வியாழன், 25 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 1

Monday, August 04, 2003
இது திங்கள்தோறும் அங்கம் அங்கமாக வளரப்போகும் தொடர்கதையாகும். இதைப் படிப்பவர்களது கருத்தையும் கவனத்திலெடுத்து கதை வளரும். இந்த தொடர்கதைக்கு அழகாக தலைப்புகள் அமைத்த அன்பிற்கினிய கரவை பரணி, இளைஞன் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது யாழ் இணையத்துக்காக மட்டுமே எழுத ஆரம்பித்திருக்கும் வாராந்த தொடர்கதையாகும். உள்ளே உங்களை அன்புடன் அழைப்பது இராஜன் முருகவேல்.


இப்படியொரு முன்னுரையுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் இணையத்தில் (http://www.yarl.com) எழுத ஆரம்பித்த தொடர்கதை இது. அது பின்னர் பல இடங்களில் சுற்றிச் சுழன்று மீண்டும் இங்கே பதிவாகிறது..!

 (1)

எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது?!

செக்கன்கள் நிமிடங்களாகி மணித்தியாலத்தை எட்டப்போகின்றது.

இன்னும் காணவில்லை.பொறுமை எரிச்சலைத்தந்தது. "போய்விடுவோம்" என நினைத்தாலும் மனம் வரவில்லை.

"போன பிறகு வந்துவிட்டால்..?"

அது காத்திருப்பதைவிடக் கஸ்டமான காரியம்.

அதற்கும் பார்க்க காத்திருப்பதே மேல்.

"வருவன்" என்று சொன்னாளே..?!

வருவாளா..?!

இன்னும் கொஞ்சநேரம் பார்ப்போம்.

இப்படி மனதுக்குள் சொல்லிச்சொல்லியே இந்த சுழல் கதிரையில் உட்கார்ந்தவாறு, சுற்றிச் சுற்றியே ஒரு மணித்தியாலமாகப் போகிறது.

முன்னால் ஒளிர்ந்தவாறு இருந்த கணனித்திரையில் அவளது பெயருக்கு முன்னால் சிவப்பாகத்தான் அந்த அரைவாசி "மனிதப்பொம்மை"..

வேறு சில பெயர்களின் முன்னால் பச்சையாக நிறம்காட்டிய பொம்மைகளை கைக்குள் இருந்த 'எலி'யை நகர்த்தி அமத்தப் பிடிக்கவில்லை.

அவளது பெயரின் முன்னால் உள்ள அந்த 'பொம்மை' எப்போது பச்சையாவது.. எப்போது பேசுவது..வேறொன்றுமில்லை... இன்று மெசன்சரில் வந்து பேசுவதாக நேற்று சொல்லியிருந்தாள். அந்த மெசன்சரிலுள்ள பெயர்களின் முன்னாலுள்ள இடுப்பளவு மனிதப் பொம்மைகளின் நிறத்தை வைத்து, குறிப்பிட்ட பெயருக்குரியவர் 'ஓன்லைனா' அல்லது 'ஓவ்லைனா' என்பதை அறியமுடியும்.

அவளது பெயருக்கு முன்னாலுள்ள பொம்மை சிவப்பாகவே இருந்தது... அவள் ஓன்லைனில் இல்லை.. சிலவேளை 'புளொக்'பண்ணிவிட்டு வேறு யாருடனாவது கதைக்கிறாளோ?!

'புளொக்'பண்ணினாலும் சிவப்பாகத்தானிருக்கும்.

ச்சீ... அப்படி இருக்காது.. அவள் அப்படி ஏமாற்றமாட்டாள்.. கடந்த மூன்றுமாதமாக பேசுகிறாள்.. அடிக்கடி வந்து பேசுகிறாள்.. பெரிய மனுசிபோல.. பருவ மங்கைபோல.. பச்சிளங் குழந்தைபோல.. மனந்திறந்து பேசுகிறாள்... அடிக்கடி ஒவ்வொரு செய்தியுடன் வந்து சலிப்பான பொழுதுகளை எல்லாம் பஞ்சாகப் பறக்கவைத்து.. கணனித் திரை ஒன்று முன்னால் இருக்கிறதே என்ற எண்ணத்தை இல்லாதொழித்து.. தனிமையில் சிரிக்கவைத்து எண்ணத்தில் வண்ணக்கோலமல்லவா காட்டுகிறாள்?!

அவளை மெசன்சரில் காணாதவேளைகள் கனமாக மனதுள் நெருடுவதை உணர்ந்து தவித்த பொழுதுகள் கணமான நிகழ்வுகள்தான் எத்தனை.. எத்தனை..?!

"பிரின்ஸெசின்.."

"என்ன பெயர் இது?"

"ஏன் இந்த பெயருக்கு என்ன?"

"ஐயோ... ஒரு தமிழ் பெயர் கிடைக்கலியா.."

"ம்.. போடா.. சும்மா எல்லாத்துக்கும் தமிழ் தமிழ் என்று..."

"நாங்கள் தமிழ்தானேடி.. உன்ரை உண்மையான பெயரை மெசன்சரிலை போடலாந்தானே?!"

"அடப் பாவி.. நல்லாய் தெரிஞ்சவங்களுக்குத்தான் உண்மையான பெயர்.. மற்றவங்களுக்கு பிரின்ஸெசின்தான்.."

"ம்.. மற்றவங்களென்ன இளவரசர்களா?"

"லொள்.."

"ஐயோ... என்னடி லொள்..?"

"சிரிக்கிறன்.."

"ஓ.. லொள் எண்டால் சிரிப்பா.. நான் குரைக்கிறதெண்டு நினைச்சன்.."

"ஆ..."

"வள் மாதிரி இருந்துது.."

"லொள்.."

"ஐயோ.. லொள்ளை விட்டுட்டு... ஹே ஹே எண்டு சிரிடா.."

"போடா... அதென்ன ஹே ஹே?"

"அப்ப ஹீ ஹீ எண்டு சிரி.."

இவ்வாறு பொழுதுகளைப் புளகாங்கிதமாக்கிய உரையாடல்கள்தான் எத்தனை எத்தனை.. அத்தனையும் கட்டிப்போட்டு... சுழல்நாற்காலியில் இழுத்துப்பிடித்து இருத்திவைத்து அவளது வரவுக்காக காத்திருந்து பொழுதுகளை கரைத்து, கணனித் திரையே உலகமாகியதென்னவோ உண்மைதான்.

அறைக்கதவு 'படார்' எனத் திறந்துகொள்கிறது.

அம்மா..

"டேய் தம்பி.. எந்தநேரமும் கொம்பியூட்டரோடை என்ன செய்யுறாய்.. எக்கணம் கண் கெடப்போகுது.. ஒரு அளவுகணக்கு இல்லையே?"

எரிச்சலுடன் அம்மாமேல் சிறிது கோபம் வந்தது.

இந்த அம்மாவுக்கு நேரகாலம் தெரியாது... முக்கியமானவேளைகளில் வந்து உபதேசம் செய்துகொண்டிருக்கும். "வெளியாலை நல்ல வெய்யிலடிக்குது.. அறையுக்கை இருக்காமை சைக்கிளை எடுத்துக்கொண்டு உலாத்திப்போட்டு வரலாம்.."

"பொறுங்கோ.. நான் இப்ப முக்கியமான வேலையாய் எல்லே இருக்கிறன்."

"அப்பிடி உந்தப் படப்பெட்டீக்கை என்னதான் முக்கியமான வேலையோ.. முதல்லை முகத்தைக் கழுவிப்போட்டு வந்து ரீயை குடி.. பேந்து உதுகளை ஆராச்சி செய்யலாம்.."

"ஓம்.. நீங்கள் அங்காலை போங்கோம்மா.." என்று சிறிது சத்தமாக சொன்னேன்.

என் கண்களை ஒருகணம் ஊடுவிப் பார்த்தவள், அங்கிருந்து அகன்றாள்.

அவளது பார்வையில் பல அர்த்தங்கள். 'ஏதோ தப்பு செய்யுறாய்' என்று நினைப்பதுபோலிருந்தது.

'ஏதோ மாற்றத்திற்குள்ளாகிவிட்டாய்' என்று கேட்பதுபோலிருந்தது.

'முன்புபோல் நீ இல்லை' என்று கூறுவதுபோலிருந்தது.

மனம் சங்கடப்பட்டது.

அப்போது..

மெசன்சரில் அவளது பெயருக்கு முன்னாலிருந்த பொம்மை பச்சையானது.

"ஹி!!!!!!!!!!!!!!!!!!!!!"

"ஸ்ஸ்ஸ்.."

"என்ன ஸ்...?"

"சத்தம்போடாதே.. அம்மா பக்கத்திலை நிற்கிறா.."

"ஹே.. ஹே.. ஹே.."

"என்னடா சிரிப்பு.."

"அம்மாக்கு என்ன தெரியும்.. சும்மா இருடி.. படிக்கிறாய் எண்டு நினைப்பா.."

"லொள்.."

"சுகமா இருக்கிறியா.. நீ சுத்த மோசம்டி.."

"ஏண்டா..?"

"பின்னை என்ன.. உனக்காக இந்த கொம்பியூட்டருக்கு முன்னாலை எவ்வளவு நேரந்தான் காத்துக்கொண்டு இருக்கிறது..?"

"சொறிடா.. கொலிஜ் முடிஞ்சு வர லேட்டாச்சுது.."

"பொய் சொல்லாதை.. கொலிஜ் முடிஞ்சு எங்கையோ சுத்திப்போட்டு வாறாய்.. அப்பிடித்தானே?"

"ஐயோ.. உனக்கெப்படி தெரியும்.. மாலுக்கு போட்டு வாறன்.."

"மாலா? மால் எண்டால் என்ன?"

"உங்கை ஜேர்மனிலை மால் இல்லையா..?"

''இல்லையே...''

"போடா.. அப்ப எங்கை சாமான்கள் வாங்குவாய்.. நிறைய கடைகள் இருக்கிற இடம்தான் மால்.."

"ஓ.. அயன்கவ்சென்றும் எண்டு இங்கை சொல்லுவோம்.. அங்கை எதுக்கு போனாய்.. கனடா தமிழ் பெட்டைகளுக்கு ஊர் சுத்தாமல் இருக்க முடியாதாக்கும்.."

"ஏய்.. கனடா எண்டு கேலி செய்தால் கதைக்கமாட்டன்.."

"ஐயோ.. சும்மா சொன்னேன்டா.. மாலுக்கு போய் என்ன வாங்கினாய்?"

"மக்டொனால்ட்லை மில்க் குடிச்சுட்டு வாறேன்.."

"ஐயோ.. பத்தொன்பது வயசிலை உனக்கு இப்பிடி ஒரு ஆசையா?"

"லொள்.. ஏன் உனக்கு இல்லையா... உனக்கும் உந்த இருபத்தைஞ்சு வயசிலை வரலாம்.."

"எனக்கு உதிலை எல்லாம் ஆசை இல்லை.. உன்னோடை பேசிக்கொண்டிருக்கவேணும்.. அதுதான் ஆசை.."

"போடா..."

"என்னடி.."

"எனக்கும்தான்.. சொறிடா.. இப்ப போகோணும்.."

"ஐயோ.. நான் இவளவுநேரமாய் இருக்கிறன்.. நீ வந்துட்டு உடனை ஓடுறாய்.."

"ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு 'மோம்'கூட போறேன்.."

"ம்.."

"ஒரு ரண்டு வயது குட்டிக்கு பிறந்தநாள்..."

"ம்.."

"நல்ல சுட்டி கேள்... அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நானும் கட்டாயம் விஸ் பண்ணோணும்.. கோபமா?"

"நாளைக்கு கனநேரம் கதைப்போம்... ம்மாாாாாா"

எனக்குள் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வு சடுதியில் மறைந்துபோனது.

"கட்டாயம் நாளைக்கு வரவேணும்.."

"ஐயோ.. நாளைக்கு ஒரு அலுவல் இருக்கே.."

"என்னடி நீ.."

"அச்சா பிள்ளைதானே.. கோபிக்காதைடா.. அடுத்த திங்கள் கிழமை நிறைய கதைக்கிறன்.. ஓகே?!"

"சரி.. நீ சொல்லுறதுதானே சட்டம்.."

"லொள்... மண்டே கட்டாயம்.."

"ஏய் பிரின்செஸின்..."

"உண்மையான பெயரைச் சொல்லி கூப்பிடு.."

"பிருந்தா குட்டி..."

"லொள்.. என்ன சொல்லு.."

"அந்த சின்னஞ்சிறிய பேர்த் டே குட்டானுக்கு... என்ரை ஹப்பி பேர்த் டேயையும் சொல்லிடு.."

"ஓகே மிஸ்டர் தரன்.. சீ யூ லேட்டர்.. டாடா.."

"டாடாடி.."

பச்சைப் பொம்மை மீண்டும் சிவப்பாகியது.

இனந்தெரியாத வெறுமை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

--தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!