புதன், 6 மார்ச், 2013

அந்தப் பக்கம் பாக்காதை!

''அந்தப் பக்கம் பாக்காதை..."
அவசரமாகக் கூறினான் மகேந்திரன்.

எந்தப்பக்கம் பார்க்க வேண்டாம் என்கிறான்?! பார்க்க வேண்டாமென்றால் பார்க்கத் துடிப்பதும், கேட்கக் கூடாதென்றால் கேட்க முயல்வதும், பேசத் தடை என்றால் பேச விளைவதும்தானே மனித இயல்பு?!

நானும் சாதாரண மனிதன்தானே? பார்க்கத் துடித்தேன். உடனே பார்த்தால், தனது வார்த்தையை மதிக்கவில்லையே என மகேந்திரன் மனதுக்குள் மறுகலாம். அதனால் வேறு திசையில் நோக்க ஆரம்பித்து, அப்படியே அரை வட்டவடிவமாக விழிகளை மெதுவாக அசைத்து அவன் குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கலாம் என்றொரு குறும்புத்தி எண்ணம் சிந்தையில் குறும்பாகச் சிரித்தது.

ஆகாயத்தை முத்தமிடத் துடிக்கும் சிலுவை சுமந்து பழமையைப் பறைசாற்றும் தொன்மைவாய்ந்த செங்கற்களால் உருவான தேவாலயக் கோபுரங்கள் கம்பிரமாக உயர்ந்து, காலத்தைக் காட்டும் மணிக்கூட்டையும் தன்னகத்தே தாங்கி நிற்கின்றன. ஆன்மாவின் பசி போக்கவென உருவான தேவாலயத்துக்கு எதிரே, மஞ்சள் சிவப்பு வெள்ளை நிற மின்விளக்குகளான எழுத்துக்களை உமிழ்ந்தவாறு வயிற்றுப் பசி போக்குவதாக, அட்டகாசமாக விளம்பரத்துடன் வரவேற்கும் 'மக் டொனால்ட்" உணவகம். அதையும் தாண்டி, சோடிப் பாம்பகளாக நெளிந்து நீளும் இரும்புப் பாதைகளில் 'கிறிங், கிறிங்" மணிச் சத்தத்துடன், சுறுசுறுப்பாய் நெருக்கியடித்து விரையும் மக்களை விரட்டியவாறு ஊர்ந்து சென்று தரிப்பிடத்தில் தாமதமாகும் 'ட்ராம்' வண்டிகளைத் தொடர்ந்து சென்ற எனது பார்வை அந்தத் தரிப்பிடத்தில் தவழ்ந்தது.

அந்தத் தரிப்பிடம் உள்ள பக்கத்தைத்தானே, 'பார்க்க வேண்டாம்" என்றான் மகேந்திரன்.

அங்கே... ஒரு நடுத்தர வயதான தமிழ்ப் பெண்ணொருவர் 'ட்ராம்' வண்டியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். கையிலே சில 'அல்டி வாய்க்'குகள்... நெற்றியில் சிறிதாக ஒரு சிவப்பு நிற 'ஸ்டிக்கர்' பொட்டு தலைகுப்புறத் தொங்கும் இதயத்தின் வடிவத்தில். தோற்றம் திருமணமான தமிழ்ப்பெண் என்பதையும், உடைகள் அவர் ஜேர்மனிக்குப் புதியவரல்ல என்பதையும் தெளிவாகக் காட்டின.

''அந்தப் பக்கம் பாக்காதை..."
மகேந்திரனின் கட்டளைக்குக் காரணம் இவரா?

தாயகத்தின் தாளாத அவலங்களுக்கால் ஒதுங்கி உயிர் வாழவெனப் புலம்பெயர்ந்தாலும், தமிழ்ப் பண்பாட்டை உதறவும் மனதில்லாமல் -  அதேநேரத்தில் அந்நிய நாட்டுச் சூழலையும் புறந்தள்ள முடியாமல் - இரண்டும் கெட்டான் நிலையில் காணப்படும் சராசரியான புகலிட ஈழத் தமினத்தையே பிரதிபலிக்கும் அப்பெண் உள்ள திசையை, 'ஏன் பார்க்க வேண்டாம்' என்று கூறுகிறான்?

தனிப்பட்டமுறையில் ஏதும் சச்சரவோ?

தெரியாததைத் தெரிந்துகொள்ளாவிட்டால், அதுவும் இப்படியான விசயங்களில் மூக்கை நுழைக்காவிட்டால் நித்திரையே வராது.
அவனிடமே கேட்டுவிட்டேன்.

''மகேந்தி... ஏன் அவவைப் பாக்கவேண்டாம் எண்டனீ?"
எனது கேள்வியைக் கேட்டுச் சற்று உற்று என்னையே பார்த்தான்.

தனது வார்த்தையை மதிக்காமல் பார்த்துவிட்டேனாம். அதுதான் அந்தப் பார்வை...!
பிறகு ஏளனமாகச் சிரித்தான்.

''அவவைமட்டுமில்லை... எங்கடை தமிழ்ப் பொம்பிளையள் இருக்கிற பக்கமே திரும்பிப் பாக்கக் கூடாது..." என்று வெறுப்புடன் கூறினான் மகேந்திரன்.

''அப்பிடி ஏனப்பா எங்கடை தாய்க்குலங்கள்மேலை கோவம்..."

''உவையள் எல்லாம் தங்களைப்பற்றி என்ன நினைச்சுக்கொண்டிருக்கினம்.... தாங்கள் ஆம்பிளையளைப் பாப்பினம்... அதுக்கு ஒண்டுமில்லை... தாங்களாய் வலியப்போய்க் கதைப்பினம்... அதுக்கு ஒண்டுமில்லை... ஆம்பிளையள் ஆராலும் பாத்துச் சிரிச்சால்... போச்சு... அவன்ரை மானம் மரியாதை எல்லாமே போச்சு... அவன் என்னை பாக்கிறான்... உத்து உத்துப் பாக்கிறான்... பாக்கிற பார்வையே சரியில்லை எண்டு நாலுபேரிட்டைச் சொல்லி... அவனை நாறடிச்சுப்போடுவினம்... பார்வைக்கே இப்பிடி எண்டால்... கதைக்க வெளிக்கிட்டால்... கேக்கவும் வேணுமே...?!"
இப்பொழுது குரலில் சற்று உஷ்ணம் வந்திருந்தது.

பாதிக்கப்பட்டிருக்கிறான். நன்றாகவே தமிழ்ப்பெண்மூலம் அல்லது தமிழ்ப்பெண்கள்மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறான். அந்தப் பாதிப்பு ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ்ப்பெண்கள்மீதும் வெறுப்பை... கோபத்தை... அந்நியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றைப் பதமாக்கி, தனக்குத்தானே ஒரு தீர்மானத்தை ஏற்றுவிட்டான்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம். அந்த அனுபவம் ஒவ்வொரு படிப்பினையைக் கொடுத்து, ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒவ்வொரு வட்டத்தைப்போட்டு, அதற்குள் அவர்களைப் புதைத்துவிடுகிறதோ?
ஆரோக்கியமற்ற புதையல்...! அவனை அதற்கால் வெளியே இழுத்தெடுக்கவேண்டும். விட்டால் விபரீதமானாலும் வியப்பதற்கில்லை.

எதிர்காலத்தில் குடும்பமாகி... குடித்தனமாகிப் பிள்ளை குட்டிகளுடன் வாழவேண்டியவன்... வாடிவிடக் கூடாது.

''ஏன் மகேந்தி... அப்பிடி எங்கடை பொம்பிளையள் எல்லாரையும் நீ சொல்லுறமாதிரி நினைக்கேலாது... ஆரோ ஒருத்தர் ரண்டுபேரை வைச்சுக்கொண்டு ஒரு முடிவுக்கும் வரக்கூடாது..."

''நான் ஒருத்தர் ரண்டுபேரை வைச்சுக்கொண்டு கதைக்கேலை... கனபேரை 'நோட்'பண்ணிப் பாத்திருக்கிறன்... கன இடங்களிலை அவமானத்துக்குக்கூட ஆளாயிருக்கிறன்... கன பக்கங்களைப் பாத்துத்தான்...  இப்ப எங்கடை பொம்பிளையள் நிக்கிற பக்கமே பாக்கிறேல்லை எண்டு தீர்மானிச்சனான்..."

''அப்பிடி என்ன பக்கங்களையடா பாத்தனீ?" என்று ஆவலாகக் கேட்டேன்.
சற்றுநேரம் யோசித்தான்.

''எவ்வளவோ பக்கங்கள்... எல்லாத்தையும் சொல்லுறதெண்டால்... ஒருநாள் காணாது... நான் எங்கடை பொம்பிளையளின்ரை போக்கை அவதானிக்குறதுக்குக் காரணமான ஒண்டு ரண்டு பக்கங்களை வேணுமெண்டால் சொல்லுறன்... கேள்..."

கதை கேட்கத் தயாரானேன்... மன்னிக்கவும்... விடுப்புக் கேட்க விளைந்தேன்.

முதலாவது பக்கம்...!

அதொரு திருமண வைபவம்...
சிறுவர் பெரியோர் பெண்களென அங்கிருந்த அவையோரில் பெரும்பாலானோர்கள் பெறுமதியான கலாச்சார உடைகளில் கனத்தார்கள். விலைமதிப்பான அணிகலன்களுடன் தம்மை மறந்தவர்களாய் மற்றவர்களை அளந்துகொண்டு உரையாடல் என்ற போர்வையில் கணகணத்துக் கொண்டிருந்தார்கள்.
திருமணம் மகேந்திரனுக்கு வேண்டப்பட்ட ஒருவனுக்கு....

'நீதான் வேளைக்கு வந்து... முன்னுக்கு நிண்டு எல்லாத்தையும் ஒப்பேத்த வேணும்" என்று ஏற்கெனவே கூறி அழைத்திருந்தான்.
அதனால் மகேந்திரனும் வந்தவர்களை விழுந்துவிழுந்து உபசரித்துக்கொண்டிருந்தான்.

''தம்பி... நல்லாய்த்தான் எல்லாரையும் கவனிக்கிறீர்... எங்கடை வீட்டிலை என்னவாலும் விசேசமெண்டால்.... விருந்துபசரிப்புக்கு உம்மைத்தான் கூப்பிட வேணும்..."
பெண்களோடு பெண்களாக அமர்ந்திருந்த சீதா அக்கா அபிப்பிராயம் தெரிவித்தார்.
பதிலுக்குப் புன்னகையுடன் ஆமோதித்தான் மகேந்திரன்.

''அதுக்கென்ன அக்கா... ஏதாலும் விசேசம் எண்டால் சொல்லுங்கோ... என்னாலை ஏலுமான உதவிகளைச் செய்வன்..."

''ஊரிலை எண்டால் இனசனமெண்டு வந்து செய்யுங்கள்... இஞ்சை இப்பிடி அறிஞ்சவை தெரிஞ்சவைதானே செய்யவேணும்..." என்று பெருமூச்செறிந்தாள் சீதா அக்கா.

சீதா அக்காவுக்கு ஏறக்குறைய ஐம்பது வயதாவது இருக்கும். பெருமூச்செறியும்போது அவரது கனத்த சரீரம் மேலும் பெருத்து, சிறிது மெலிந்தது.

''ஓமக்கா... எண்டாலும் நாங்களெல்லாம் ஒரு இனத்தைச் சேர்ந்த சனம்தானே..."
''ஓமோம்... அங்கை பார் தம்பி... அதிலை இருக்கிற நாலைஞ்சுபேர் இப்பதான் வந்தவை... அவைக்கு ஏதாலும் தேத்தண்ணி பலகாரம் கொண்டுபோய்க் குடும்..." என்று கூற அவன் அவர்களைக் கவனிப்பதற்காக அகன்றான்.

இவ்வாறு மகேந்திரனும் சீதா அக்காவும் அந்தத் திருமண வீட்டில் அந்தத் திருமணம் சம்பந்தமாக அடிக்கடி கதைத்துக்கொண்டார்கள்.

அதன்பிறகு... அந்தத் திருமண வைபவம் முடிந்து சில நாட்கள் கழிந்திருக்கும்...

அன்று ஏதோ ஒரு அலுவலாக ஒரு பஸ் நிலையத்தில் பஸ்க்காகக் காத்திருந்தான் மகேந்திரன்.
அவனைச் சுற்றிலும் பல வெளிநாட்டவர்கள் அதே பஸ்க்காக....

அப்போது எங்கிருந்தோ சீதா அக்காவும் அதே பஸ் நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
'அவையைக் கவனியும்....'
'அவைக்கு ரீ கொண்டுபோய்க் குடுமன்...'
'ஒரு 'கப்"பிலை பாயாசம் கொண்டந்து தாறீரே...'
-என்று திருமண வீட்டில் கதைத்த அதே சீதா அக்கா.

அவர் அவ்விடத்தை நெருங்கும்வரை பார்த்துக்கொண்டிருந்தவன் அறிமுகத்திற்கு அறிகுறியாக, அவர் அவனைத் தற்செயலாகப் பார்த்தவேளையில் புன்னகைத்தான்.

திடீரென சீதா அக்காவின் முகம் இறுகி இருண்டது. ஊடறுத்து ஒரு தீட்சண்யமான பார்வை.
'நீ யார்..?' என்பதுபோல் பார்த்து சீதா அக்கா தனது போக்கில் அவனை விலத்தி, அப்பால் சென்று நிற்க, அவனால் அந்த அலட்சியத்தைத் தாங்க முடியவில்லை.
அவமானத்தால் குறுகிப் போனான். அருகிலிருக்கும் வெளிநாட்டவர்கள் தான் ஏதோ அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்துச் சிரிக்க முயன்றதாக நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணத்தால் வியர்த்தான்.

மேலும் அங்கே அவனால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை.

'ஏன் இந்த அந்நியோன்யம்...?!'

'பல தமிழ்ச் சனங்களுக்கு முன்னால் கதைத்த இந்த ஐம்பது வயதான அக்கா ஏன் பதிலுக்குப் புன்னகைக்காமல் வெறுத்துப் பார்த்தவாறு போகிறார்... மறந்துவிட்டாரா? அல்லது வேறேதாவது காரணமா? அல்லது எனது பார்வை சரியில்லையா?'

அவனுக்குப் புரிந்ததெல்லாம் ஒன்றுதான்... தனிமையில் தமிழ் ஆண்மகன் ஒருவனுடன் கதைத்தாலோ அல்லது சிரித்தாலோ, கதை கந்தலாகிவிடும் என்று நினைக்கிறார்போலும்!!

ரண்டாவது பக்கம்...

அது ஒரு புகையிரத நிலையத்துக்கு முன்பாக இருந்த 'ட்ராம்' தரிப்பிடம்...

மாலை ஆறு மணியிருக்கும்... உத்தியோகத்தர்கள், உழைப்பாளிகள், மதுவுக்கு அடிமையானவர்கள், புதுப்புது நாகரீகமெனத் தலையில் வர்ணங்களை அப்பியும் அழகான சிகையை அலங்காரம் என்று அலங்கோலமாகத் தெட்டம்தெட்டமாக வெட்டியவர்களுமாக முண்டியடித்துக்கொண்டு, அவரவர் வேலையாக நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
இவர்களுக்கிடையே அவனது பார்வையை தன்பால் ஈர்த்தது ஓரிடம்...

அங்கே ஒரு இளம் தமிழ் நங்கை...
ஆடைகள் என்னவோ நாகரீகமாகத்தான் இருந்தன.
வேறொரு நகரத்தில் இருந்து வந்திருக்கவேண்டும்... இதற்கு முன் இந்த நகரத்தில் பார்த்ததாகத் தெரியவில்லை. பதட்டத்துடன் பலரிடம் ஏதோ ஒரு கடதாசியில் கிறுக்கப்பட்டிருந்த முகவரியைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

சிலர் அதைப் பார்த்து, சிறிது யோசித்துக் கைவிரித்து நகர்ந்தார்கள்.

பலரோ அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். வேறு சிலரோ ஏதோ தீண்டத்தகாத பொருளைப் பார்ப்பதுபோல, வெறுப்பைக் கக்கும் வெள்ளை முகங்களுடன் விலத்திச் சென்றார்கள்.

மகேந்திரனுக்கு அவளுக்கு உதவவேண்டும் போலிருந்தது. 'வலியச் சென்று கதைத்து, விசயத்தைக் கேட்டு உதவலாமா' என்று நினைத்தான். எனினும், 'தனது உதவியை அவள் ஏற்பாளா' என எண்ணுகையில் தயக்கமாக இருந்தது.

'அவளாகக் கேட்டால் உதவலாம்' என்ற நினைப்புடன்,
அவளது பார்வையில் தென்படுமாறு நின்றான்.

ஒரே இனத்தவன்... ஒரே மொழியைத் தாய்ப்பாசையாகக் கொண்டவன்.

ஆனால் அவளோ... அவனைக் கண்டும் காணாதவள்போல், அந்நியர்களிடம்.... அதுவும் துவேச உணர்வுடையவர்களிடமும் உதவிக்காகக் கெஞ்சிக்கொண்டிருந்தாள்...

'ஏன் இந்த நிலமை.... தமிழ் ஆண்கள் எல்லோருமே கெட்டவர்களா? அல்லது காமுகர்களா? அல்லது ஏமாற்றுக்காரர்களா?'

இதுதான் ஐம்பது வயது தமிழிச்சியிலிருந்து இருபது வயதுவரையான தமிழிச்சி வரையான எண்ணமா?

மகேந்திரனுக்குப் புரியவில்லை.

ம்ம பக்கம்...!

''மகேந்தி! எல்லாரையும் இப்பிடிச் சொல்லாதை.... சிலவேளை நீ பாத்தாக்கள் இப்பிடி இருக்கலாம்... மற்றது... எங்கடை சமுதாயம் பொம்பிளையளிலை என்ன குறை பிடிக்கலாம்... அதை எப்பிடிப் பெரிசாக்கிக் கேவலப்படுத்தலாம் எண்ட மனப்பான்மையிலை இருக்கேக்கை... பொம்பிளையளும் எங்கடை தமிழ் ஆம்பிளையளைப் பொறுத்தவரையிலை அவதானமாய்த்தான் நடக்க நினைக்கினம்... எங்கடை ஆம்பிளையளும் தங்கடை பெஞ்சாதிமார் வேறை நாட்டாக்களோடை கதைக்கேக்கை சந்தேகப்படமாட்டினம்... தமிழாக்களோடை கதைச்சால்... அவ்வளவுதான்... இருந்தபாடில்லை... சந்தேகத்தாலை அந்தப் பெண்ணின்ரை வாழ்க்கையையே நாசமாக்கிவிடுவாங்கள்... ஆனா ஒண்டு... இங்சை வளருற சந்ததிகள் இதுகளையெல்லாம் தாண்டி வெளியாலை வரும்..."

என் மனதில் தோன்றியதைக் கூறினேன்.
இதைக்கேட்டு ஏளனமாகச் சிரித்தான் மகேந்திரன்.

அப்போது பள்ளிச் சிறுமிகள் பலர் கும்பலாகக் கலகலத்தவாறு வந்து கொண்டிருந்தார்கள்.

அந்த ஜேர்மன் சிறுமிகளுள் தமிழ்ச் சிறுமி ஒருத்தியும் வந்து கொண்டிருந்தாள்.

எல்லோருக்கும் பத்துப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும்.

நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தபோது தற்செயலாக என்னைப் பார்த்த அந்தத் தமிழ்ச்சிறுமியின் முகம் தீடீரெனக் கலகலப்பைத் துறந்து இறுக... அவள் வேறுபுறம் தலையைத் திருப்பியவாறு எங்களைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தாள்.

என்னால் மகேந்திரனின் முகத்தைப் பார்க்க முயலவில்லை.
மறுபடியும் அவனது ஏளனச் சிரிப்பைச் சந்திக்க நான் தயாரில்லை.

*****

(பிரசுரம்: மண் 1999, கலையோசை 1999)

2 கருத்துகள்:

  1. கதை நடை, வருணனை பிடித்திருக்கின்றது. ஒரு எழுத்தாளனின் கண்கள் சமூகத்தை பிரதி எடுக்கும் ஒரு புகைப்படக் கருவி என்பதும் புரிகிறது...விடயம் மிக மிகச் சிறியது..ஆனாலும் பலரை...பல ஆண்களை நன்றாகவே பாதித்திருக்கிறது என்று மட்டும் புரிகிறது... எந்த பக்கத்துக்கும் இரண்டு பக்கம்கள்..எழுத்தாளர்..என் மைத்துனர்.. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்து எழுதி இருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது... அடுத்த பக்கம் என்ன எப்படி என எழுத அவர் பெண்ணில்லையே??? "அந்த பக்கமும் பார்த்து விட்டு தான் சரியான விமர்சனத்தை இந்த கதைக்கு எவரும் முன்வைக்க முடியும்!" அந்த பக்கத்தை அந்த பக்கத்தில் இருந்து கற்பனையிலேனும் பார்த்திருக்கலாமே-- சின்னதாய் ஒரு குறை அல்ல.. கருத்து.??? அப்படி பார்த்திருந்தால்..."இந்த பக்கம் பார்க்காதீர்கள்" என எழுதி இருப்பாரோ என்னவோ....:-) Sivavathani Prabaharan.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பக்கத்திலயும் நிறைய விசயங்கள் உண்டு. அதைப் பெண்கள் எழுதினால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

மிகவும் நன்றி!