வியாழன், 18 ஏப்ரல், 2013

கடன்

மூன்று மாதங்களுக்குமேலாக ஊரிலிருந்து கடிதம் வரவில்லை. சனங்கள் என்னபாடுபடுகிறார்களோ தெரியவில்லை. காதுக்கு எட்டும் செய்திகள் பயமுறுத்தித் தினம்தினம் செத்துப் பிழைக்கவைக்கின்றன.

உண்மை எது பொய் எது என்று பகுத்தறிய முடியாத நிலை.

உறக்கம் வெகுநாளாய் மௌனமாகி இடையிடையே வந்து எட்டிப்பார்த்து வேடிக்கை காட்டுகிறது. பயங்கரமான கனவுகள் திகிலூட்டுகின்றன. உணவை நாட மனம் மறுத்தது. வேலை செய்யக்கூட முடியவில்லை.
உழைத்து எதைச் சாதிக்கப்போகிறோம் என்ற விரக்தி.

மொத்தத்தில் நடைப்பிணமாகக் கட்டிலில் முடங்கிக்கிடந்த உதயனை ரெலிபோன் மணி அழைத்தது.

"அப்பு தம்பி உதயன்...."
ஒரு வயதான ஆணின் குரல் மறுமுனையில் குழைந்தது. புரிந்தது. கந்தசாமி அண்ணர்தான்.

"சொல்லுங்கோ. என்ன விசயம்?"
வேறு என்னவாக இருக்கும்?! எல்லாம் காசு அலுவல்தான்.

கந்தசாமி அண்ணர் எங்கேயாவது எவரையாவது சந்திக்கப்போகிறார் என்றால், நிச்சயமாக அது காசு கடன் வாங்குவதற்காகத்தான் இருக்கும்.
அதனால் அவருக்குக் 'கடன்காரக் கந்தசாமி' என்ற பட்டப்பெயர்கூட உண்டு.

"தம்பி.... எனக்குக் காசு கொஞ்சம் அவசரமாய்த் தேவைப்படூது.... கொஞ்சம்தான். ஒரு ஆயிரம் மார்க். அடுத்த மாதம் திருப்பித் தந்துவிடுவன்...."

தண்ணீரில் எழுதி வைக்கவேண்டிய வார்த்தைகள் என்பது உதயனுக்கு நன்றாகவே தெரியும். பலர் கூறியிருக்கிறார்கள். இத்தனைக்கும் கந்தசாமி அண்ணரிடம் பணம் இல்லாமலில்லை.

நாலு பிள்ளைகள் மனைவியுடன் சோசல் காசில் வாழ்பவர். அதைத் தவிர 'றெஸ்ரோரண்ட்' வேலை. பிள்ளைகள் இருவர் சோசல் வேலை. ஊரிலும் சுமையாக எவரும் இல்லை. அப்படியிருந்தும் கந்தசாமி அண்ணர் பலரிடம் கடன் வாங்குவதன் காரணம் பலருக்குப் புரியவில்லை. பலவழிகளில் வருமானம் வரும்போது பலரிடம் கடன் வாங்கி என்ன செய்கிறார் என்பது புரியாத புதிராக இருந்தது.

"கந்தசாமி அண்ணை! வீட்டுக்கு அனுப்பத்தான் கொஞ்சக் காசு கிடக்கு..."

"இந்த நாட்டுப் பிரச்சினையளுக்குள்ளை என்னெண்டு அனுப்பப் போறீர்? நிலமையள் சரியான பேந்து அனுப்பலாம்தானே...."

அவரது அக்கறையான வார்த்தைகளைக் கேட்கச் சிரிப்புத்தான் வந்தது. அலுவல் பெற எதையும் பேசக் கூடியவர். நாட்டில் பிரச்சனை என்று தெரிகிறது. ஆனால் அதற்கான பரிகாரங்களுக்கு உதவாதவர்.

ஒருமுறை நாட்டின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் நிதி சேகரிக்க கந்தசாமி அண்ணர் வீட்டுக்குச் சென்றனர்.

"வாருங்கோ தம்பியவை.... ரீயோ கோப்பியோ குடிக்கிறியள்? தம்பியவை எவ்வளவு கஸ்டப்படுகினம்.... சனங்களும்தான்" என்று கூறி நிறுத்தியவர், சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஏதோவெல்லாம் கதைத்ததன் பின்னர் நாசூக்காகப் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

இவர் எல்லாம்  என்ன  காரணம்  சொல்லி  அரசியல்  தஞ்சம் கோரியிருப்பார்?!

"என்ன தம்பி யோசிக்கிறீர்?"

"அடுத்தமாதம் திருப்பித் தரவேணும்...."

"ஐயோ தம்பி, நீர் மறந்தாலும் நான் மறக்கமாட்டன்."

"நாளைக்குத் தாறன்...."

ரிசீவரை வைத்துவிட்டுத் திரும்பிய உதயனைக் கதவு தட்டப்படும் ஒலி மீண்டும் அழைத்தது. திறந்தான். சிநேகிதன் சுகுமாருடன் ஒரு புதுமுகம். அறிமுகத்தில் குமார் எனத் தெரிந்தது.

"உதயன்.... நீ எனக்கு ஒரு உதவி செய்யவேணும். குமார் பக்கத்துச் 'சிற்றி'தான். இரவைக்கு உன்ரை அறையிலைதான் படுக்கவேணும்...."

"தாராளமாய்...."

"ரொம்ப நன்றி.... ஒருக்கா கந்தசாமி அண்ணர் வீட்டை குமாரோடை போகவேணும். போவிட்டுப் பேந்து வாறன்..."

"என்னவாலும் அவசர அலுவலோ?"

"குமார் கொஞ்சக் காசு கொடுக்கவேணும்."

"அவர் என்னட்டைக் கடனாய்க் கேட்டாரே?!"

"எனக்கும் குமார் சொல்லித்தான் விசயம் தெரியும். கந்தசாமி அண்ணர் பக்கத்துச் 'சிற்றி'யளிலை இருக்கிற எங்கடையாக்களுக்கு வட்டிக்குக் காசு கொடுக்கிறவராம். இங்கை இருக்கிறவேட்டைக் கடன் வாங்கி வட்டிக்குக் கொடுத்து உழைக்கிறார்.... வட்டி எவ்வளவு தெரியுமே? ஆயிரத்துக்கு ஐம்பது..." என்று கூறிய சுகுமாரை வியப்புடன் பார்த்தான் உதயன்.

நினைத்துப் பார்க்கச் சினம் பொங்கியது. குருதியை வியர்வையாக்கி உழைப்பவர்களிடம் கடன் வாங்கி இலாபம் தேடும் கந்தசாமிக்கும் சுரண்டல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்படியானவர்கள் கொழுக்க உதவிசெய்வதே பாவம். முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.

உதயன் ரெலிபோனை எடுத்துக் கந்தசாமி அண்ணரின் நம்பரைச் சுழற்றத் தொடங்கினான்.

எத்தனையோ மக்கள் தாயகத்தில் உணவின்றி உடையின்றிக் கஸ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவுவோம். அடுத்தமாதம் வீட்டுக்கு அனுப்பலாம்.... என்று  எண்ணியவனாய் ரிசீவரைக் காதில் வைத்தான் உதயன்.

*****
(ஏலையா - ஐப்பசி"1990, ஜேர்மனி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!