வியாழன், 18 ஏப்ரல், 2013

மாறவில்லை

ரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்று வயோதிபர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஊரின் பெயரையே சொல்லுவதாக இல்லை.

சும்மா ஒரு குறியீட்டுக்காக ஊர் அல்லது கிராமம் என்றே வைத்துக்கொள்ளுவோம். ஊர் அவ்வளவு பின்தங்கியும் இல்லை. அவ்வளவு முன்னேறியும் இல்லை- ஜேர்மனியில் பெண்விடுதலை என்று முழக்கமிடும் அநேகமான குடும்பப் பெண்களைப்போல.

பத்து வருட காலம்.

இந்த ஊரைவிட்டு ஜேர்மனிபோய், இப்போதுதான் மறுபடியும் இந்த ஊரை மிதிக்கவேண்டும் என்ற எனது எண்ணம் நனவாகியுள்ளது.

குண்டும் குழியுமாய் தார் போட்டதற்கான சுவடே தெரியாமல், ஏதோ ஒரு மண்வீதியைப் போலிருந்த அந்த அகலமான பிரதானவீதியில் தானும் குலங்கி, என்னையும் குலுக்கி, வயிறு வலிக்கவைத்த ஆட்டோ, அந்தப் பாடசாலையைக் கடக்கும்போது....

பத்துவருடங்களுக்கு முன்பு கம்பீரமாக நிமிர்ந்து நின்று, அந்தத் தொகுதியிலேயே பெயர்பெற்ற- நான் படித்த பாடசாலை இப்போது கூரை சிதைந்து அரையும்குறையுமாய் சிதைந்த ஓவியமாய் என் மனதைக் கலங்கவைத்தது.

காற்சட்டை இடுப்பிலிருந்து நழுவ, ஒற்றைக் கையால் சிலேற்றையும் மற்றைய கையால் காற்சட்டையையும் பிடித்துக்கொண்டு, மூக்கில் வழியும் சளியை எப்படித் துடைப்பது என்று புரியாமல்போய் வகுப்பாசிரியரிடம் அடி வாங்கியதிலிருந்து, கிட்டிபுள்ளு கிளித்தட்டு என்று வகுப்புக்கள் மாறமாற விளையாட்டுக்களும் மாறியது மட்டுமா...?!

உயர்தர வகுப்பில் நடிகர் கமலைப்போல நடந்து, பலரின் கண்களைக் கவரும் வசந்தி என்னையும் கவனிக்கிறாளா என்று பார்த்து, அவளின் அலட்சியத்தில் குறுகிப் பின் கோபப்பட்டு, எப்படி வலைவிரிப்பது என்று புரியாத ஏக்கத்தில் படிப்பதை மறந்து துடித்தது....!

எல்லாவற்றுக்கும் சாட்சியான பாடசாலையின் கோலமே என் மண்ணின் தற்போதைய நிகழ்வுக்குக் கட்டியமாக இருந்தது.

அந்தப் பள்ளிப் பருவநாட்களில் என்னைப் படாதபாடு படுத்திய வசந்தி இப்போது எப்படி இருப்பாள்?!
குடும்பமும் குடித்தனமுமாக.... சரீரம் தளர்ந்து இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாக....?

என்ன எண்ணம் இது?
எல்லோரது வாழ்விலும் இடம்பெறும் நிகழ்வுதானே இது?!
 
அன்று.... ஊருக்குள் ஆமி வரப்போகிறான் என்பதை அறிந்த அம்மா கூச்சல்போட்டாள்.
"அப்பவும் சொன்னனான் பொடியளோடை திரியாதை.... சந்தியிலை நிக்காதையெண்டு. அதுமட்டுமே.... என்னவோ நோட்டீசு கீட்டீசு எண்டெல்லாம் ஒட்டிக்கொண்டு திரிஞ்சாய். இப்ப ஆமிக்காரங்கள் வந்திட்டாங்கள். ஆராலும் எரிச்சல்காரங்கள் கோள்மூட்டினாங்கள் எண்டால் இந்தக் குடும்பமே நாசமாய்ப்போம்...."

தலையில் அடித்து ஒப்பாரிவைத்த அம்மாவின் வார்த்தைகளால் பயந்துவிட்டேன். நல்லவேளை.... எதுவித அசம்பாவிதமும் நிகழவில்லை. ஆனாலும் பயம் போகவில்லை.

ஜேர்மனிக்கு வந்துவிட்டேன்.

வந்து குளிரிலும் வெய்யிலிலும் தோட்டத்திலும் 'றெஸ்ரோறண்ட்'டிலும் தொழிற்சாலைகளிலுமாக உடலைவாட்டி 'மார்க்' என்ற பணத்தைப் பெற்று, ஆறுமாத விசாக்களுடனும் இரண்டுவருட விசாக்களுடனும் காலங்களைத் தனிமையில் நகர்த்திப் பத்து வருடங்கள் சென்றுவிட்டன.

வெளிநாடு கசந்தது.

இயந்திரமயமான மனிதசக்தியை உறிஞ்சும் வாழ்க்கையில் அர்த்தமில்லை என்று தோன்றியது.

நிறவெறியும் மாற்றான் என்ற அலட்சிய மனப்பான்மையும் காரணமில்லாமல் கூனிக்குறுக வைத்தது.

பஸ்ஸில் ஏறி வெள்ளைத்தோல்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தால், அவர்கள் புழுவைப்போலப் பார்ப்பதையும் அப்பால் விலகுவதையும் நோக்கியபோது, என்னையும் அறியாமல் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது.

எவ்வளவுகாலந்தான் இப்படி வாழ்ந்து சிறுகச்சிறுகத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளமுடியும்?

ஒரு பெண்ணைத் தேடி மனைவியாக்கிக்கொண்டால் தனிமை போகலாம். ஆனால் முழுக் குடும்பமும் அல்லவா தாழ்வு மனப்பான்மையால் கஸ்டப்படும். இதற்கு ஒரேவழி.... தாயகம் செல்வதுதான்!!

நிலைமை சுமூகமாக இல்லை.
எனினும் நான் அந்நியமானவனாக வாழமாட்டேன்.
 
ன்று பயந்து கோழையைப்போல வெளியேறியதற்குப் பரிகாரமாக இன்று என் மக்களோடு, கஸ்டமோ நஸ்டமோ அவர்களுடன் பின்னிப்பிணைந்து அவர்களில் ஒருவனாக வாழ முடிவெடுத்து, தற்போது என் தாய்மண்ணில் எனது வீட்டை நோக்கி 'ஆட்டோ'வில் சென்றுகொண்டிருக்கிறேன்.

திடீரென ஒரு இடத்தில் 'ஆட்டோ" நிற்கிறது.

என்னவாக இருக்கும்...?

சோதனை இடுகிறார்களோ?!

எதிரில் ஒரு பிரேதத்தைத் தூக்கியவாறு ஒரு கூட்டம் ஆட்டோவைக் கடந்து செல்கிறது.

யாராவது தெரிந்த முகங்கள் தென்படுகிறதா என்று பார்க்கிறேன்.

பத்துவருட  இடைவெளியும்  போராட்டச்  சூழலினால்  ஏற்பட்ட உருவ மாற்றங்களும் பலரைச் சந்தேகமாக அடையாளம் காட்டினாலும், சந்தேகமில்லை.... அவன் வேலுச்சாமிதான்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன்.

தப்பு.... தப்பு.... இந்தப் போராட்டப்பூமியில் மக்கள் எல்லோரும் ஒரு தியாகப் பரிமாற்றத்துக்குத் தயாராகி, அழிவுகளையும் அவலங்களையும் எதிர்நோக்கத் தயாராக உள்ளனர் என்றானவேளையில்....

இந்த மண்ணில் சாதி என்றொரு வேர் புதைந்து கிடக்க முடியுமா என்ன?!

"வேலுச்சாமி....!" என்று அழைத்தேன்.

'ஆட்டோ'வுக்குள் குனிந்து பார்த்தவன் திகைத்தான்.
"என்ன திடீரெண்டு வந்திட்டீங்கள்?" என்று திகைத்தான்.

"ஆர் வேலுச்சாமி செத்தது...? என்னவாலும் பிரச்சினையே?"

"அது.... என்ரை மச்சாள்பெட்டை செவ்வந்தி தற்கொலை செய்துபோட்டாள்" என்று கண்கள் பனிக்கக் கூறினான்.

நாட்டு அழிவுகளுக்குள் தற்கொலை வேறு தமிழ் உயிர்களைக் கொண்டுபோகிறது.

"அப்பிடி என்னப்பா கஸ்டம்?"

"என்னத்தைச் சொல்லுறதுங்க.... வெள்ளாளப் பொடியன் ஒருத்தனைக் காதலிச்சாள். சரிவருமே.... அறிவுகெட்ட கழுதை.... செத்துப்போய்விட்டாள்!"

வேலுச்சாமி போய்விட்டான்.

சாதி இந்த அழிவுகளுக்கிடையிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சாதிக்குச் சாவுதர எந்த ஆயுதத்தாலுமே முடியாது.

வெளிநாட்டில் அந்நியப்பட்டு எந்த மக்களோடு பின்னிப்பிணைந்து வாழலாமென்று வந்தேனோ- அந்த மக்களோ சாதி என்ற வட்டத்துக்குள் அந்நியமாகி, அன்றுபோல்தான் இன்றும் வாழ்கிறார்கள்.

ஏன் வந்தேன் என்றிருந்தது.
*****
(பூவரசு-வைகாசி, ஆனி'1993)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!