வியாழன், 25 அக்டோபர், 2012

அன்பின் அளவு

(1991ம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர் ஒருவரின் தற்கொலை இக் கதையின் கருவாகிறது.)

மாயவன் ஜேர்மனிக்கு வந்து ஐந்தாறு வருடங்களாகிவிட்டன. என்னென்ன கற்பனைகளுடன், திட்டங்களுடன் ஜேர்மன் மண்ணை மிதித்தானோ தெரியாது. இன்று பிணமாகக் கிடக்கிறான். சுற்றிலும் நண்பர்களின் கவலை தோய்ந்த முகங்கள். ஒரு சிலர் வெளிப்படையாகவே அழுதார்கள்.

மாயவனா தற்கொலை செய்தான்? என்ற நம்பமுடியாத விசாரணைகள். அவனுக்கு அப்படி என்ன குறை? என்று விடைதேடும் வினாக்கள்.

மாயவனுக்கு இருபத்தைந்து வயதளவில்தான் இருக்கும். தாய் தகப்பன், சகோதரிகள்
எல்லோரும் தமிழ்நாட்டில் என்று கேள்வி. விசயம் கேள்விப்பட்டு இலண்டனிலிருந்து தமையன் வந்திருந்தான். அவனும் திருமணமாகாத இளைஞன்தான். வயதுகூட முப்பதுக்குள்தான் இருக்கும். அமைதியாக ஒரு மூலையில் நின்றிருந்தான். முகத்தில் சோகமா வெறுப்பா எனப் புரியாத உணர்ச்சிக் கலவைகள்.

எல்லாத்துக்கும் அவள்தான் காரணம்.  அந்த அவள் நிர்மலா.

மாயவனின் நிம்மி.

குடும்பமாக வசிக்கும் நண்பர் ஒருவரின் அழைப்பின்பேரில், அவரது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குச் சென்றிருந்தான் மாயவன்.

பிறந்தநாள், திருமணக் கொண்டாட்டங்கள் என்றால் சமையலறையே தன்வசம் என்ற ரீதியில் தேனீர், சிற்றுண்டி போன்ற உபசரிப்பில் முன்நிற்பான் மாயவன். எல்லோருக்கும் உபசரித்த பின்னரே தன்னைப்பற்றிக் கவனித்துக் கொள்ளுவான். இதனால் விழாக்கள் கொண்டாடுபவர்கள் மாயவனை அழைப்பதற்கு மறக்கமாட்டார்கள். அத்துடன் மாயவனிடம் கார் இருந்ததால் பிரச்சனையில்லை. ஆபத்து அந்தரத்துக்குப் பெற்றோலுக்குக் காசு வாங்காமலேயே போய்வருவான்.

இப்படித்தான் அந்தப் பிறந்தநாளில் தேனீர் பரிமாறும்போது, தேனீர் டம்ளர் ஒன்று தவறி நிர்மலாவின் மடியில் விழ.... இவன் பதற்றத்துடன் மன்னிப்புக் கோர, அவள் பெருந்தன்மையோடு டேக் இட் ஈஸி பாவனையில் முறுவலித்துத் தலைசிலுப்ப.... அந்த இரு சோடிக் கண்கள் அதற்கும் மேலாக ஏதோ ஒன்றைப் பரிமாறத் துடிக்க.... பிறகென்ன....!

சம்பவங்களும் சம்பாசணைகளும் தொடரச் சந்தர்ப்பத்தைத் தேடவேண்டுமா? சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டார்கள்.

தனிமையில் கதைத்துக் கொள்ளக் கார் வசதி வேறு.... ஏதோ காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் காமத்துக்குக் கண் இல்லைத்தான்.

ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்ட ஓரிரு தினங்களுள் ஒருவராகத் துடித்தார்கள்.

கண்கள் கற்பனையில் சிறகடிக்க, கூடவே சினிமாச் சீண்டல் காட்சிகள் கைகொடுக்க, அவர்களின் காதல் கைங்கரியங்களுக்குக் கேட்கவும் வேண்டுமா?!

மாயவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளைப்பற்றி விசாரித்தான். நிர்மலா நோர்வேயில் வசிப்பவள். ஜேர்மனிக்கு உறவினரைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறாள். தாய் தந்தை இல்லை. அக்கா ஒருவர் குடும்பமாக இந்தியாவில்.... அவ்வளவோடு நிறுத்திக்கொண்டாள் நிர்மலா.

அவளுக்கும் அப்போதுதான் மாயவனைப்பற்றி விசாரிக்க வேண்டும்போலிருந்தது.

மாயவன்.... பெற்றோர் மற்றும் சகோதரங்கள் இந்தியாவில். அண்ணன் இலண்டனில். தோட்டம் ஒன்றில் வேலை. அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான வழக்கு முடியாததால், ஜேர்மனிக்குள் குறிப்பிட்ட பகுதிக்குள்தான் நடமாடலாம். நிம்மிமாதிரி வேறு நாடுகளுக்குச் செல்லமுடியாது.

''நிம்மி! உன்னைப் பிரிஞ்சு என்னாலை இருக்கமுடியாது. நானும் நோர்வேக்கு வரட்டே?”

“இஞ்சை இவ்வளவு காலமும் இருந்துபோட்டு அங்கை வந்து என்ன செய்யப்போறியள்....?”

“அப்ப 'கேஸை’க் 'கான்சல்’பண்ணி ‘வெபுக்னிஸ்’ விசா எடுக்கட்டே? இடைக்கிடை வந்து உன்னைப் பார்க்கலாம்.”

“சிலவேளை ‘காட்’ கிடைக்கும். கேஸை அந்தரப்பட்டுக்; 'கான்சல்’ பண்ணாதீங்கோ.... எனக்கும் படிப்பு முடியவேணும். அதுமட்டும் தூரத்திலை இருக்கிறதுதான் ரண்டு பேருக்கும் நல்லது.”

“நீயோ படிப்பு படிப்பு எண்டு உயிரைவிடுறாய். எனக்கோ 'நிம்மி நிம்மி’ எண்டு உயிரை விடவேணும்போலை இருக்கு.... எப்பதான் படிப்பு முடியுறது.... எப்பதான் கலியாணம் கட்டுறது....” என்று ஏக்கத்துடன் கேட்டவனைத் தன் மார்புடன் சேர்த்தணைத்தவள்,
“இப்ப உங்களுக்கு எத்தனை வயது? இந்த வயதிலை ஜாலியாய் இருந்துவிட்டு இன்னும் ரண்டு மூண்டு வருசத்தாலை கலியாணத்தைப்பற்றிச் சிந்திப்பமே” எனக் குழைந்தாள்.

நிம்மியின் அரவணைப்பு அவனை மௌனிக்கச்செய்து மகுடிகேட்ட நாகமாய் மயக்க, வெப்ப மூச்சுக்கள் மீண்டும் மீண்டும் சங்கமமாகித் தேகத்தைச் சூடாக்கி, கண்களைச் சிவக்க வைத்தவேளையில், அவள் விலகிக்கொண்டு குறும்பாகச் சிரித்தாள்.

மாயவனின் முகத்தில் அசடு வழிந்தது.

*****

நிம்மி நோர்வேக்குப் போய்விட்டாள்.

தொலைபேசியில் குரல்கள் கலகலத்தன. சிணுங்கின. பொய்க் கோபம் காட்டின.
ஏசியன் கடையொன்றில் வாங்கிய 'லீலா பஞ்சாங்கக் கலண்டர்' திகதிகள் ஒவ்வொன்றாகக் கிழிபட, வேலையும் சாப்பாடும் தொலைபேசியுமாக இருந்த மாயவனுக்கு ஆறுமாதம் போனது ஆறு நாட்களாகத் தோன்றின.

தொலைபேசிமட்டுமல்ல. ஒரு நாளிலேயே ஒன்று, இரண்டு, மூன்று.... என இலக்கமிடப்பட்ட பல கடிதங்கள்.... அத்தனையும் நிம்மியின் கடிதங்கள் அவன் வீட்டுத் தபாற்பெட்டியை நிறைத்து, அவனது உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, வாழ்வே நிம்மிதான் என்ற நிலைக்கு அவனைத் தள்ளியது. இந்த ஆறு மாதத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட நிம்மியின் கடிதங்கள் அவனது மனதை முத்தமிட்டுப் பைல் ஒன்றில் பக்குவமாகின.

இன்னும் இரண்டு வாரத்தில் நிர்மலாவுக்குப் பாடசாலை விடுமுறை.. எப்படியும் ஒரு மாதம்.. ஏற்கெனவே வருவதாக உறுதி அளித்திருந்தாள்..

எனினும் மீண்டும் ஒருமுறை கேட்டால்தான் மனம் நிம்மதியடையும் போலிருந்தது. ரெலிபோன் பொத்தான்களை அழுத்தினான். மறுமுனையில் நிம்மிதான்.

“நான் மாயவன்.... என்ன நித்திரையே...?”

''இல்லை மாயவன்.... ஒரு பிரச்சினை. அதை எப்பிடி உங்களிட்டைச் சொல்லுறதெண்டுதான் தெரியேலை....”

“ஏன்.... என்ன பிரச்சினை?”- பரபரத்தான் மாயவன்.

“எனக்கு ஜேர்மனிக்கு வாறத்துக்கு விசா கிடைக்கேலை....”

“பொய் சொல்ல வேண்டாம்.”

“பொய்யில்லை மாயவன். நிசமாய்த்தான்.... எவ்வளவோ  முயற்சிசெய்துபோட்டன். பலனில்லை” என்று சர்வசாதாரணமாகக் கூறினாள்.

“எத்தினையோ பேர் நோர்வேயிலை இருந்து வந்துபோறாங்கள். உனக்குமட்டும் ஏன் விசா கிடைக்கேலை.... நான் நம்பமாட்டன்.”

“நீங்கள் நம்பாட்டி என்னாலை அதுக்கென்ன செய்யமுடியும்?”

“நிம்மி! ஏன் இப்பிடி எடுத்தெறிஞ்சு கதைக்கிறாய்?”

“நீங்கள்தானே என்னை நம்பேலை எண்டு சொல்லுறியள்....”

“இல்லை நிம்மி.... ஏன் விசா கிடைக்கேலை எண்டதுதான் நம்பமுடியாமை இருக்குதெண்டனான். இஞ்சை பார் நிம்மி.... நீ இல்லாமை எனக்கு வாழ்க்கையெண்டே ஒண்டில்லை. இதைமட்டும் நினைவிலை வைச்சிரு....”

அதற்குமேலும் பேசப் பிடிக்காமல் ரிசீவரை வைத்துவிட்டு, கதிரையில் 'பொத்’தென விழுந்து, தலையைப் பிடித்துக்கொண்டான்.

ஏனோ அவனால் நிம்மியின் வார்த்தைகளை நம்பமுடியவில்லை.

‘சிலவேளை நிம்மி என்னைவிட்டு விலகிப்போகிறாளோ.... நோ.... அப்பிடியிருக்காது- இருக்கவும் கூடாது. நிம்மி இல்லாமல் என்னாலை வாழமுடியாது. என் உயிர், உடல் எல்லாமே அவள்தான்....’

தனக்குள் புலம்பினான். நிம்மதியற்றுத் தவித்தான்.

அன்று காலை.... நோர்வேயில் இருந்து கடிதமொன்று.... நிம்மியின் எழுத்துத்தான். அவசரமாகக் கடிதத்தைப் பிரித்தான்.

‘மாயவன் அறிவது....’

முதல் வரியை வாசித்ததுமே அவனது மனம் அதிர்ந்தது. வரிக்கு வரி, 'அத்தான், அத்தான்' என அன்பொழுக எழுதுபவள், மொட்டையாக 'மாயவன்' என்று ஆரம்பித்திருந்தாள்.

தொடர்ந்து வாசிக்கலானான்.

'முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். இரண்டு வருடத்திற்கு முன்னர் நான் இலங்கையில் இருந்தபோது, எனக்கும் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்பு நான் நோர்வேக்கு வந்துவிட்டதால், எமது திருமணத்தைப் பின்பு நடாத்தலாம் என எனது அக்கா தீர்மானித்திருந்தார்.

அதற்கிடையில் ஏதோ ஒரு உணர்ச்சியில் உங்களுடன் பழக நேர்ந்துவிட்டது. பின் இதுபற்றி அக்காவுக்கு எழுதினேன்.

'அங்கே ஊரில் உனக்காக நிச்சயிக்கப்பட்டு இவ்வளவு காலமாகக் காத்திருப்பவரை ஏமாற்ற எப்படி உனது மனம் துணிந்தது?' என்ற அக்காவின் பதில் எனது மனச்சாட்சியை விழிக்கவைத்துவிட்டது.

எனக்கும் உங்களுக்குமோ வெறும் ஆறு மாதப் பழக்கம். ஆனால் எனக்காக ஒருவர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஊரில் காத்திருக்கிறார். எனவே அவரை ஏமாற்றக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

அதனாலேயே ஜேர்மனிக்கு வர விசா கிடைக்கவில்லை எனப் பொய் கூறினேன்.

தயவுசெய்து நான் இதுவரை எழுதிய கடிதங்களைக் கிழித்தெறிந்து விடுங்கள். இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடமாட்டீர்கள் என நம்புகிறேன்.

இப்படிக்கு,
நிர்மலா.

எவ்வளவு சுலபமாக எழுதிவிட்டாள். காதலுக்குக் காலத்தை அளவுகோலாக்கி, என் மன உணர்வுகளை பாதிப்புகளை இந்த ஒரு சிறு கடுதாசிமூலம் நசுக்க எப்படித்தான் அவளுக்கு மனம் வந்தது?!

அப்படியாயின் அணைப்புக்கள், பேச்சுக்கள், சல்லாபங்கள்.... இந்த ஆறுமாதத்தில் சொற்களால் உணர்ச்சிகளை அள்ளித்தெளித்து வெறியேற்றிய முந்நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள்.... எல்லாவற்றையுமே வெறும் குப்பையாக்கிக் கூட்டித்தள்ள அவளால் எப்படிமுடிந்தது?!

குலுங்கிக் குலுங்கித் தேற்றுவார் எவருமின்றிச் சிறு குழந்தையைப்போல் அழுதான். 'இனி வாழ்வதற்கு என்ன இருக்கிறது?' என்ற கேள்விக்கு விடைதெரியாத மயக்கம். உண்மை எது பொய் எது என்று தெரியவில்லை. வாழ்க்கைத் தத்துவங்களைப் பகுத்தறிந்து பார்க்கும் நிலையிலில்லை.

ஏதாவது செய்யவேண்டும். ஆறுமாதப் பழக்கம் அவ்வளவு சர்வசாதாரணமாகப் போய்விட்டதா? இல்லை.... இந்த ஆறுமாதப் பழக்கத்தை அவள்.... என் நிம்மி சாகும்வரையுமே மறக்கக்கூடாது. அவளால் மறக்கமுடியாதமாதிரி என்னசெய்யலாம்....?

காரில் ஏறி அமர்ந்தான். சற்றுத் தொலைவிலிருந்த கடையொன்றில் சில மதுக்குப்பிகளை வாங்கி, தொண்டை எரிய வாய்க்குள் ஊற்றிக்கொண்டு, வேலைசெய்யும் தோட்டத்தை அடைந்தான்.

மாயவனைப் பார்த்த தோட்ட முதலாளிக்கு ஆச்சரியம். விடுமுறை நாளில் இவன் ஏன் இங்கே.... ஏதாவது எடுக்க வந்திருப்பான்.

விறுவிறென்று வேலைச் சாமான்களுள்ள கொட்டிலுக்குச் சென்ற மாயவன்.... தண்ணீரில் கலந்து புல்லுக்கு அடிக்கவென்று வைத்திருந்த மருந்துப் பொட்டலம் ஒன்றை எடுத்து அப்படியே வாயில்போட்டு, சீனி சாப்பிடுவதுபோலச் சாப்பிட்டுவிட்டுக் காரில் ஏறினான்.

கார் தடுமாறியது. ஏனென்று புரியாமல் திகைத்தார் தோட்ட முதலாளி.

தொண்டை மார்பு தீ வைத்ததுபோல் எரிய, காரை நிறுத்திவிட்டுக் கதவைத் திறந்துகொண்டு நிலத்தில் விழுந்து துடித்த மாயவனை ஓடிச்சென்று தாங்கினார் தோட்ட முதலாளி.

மாயவனால் தாங்கமுடியவில்லை. புல்லு நாசினி தன் திறமையைக் காட்டியது.

“ஐயோ முதலாளி! என்னைக் காப்பாற்று.... நான் தெரியாமை இந்த மருந்தைச் சாப்பிட்டுவிட்டன். என்னாலை தாங்கமுடியேலை.... தயவுசெய்து என்னைக் காப்பாற்று....” என்று கண்களிலிருந்து நீர் தாரையாக வடிய, தோட்ட முதலாளியின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினான்.

“பாவி! எத்தனையோ ஏக்கருக்குப் பாவிக்கும் மருந்தை நீ ஒருத்தனே சாப்பிட்டுவிட்டியேடா?” எனத் திட்டிய முதலாளியின் கண்களில்கூடக் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

அம்புலன்ஸ், பொலிஸ் எல்லாமே கூவிக்கொண்டு வந்தன.

பலன் பூச்சியமானது.

அவனின் ஆவி சித்திரவதைகளிடையே பிரிந்துவிட்டது.

*****

பிரேதப் பெட்டியுள் பிணமாகக்கிடந்த மாயவனைப் பார்த்த தமையனின் உதடுகள், ‘பாவி’ என்று முணுமுணுத்தன.

“இப்பிடிப் பண்ணிவிட்டியேடா? இத்தனை வருசமாய் தாய், தேப்பன், பாசமாய்ப் பழகின சகோதரியள் எல்லாரிலையும் பார்க்க, ஆறுமாதமாய் தெரிஞ்சவள் பெரிசெண்டு நினைக்க எப்படியடா மனசு வந்தது...? அன்புள்ள அப்பா, அன்புள்ள அம்மா, அன்புள்ள தங்கச்சி.... எண்டு நீ எழுதின  கடிதங்களிலை  இருந்த  அன்புக்கு அர்த்தமே இல்லாமைச் செய்துபோட்டியேடா....”

கண்களில் வழிய ஆரம்பித்திருந்த கண்ணீரைத் துடைக்கத் திராணியற்றவனாய் நின்றிருந்தான் மாயவனின் அண்ணன்.

(கடல்- வைகாசி1992)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!