திங்கள், 1 ஏப்ரல், 2013

மனவிகாரங்கள்

குளிரைப் பார்த்துப் பதறியடித்து இலைகளை உதிர்த்துவிட்டுப் பட்டுப்போனவைகளைப்  போன்ற தோற்றத்துடன் வீதியின் இருமருங்கும் அமைதியாக நிற்கும் மரங்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் முண்டியடித்து முன்னேறும் வாகனங்கள், சோகத்துடன் குளிரைத் தாங்கும் மரங்களைத் தாண்டி ஆரவாரமாகச் சென்றுகொண்டிருந்தன. குளிரில் இருந்து உடம்பைப் பாதுகாக்கவென வாங்கியணிந்த உடைகளையும் மீறி நடுங்கியவாறு அருகிலிருந்த தேவாலய உச்சியில் தெரிந்த மணிக்கூட்டை அண்ணாந்து பார்த்தான் செந்தில்.

மணி சரியாக 4.50

மின்ரதம் (Electric Train) வர இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன.
ஆறுதலாக நடந்து சென்றாலும் பத்தே நிமிடங்களில் மின்ரத நிலையத்தை அடைந்துவிடலாம்.

'மலிவு விலை, மலிவு விலை' என வண்ண வண்ணச் சுவரொட்டிகளைக் கண்ணாடியில் பொருத்தி, 'வா' என வரவேற்புக்கூறும் கடைகளையும் சிற்றுண்டிச்சாலைகளையும் இயந்திரகதியில் விரைந்து செல்லும் மனிதச் சங்கிலிகளையும் பார்வையிலிருந்து விலத்தியவாறு மின்ரத நிலையத்தை அடைந்தான் செந்தில்.

மின்ரதம் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டும். அதில் சென்றால்தான் 'ரெஸ்ரோரண்ட்' வேலைக்குப் பிந்தாமல் செல்ல முடியும்.

தாமதமாகச் சென்றால் ஒருமாதிரிப் பார்வையாலேயே எச்சரிப்பான் இத்தாலிய முதலாளி. அதேபோல் வேலை எல்லாம் முடித்துச் சரியான நேரத்துக்கு வெளியேறினாலும் 'ஏன் பிந்திப் போகவில்லை?' என்பதுபோல் பார்வையாலேயே முறைப்பான்.

இவையெல்லாம் செந்திலுக்குப் பழகிப்போனவை. இவனைப்போல எத்தனை முதலாளிகளைப் பார்த்திருப்பான்?

இளிச்சவாய்த் தொழிலாளி கிடைத்துவிட்டால், பார்வையாலேயே பச்சடிபோட்டுக் காரியம் சாதித்து ஏப்பம்விடுவார்கள்.

அவனைப் பொறுத்தவரையில் முதலாளிகள் எல்லோருமே சுயநலவாதிகள்தான். அவர்களுடைய அணுகுமுறைகள்தான் வித்தியாசமானவை....!

சிலர் வார்த்தைகளால் சுடுவார்கள். சிலர் பார்வையாலேயே வதைப்பார்கள். சிலர் அன்பாகப் பேசியே வேலை வாங்குவார்கள். மொத்தத்தில் எல்லா முதலாளிகளுமே தாங்கள் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள்.

இது புரியாத சிலர், "என்ரை முதலாளி நல்லவன்! உன்ரை முதலாளி பொல்லாதவன்!!" என்று வாதத்தில் நேரத்தைக் கரைக்கும் அறியாமையைக் கண்டு மனதுக்குள் நகைத்திருக்கின்றான்.

மின்ரதம் வந்தது. 'சிகரட்' புகைக்க அனுமதிக்கப்பட்ட பெட்டிக்குள் சனங்களோடு சனமாக நெருங்கியடித்து இருக்கை ஒன்றில் அமர்ந்தவன், சுற்றுமுற்றும் பார்வையை ஓட விட்டவனாய், 'சிகரட்' ஒன்றை உருவியெடுத்து வாயில் பொருத்திக்கொண்டான்.

அப்போது அவசர அவசரமாக ஒரு சோடி உள்ளே வந்து செந்திலின் எதிரே வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டனர். பார்த்தவன் திகைத்தான். அவளும் செந்தில் என்ற இலங்கையனை எதிர்பார்க்காததுபோல் பயம் கலந்த திகைப்பைக் கண்களில் படரவிட்டவள், மறுகணம் பார்வையை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டாள்.

பழுப்பு நிற நீல 'ஜக்கற்'. பொருத்தமான கலரில் 'ஜீன்ஸ்'. காதுகள் இரண்டிலும் தூங்கும் 'ஜிமிக்கி'கள். நெற்றியில் சிறிதாக ஒரு சிவப்புப் பொட்டு. தலையை மேவி வாரிப் பின்னால் கட்டியிருந்தாள். உயரமும் நிறமும் அங்க அமைப்புக்களும் அவள் ஒரு பதினாறின் பருவத்தில் நிற்கும் இலங்கைத் தமிழ்ப் பெண் என்பதை ஐயமின்றித் தெரிவித்தன.

அவளுடன் உரசியவாறு அமர்ந்திருப்பவன் ஜெர்மன் நாட்டு வாலிபன். முடியைக் கட்டையாக வெட்டி கண்ணியமானவன்போலக் காணப்பட்டான்.

அவளின் கையைப்பற்றி ஏதோ கூறிச் சிரித்தான் அவன். மெதுவாகக் கையை அவனின் பிடிக்குள் இருந்து விலக்கியவாறு செந்திலின் பக்கம் பார்வையைச் செலுத்தியவள், தயக்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள்.

கவனித்தும் கவனிக்காததுபோல் யன்னல் வழியாக வெளியே பார்வையைச் செலுத்த முற்பட்டாலும், செந்திலின் கண்கள் அவர்களின் பக்கமே நோக்கத் துடித்தன.

அவள் கைப்பையைத் துளாவி 'சிகரட் பைக்கற்' ஒன்றை வெளியே எடுத்தாள்.

'MARLBORO LIGHT' சாம்பல் கலரில்.

அது அவனுள் விநோத உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்தது.

'எங்கடை பெட்டை சிகரட் பிடிக்குது.'

இலங்கைப் பெண்கள் இந்நாட்டவருடன் குடும்பம் நடாத்துவதை அறிந்தாலும், கண்முன்னால் ஒரு இளம் சோடியைப் பார்ப்பது இதுதான் முதல்தடவை.

அதுவும் அவள் சிகரட் புகைப்பது அவனுக்கு என்னவோ போலிருந்தது.

'ஆணுக்குள்ள உரிமைகள் பெண்ணுக்கும் கிடைக்கவேண்டும். பெண்ணும் ஆணும் சமுதாயத்தின் சம பங்கினர்' என்று பலருடன் வாதிட்ட செந்திலால் ஏனோ அவள் புகைப்பிடிப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

என்னதான் வெளியில், 'பெண்ணுரிமை வேண்டும்' என்று பேசினாலும், தனக்குள்ளும் ஓர் ஆணாதிக்க வெறிபிடித்த மனது உள்ளதை அப்போதுதான் அவனால் உணர முடிந்தது.

ஒரு ஆண் வேற்று நாட்டவளுடன் கூடிக் குலாவலாம் என்றால், ஒரு பெண்ணால் ஏன் முடியாது?

அந்தப் பெண் அந்த ஜேர்மன்கார இளைஞனை எந்த நிலையில் காதலனாக ஏற்றுக் கொண்டிருப்பாள்?

'சீதனம்' என்ற பேயை நெருங்கவிடாமல் தடுக்கவா? அல்லது தாய்நாட்டுக்குத் திரும்பிப் போக நேரிடாது என்ற எதிர்பார்ப்பா? அல்லது பாடசாலையில் சகல மாணவியரும் சோடி சேர்ந்திருக்க, தான்மட்டும் சோடியில்லாமல் இருந்தால், தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்ற பயத்தினாலா?

எதுவோ ஒன்று அவளை அவனுடன் சேர்த்திருக்கிறது.

சிலவேளை வெறும் உடல் கவர்ச்சியாகக்கூட இருக்கலாம். ஜேர்மனியில் வெறும் உடல் கவர்ச்சியாலேயே பலர் இணைகிறார்கள்: பிரிகிறார்கள்: வேறு சோடிகளாக உருவாகிறார்கள்.

அப்படியொரு நிலை இவளின் வாழ்விலும் இடம்பெறக் கூடிய சாத்தியங்களே பெருமளவில் உள்ளதால், அப்போது இவளின் வாழ்வு எவ்வாறிருக்கும்?

வேறொரு வாலிபனுடன் சேர்வாளா? அல்லது 'தமிழ்ப் பண்பாடு' என்று காலமெல்லாம் தனிமையில் கழிப்பாளா? அல்லது தனக்கேற்பட்ட களங்கத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி வாழ்வாளா?

பலதரப்பட்ட கேள்விகள் மனதைக் குடைய, அவளை நோக்குவதும், அவளின் பார்வையைச் சந்திக்க நேரும்போது மறுபுறம் பார்ப்பதுமாக இருக்கையில் தவித்தான் செந்தில்.

அவளுக்குத் தற்போது சிறிது தைரியம் வந்திருக்கவேண்டும். அந்த இளைஞனின் தோளில் தலைசாய்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

'முக்காடு நனைந்த பிறகு முழுதும் நனைந்தால் என்ன?' என நினைத்திருப்பாளோ?

செந்திலால்தான் அவர்களைத் தைரியமாக நிமிர்ந்து நோக்க முடியவில்லை. 'காணாததைக் கண்டவனைப்போல்ப் பாக்கிறானே?' என்று நினைப்பார்களோ என்ற எண்ணம்.

அந்தநிலையில் ஏதோ, அவர்களைக் கண்டு பயப்படும் குற்றவாளியின் நிலையில் தானிருப்பதை அவனால் உணர முடிந்தது.

அதற்குக் காரணம் தன் 'மனவிகாரங்களோ' என்ற கேள்வி முதல் தடவையாக அவனுள் துளிர்த்தது.

'அவளைப்பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்? கவலைப்பட வேண்டும்? ஆராய வேண்டும்?'

'என்னதான் பெண்ணுரிமை, பெண் சமத்துவம்' என்று பேசினாலும், 'தமிழ்ப் பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்: இப்படித்தான் வாழவேண்டும்' என்ற எண்ணம் விகாரமாக மனதுள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்ந்தபோது....

தன் மனவிகாரங்களுக்காக செந்திலால் அப்போதைக்கு வெட்கப்படத்தான் முடிந்தது!!
(பிரசுரம்: மண், ஜேர்மனி.)
*****

2 கருத்துகள்:

  1. சிறப்பான கருத்தை முன் வைத்து செல்லும் கதை அருமையாக கோர்க்கப்பட்ட பூமாலையை போல இன்றைய சூழல்களை விளக்கி அறியாமைக்கு வெளிச்சம் தருகிறது .

    பதிலளிநீக்கு

மிகவும் நன்றி!