புதன், 24 அக்டோபர், 2012

தேசம் கடந்த பின்...!!!

லங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால், "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழிக்கேற்ப பொருள் வளத்துக்காகவும் கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து வேறுநாடுகளுக்குச் சென்றவர்களையும், அங்கே சென்றவர்களில் ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளிலேயே தமது வாழ்க்கையை நிரந்தரமாக்கியதையும், மறுபகுதியினர் சென்ற நோக்கத்தில் திருப்தியுற்றவர்களாக மீண்டும் தாயகத்திற்கு வந்து வசதியாகவும்,
அதனூடாகக் கிடைத்த கௌரவத்துடனும் வாழ்ந்ததைப்பற்றி எல்லாம் அறியமுடியும்.

கல்விக்காக பிரித்தானியா போன்ற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும், தொழிலுக்காக மலேசியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கும் குடிபெயர்ந்தவர்களையும், அவர்களில் சிலர் மீண்டும் தாயகத்துக்கு வந்து "மலேசியாப் பென்சனியர்" என்றும், "சிங்கப்பூர் பென்சனியர்" என்றும், அரசியல்வாதிகள் அப்புக்காத்துமார் என்றும் தங்களுக்குள்ளேயே ஒரு கௌரவமான வேலியைப்போட்டுக்கொண்டு வாழ்ந்ததைப்பற்றியும் மறைந்துபோன நாட்கள் எடுத்தியம்பும். ஆனால் எண்பதாம் ஆண்டுகளில் இருந்து ஈழத்தமிழர்கள் இலங்கையைவிட்டு இடம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை அடைவது பெரும்பாலும் உயிராபத்திலிருந்தும், சித்திரவதைகளிலிருந்தும் மனப்பயங்களிலிருந்தும் தப்புவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. அப்படி வந்தவர்கள் தமக்கென்றொரு வருமானத்தக்கான வழியைக் கண்டறிந்ததன் பின்பு தமது தொப்புள்கொடி உறவுகளின் தேவைகளிலும், அதற்கப்பால் தமது இனத்தின் சுபீட்சத்திற்கான முன்னெடுப்புத் தேவைகளின் பங்களிப்புகளிலும், தமது அடுத்த சந்ததி குறித்த அக்கறைகளிலும் பங்கேற்பதாகவே உள்ளது என்று பொதுவாகக் கூறிக்கொள்ளலாம்.

ஆனால் இத்தேவைகளின் நிரப்பலும், இனச் சுபீட்சத்திற்கான பங்களிப்பும் எவ்வளவுதூரம், எவ்வாறு, எத்தகையவர்களால் ஈடுசெய்யப்படுகின்றன என்று உன்னிப்பாக உற்றுநோக்கின் அது தாயகத்தில் இருந்து நேரடியாக இடம்பெயர்ந்தவர்களாலேயே செய்யப்படுகின்றன. இங்கே "நேரடியாக இடம்பெயர்ந்தவர்கள்" என்ற பதம் ஏன் பாவிக்கப்படுகின்றதென்றால், இவர்கள் தங்களால் இலங்கையில் வாழ இயலாது என்ற சுயமுடிவுடன் வேறுநாடுகளுக்குப் பயணமானவர்கள். அதேநேரம் புலம்பெயர்ந்த தமிழருள் "மறைமுகமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்ற இன்னொரு பதத்துள் அடக்கப்படக்கூடிய ஈழத்தமிழரையும் அடையாளப்படுத்த வேண்டிய தேவை நிறையவே உள்ளது.

அதாவது தாயகத்தில் வாழமுடியாது என்று சுயமாகத் தாமாகவே முடிவெடுக்கக்கூடிய பருவமோ தகுதியோ இன்றி வந்த சிறுவர்களையும், இடம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பிறந்த குழந்தைகளையும் "மறைமுகமாக இடம்பெயர்ந்தவர்கள்" என அழைக்கலாம்.

இந்த மறைமுகமாக இடம்பெயர்ந்தவர்கள் ஏனைய இனங்களைப்பொறுத்தவரையில் "புலம்பெயர்ந்த தமிழர்கள்" என்றுதான் அழைக்கப்படுவார்கள். இவர்கள் அந்தந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன் வாழநேர்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயரை உலக அரங்கிலிருந்து அழித்துவிட முடியாது. ஆகவே தமிழர்கள் தேசம் கடந்த பின் புலம்பெயர்ந்த தமிழர் என்ற இனம் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கப்போகிறது.

ஆகவே தேசம் கடந்து வந்த பின்னர் மேற்படி இருகூறுகளாக வகுக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் எவ்வாறு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?- இதனால் எதிர்காலத்தில் எத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது தற்காலத்துக்கு மிகவும் அவசியமாகிறது. நேரடியாக இடம்பெயர்ந்தவர்கள் மேலைத்தேசக் கலாச்சாரங்களுக்கிடையிலே நவீன இயந்திரங்களினதும் தொழில்நுட்பங்களினதும் வசதிக்கேற்பத் தமது வாழ்க்கை முறைகளையும் வசதி வாய்ப்புக்களையும் அறிந்தோ அறியாமலோ அமைத்துக்கொள்ளப் பழகிக்கொண்டாலும், அடிப்படை மனப்பான்மையைப் பொறுத்தளவில் மாற்றம் பெறாதவர்களாகவே உள்ளார்கள்.

பதவிகளில் நாட்டம், தம்மை சமூகத்தில் தமக்கொவ்வாத செயல்களில் முதன்மைப்படுத்துவதில் ஆர்வம், சாதி மத பாகுபாடுகளைக் கட்டிக்காக்கும் போக்கு, சரி பிழையை உய்த்துணராது தாம் சார்ந்த குழுவினருக்காகப் பக்கம் சாரும் இயல்பு, ஒருவரது இன்னல்களில் வலியச்சென்று ஆறுதல் சொல்லும் பண்பு, வேற்று இனத்தவரை "ஆஹா ஓஹோ" என்று தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஈடுபாடு போன்றவற்றில் இன்னும் மனதளவில் பாதிப்படையாதவர்களாகவே உள்ளார்கள். அதுமட்டுமல்ல சீட்டு, வட்டி, சிறுசிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துதல், கூடும் இடங்களில் சம்பந்தா சம்பந்தமில்லாத விசயங்கள் குறித்து தர்க்கம் புரிதல், நகைகளில் கவனம் செலுத்துதல், தமிழ்சினிமா சூப்பர் மெகா நட்சத்திர மோகங்கள், தமது இனத்துக்குள்ளேயே போட்டா போட்டி போன்ற தாயகத்தில் நிகழ்பவற்றையே புலம்பெயர்ந்த மண்ணிலும் நிகழ்த்திக் காட்டுபவர்களாகவே உள்ளார்கள்.

எனவே பொதுவாகக் கூறப்போனால் நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளின் புறச்சூழலால் சில மாற்றங்களுக்கு ஆட்பட நேர்ந்தாலும் அக இயல்புகளையும் பண்புகளையும் பொறுத்தளவில் அவர்கள் மாற்றம் அடையாதவர்களாக அல்லது தம்மை மாற்றத்திற்குட்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களாகவே வாழ்கிறார்கள்.

உதாரணமாக தாயகத்தில் ஆலயத்திருவிழா என்றால் சுவாமி தரிசனத்துக்காகச் செல்பவர்கள் ஏதோ ஒரு சில நிமிடங்களை சுவாமிக்காக ஒதுக்கிவிட்டு ஊர்ப்புதினங்கள் கதைப்பதிலும், பொருட்கொள்வனவுகளிலுமே கவனம் செலுத்துவதை அவதானிக்க முடியும்.

அதேபோல்தான் புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலய உற்சவங்களையோ அல்லது தமிழ்க் கலாச்சார விழாக்களையோ எடுத்துக்கொண்டால், அங்கும் பலர் வந்த நோக்கத்தை மறந்தவர்களாக தமக்குள் கதைத்து அமைதியைக் குலைப்பதையும் கண்டநிண்டதைச் சாப்பிட்டு அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதையுமே காணக்கூடியதாக உள்ளது.

போட்டாபோட்டி உணர்வை எடுத்துக்கொண்டால் தாயகத்தில் ஒரு திருவிழாவில் சதிர்க்கச்சேரி இடம்பெற்றால் மற்றவர் அதற்குப் போட்டியாக கூத்து வைப்பார். ஒருவர் மரண வீட்டுக்கு பறைமேளம் பிடித்தால், அடுத்தவர் அதனுடன் "தோம்புமேளம்" சேர்த்துப் பிடிப்பார்.

இங்கும் அத்தகைய போட்டாபோட்டிகளின் அடிப்படையில் மாற்றமில்லை.

ஒரு பெண் பத்துப்பவுணில் தாலியணிந்தால் மற்றவர் ஐம்பது பவுணுக்குத் தாவிவிடுவார்.

ஒருவர் "அவுடி" கார் வாங்கினால், மற்றவர் "பென்ஸ்" க்கு ஏறிவிடுவார்.

இவ்வாறு இவர்களின் மனமாற்றமின்மைக்கு எவ்வளவோ சம்பவங்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஆகவே நாடுகள் மாறினாலும் கண்டங்கள் கடந்தாலும் நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலே தமிழ் சமூக மேம்பாட்டுக்கான மாற்றம் இதுவரையில் ஏற்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

இந்த நிலைமை இவ்வாறு இருக்க பெற்றோர் வசிக்கும் நாடுகளே தமது வசிப்பிடம் என்ற நிலைக்கு வெளியே எதுவுமே தெரியாமல் சிறுபிள்ளைகளாக வந்தவர்களும், அந்நியநாடுகளில் பிறந்தவர்களும் தமிழர்களுக்கிடையே நிலவும் மாறாத அடிப்படைப் பண்புகளை அதிலும் குறிப்பாக சாதி சீதண முறைகளை கேள்வி ஞானம் மூலமாக மாத்திரமே சிறிதளவில் அறிந்தும் அறியாதவர்களாக உள்ளார்கள்.

அவ்வாறு ஓரளவு அறிந்தாலும் அதைப்பற்றிய பாதிப்பற்றவர்களாகவும் அதை ஒரு பொருட்டாக ஏற்றுக்கொள்ள இயலாத மனோநிலையுடனுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒரு நல்லவிடயம் என்றாலும் இந்த நல்ல விளைவை பெற்றோராகிய நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்கள் அனுமதிக்க ஒப்புதலின்றி அவர்களின்மீது தமது பிற்போக்குத்தனமான தனித்தன்மைகளை நிர்ப்பந்தமாகவோ பலாத்காரமாகவோ திணிக்க முற்படுகின்றார்கள் என்பதுதான் கண்கூடு. உதாரணமாக தாம் ஒருவருடன் பேசாவிட்டால், தமது பிள்ளைகளும் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேசக்கூடாது என்று தடை போடுவதையே அவதானிக்க முடிகின்றது.

இதனால் மறைமுகமாக இடம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக இடம்பெயர்ந்தவர்களின் நோக்கப்படி வாழமுடியாமலும், தமது சுய விருப்பப்படி அவர்கள் வாழும் நாடுகளுக்கேற்ப வாழமுடியாமலும், அரைகுறை வாழ்வை வாழவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

இதேவேளையில் நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்கள் பண்பாடுகள், தாய்மொழி, கட்டுப்பாடுகள் என எதையெதையோ தமது சந்ததிகளின்மேல் திணிக்க முற்பட்டாலும் வெற்றிகரமாக இருசாராருக்கும் தெரியாமல் இன்றைய சந்ததியினுள் சுலபமாகப் புகுந்தது என்னவோ தமிழ் சினிமா மோகம்தான்.

இளைய தலைமுறையினர் மேடைகளிலும், வானொலிகளிலும் தமிழில் முழங்கினாலும் தமக்குள் அந்நியமொழியில் உரையாடுவதே இலகு என நினைப்பதையும் வேற்றுமொழியைத் தமிழ்மொழிக்கு மொழிபெயர்ப்பதிலுள்ள சூன்யத்தன்மையையும் தட்டிக் கழித்துவிட முடியாது.

ஆனால் தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தளவில் அதன் மீதான ஈடுபாட்டிற்குத் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்களல்ல என்னும் போக்கை திரையிசை நடனங்கள் மூலமாகவும், தமிழ் சினிமா பார்ப்பதற்கான திரையரங்குகளில் முண்டியடிப்பதில் இருந்தும் புரிந்துகொள்ளலாம். இதற்குக் காரணம் என்ன என்று சிந்தித்தால் காரணத்திற்குரியவர்கள் நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்கள்தான். குழந்தை பிறந்த உடனேயே சினிமா அறிமுகமாகின்றது. அது அழுது அடம்பிடித்தால் சினிமாப் பாடல்கள்தான் அமைதிப்படுத்துகின்றன.

இதனால் தொட்டில் பழக்கமாக தமிழ்ச் சினிமாவானது இளம் சந்ததியின் மனதில் புகுந்துகொண்டது என்பதுதான் உண்மை.

குழந்தையானது கருவிலிருந்து வளர்ச்சியடையும்போதே தாய் நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல பாடல்களைக் கேட்பதும் வயிற்றிலுள்ள குழந்தையை நெறிப்படுத்தும் என்பது விஞ்ஞானரீதியான முடிவு. விஞ்ஞானம் முடிவு செய்யுமுன்பே பண்டைய தமிழன் இதை நிகழ்த்திக் காட்டினான்.

தொட்டிலில் கிடக்கும் குழந்தைக்குத் தாலாட்டின் மூலமாக தமிழுணர்வை நல்ல இசையோடு வழங்கினான். ஆனால் தற்போது எல்லாம் தமிழ் சினிமாவாகி, பிறக்கும் குழந்தைகளும் தமிழ் சினிமாவைமட்டும் தமிழ்க் குறியீடாகத் தூக்கிப்பிடிப்பதை மாத்திரமே அவதானிக்க முடிகிறது.

இங்கு மறைமுகமாக இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு தாய்மொழிப்பற்று இல்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்களே. தனது மகவிற்காக நல்ல தமிழில் தாலாட்டுப் பாடிய எந்தப் பெற்றோரும் தனது மகவிற்கு சுயமாக தாய்மொழிப்பற்று இல்லை என்று கூறமாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.

பல பெற்றோர்கள் தாலாட்டை ஒதுக்கி வைத்ததற்கு முக்கிய காரணம் தம்மிடம் அதற்கான குரல்வளமோ சங்கீதஞானமோ இல்லை என நினைப்பதுதான். இத்தகையவர்கள் தாயோ தகப்பனோ அழகற்றவர்களாக இருந்தாலும் குழந்தையானது அவர்களின் அரவணைப்பையே வேண்டி நிற்பதை உணராமல் போகின்றார்கள். இதேபோல் என்னதான் கர்ண கடூரமான குரலில் தாலாட்டைப் பாடினாலும் அது அவர்களின் குழந்தைக்குத் தேமதுரம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும்தான் சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.

ஆகவே பற்பல விசயங்களைப்பற்றிச் சிந்தித்துச் செயலாற்றவேண்டிய கடமைப்பாடு நேரடியாக இடம்பெயர்ந்த தமிழர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. எனவே புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாயம் தேசம் கடந்து வந்த பின்பாவது தமது சமூக மேம்பாட்டுக்கான சிந்தனை பெறவேண்டும்.

தேசம் கடந்த பின்பும் ஞானம் பெறாவிட்டால் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் இனச் சீரழிவுப் பாதையில் வழுக்கிவிழுவதற்கான சாத்தியங்களே ஏராளமாகத் தென்படுகின்றன. இப்படியான போக்குகள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்தை உலகில் எதற்குமே உபயோகப்படாத இனமாக உருவாக்கும். ஆனால் ஒரேயொரு விசயத்துக்கு மாத்திரமே உபயோகப்படலாம். அதாவது உலகில் சீரழிந்த சமுதாயங்களிற்கு ஓர் முன்னுதாரணமாகக் காட்டுவதற்கு உபயோகப்படலாம்.


("பூவரசு" பத்தாவது ஆண்டுநிறைவுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை.)

(பிரசுரம்: "பூவரசு" தை-2001)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!