திங்கள், 8 அக்டோபர், 2012

எனக்கென ஒரு வட்டம்

கதி முகாம். பலதரப்பட்ட நாட்டவர்களின் பலவிதமான குணாதிசயங்கள் சங்கமித்துச் சரசமாடும் அல்லது சண்டையிடும் வசந்தமாளிகை.

சங்கர் ஒரு வித்தியாசமான பாத்திரம். மதுவும் கையுமாக எந்நேரமும் புலம்புவதிலேயே அவனது நாட்கள் கரைந்து கொண்டிருந்தன. காரணம் காதல். காதலருக்குச் சாதி ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. பெற்றோருக்குத் தெரிந்தது. ஊரில் இருந்தால் கெட்டுவிடுவான் என்று ஜேர்மனிக்கு அனுப்பிவிட்டார்கள்.


வசந்தி - அவனுடைய காதலி. அவள் நிரம்பியிருந்த இதயம் வெறுமையான பிரமைபோலும். தினசரி விஸ்கியாலும், பியராலும் இதயத்தை நிரப்ப முற்பட்டுவிட்டான்.

'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காற்றாடி போலாடுது.’

சங்கருக்குத் தெரிந்த ஒரே பாடல். போதையில் அவன் பாடும்போது தெறிக்கும் உணர்ச்சிகளில் கண்கலங்கியோர் பலர்.

அவனின் வாழ்விலும் ஓர் வித்தியாசமான நாள்....

“வசந்தி.... வசந்தி....’’ என்று குடிபோதையில் சோகராகம் இசைக்கும் சங்கரின் முகத்தில் என்றுமில்லாத குதூகலம். உடையிலும் மாற்றம். அழகாக முகச்சவரம் செய்திருந்தான்.

சங்கர் திருந்திவிட்டானா? அப்பாடா நிம்மதி. ஒப்பாரி ஓய்ந்தது.

இரவில் நிம்மதியாகத் தூங்கலாம்.

இது அந்த முகாமில் வாழும் பலரது எண்ணம்.

“மச்சான் றோய்.... நாளைக்குப் 'பிராங்பேர்ட்'டுக்குப் போகவேணும்.... ரெடியாயிரு.... வசந்தி வந்தீட்டாள்.” றோய் ஆச்சரியத்தில் பிரமித்துவிட்டான்.

“கனவோ.... உண்மையாய் வந்திட்டாள்.... உன்ரை 'காரை’த்தான் நம்பியிருக்கிறன். ஏமாத்திப்போடாதை.”

*****
பொழுது புலர்ந்தது. றோய் சங்கர் இருவரும் காரில் புறப்பட்டனர். அப்போதும் சங்கர் கையில் 'பியர்’ போத்தலுடன்தான் இருந்தான்.

“திருந்தமாட்டாய்....”

“இது சந்தோசத்துக்கு மச்சான்.”

'பியர்’ உள்ளே செல்லச்செல்ல மனக்கதவுகள் திறந்துகொள்ள ஆரம்பித்தன.

“மச்சான் றோய்! என்ரை வசந்தியைப்பற்றி உனக்குத் தெரியாது. எனக்காக எதையும் செய்வாள். இந்த நேரம் இந்த இடத்திலை வந்து நில்லெண்டால் தப்பாது. காளி கோயில் முடக்கிலைதான் அடிக்கடி சந்திக்கிறனாங்கள்.... எங்கடை காதலிலை ஒரு வேடிக்கை தெரியுமே? எனக்கு அவளோடை வாழுவன் எண்ட நம்பிக்கை இருக்கு. ஆனால் அவளுக்கு எண்டைக்குமே அந்த நம்பிக்கை இருந்ததில்லை. அவளே இதைப்பற்றி ஒருதடவை சொன்னவள்....

- இதோ பாருங்கோ சங்கர்.... நாங்கள் கடைசி வரைக்கும் ஒண்டாய் வாழுவம் எண்டு நினைக்கேலை. நாளைக்கு நீங்கள் ஆரோடையாலும் வாழுவியள். ஏனெண்டால் நான் தாழ்ந்த சாதி. என்னை உங்கடை ஆக்கள் அடுக்கமாட்டினம். பேந்தேன் காதலிச்சனி எண்டு கேக்கலாம்... இப்ப கொஞ்சநாளைக்காலும் என்ரை மனசுக்குப் பிடிச்சபடி வாழ ஆசைப்படுறன்...-

கொஞ்சநாளைக்காலும் என்னோடை வாழுறதுதான் சந்தோசம் எண்ட வசந்தி, இப்ப ஜேர்மனிக்கு வந்திருக்கிறாள். எதுக்கு வந்தவளெண்டுதான் விளங்கேலை....”

“என்ன.... இஞ்சை  வாறதைப்பற்றி உனக்கு அறிவிக்கேலையோ?” என்று வியப்புடன் கேட்டான் றோய்.

“எனக்கு அவள் அறிவிக்கேலை. ஊர்ப் பொடியன் ஒருத்தன்மூலந்தான் அவள் 'பிராங்பேர்ட்டிலை நிக்கிறதை அறிஞ்சனான்.”

கார் 'பிராங்பேர்ட்டை அடைந்தது.

சங்கரைக் கண்ட வசந்தி ஒருகணம் திகைத்துவிட்டாள். ஓராயிரம் எண்ணக் கலவைகள் முகத்தில் தாண்டவமாடி ஒரு நொடியில் மறைந்தன.

“என்ன.... எப்பிடி இருக்கிறன் எண்டு பாக்க வந்தனியளா? இப்ப கொஞ்சநேரத்திலை அவர் வாறன் எண்டு சொன்னவர்.”

''ஆர் அவர்?”

“என்னுடைய வருங்காலக் கணவர்” என்று அமைதியாகக் கூறினாள் வசந்தி.

“வசந்தி....”
அதிர்ந்துபோனவனாய்க் கத்தினான் சங்கர்.

“நீ எனக்குத் துரோகம் பண்ணிப்போட்டாய்.”

“இல்லை சங்கர். எல்லாத்துக்கும் நீங்கள்தான் காரணம். ஊரிலை இருந்து காதலை நிறைவேற்றத் தைரியம் இல்லாமை ஜேர்மனிக்கு வந்தியள். இஞ்சை வந்த பிறகாவது உங்கடை வீட்டாக்களுக்கு எங்கடை காதலைப்பற்றி.... என்னைப்பற்றி எழுதினீங்களா....?”

“இப்ப உன்னைக் கூட்டிக்கொண்டு போகத்தான் வந்தனான்....”

“ஊருக்குத் தெரியாமை இஞ்சை வாழலாம் எண்டு நினைக்கிறியளா? எத்தனை நாளைக்கு....?? சரி, அப்பிடி வாழ ஆசைப்பட்டாலும் உங்கடை செலவிலை என்னைக் கூப்பிட்டிருக்கலாந்தானே? வாழவேணும் எண்ட கொள்கை இருந்தால் அதை நிறைவேற்றவா முடியாது? கொஞ்சக்காலம் என்ரை ஆசைப்படி உங்களோடை வாழ்ந்தன். இப்ப என்ரை பெற்றோரின் ஆசைப்படி வாழ வந்திருக்கிறன். சுரேஸ்தான் காசு அனுப்பி என்னைக் கூப்பிட்டவர். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டன்.”

“வசந்தி, உனக்காக நான் குடிச்சுக் குடிச்சு அழிஞ்சு கொண்டிருக்கிறன்...."

“உங்கடை சோகங்களை மறக்க, உங்களை மறக்கக் குடிக்கிறியள். ஆனால் என்னைப்பற்றி, என்ரை மன வேதனையளைப்பற்றி, அவற்றுக்கு என்ன பரிகாரம் காணலாம் எண்டதைப்பற்றிச் சிந்திச்சீங்களே.. தயவுசெய்து என்னை விட்டுடுங்க..!"

'உண்மைதான். இவளைப்பற்றி... இவளது நிம்மதியைப்பற்றி இவ்வளவு காலமும் சிந்திக்கேலை. என்ரை கவலையள், என்ரை ஏக்கங்கள் எண்டு என்னைச் சுற்றியே வட்டங்களைப்போட்டு வாழ்ந்துவிட்டன். எவ்வளவு சுயநலக்காரன் நான்.’

கண்களில் ஊற்றெடுத்த நீர்த் திவலைகளினூடே தொலைவில் சுரேஸ் வருவது மங்கலாகத் தெரிகிறது.

“நான் போறன் வசந்தி....”

றோய் மௌனமாகப் பின்தொடர்ந்தான்.

(தளிர் - வைகாசி 1990)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!