புதன், 24 அக்டோபர், 2012

நான் தேடிப் பார்க்கிறேன்!

சிரட்டைக் கரிப்பொட்டு நெற்றியை மறைக்க
கள்ளங் கபடமில்லாக் குண்டுமணி விழிகளுடன்

தரையில் மார்பழுத்தித் தவழ முயற்சிக்கும்
மழலையின் படமொன்றை என்மகன் உற்றுநோக்குகிறான்.

செழுமைக் கன்னத்தில் குழிவிழும் சிரிப்புடன்
மெழுகுப் பொம்மைபோல் அரைசாண் களிசாணுடன்
பிஞ்சுக் கரங்களை இடுப்பில் சேர்த்திருக்கும்
சிறுவனின் படமொன்றை என்மகன் உற்றுநோக்குகிறான்.

அரும்பு மீசையுடன் சினிமாப் பாணியிலே
கேசம் சுருள்அலையாய் நெற்றியில் சரசமிட
இளமைக் கற்பனைகள் எழுந்தாடும் கண்களுடன்
துருதுருக்கும் இளைஞனின் படத்தையும் பார்க்கிறான்.

"அப்பா, இது எல்லாம் நீங்கள்தானா?"
பார்த்தவன் நம்பாமல் என்னிடம் கேட்டான்.
"நான்தான், நான்தான்"
உதடுகள் சொன்னாலும் உள்ளத்தில் ஒருகேள்வி.

அந்த மழலை... அந்தச் சிறுவன்... அந்த இளைஞன்...
அவர்கள் எல்லாம் நான்தான் என்றால்...
அந்த உருவங்கள் என்னைவிட்டு எங்கேபோயின?

காலம் கரைத்தவற்றை நான் தேடிப் பார்க்கிறேன்.
ம்...
கிடைத்தது என்னவோ வெறும் ஏக்கம்மட்டும்தான்.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா2 மே, 2013 அன்று 11:09 PM

    ''..அந்த மழலை... அந்தச் சிறுவன்... அந்த இளைஞன்...
    அவர்கள் எல்லாம் நான்தான் என்றால்...
    அந்த உருவங்கள் என்னைவிட்டு எங்கேபோயின?...'''
    good question....
    அந்த மழலை... அந்தச் சிறுவன்... அந்த இளைஞன்...
    அவர்கள் எல்லாம் நான்தான் என்றால்...
    அந்த உருவங்கள் என்னைவிட்டு எங்கேபோயின?etha.Elangathilakam.

    பதிலளிநீக்கு

மிகவும் நன்றி!