திங்கள், 29 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 4

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை.."

சுதா இப்படித்தான் சொன்னாள்.

பகிடிக்குச் சொல்லுகிறாளோ?

"ஏன்.. உனக்கு இப்ப எத்தினை வயது..?"

"இருபத்து மூன்று.."

"இருபத்து மூன்று வயதிலை வாழப் பிடிக்கேலையோ.. என்ன விளையாடுறியோ?"

உலகின் பல நாடுகளில் பஞ்சத்துக்குள்ளும் பிணிகளுக்குள்ளும் போராட்டங்களுக்குள்ளும் மனித உயிர்கள் வாழ்வதற்காக முயற்சித்தலையே வாழ்வாகக் கொண்டிருக்கும்போது... வளமான வசதியான நாடான கனடாவில் வசிப்பவளுக்கு இருபத்து மூன்று வயதில் வாழப் பிடிக்கவில்லை.

வசதிகளின் வீக்கம்கூட வாழ்க்கையின் மீதான பற்றுதலை தறித்துவிடுமோ?!

"ஏய் சுதா.. சும்மா இப்பிடி விசர்த்தனமாய் கதையாதை.. உனக்கு வாழ நிறையக் காலமிருக்கு.."

"போடா... அண்ணா... நீ என்னைமாதிரி இருந்தால் உனக்கு என்ரை நிலை புரியும்டா.. உனக்குமட்டும்தான்டா சொல்லுறன்.. எனக்கு வாழப் பிடிக்கேலை அண்ணா... வாழ்க்கையே வெறுத்துப்போச்சு... இனி எப்பிடி வாழுறது என்றே தெரியேலையடா..."

மெசன்சரில் ஒரு பறவையின் தீனக்குரலாகத் தென்பட்டது.

அவள் ஏதோ ஒரு கஸ்டத்துள் இருப்பதை உணர முடிந்தது. அந்தக் கஸ்டத்தை பகிர்வதால் ஆறுதலடைய விளைவதும் புரிந்தது. அப்படியான ஒரு உதவியை இந்த 'சற்' பொழுது செய்யுமானால்... அதுவும் என் மனதுக்கு நிறைவாகத்தானிருந்தது.

"சுதா.. அப்படி என்னடா கஸ்டம்? யாரையாவது காதலிக்கிறியா? வீட்டிலை 'மாட்டன்' எண்டுட்டாங்களா?"

இதைத் தவிர வேறு காரணம் ஏதென்ற நினைப்பு எனக்குள்.

"ம்... இப்ப காதலிக்கேலை.. முந்தி காதலிச்சன்.. இப்ப வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.."

"ஐயோ.. அதென்ன முந்தி பிந்தி... விளங்கேலை.. புரியும்படியாய் சொல்லன்..."

"சொல்லுறன்.. ஆனால் ஒன்று.. வேறை யாருக்கும் சொல்லக்கூடாது... ஓகே?"

"ஓகே.."

'எனக்குமட்டும் சொல்கிறாளாமே?!'

ஒரு சிலநாட்களின் பழக்கத்தில் ஏற்பட்ட நம்பிக்கை.

பெருமிதம் ஏற்பட்டது. அதேவேளை சகோர பாசம் மேலோங்குவதையும் அக்கணத்தில் உணரமுடிந்தது.

"அண்ணா.. நான் பதினைஞ்சு வயதிலை நோர்வேக்கு வந்தனான்."

"நோர்வேயிலை யாரிட்டை?"

"எனக்கு மூன்று அண்ணன்கள்.. நான்தான் கடைசி. ஒரேயொரு பெண்.. மூத்த அண்ணன் நோர்வேயில்தான் குடும்பமாக இருக்கிறான்.. அவன்தான் என்னை நோர்வேக்கு கூப்பிட்டவன்.."

"அப்ப மற்ற அண்ணன்மார்..?"

"அவங்கள் இங்கை கனடாவிலை குடும்பமாய் இருக்கிறாங்கள்.."

"அப்ப நீ யாரோடை..?"

"ஐயோ.. நான் அம்மா அப்பாவோடை பிறிம்பா இருக்கிறன்டா.. இடேக்கை குழப்பாமல் நான் சொல்லுறதை இப்ப கேட்கிறியோ இல்லையோ?"

"என்னடா நீ... எல்லாத்தையும் அறியத்தானே வேணும்.. சரி சொல்லு.."

"பதினைஞ்சு வயதிலை நோர்வேக்கு வந்து படிக்கப் போனன்.. அங்கை எனக்கும் சுரெஸ_க்கும் காதல் உண்டாச்சு.."

"ஆகா.. பதினைஞ்சிலை தொடங்கியாச்சா.. ம்.. சொல்லு.."

"பிறகு அண்ணன் வீட்டிலை சரியான பிரச்சினை... சுரெஸின் வீட்டிலையும் பிரச்சினை.. நாங்கள் தனியா வீட்டைவிட்டுப் போயிட்டம்.."

"ஐயையோ.. பதினைஞ்சு வயதிலையா?"

"அப்ப வீட்டாலை வெளிக்கிடேக்கை பதினாறு வயது.. சுரெஸின்ரை தெரிஞ்ச நண்பர் வீட்டிலைதான் இருந்தோம்..."

"ம்.."

"பதினெட்டு வயதிலை 'ரிஜிஸ்ரர்' செய்தோம்.."

"குட்.. நல்லம்... அப்ப காதல் கலியாணத்திலை வந்திட்டுது என்று சொல்லு.. சந்தோசம்.."

"போடா.. நீயும் உன்ரை சந்தோசமும்.. மண்ணாங்கட்டி.."

"என்னடா நீ.. ஓ... பதினைஞ்சு வயதிலை வந்தனிதானே.. அதுதான் மண்ணாங்கட்டியை தெரியுதாக்கும்.. "

"ஐயோ... என்னடா நீ.. நான் விசர்லை இருக்கிறன்.. நீ ஒன்று..."

"சரி சரி.. சொல்லு.."

"இரண்டு வருசத்துக்கு முந்தி 'டிவோர்ஸ்' எடுத்திட்டம்.."

"என்ன..?"

"ஓம்.."

அதிர்ச்சியாக இருந்தது.

பதினைந்தில் காதலித்து, பதினாறில் உறவுகளை உதறி வெளியேறி, பதினெட்டு வயதுவரை காத்திருந்து பதிவுத் திருமணம்செய்து தற்போது விவாகரத்தில்...!

நம்பக் கஸ்டமாக இருந்தது.

'நம்பு' என்பதுபோல் மெசன்சரில் வாக்குமூலமாக சுதா.

"அண்ணா.. "

"..... "

"அண்ணா.. என்னடா மௌனம்? என்னோடை கதைக்கப் பிடிக்கேலையா?"

"ஐயோ.. என்னடா நீ.. ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?"

"இல்லை.. அப்பிடித்தான்டா.. 'வெட்டிங்', 'பேர்த்டே பார்ட்டி' என்று போனால் வேறைபக்கமாய் பார்த்துக்கொண்டு நிப்பாங்கள்.. நான் சிரிச்சாலும் சிரிக்காமை.. என்னை ஏதோ வினோதமான பொருளைப் பார்க்கிறமாதிரி பார்க்கிறாங்களடா... அதாலை இப்ப நான் தமிழாக்களின்ரை விசேசங்களுக்குப் போறதில்லை.."

"நான் அப்பிடி இல்லை.. இந்த வயதிலை உனக்கு இப்பிடியொரு கஸ்டமா என்று யோசிக்கிறன்.."

"போடா அண்ணா... சின்ன வயதிலை காதல் கலியாணம் என்று அவசரப்பட்டதாலை வந்தது அண்ணா.. இப்பதான் எல்லாம் விளங்குது.. ம்.. காலம் கடந்து விளங்குது... பொறுப்பில்லாத வயதிலை சும்மா உணர்ச்சியை காதல் என்று எண்ணி... எங்கடை பலவீனங்களை பார்க்க மறந்திட்டம்... வயது வந்தபோதுதான் பலவீனங்கள் எங்கடை இடைவெளியை அதிகமாக்கிப்போட்டுது..."

"ம்.."

"அதுமட்டுமில்லை அண்ணா... நான் அண்ணா வீட்டிலை நோர்வேயிலை இருக்கேக்கை.. அவை வேலைக்குப் போனால்... நான்தான் 'ஸ்கூலாலை' வந்து எல்லா வேலைகளும் செய்யவேணும்.."

"ஓ..."

"என்ன செய்தாலும் அண்ணி குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பா... அந்தநேரத்திலை சுரேஸின் காதல் எனக்கு மருந்துமாதிரித்தான் இருந்தது... அதை எப்படியடா சொல்லறது... வியர்வைக்கு 'பான்'போடுறதென்று..?"

"ம்.. ஒருவகை ஆறுதல் என்று சொல்லலாமா?"

"என்னவோ... ஆனால் கலியாணம் செய்த பிறகு அவனும் மாறீட்டான்... என்னை வேலைக்காரிமாதிரி வீட்டிலை விட்டுப்போட்டு... ஊர் சுத்தினான்.."

"ம்..."

"அதுவும் சிறைதான் அண்ணா... அதுக்காலை விடுபட்டு கனடாவுக்கு வந்து அப்பா அம்மாவோடை இருப்போம் என்றால்... இங்கும் தனிமைதான்டா அண்ணா.. தமிழ் சனங்கள் ஏதோ வினோதமாய் பார்க்கிறதை தாங்க முடியேலை.."

"ஐயோ.. உனக்குத்தான் அப்பா அம்மா பக்கத்திலை இருக்கிறாங்களே.. என்னடா நீ..?!"

"இங்கை கனடாவிலை இருக்கிற ரண்டு அண்ணன்களும்தான் அவையை கூப்பிட்டவங்கள்.. பகல்லை அப்பா ஒரு அண்ணன் வீட்டையும்.. அம்மா மற்ற அண்ணன் வீட்டையும் போகவேணும்.. அவையின்ரை வேலைகளை பார்க்க... நான் தனியத்தானே வீட்டிலை.."

"ஓ... பெற்று வளர்த்து ஆளாக்கி.. அந்த ஆளாகியோர் பெற்றவர்களான பிறகும் அவர்களுக்காக தேயும் வயோதிகங்கள்.. பெற்ற கடனை மறந்து வரவழைத்தவற்றை கடனாக்கி குளிர்காயும் உறவுகள்..."

அடிமனதில் வேதனையொன்று பீறிட்டது.

அவர்களுக்காகவா.. அல்லது அவளுக்காகவா? புரியவில்லை.

மூன்று அண்ணன்களுக்கு ஒரு தங்கையாகப் பிறந்தும்.. "அண்ணா.. எனக்கு வாழவே பிடிக்கேலை" என்று முகமறியாத ஒருவனை அண்ணனாக்கி ஆறுதல் தேடவிளையும் அந்த 'சற்' உறவு வெகுநேரமாக எனக்குள்... "வாழப் பிடிக்கேலை அண்ணா.. வாழப் பிடிக்கேலை" எனக் கதறுவதுபோலிருந்தது.

அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.

"ஹலோ.. அத்தான்.. நான் சாரு..."

"சொல்லு..."

"அடுத்த கிழமை நாங்கள் உன் வீட்டுக்கு வாறோம்.. ரண்டு கிழமை அங்கேதான்..."

எனக்கு இடிவிழுந்ததுபோலிருந்தது.


-தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!