அடுத்த வீட்டில் ஒரு கைக் குழந்தை அழும் ஒலி... பாலுக்காக....? இரத்தத்தை உழைப்பதற்காகத் தியாகம் செய்த தாயிடம் பால் இருக்கிறதோ- யாருக்குத் தெரியும்?

பாசம் பொங்க வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள் பரிமளா. கரிய இருளில் சிதைந்த ஓவியமாகக் காட்சியளித்தது.

பின்னால் அந்தச் சொறிநாயும் வந்துகொண்டிருந்தது.
* * * 

ஞ்சன்.... பாக்கியம் அக்காவின் மகன். அண்மையில்தான் சவுதியில் இருந்து வந்திருந்தான். வெளிநாட்டுப் பணம். புதிதாய் வாங்கிய 'ஏசியா' சைக்கிளில் றோட்டளப்பதே அவனது பொழுதுபோக்காக இருந்தது.

எல்லோரும் தோட்டவேலை, தையல்வேலை, படிப்பு என்று வெளியே சென்ற பிறகு தனியாக வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பரிமளா, ரஞ்சனின் பார்வையில் தென்பட்டபோது.... பரிமளா ஒன்றும் உணர்ச்சியற்ற மரமல்லவே? அவளிடத்தில் உணர்ச்சிகளை அடக்கக்கூடிய மனப்பக்குவம் இல்லை. ரஞ்சனின் ஆசை வார்த்தைகளுக்கும் உறுதிமொழிகளுக்கும் சன்மானமாகத் தன்னையே அர்ப்பணித்துவிட்டாள்.

சவுதி மாப்பிள்ளை.... பாக்கியம் அக்காவின் விளம்பரத்தில் ரஞ்சனை மீனாக்கிப் பணத்தால் வலை வீசிப் பிடிக்கப் பலர் முன்வந்தபோது, விலாங்கு மீனாகப் பரிமளாவின் காதல் வலையினின்றும் வழுவிவிட்டான்.

பாவம் பரிமளா. வெளியில் சொன்னால் ஊரார் காறி உமிழ்வார்களே என்ற திகில். வீட்டில் கூறினால் என்ன விபரீதம் விளையுமோ என்ற பயம். எத்தனைநாளைக்குத்தான் முகட்டையே வெறித்துப் பார்ப்பது? தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. தனியாக அந்த நேரத்தில் 'சிவதாங்கி'க் கிணற்றை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள். எல்லாம் அறிந்த அந்தச் சொறிநாயும் மௌனஅவதானியாய் அவளைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தது.

பரிமளாவின் வீடு உள்ள தெரு வயல்வெளிகளினூடே சென்று முருகன் கோவிலில் முடிகிறது. 'சிவதாங்கி'க் கிணறு வயல்வெளிகளின் நடுவே அந்தத் தெருவோரத்தில் உள்ளது. வயலில் வேலைசெய்பவர்கள் தாகம் தீர்க்கத் தங்களின் சுமைகளை இறக்கி வைக்கவெனக் கிணற்றின் அருகே 'சுமைதாங்கி'க் கல் அமைத்திருந்தார்கள். 'சுமைதாங்கிக் கிணறு' ஊராரின் பேச்சுவழக்கில் திரிபுபட்டு 'சிவதாங்கி'க் கிணறாகிவிட்டது. அதிகமானோர் அந்தக் கிணற்றைத்தான் குடிநீருக்காக உபயோகிப்பார்கள்.

நல்ல நீரில் தன்னுயிரைப்போக்கிப் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும் என்றோ என்னவோ பரிமளா 'சிவதாங்கி'க் கிணற்றைத் தனக்கு எமனாகத் தேர்ந்தெடுத்துவிட்டாள்.

அந்த இரவு நேரத்தில் முருகன் கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் தொலைவில் மங்கலாகத் தெரிகிறது. மனதிற்குள் இறைவனைத் தியானித்தபடியே கிணற்றுக் கட்டின்மீது ஏறினாள். மேற்குத் திசையைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கிய நாய் ஊளையிட ஆரம்பித்தது.

அவளுக்காக உலகமே புலம்புவதுபோல மழைத்துளிகள் சில விழத் தொடங்கின.

பெண்ணே! ஆண்களின் கண்களில் உன் கவர்ச்சியைக் காட்டிவிடாதே. வண்டாக மாறி உன் பலவீனங்களை இனம்கண்டு வஞ்சித்துவிடுவார்கள். கோபுரமாய் வாழவேண்டியவளைக் கடித்துக் குதறிக் குப்பைத் தொட்டியாக்கிவிடுவார்கள்.

பெண்ணாய்ப் பிறந்தாலே கட்டிலும் தொட்டிலும்தான் வாழ்க்கையா? அடுப்படிதான் வசிப்பிடமா? தாய்மைதான் இலட்சியமா?

கோழையைப்போல் ஏன் தற்கொலை செய்கிறேன் என்று கேட்கிறாயா? நான்மட்டுந்தான் வாழவேண்டுமென நினைத்தால் எத்தனை ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் எதிர்த்துப் போராடத் தயார். ஆனால் என்னால் சுயநலமாக வாழமுடியவில்லையே. பெற்றோர் உடன்பிறப்புக்கள் என்ற பாசங்கள், தங்களின் வாழ்க்கையை அழித்துவிடாதே என்று கெஞ்சுவதுபோலிருக்கிறதே!

கல்லுக்குள் ஈரம் உள்ளபோது எனக்குள் அன்பு என்ற ஈரம் உள்ளதில் என்ன தப்பு?

கிணற்றுள் குதிக்க முற்பட்டவளின் கூந்தலைப்பற்றிக் கீழே இழுத்து விழுத்தியது ஒருகரம். திடுக்கிட்டவளாய் நிமிர்ந்து பார்த்தாள். அங்கே கோபாலச்சாமி ஐயர்.

"ஐயா.... என்னை விட்டுடுங்க.... இந்தப் பாவி வாழக்கூடாது" என்று மீண்டும் கிணற்றுள் பாய முற்பட்டவளின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தார் கோபாலச்சாமி ஐயர்.

"உயிர்களை ஆக்கவோ அழிக்கவோ எங்களுக்கு உரிமையில்லை. கண்முன்னாலை நடக்கிற அழிவை என்னாலை அனுமதிக்க முடியாது. உனக்கு ஏன் இந்தப் பைத்தியக்கார எண்ணம்....?"

தனக்கு நடந்த இன்னல்களை ஐயரிடம் கூறிய பரிமளா, சிறு குழந்தையைப்போலக் குலங்கிக் குலங்கி அழலானாள். எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்ட ஐயர் அவளை ஆதரவாக நோக்கினார்.

'கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளால், சமுதாயத்தினால் எத்தனை உயிர்கள் அநியாயமாக அழிகின்றன. சமயத்தின்மூலம் மனிதனை நெறிப்படுத்த முயலும் நான் ஏன் இந்த விசயத்தில் ஒரு முன்மாதிரியைக் கடைப்பிடிக்கக் கூடாது?' என எண்ணிய ஐயரின் சிந்தனையில் திடீரென ஒரு ஒளி.

"பரிமளா.... என்னாலை உன்ரை பிரச்சினைக்கு ஒரே வழிதான் சொல்லமுடியும்" என்றவரைக் கேள்விக்குறியுடன் நோக்கினாள் பரிமளா.

"நீ விரும்பினால் நானே உன்னைத் திருமணம் செய்யிறன்" என்று அமைதியாகக் கூறினார் கோபாலச்சாமி ஐயர்.

"வேண்டாம் ஐயா வேண்டாம்.... இந்தக் கறைபடிந்தவளின் காத்துக்கூட உங்கள்மேலை படக்கூடாது. உங்களுடைய நல்ல குணம் இப்பிடிப் பேசச் சொல்லுது. ஆனால் நான்.... நாளைக்கு இந்தச் சமுதாயம் உங்களையும் சாக்கடையாக்கிப்போடும்"

"நான் ஒரு மதகுருவாக இருக்கலாம். ஆனால் சமுதாயத்தில் நானும் ஒருவன். சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளை ஒழிக்க நான் போராடுவதில் என்ன தவறிருக்கிறது? ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சமுதாயத்தோடு போராடுவதில் என்ன தப்பிருக்கிறது? உனக்குத் தனித்துப் போராட முடியாத நிலை. அதற்கு நான் உதவிசெய்தால் இந்தச் சமுதாயத்தாலை என்ன செய்துவிட முடியும்? மற்றவர்களிடம் கை ஏந்துகிறநிலையில் இருந்தால்தான் நசுக்கப்படுவோம். நாங்களே எங்களிலை நின்றால் எவராலை என்ன செய்யமுடியும்?"

ஏதோ புரிவதுபோலிருந்தது பரிமளாவுக்கு. எனினும் ஐயரைத் தனது சுயலாபத்திற்காக மாசுபடுத்த மனம் இடமளிக்கவில்லை. சிறிதுநேரம் சிந்தித்தாள். தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.

"என்ன யோசிக்கிறாய்?"

"என்னை மன்னிச்சுடுங்க ஐயா.... உங்களைத் துணையாக நினைக்க எனக்கு மனம் கூசுது. என்னாலை முடியாது...."

"அப்ப தற்கொலைதான் உன்ரை முடிவா?"

"இல்லை.... பிரச்சினைகளிலை இருந்து விடுபடத் தற்கொலைதான் ஆறுதல்தரும் என நினைச்சன். இனிமேல் நான் சாகமாட்டன். எனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கு.... நான் வாழப்போறன். என் இனத்திற்காக.... விடிவுக்காகப் போராடுபவர்களுக்காக.... என்னாலான சேவைகளை.... உதவிகளைச் செய்யப்போறன். பெண்களுக்காக, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடப்போறன். பெண்கள் உரிமையுடன் அஞ்சாமல் வாழும் காலம்வரும். அந்த ஆறுதலுடன்தான் மீண்டும் இந்த ஊருக்குள் நுழைவன்" என்று நம்பிக்கையுடன் கூறியவளைப் புன்னகையுடன் பார்த்தார் ஐயர்.

ஒரு உயிரைக் காப்பாற்றிய திருப்தி அவருக்கு.

நெஞ்சில் உறுதிபொங்க ஆறதல் தேடித் தனியாக அந்த ஊரைவிட்டுச் சென்றுகொண்டிருக்கும் பரிமளாவின் உருவம் இருளில் நிழலாகத் தெரிகின்றது.

கூடவே அந்தச் சொறிநாயும் வாலை ஆட்டியபடி பின்தொடர்கிறது.

(ஏலையா-1991)
(1977ல் தாயகத்தில் 'கலாவல்லி' சஞ்சிகையின் சிறுகதைப்போட்டிக்கு எழுதி முதலாவது பரிசு பெற்றது. மீண்டும் புலம்பெயர்ந்த பின் சிறு மாற்றங்களுடன் 1991ல் எழுதியது.)
* * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!