வியாழன், 11 ஏப்ரல், 2013

யௌவனமில்லாத யதார்த்தங்கள்

னவுகளுடனும் கற்பனைகளுடனும், யாரிடமோ கடன் வாங்கி, ஜேர்மனியை மிதித்துச் சில காலம் சென்ற பின்புதான் தெரிகிறது- இங்கு வந்தது எவ்வளவு கேவலம் என்று.

'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பார்கள். சுதாகரைப் பொறுத்தவரையில் அந்த வார்த்தை முற்றிலும் உண்மையானது. ஜேர்மனியிலிருந்த நண்பர்கள் எழுதிய கடிதங்கள் அவனின் கற்பனையைத் தூண்டின.

‘மச்சான்! வெள்ளைக்காரிகளுடன் கைகோர்த்துத் திரியலாம். வேலை எதுவும் செய்யாமல் படுத்திருந்தே காசு சம்பாதிக்கலாம். உடுப்புக்கூட வாங்கத் தேவையில்லை. ஆறுமாதத்துக்கு ஒருமுறை உடுப்பு வாங்கக் காசு தருவாங்கள். ரீவி வாங்கலாம். எப்படியாலும் இங்கே வந்து சேர். சொர்க்கம் சொர்க்கம் என்பார்களே, அது ஜேர்மனிதான்.’

கடித வாசகங்கள் அவனது கருத்தைக் கவர்ந்தபோது, ஜேர்மனிக்கு எப்படியாவது போகவேண்டும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தது.

கடன்பட்டான்.... ஏதோ விதத்தில் வந்து சேர்ந்துவிட்டான்.

'ஏன் வந்தோம்?’ என்றாகிவிட்டது.

தனிமை வாட்டியது. அதைவிடக் குளிர் வாட்டியது.

ஒரு நகரத்தைவிட்டு இன்னோர் நகரம் போகமுடியாது என்ற கட்டளை அவமானப்படுத்தியது. குறிப்பிட்ட காலத்துக்கு வேலை செய்யக்கூடாது என்ற அதிகாரம் கேவலமாகப்பட்டது. நாட்டு மக்களின் அந்நியப் பார்வை சங்கடப்படுத்தியது.

ஆசை வார்த்தை காட்டிக் கடிதம் எழுதிய நண்பர்கள்மீது ஆத்திரம் வந்தது. பாவம் அவர்கள்.... வெளிப்புறப் பகட்டுக்களை உண்மையென நம்பி ஏமாந்து எழுதிவிட்டார்கள். அடிப்படை நிஜங்கள் புரியவில்லை.

வந்த கடன் பயமுறுத்தியது. எப்படியாவது கடனை அடைக்கும்வரையாவது இங்கு இருந்தாக வேண்டியநிலை. களவாகத்தான் வேலை செய்யவேண்டும். வேறு வழியில்லை.

அலைபாயும் பாயும் மனதை ஆறுதற்படுத்தினான் சுதாகர்.

கிழமையில் இருதடவை சோசல்வேலை என்ற பெயரில் மலசலகூடம் கழுவவேண்டும். பழக்கம் இல்லாத வேலை. தொட்டில் பழக்கம் அருவருப்பைத் தந்தது. தாயை நினைக்கத் தூண்டியது.
*****

“அம்மா!  ராத்திரி  முழுக்கக்  காய்ச்சல் எண்டு கிடந்துபோட்டு ஏனணை இப்ப அடுப்படீக்கை கிடக்கிறாய்? வெளியாலை வாணை. இண்டைக்கு நான் சமைக்கிறன்....’’

“நீ சமைக்கப் போறியோ?! நீ சமைச்சு நான் சாப்பிட்ட மாதிரித்தான்’’ என்று கூறிச் சிரித்தவள்,
“படிச்ச பிள்ளை அடுப்படீக்கை வரலாமே ராசா.... உன்னை ஏன் கஸ்டப்பட்டுப் படிக்க வைக்கிறன் தெரியுமே? நீ கோட்டும் சூட்டும்போட்டு உத்தியோகத்துக்குப் போறதைப் பார்த்துவிட்டுத்தான் கட்டையிலை போவன்’’ என்று ஏக்கம் தொனிக்கக் கூறினாள்.

கண்களிலே கண்ணீர் துளிர்த்தது. சுவரில் முட்டிக் கொள்ளவேண்டும் போலிருந்தது.

'அம்மா! நீ சொன்னமாதிரி கோட்டு, சூட்டு, சப்பாத்துப் போட்டுத்தானணை வேலை செய்யிறன். இலங்கைக் காசுக்கு ஆயிரக்கணக்கிலைதானணை வருமானம் வரூது. ஆனால் நான் செய்யிற வேலை....? அறிஞ்சால் உன்னாலை தாங்க முடியுமா??’

மனக்கவலைகள் பாரமாக நெஞ்சை அழுத்தப் படுக்கையில் விழுந்து தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.

அறைக்கதவைத் திறந்துகொண்டு யாரோ வரும் ஒலி கேட்டுத் தலையை நிமிர்த்தி நோக்கினான். வந்தவன் சந்திரன்.

“டேய் சுதா! எப்ப பார்த்தாலும் படுக்கைதானா? படுத்துப் படுத்துச் சோம்பேறியாகப் போறாய்.... வா, வெளியிலை போவம்...’’

“எங்கை?’’

“நல்ல வெய்யில் அடிக்குது. படமெடுக்கப் போறம். ரவியும் வாறான்’’ என்றவாறு 'கமரா’வைத் தூக்கிக் காட்டினான். 'கனன்’(cannon) கண் சிமிட்டியது.

“டேய் சந்திரன்! சேட்டு ஊத்தையாய்க் கிடக்குது. படத்திலை தெரியுமே?’ என்று கேட்டவாறு உள்ளே நுழைந்தான் ரவி.

“சேட்டு ஊத்தையெண்டால் மேலை 'யக்கற்’றைப் போடன்.’’

“சுதா, வெளிக்கிடன்!’’

“நான் வரேல்லை சந்திரன்.... நீங்கள் போங்கோ’’ என்றவாறு மறுபுறம் திரும்பிப் படுத்தான் சுதாகர்.

“ஒரு இடத்துக்கும் வரமாட்டான். படுக்கையைக் கட்டிக்கொண்டு உடம்பைப் பழுதாக்கப் போறாய்...’’

அவர்கள் போய்விட்டார்கள். அவர்களை நினைக்கச் சிரிப்பாக இருந்தது. ஊத்தைச் சேட்டுக்கு மேலே 'யக்கற்’றை அணிந்து, விதம்விதமான இடங்களில் நின்று படமெடுப்பார்கள். அதை மூவர்ணத்தில் பிரதி எடுத்து, வீட்டுக்கு அனுப்புவார்கள். தாய், தகப்பன், உற்றம் சுற்றம் பலரும் பார்ப்பார்கள்.

'பெடியன் ஜேர்மனியிலை நல்லாயிருக்கிறான். கை நிறையச் சம்பாதிக்கிறான். அந்தப் போட்டோவிலை இருக்கிறது பெடியன் புதுசா வாங்கின "சொனி ரீவி". கார் வைச்சிருக்கிறானாம்.... இல்லையணை.... அடுத்த மாதம்தான் வாங்கப்போறானாம்.... பெடியன்போய்  ரண்டு  வருசத்திலை  நல்லாய்த்தான் சம்பாரிச்சுப் போட்டான்.’

இப்படிப் பலரின் பலரகமான விமர்சனங்கள் இடம் பெறும். இறுதியில் சுதாகரைப்போலப் பலரும் பற்பல கற்பனைக் கோட்டைகளுடன் ஜேர்மனிக்குப் புறப்படவென இலட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுக்களை 'ஏஜென்சி’க்குத் தாரை வார்ப்பார்கள்.

சுதாகரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. உரத்துச் சிரித்தால் "பைத்தியக்காரன்" என்று பட்டம் கட்டிவிடுவார்கள். ஜேர்மனிக்கு வந்து இந்த நாட்டைக் கூடாது என்று கூறினால் வாழத் தெரியாதவன் என்று வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

ஜேர்மன் பணத்தின் பெறுமதி இலங்கையில் இருபது இருபத்தைந்து மடங்கு பெருகுவதால் இந்த மண்ணில் இத்தனை சனங்கள். ஒரு மார்க் ஒரு ரூபாயானால் எவனாவது இங்கிருப்பானா? மணித்தியாலம் இரண்டு "மார்க்"குக்கு சோசல் வேலை செய்வானா? கோப்பை கழுவுவானா? நினைக்க வேடிக்கையாக இருந்தது.
*****

றைக்கதவு மெதுவாகத் தட்டப்படும் ஒலி கேட்டு, சிந்தனைகள் தடைப்பட்டவனாய் படுக்கையைவிட்டு எழுந்தான். கதவைத் திறந்தவன் வியந்துவிட்டான்.

அங்கே நின்றது ஒரு அந்நியநாட்டுப் பெண். நிச்சயமாக ஜேர்மன் நாட்டவள் அல்ல.... அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

சில தினங்களுக்கு முன்புதான் அந்தக் கட்டிடத்தில் வசிப்பதற்கு அனுமதி பெற்றிருந்தாள்.

'என்ன விசயம்?’ என்பதுபோல் பார்த்தான் சுதாகர்.

“உனக்கு ஆங்கிலம் தெரியுமா?’’

“ஓரளவு தெரியும்.’’

“உன்னிடம் காசு மாற்ற இருக்கிறதா? ரெலிபோன் கதைக்கவேணும்.’’

“கொஞ்சம் பொறு’’ என்று திரும்பியவனைத் தொடர்ந்தாள்.

'யக்கற்’றிலிருந்த பேர்சை எடுத்துப் பிரித்தான். சிலதாள்கள் வெளியில் தலைகாட்டிச் சிரித்தபோது, அவளது வதனமும் மலர்ந்தது.

“நிறையப் பணம் வைத்திருக்கிறாய்.... வந்து வெகுகாலமா?’’

சற்று நெருங்கி நின்றாள்.

'ம்....’ என்றவாறு சில்லறையை எண்ணி நீட்டினான்.

“நன்றி! நீ எந்த நாட்டவன்?’’

“இலங்கை.... சிலோன்....’’

“சிலோனிஸ்....?! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. நூறு மார்க் கொடுக்கிறாயா? நீ விரும்பியவாறு நடக்கிறேன்’’ என்று குழைந்தவளை வெறுப்புடன் நோக்கினான் சுதாகர்.

‘இவள் ஒரு விபச்சாரி....’ அவளின் அருகாமை அருவருப்பை உண்டுபண்ணியது.

“தயவு செய்து போய்விடு.”

விசித்திரமாக நோக்கியவாறு வெளியேறினாள்.

இந்த நாட்டில் காசிருந்தால் எதையும் எப்படியும் செய்யலாம். பண்பாட்டை, கலாச்சாரத்தை வேலியாகக் காட்டித் தடைபோட எவரும் இல்லை. பணத்துக்குப் பாசங்கள் விலையாகின்றன. ஆனால் என் தாயகத்தில் பாசங்கள் முற்றுமுழுதாகப் பணத்துக்கு அடிமையாகவில்லை.

அறைக்குள்ளே மேலும் அடைபட்டு இருந்தால் வேறு யாராவது தொந்தரவு செய்வார்கள் என்ற எண்ணத்தில் அருகிலிருந்த "பார்க்"கை நோக்கிச் செல்லலானான் சுதாகர்.

அங்கே அவன் கண்ட காட்சி.... அனிற்றா ஒருவனுடன் இதழ் பொருத்தி மெய்மறந்திருந்தாள்.

இந்த அனிற்றாவைத்தானே சிவா திருமணம் செய்யப்போகிறேன் என்று தம்பட்டமடித்துக் கொண்டு அலைகின்றான்.

சிவாவை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இவைகள் எல்லாம் இந்த மண்ணைப் பொறுத்தமட்டில் யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய மண்ணைப் பொறுத்தவரையில் இவை யாவுமே யௌவனமில்லாத யதார்த்தங்கள்.

சுதாகரிடமிருந்து பெருமூச்சொன்று வெளிக்கிளம்பியது.
***
(பிரசுரம்: கலைவிளக்கு 1989, ஜேர்மனி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!