சனி, 27 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 2

ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள்தான்.

பதினைந்து வயதுவரை ஊர் வாழ்க்கை. அதனால், ஊரில் சந்திகளில்... குட்டையான மதில்களில் குந்தியிருந்து வம்பளக்கும் இளைஞர்களைக் கண்டிருக்கிறேன்.

வயல்வெளி நடுவே அமைந்துள்ள நன்னீர் கிணறுகளைச் சுற்றிநின்று அரட்டையடிக்கும் இளம் பெண்களையும் கண்டிருக்கிறேன்.

அவர்களின் கையால் தண்ணீர் குடிக்கவென்றே அலையும் வாலிபர்களையும் கண்டிருக்கிறேன்.

அப்படித்தான் இதுவும்.

அங்கே வெளியில் நிகழ்ந்தவை இங்கே வீட்டினுள்ளே.

ஒரு கதிரையில் குந்தியிருந்து அரட்டை.

தனியாக கும்பலாக தமிழாக... ஆங்கிலத் தமிழாக... ஊர் கடந்து நாடு கடந்து.. ஒரு உலகமே சந்தியாகி... குட்டை மதிலாகி.. நன்னீர்க் கிணறாகி ஒரு சின்னஞ்சிறிய கணனித் திரைக்குள்ளே அடக்கமாகி அதுவே தற்போது எனது பொழுதாகி சிலவேளை தொழுதலாகி எனும்போது.. நினைக்கவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

முகம் தெரியாத வரவுகள்... விசாரிப்புகள்.. கேலிகள்... பகிடிகள்... குறும்புகள்... அதனால் உருவாகும் உறவுகள்... பாசங்கள் என்று நிற்பவையும், அறுபவையுமாக தினமொரு பொழுதுக் கழிப்பு.

அது ஒரு பிரபலமான தமிழ் 'சற்' அறை.

சுந்தர்தான் அறிமுகப்படுத்தினான்... 'இன்ரர்நெற் வைச்சுக்கொண்டு ஆறு மாசமாய் என்னடா செய்யிறாய்' என்ற மேதாவித்தனக் கேள்வியுடன்..!

கொஞ்சநாள் அவன்தான் என்னுடைய 'சற்' ஆசான். 'எவ்வாறு சற் அறைக்குள் போவது? எவ்வாறு உரையாடுவது.. எப்படி அவர்களுடன் தனியறையில் உரையாடுவது?'... இப்படிப் பல விசயங்களுக்கு ஆசான்.

விளையாட்டு, ஊர் சுற்றல், சினிமாப் பாட்டுச் சீடிகள் என்று திரிந்த என்னை கதிரையொன்றில் மணித்தியாலக்கணக்காக அசையாமல் அமர்த்திவைத்த பெருமை அந்த 'சற்' அறைக்குத்தான் சேரும்.

முதலில் கொஞ்சநாள் வித்தியாசமாகத்தான் இருந்தது.

"தமிழ் சற்."

கதைகளோ ஆங்கிலத் தமிழ். தமிழை ஆங்கில எழுத்துக்களுள் மிக வேகமாகவே நுழைத்துக் கதைத்தார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால்.. 'எல்' என்ற ஒரேயொரு ஆங்கில எழுத்தால்... ல, ழ, ள-வில் வரும் சொற்களை சுலபமாக இனங்கண்டு உரையாடினார்கள்.

ஒரு கிழமை உருண்டோடியது. ஒரு நட்பும் கிடைத்தவாறாக இல்லை.

"ஹலோ" என்றால் "ஹலோ." அவ்வளவுதான்.

என்னை விலத்திவிட்டு ஏனையோர் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

சினிமா... காதல்..

காதல்.. சினிமா...

இதுதான் அங்கே பெரும்பாலான உரையாடல்கள்.

காதலிலும் சினிமாதான் குந்திக்கொண்டிருந்தது.

ஆனால் சுவாரசியமாக இருந்தது. பொழுது போவதே மறந்துபோனது.

எனக்கும் அவர்களுடன் கதைக்கவேண்டும்போல அவா. அது என்னை ஒரு கிழமையாகவே அங்கு தினமும் ஈர்த்தது.

ஆனால் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே கருதுவதாகத் தெரியவில்லை.

'எனக்கு சற்றிலை உரையாடத் தெரியவில்லையோ?'

சற்று ஏக்கமாகக்கூட இருந்தது.

ஒருநாள்..

சிலர் ஒருவனை ஆங்கிலம் தெரியாது என கேலி செய்துகொண்டிருந்தார்கள்.

எனக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்களை திட்டவும் முடியவில்லை. திட்டினால் எட்டிப் போய்விடுவார்கள் என்ற பயம்.. எனக்கு சற் நண்பர்கள் தேவை.. அதனால் விரட்ட முடியாது.

எனினும் அவர்களின் கருத்துக்கு மௌனமாக இருந்து வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை.

"பிரண்ட்ஸ்.."

"இங்கிலிஸ் நல்ல பாசைதான்.. அதுக்காக தமிழை கூடாதென்று சொல்லாதீங்க.. 'இன்று உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்?'.. இதை யாராவது இங்கிலீசிலை சொல்லுங்கோ பார்ப்பம்.. "

சிறிதுநேரம் மௌனம்.

எவருமே பதில் சொல்லவில்லை.

"இதுக்குத்தான் சொல்லுறது.. மொழியை பழிக்கக் கூடாதென்று.."

பெருமையாக எழுதினேன்.

அப்போது...

"ஹீ ஜோ.."

என்னைத்தான் கூப்பிட்டாள்.

எனது 'சற்' பெயர்தான் ஜோ.

"ஹலோ..."

"ஹே... உன்னை ஒரு கிழமையா பார்க்கிறேன்.. என்ன அமைதியா இருக்கிறாய்.."

இனம்புரியாத சந்தோசம்.

ஒரு கிழமையாகப் பார்க்கிறாளாமே?!

இருக்காதா?!

"இந்த 'சற்' சுத்த 'போர்'".

"நீ கதைக்காமல் இருந்துகொண்டு 'போர்' என்று சொல்லுறாய்.."

"ம்.. யாரோடை கதைக்க?"

"சும்மா பேசு.. பேசுவாங்கள்.."

"அப்படி பேச தெரியாதே?"

"ஓ.. அதுக்கும் படிக்கவேணுமா?... லொள்.."

"இப்ப ஒரு கிழமையாதான் இங்கை வாறேன்.. இது புதுப்பழக்கம்.."

"இதுக்கெதுக்கு பழக்கம்..? சும்மா பேச வேண்டியதுதான்.. விரும்பினவங்கள் உன்னோடை பேசுவாங்கள்.. சிலர் உன்னை ஞாபகம் வைச்சிருப்பாங்க.."

"ஓ.. நான் உங்களை மறக்கமாட்டன்.."

"லொள் (lol).. ஏன்?"

"நீங்கதான் முதன்முதலா என்னை கூப்பிட்டு கதைக்கிறீங்கள்.."

"ஓ... "

"உங்கடை பெயர் என்ன?"

"ஐஸ்.."

"ஐயோ.. நான் உண்மையான பெயரை கேட்கிறன்.."

"அதை இங்கை சொல்ல முடியாது.."

"அப்ப எங்கை..?"

"ம்... தனியறைக்கு வா.."

எங்கோ வானத்தில் பறக்க ஆரம்பித்த உணர்வு.

அவளின் பெயரை 'எலி'யால் அழுத்த.. தனியறையில் நானும் அவளும்.

"என்னடா சுகமா இருக்கிறியா?... ம்.. நான் வாடா போடான்னுதான் கதைப்பேன்.. கோபப்படுவியா?"

எனக்கு சிரிப்பாக வந்தது.

"இல்லையே... நீ எப்படி வேண்டுமானாலும் கதை.."

இப்படித்தான் அவளது தொடர்பு 'சற்' அறையில் ஆரம்பித்து.. 'மெசன்சர்'வரை இந்த மூன்று மாதத்தில் வளர ஆரம்பித்தது.

இன்று புதன்கிழமை ஆகிவிட்டது.

திங்கள் கிழமை வந்து பேசுவதாகக் கூறியவளை இன்றுவரை காணவில்லை. நேற்றிலிருந்து எனது மனம் அமைதியாகவில்லை.

அவள் வந்தாளா என்றுகூடத் தெரியவில்லை.

வைரஸ்.. வோர்ம்ஸ் ப்லாஸ்ரர்..(worms blaster) எனது கணனிக்குள் புகுந்து.. அப்பப்பா.. இரண்டு நிமிடத்துக்கொரு தடவை கணனி நிற்பதும்.. நான் மீண்டும் அதை ஆரம்பிப்பதுமாக... வைரஸை தேடி அழித்து.. அது மீண்டும் வராமல் கவசம் போடுவதற்குள் புதன்கிழமை ஆகிவிட்டது.

எனினும் அன்பு நண்பர்களின் உதவியால் கணனியை மீட்டுவிட்டேன்.

இணையம் அளித்த அந்த நட்புகளை மனம் நன்றியோடு நினைத்துக் கொள்ளுகிறது.

ம்... பிருந்தாவை நினைக்கத்தான் கவலை ஏற்பட்டது.

திங்கள் வந்து கோபத்துடன் போயிருப்பாளா? ம்... இப்படி ஒரு தடங்கல்.

இதை அவள் புரிந்துகொள்ளவாளா?

இன்றாவது அவள் வருவாளா?

அல்லது அடுத்த திங்கள்தான் வருவாளா?

நான் அவளுக்காக கணனியின் முன்னால் அலைபாயும் மனதுடன் குந்திக்கொண்டிருக்கிறேன்.

-தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!