வியாழன், 4 அக்டோபர், 2012

மாற்றம்

பாக்கியம் பெருமூச்செறிந்தாள்.

அவள் வாழ்க்கையை வாழ்வதற்காக ஏதாவதொரு துரும்பு கிடைக்கும், கிடைக்கும் என்று எதிர்பார்த்து எல்லாமே ஏமாற்றங்களாகிவிட்டன.

'இனி எப்படி வாழப்போகிறோம்?' என்ற கேள்வியே திரும்பத் திரும்ப அவளின் மனதில்....

ஒரே மகன் சிவா.... மகள் தமயந்தி. இந்திய இராணுவத்தின் நிதானமற்ற துப்பாக்கி வேட்டுக்குக் கணவனைப்
பறிகொடுத்தும், பிள்ளைகளுக்காக என்ற ஆறுதலில் காலத்தை ஓட்டியவள், இன்று மீதிக் காலத்தை எப்படிக் கழிப்பது என்ற புரியாத புதிரில்....
"அப்பு ராசா, இதுகளுக்காலை ஓடித் தப்படா" என்று அக்கம் பக்கத்தில் உருட்டிப் பிரட்டி, சிவாவை ஜேர்மனிக்கு அனுப்பி வருடங்கள் இரண்டிற்கும் மேலாகிவிட்டன.

'பொடியன்  போய்விட்டான். சீவியத்துக்கு ஏதாலும் அனுப்புவான்தானே?' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி, சாப்பாட்டுக்காகக் கடன்பட்டுக் கடன்பட்டு, சமாதானங்கள் யாவுமே சமாதிகளாகிய நிலையில் பாக்கியம்.

கடந்த ஒரு வருடமாக சிவாவிடமிருந்து எவ்விதமான கடிதங்களும் வரவில்லை.

தமயந்திக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. அவளையும் திருமணக்கோலத்தில் பார்க்கலாம் என்றால்.... சாப்பாட்டுக்கே வழியைக் காணவில்லை.

நம்பியவன் கை கழுவிவிட்டானோ?

சிவாவைப்பற்றி எவரிடம் விசாரிப்பது என்றும் புரியவில்லை. கொழும்புக்குப் போவோரிடம் ஜேர்மனிக்கு அனுப்புமாறு கொடுத்துவிட்ட கடிதங்களுக்கு எவ்வித பதிலும் இல்லை.

ஜேர்மனிக்குப் போன புதிதில் எவ்வளவு ஆசையாக, அன்பாகக் கடிதம் எழுதினான் சிவா.

'அம்மா! நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களையும் தங்கச்சியையும் கண் கலங்காமல் கவனிப்பது என்னுடைய கடமை....'

போய் ஒரு வருடமாகக் கஸ்டப்பட்டு உழைத்தான். அனுப்பினான். விலைவாசி தெரியவில்லை. சிவா தொடர்ந்து அனுப்புவான்தானே என்ற எதிர்பார்ப்பில் சிக்கனமாக வாழத் தோன்றவில்லை.

ஆனால் தற்போது சிவாவிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காதநிலையில் எவ்வளவு காலந்தான் அக்கம் பக்கத்திடம் உதவி கேட்கமுடியும்? ஒவ்வொரு தடவையும் 'கடன்' என்று கேட்கும்போது உடலும் உள்ளமும் கூனிக் குறுகி, ஏதோ ஒரு குற்றவாளியைப்போலல்லவா நடக்க வேண்டியுள்ளது?!

இவ்வளவு காலமும் வாங்கிய கடனையே எவ்வாறு மீளச் செலுத்துவது எனப் புரியவில்லை.

பாக்கியத்துக்குத் தன்னைப்பற்றிக் கவலை இல்லை. எல்லாவற்றையும் வாழ்ந்து அனுபவித்தாகிவிட்டதென்ற திருப்தி. ஆனால் பாவம் தமயந்தியின் கதி.... அவளின் வாழ்வில் ஒரு விடியலைத் தோற்றுவிக்கலாம் என்றால், அதற்கு ஒரு துரும்பாவது கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

இந்தக் கேள்வியின் விடையான சிவாவின் நிலைதான் என்ன...?!

*****

மேசையில் ஒரு கறுத்தமட்டைப் புத்தகத்தில் மூழ்கியிருந்த சிவாவை உலுக்கினான் ரவி.

"டேய்.... உனக்கென்னடா பைத்தியமா பிடித்துவிட்டது? எப்ப பார்த்தாலும் உந்தப் புத்தகத்தையே படிச்சுக்கொண்டு.... வெளியிலை போய் நாலு காசு சம்பாதிச்சுக் குடும்பத்தைக் கவனிப்பதை விட்டுப்போட்டு, அப்பிடி என்னதான் உதிலை ஆராய்ச்சி....” என்று கேட்டவனைப் புன்முறுவலுடன் நோக்கினான் சிவா.

“பிறதர்.... உமக்கு இதனுடைய அருமை தெரியாததால் இப்படிச் சொல்லுறீர். இது சாதாரண புத்தகமில்லை. தேவனால் அருளப்பட்ட வேதாகமம். ஒருவன் மனிதனாக வாழவேண்டுமானால் அவசியம் இதைப் படிக்கவேணும். கர்த்தர் கூறுகிறார்.... நானே சத்தியமும்....”

“போதும் போதும். எனக்கிப்ப உன்னுடைய அறிவுரை தேவையில்லை. முதலிலை நாங்கள் உண்மையுள்ளவர்களானால் போதும். இந்தா.... உன்ரை அம்மாவின்ரை கடிதம்.... பாவம் மனிசி அங்கை என்ன கஸ்டப்படுகுதோ.... இந்தக் கடிதத்துக்காலும் பதில் போடு.... பைபிள் படிப்பது தப்பில்லை. அதன்படி வாழுறதும் தப்பில்லை. ஆனால் வேலை எதுவும் செய்யாமை, தன்னுடைய குடும்பத்தைக் கவனிக்காமை, மற்ற மதங்களைக் குறை கூறிக்கொண்டு, எந்தநேரமும் பைபிளும் கையுமாக இருக்கிறதுதான் தப்பு....”

“பிறதர்.... உமக்கு இதைப்பற்றித் தெரியேலை....”

“என்ன தெரியேலை.... அங்கை உன்ரை அம்மாவும் சகோதரியும் பசியோடை இருக்கிறதுதான் சரியாய்ப்படூதா? அதுகள் எவ்வளவு நம்பிக்கையோடை உன்னை இங்கை அனுப்பிச்சுதுகள். ஆனால் நீ.... மனசிலை கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாமை அதுகளை மறந்து, இந்தப் புத்தகத்திலை உன்ரை வாழ்க்கையையே வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்” என்று சினத்துடன் கூறினான் ரவி.

ரவிக்குத் தேவனின் அருமை புரியவில்லை என்பது சிவாவின் எண்ணம். சிவா எப்போது திருந்துவான் என்பது ரவியின் எதிர்பார்ப்பு.

(பிரசுரம்: கடல்-1992)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!