ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 3

வளேதான்... பிருந்தா..

வந்துவிட்டாள்.

'வருவாளா, வருவாளா' என்று கணணியின் முன்னால் காக்கவைத்து வந்துவிட்டாள்.

"ஜோ..!"

காத்திருந்து, காத்திருந்து பூத்துப்போன விழிகளுடன் சோர்ந்திருந்த என்னை கதிரையில் துள்ளி நிமிரவைத்தது அவளது அழைப்பு.

முகம் தெரியாது... குரல் தெரியாது... ஊர் தெரியாது... வெறுமனே பெயர் வயது நாடு... இதுவும் அவள் சொல்லி அறிந்தவை...!

எனினும் அவளின் வரவால் என்னுள் இனம்பரியாத உணர்வு பீறிட்டெழுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஹேய்! என்னடா செய்யுறாய்?"

"சும்மா இருக்கிறேன்.. நீதான் வாறன் வாறன் என்று ஏமாத்திக் கொண்டிருக்கிறாய்?"

"பொய் சொல்லாதை.. வேறை ஆக்களோடை 'சற்'பண்ணுறாய்.. அப்பிடித்தானே?"

"இல்லைடா.. வேறை யாரை தெரியும்.. நீதானே என் ஒரேயொரு மெசன்சர் சிநேகிதி.."

"பொய் சொல்லாதை..."

"என்ன பொய்..?"

"எனக்காகமட்டும் காத்திருக்கிறியா? போய்தானே?"

"ஐயோ... சத்தியமா சொல்லுறன்டா... உனக்காகத்தான் கொம்பியூட்டருக்கு முன்னாலை உட்கார்ந்திருக்கிறன்.. நம்பமாட்டியா?"

"ம்.. நம்புறன்..."

"அப்ப ஒரு சத்தியம் தா."

"என்னடா?"

"வாறன் என்று சொன்னால்... சொன்ன நாளுக்கு... சொன்ன நேரத்துக்க வரவேணும்..."

"ஐயோ... என்னடா நீ..."

"முடியாவிட்டால் முடியாதென்று சொல்லு.. பரவாயில்லை..."

"ஐயோ.. உனக்கு எப்படி விளங்கப்படுத்துறது... பள்ளிக்கூட 'ஹோம்வேர்க்'... படிப்பு... ஸ்போர்ட்ஸ்.. டான்ஸ் கிளாஸ்.... அப்பிடி நேரம் கிடைச்சு வந்தால்.. பக்கத்திலை அம்மா வந்து நிப்பா.. அவவுக்கும் நான் கொம்பியூட்டரிலை படிக்காமை என்னவோ செய்யுறன் என்று சந்தேகம் வந்திட்டுது..."

"உனக்கென்ன.. நீ பொடியன்.."

"நீயும் பொடியன்தானே?"

"என்னடா.. பொடியன்மாதிரியா இருக்கிறேன்..?"

"ஐயோ.. நான் சும்மா பகிடிக்குடா.. நீ பேசும்போது.. ஒரு சின்னப்பிள்ளை பேசுறமாதிரி இருக்குடா.."

"............"

"உரிமையோடை கூப்பிடுறது... கோபமாய் பேசுறது... செல்லமாய் பேசுறது... உண்மையிலேயே பத்தொன்பது வயசிலை சின்னப்பிள்ளை மாதிரித்தான் இருக்கிறாய்.."

"..........."

"அந்த சின்னப்பிள்ளைத்தனம்தான் எனக்கு பிடிச்சிருக்கு... அதாலைதான் உனக்காக நான் ஒவ்வொருநாளும் காத்திருக்கிறன்..."

".........."

திடீரென அவள் அமைதியாயிருப்பது புரிந்தது. சிலவேளை போய்விட்டாளோ?

"ஹலோ.."

"........."

"பிருந்தா... இருக்கிறியா..?"

"ம்..."

"என்ன பேச்சைக் காணேல்லை..."

"பேசப் பிடிக்கேலை.."

"ஐயையோ... என்ன தப்புச் செய்தேன்டா?"

"தப்புத்தான்.. எப்பிடி என்னை நீ சின்னப்பிள்ளை என்று சொல்லலாம்? எனக்கு பத்தொன்பது வயதென்று சொன்னேன்தானே?"

"இந்த சின்ன விசயத்துக்கடா கோபம்.. நான் என்னவோ ஏதோ என்று பயந்திட்டேன்.."

"இது சின்ன விசயமா.. இனிமேல் சின்னப்பிள்ளை என்று சொன்னால் உன்கூட பேசமாட்டேன்.."

"சரி.. சத்தியமா இனி சொல்லமாட்டேன்.. போதுமா?"

"போதும்.. ஏன்டா.. நான் கதைக்கிறது பத்தொன்பது வயது பெண்போலை இல்லையா..?"

"ஐயோ.. என்னை விடு தாயே.. எல்லாம் பெரிய பெண் கதைக்கிறமாதிரித்தான் இருக்கு... ஏதோ என்னோடை கதைச்சுக் கொண்டிரு.. அது போதும்.."

"லொள்.. சரியான எம்மெம்(MM) .."

"எம்மெம்மா?"

"லொள்.. எம்மெம்தான்.."

"எம்மெம் என்றால் என்னடா?"

"எம்மெம் என்றால் மாங்காய் மண்டை... லொள்.."

"அப்ப நீ ரீரீ(TT).. ஹா.. ஹா.."

"அது என்ன ரீரீ...?"

"ரீரீ என்றால் தேங்காய் தலை... ஹா.. ஹா.."

"லொள்.. என்னடா சிரிப்பு உது?"

"இதுவா.. இதுதான் தரனின் சிரிப்ப.. அது சரி.. என்ன ஸ்போர்ட்ஸ் செய்யிறாய்..?"

"நெற்போல்டா.. கொலிஜ் ரீமிலை இருக்கிறேன்டா.."

"நெற்போல் விளையாட உயரமாயெல்லோ இருக்கோணும்?"

"நான் உயரம்தான்.."

"அம்மாடியோவ்.. அவ்வளவு உயரமா... கனடாவிலை தமிழ் பெண்கள் எல்லாம் உயரமா? ஹா.. ஹா.."

"லொள்.. போடா.."

"சரி.. டான்ஸ் பழகிறாய்.. எப்பிடியடி... தமிழ் தெரியாதென்று முந்தி சொன்னாய்?"

"ஐயோ.. இப்ப தமிழிலைதானே எழுதுறன்.."

"இது தமிழா... தமிழை இங்கிலீசிலை எழுதுறாய்... இது தமிங்கிலீசு.."

"லொள்... இப்படித்தான்.. டான்ஸ் பாட்டை இங்கிலீசில் எழுதி பழகுறேன்டா.."

ஓ... வருங்காலத்தில் புகலிட நாடுகளில் தமிழ் ஆங்கிலத்தினூடாக கடிதங்களாகவும்.. மெயில்களாகவும் புதுத்தோற்றமாகி... வேர் அறுந்த மரமாகத் தள்ளாடி உக்கப் போகிறதா?

"ஏன்டா... தமிழ் படிச்சால் என்னவாம்?"

"ஐயோ.. போடா... பேசத் தெரியுந்தானே... கதைக்கிறது விளங்குதுதானே... இதுக்கும் மேலை என்னத்தையடா படிக்க... நீ சரியான எம்மெம்தான்டா.."

"ஹேய்.. உனக்கு என்ரை அக்காவை அறிமுகப்படுத்தட்டா?"

"அக்காவா... நீ ஒரு பிள்ளை என்று சொன்னாய்.. இப்ப என்னடி அக்கா?"

"நீ சரியான எம்மெம்தான்.. இது என்ரை 'சற்' அக்காடா.."

"ஓ... 'சற்' அக்கா.. அண்ணா என்றெல்லாம் இருக்கா?"

"உனக்குத் தெரியாதா? 'சற்' அக்கா.. 'சற்' லவ்வர்... தம்பி என்றெல்லாம் இருக்கு.."

"ஓ..."

"என்ன ஓ... வாயை பிளக்காதை... பூச்சி போகப் போகுது... லொள்.."

"நான் உன்னோடைதானே கதைக்க இருக்கிறன்.."

"என்னோடை எப்பவும் கதைக்கலாம்தானே... உனக்கு கொஞ்சப் பேரை அறிமுகப்படுத்துறன்டா.. நான் இல்லாவிட்டால் நீ அவங்களோடை கதைக்கலாம்தானே..?"

"ஏன்.. நீ எங்கை போறாய்.."

"........"

"ஐயோ.. என்ன பேச்சை காணேலை..."

"அப்பிடித்தான்.. சும்மா சும்மா கேள்விகேட்டால் பேசமாட்டன்.. இப்ப அக்காவை உனக்கு அறிமுகப்படுத்தவா.. உன் மெசன்சரிலை 'அட்' (add)பண்ணவா.. சொல்லு.."

"ஐயோ.. என்னடி நீ... உன்னோடைமட்டும் கதைக்கலாம் என்றால்.. யார் யாரையோ 'அட்'பண்ணுறன் என்கிறாய்.."

"ப்ளீஸ்டா... உனக்கு என்னிலை அன்பிருக்கா.. இல்லையா...?"

என்னுள் இனம்புரியாத உணர்வு. முகம் தெரியாத உறவொன்று கணனிக்குள்ளால் அன்பைப்பற்றிக் கேட்கிறது. நான் எங்கே போகிறேன் என்று எனக்கே புரியவில்லை.

"சரிடா.. 'அட்'பண்ணு..."

என் மெசன்சரில் புதுவரவு ஒன்று உதயமாகியது.

"வணக்கம் அண்ணா... நான் சுதா..."

"வணக்கம் சகோதரி... நான் தரன்.. ஜேர்மனி.."

"தெரியும்.. பிரின்செசின் சொன்னாள்.."

"பிரின்செசின்.. ஐஸ்.. இவளுக்கு எவ்வளவு 'சற்' பெயர்?"

"லொள்.. நான் எத்தினை பெயரும் வைப்பன்.. நீ பிருந்தா என்று கூப்பிடு.. லொள்.."

அதன் பின்னர் சுதாவின் தொடர்பும் தொடர்ந்தது. அடிக்கடி மெசன்சரில் வந்தாள்.... பிருந்தா இல்லாத வேளைகளில் அவளுடனான உரையாடல் வளர்ந்தது.

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை..."

ஒருநாள் இவ்வாறுதான் சுதா ஆரம்பித்தாள்.


-தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!