புதன், 3 அக்டோபர், 2012

பாதிப்பு

சூரியனுக்கு என்னதான் குதூகலமோ? மிகவும் கடூரமாகச் சூட்டை வெய்யிலுடன் கலந்துவிட்டிருந்தான் ஸ்ரீலங்கா அரசு தமிழீழத்தில் பொருளாதாரத் தடையுடன் விமானத் தாக்குதலை நடாத்துவதுபோல. ஒருவருக்குச் சந்தோசமானபோது மற்றொருவர் கஸ்டப்படுவது இயற்கைதானே?!

எப்படியாவது கொதிக்கும் வெய்யிலில் கால் உழையக் காத்து நின்றாவது அரிசியை வாங்கிக்கொண்டுதான் போகவேண்டும் என்ற உறுதியுடன் அந்த மக்கள் கையில் வியர்வையால் பிசுபிசுக்கும் கசங்கிப்போன
சில முத்திரைகளுடனும் உர 'வாய்க்'குகளுடனும் காத்திருந்தார்கள்.

வயிற்றில் பசி. சூட்டாலும் பசியாலும் கைக்குழந்தைகள் சில தாய்மாரின் மார்புச் சேலைக்குள் முகம்புதைத்து அழுதன.

பளீரென்று எறிக்கும் வெய்யிலில் வீதிப்புழுதி அந்தச் சனங்களின் மூக்குத் துவாரங்களில் நுழைந்தாலும் அது அவர்களுக்குப் பழகிப்போனதொன்றாகிவிட்டது.

பூவரசம் மரங்களிலும் முள்ளுக்கிளுவைகளிலும் பசுமையைக் காணவில்லை. ஏதோ இலை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டுவதற்காகவோ என்னவோ இரண்டொரு பழுத்தல்களும் சில பசுமையற்ற பச்சைகளுமாய் இலைகள் வதங்கிப்போயிருந்தன.

உயிர்த்துடிப்பின்றி அந்தக் கிராமம் மௌன நிழல்களாய் விறைத்திருந்தது.

பசியைத் தாங்கமுடியாத குழந்தைகள், தமது உணர்ச்சிகளை அழுகையில் இருந்து கதறல்களில் வெளிப்படுத்தவென வீறிட ஆரம்பித்திருந்தன. பல பெண்கள் களைப்பு மேலிட நின்ற இடத்திலேயே உட்கார்ந்துவிட்டனர்.

''என்ன பெண்டுகள், இப்பிடிச் சக்கைப்பணிய இருந்தால் வரிசை எப்பிடி முன்னுக்குப் போறது.... எல்லாரும் எழும்புங்கோ'' என்றார் செல்லமக்கா.

''எவ்வளவு நேரந்தான் நிக்கிறது? நிண்டு நிண்டு கால் உழைஞ்சு போச்சு....'' என்று எவளோ ஒருத்தி எரிச்சலுடன் கூறினாள்.

''வீட்டைபோன(உ)டனை உன்ரை புருசனைத் தைலம் தேய்க்சுவிடச் சொல்லு.''

''அந்தாள் தேய்ச்சுவிட்டாலும் தைலத்துக்கு நான் எங்கை போறதாக்கும்'' என்று அலுத்துக் கொண்டாள் அந்த ஒருத்தி.

''இதிலை நீட்டிப்பிடிச்சுக்கொண்டு இருந்தால் மற்றவை எல்லாம் எப்பிடி முன்னாலை போறது?''

யாரோ ஒரு பெண் வீறிட்டலறும் கைக்குழந்தையை அடக்கமுடியாமல் வரிசையைவிட்டும் விலகிச்செல்ல முடியாமல், குழந்தையின் காலில் இரண்டு நுள்ளு நுள்ளினாள்.

''ஏண்டி லீலா! உனக்குக் கொஞ்சமாலும் மூளைகீளை இருக்கேடி.... அது பசியாலை கத்துதோ இல்லாட்டி வெக்கையாலை அழூதோ ஆர் கண்டது.... அங்கா அந்த வேலி நிழலிலை இருந்து பாலைக் குடடி. வரிசை கிட்டப்போகேக்கை கூப்பிடுறன். கந்தையா அண்ணருக்கு ஒற்றைப் பெட்டையாய்ப் பிறந்து செல்லமாய் வளந்து இப்பிடிக் கஸ்டப்பட வேண்டிக்கிடக்குது'' என்று பச்சாதாபப்பட்டாள் செல்லமக்கா.

லீலா மௌனமாக வேலியின் நிழலை நாடிச் சென்றாள்.

அது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளை. எப்போதாவது இருந்தாற்போல அரிசி வரும். மற்றும்படி நாட்டு நிலையைச் சர்வசாதாரணமாக்கிக் கடை வெறுமையாக இருப்பதுதான் வழக்கம். இன்று அரிசி வந்த செய்தியைக் கேள்விப்பட்ட அக்கிராம மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு கூடியிருந்தார்கள்.

''பன்ரண்டு மணிமட்டுந்தான் அரிசி குடுப்பம். பன்ரண்டுக்கு இன்னும் அரை மணித்தியாலந்தான் இருக்கு. ஆறேழு பேருக்குத்தான் குடுக்கலாம். மிச்ச ஆக்கள் மூண்டு மணிக்கு வாருங்கோ....'' என்று சங்கக்கடை மனேசர் குண்டைத் தூக்கிப்போட்டார்.

''என்ன.... என்ன....'' என்று எல்லோரும் கத்தினார்கள்.

''தமிழிலைதான் சொன்னனான். பேந்தென்ன  கேள்வி?''

ஆணவமாகக் கேட்டார் மனேசர்.

''ஏன்ரா பாழ்படுவானே.... கோதாரியிலை போறவனே.... விடியக்காலத்தாலை பல்லுக்கூடத் தேய்க்காமை கைக் குழந்தையோடை நிக்கிறம். போன கிழமை முத்திலும் சங்கத்துக்கு அரிசி வரேல்லை. யானையிலை வந்தமாதிரி இண்டைக்கு வந்திருக்கு. பின்னேரம் அரிசி முடிஞ்சுபோமோ இல்லையோ எண்டு ஆர் கண்டது? நீ என்னடாவெண்டால் பின்னேரம் வாங்கோ எண்டு சுகமாய்ச் சொல்லிப்போட்டாய்.... அப்பு தம்பி.... கொஞ்சம் இரக்கம் காட்டணை. நல்லாயிருப்பாய்...'' என்று கத்தலில் ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தார் செல்லமக்கா.

மற்றவர்கள் எவரும் குறுக்கிடவில்லை. செல்லமக்காவின் கோரிக்கை ஏற்கப்படாதா என்ற நப்பாசையில் மௌனமாய் நின்றிருந்தனர்.

''எல்லாருக்கும் ஒருக்காத்தான் சொல்லுறது.... உனக்கென்ன பேந்து பிறிம்பாய்ச் சொல்லவேணுமே?'' என்று கடுகடுத்தார் மனேசர்.

''கிழமையிலை ஒரு நாளைக்காலும் ஒழுங்காய் அரிசியைக் கொண்டுவந்து தாறதில்லை. சனங்கள் எல்லாம் சோத்துக்கு அரிசியைக் காணாமைக் கஞ்சியையோ கூழையோ உறிஞ்சிக்கொண்டு அரையும் குறையுமாய்ப் பட்டினியாலை வாடுதுகள். எல்லாச் சனமும் சங்கக் கடையை நம்பித்தான் காயுதுகள். வெளிநாட்டிலை ஆராலும் இருந்தாலாவது கையிலை மடியிலை பிழங்குறதை வைச்சு எங்கையாலும் அரிசி வாங்கித் தின்னலாம். நீ என்னடாவெண்டால் நெஞ்சிலை கொஞ்சங்கூட ஈவிரக்கம் இல்லாமைக் கதவைச் சாத்தப்போறனெண்டுறாய். மரியாதையாய்ச் சொல்லுறன்.... எல்லாருக்கும் அரிசியைக் குடுத்துப்போட்டுப் பேந்து கடையைப் பூட்டு. என்னவோ சம்பளமில்லாமை வேலைசெய்யுறவன்மாதிரி....''

''நீ என்ன பெரிய லோயரின்ரை பெஞ்சாதிமாதிரி விட்டாக் கதைச்சுக்கொண்டே போறாய். இப்ப அரிசி தந்தால் வாங்கிக்கொண்டு போ. இல்லாட்டில் பின்னேரம் வந்து வாங்கு.... உனக்காக வேண்டிக் கடையைத் திறந்துவைச்சால் நான் வீட்டை போறேல்லையே.... சாப்பிடுறேல்லையே....?''

''ஏனப்பா.... உங்கடை வசதிக்குத் தகுந்தமாதிரி அதிகாரம் பண்ணுறியள்.... நியாயத்தைக் கேட்டால் கதையாமை இரு எண்டு அடக்கிறாய். இரக்கமில்லையே?! உன்னை வாயைப் பொத்திக் கொண்டிருந்து அரிசியைப் போடெண்டு சொல்ல எவ்வளவு நேரஞ்செல்லும்? நாங்கள் என்ன திண்டு கொழுத்துப்போய் சொக்கிலேற்று வாங்கித் தின்னவே வந்து நிக்கிறம். ஏதோ அரைவயித்துக் கஞ்சியோ, கால்வயித்துக் கஞ்சியோ காய்ச்சிக் குடிக்கத்தானே இஞ்சைவந்து காயுறம். கொஞ்சம் கெதியாய் "பில்" எழுதி நிறுத்துப்போட்டால் ஒரு மணிக்குள்ளை எல்லாத்தையும் முடிச்சுப்போடலாம்.''

''கடையைத் திறந்ததே அரை மணித்தியாலம் பிந்தி. அதிலை ஒண்டும் சட்டதிட்டம் இல்லை. பூட்டேக்கைதான் சட்டப்படி பூட்டவேணுமோ? மூண்டுமணிமட்டும் இந்த வெய்யிலுக்கை காத்திருந்து, எப்ப சமைச்சுச் சாப்பிடுறதாக்கும்.... பச்சைக் குழந்தையள் மூண்டு மணிவரையும் வயித்தைக் காயவைக்க முடியுமே? இப்பவே பசியாலை துடிக்குதுகள். நீயும் இந்த ஊரிலைதானே பிறந்து வளந்தனீ.... இதிலை நிக்கிற சனங்களின்ரை நிலவரங்கள் உனக்கும் தெரியுந்தானே... இதிலை எத்தினைபேர் வசதியாய் வாழ்ந்து இப்ப கெட்டுநொந்துபோய் இருக்குதுகள் எண்டதும் தெரியுந்தானே? ஏதோ எங்கடை ஊர்க்காரன்.... அறிஞ்சவன்.... தெரிஞ்சவன் எண்டு பார்த்தால் என்னவோ அதிகாரம் கொடிகட்டிப் பறக்குதே?'' என்று செல்லமக்கா குத்தலாகப் பேசப்பேச, சங்கக்கடை மனேசருக்குக் கோபத்தால் முகம் சிவக்க ஆரம்பித்தது.

''அப்பவே இருந்து பாக்கிறன், நீதான் என்னோடை ஏறுக்குமாறாய் மிண்டிக்கொண்டிருக்கிறாய். அரைவயிறு கால்வயிறுக் கஞ்சி குடிச்சே கொழுப்பேறிப்போய்க் கதைக்கிற நீ, சோறு திண்டால் இன்னும் என்னென்ன கதைப்பாய்? நீ பசியோடை இருந்தாலும் சரி செத்தாலுஞ் சரி எனக்கென்ன?”"" என்றவர், சாமான் நிறுத்துக்கொண்டிருந்தவனைப் பார்த்துக் கத்தினார்.

''டேய் மூர்த்தி... கடையைப் பூட்டடா கெதியாய்'' என்று உத்தரவிட்டபடி கதிரையில் இருந்து எழுந்தார் மனேசர்.

''ஏண்டாப்பா.... நாங்கள் நிக்கிறது உன்ரை கண்ணுக்குத் தெரியேலையே? இன்னும் பன்ரண்டு மணிகூட ஆகேலை. ஏன் இப்பிடி ஏடாகூடமாய் நடக்கிறாய்?'' என்று வேறும் சிலபேர் செல்லமக்காவுடன் சேர்ந்து சத்தமிட்டனர்.

''சொன்னது சொன்னதுதான். டேய் மூர்த்தி.... பூட்டடா. உங்கடை வசதிக்காய்க் கடையைத் திறந்துவைக்கச் சொல்லி எனக்கு ஆரும் சொன்னதுமில்லை. உங்களுக்குச் சேவை செய்யவேணுமெண்டு என்ரை தாய் தேப்பன் என்னைப் பெறவும் இல்லை.''

''ஏண்டாப்பா அளவுக்கு மிஞ்சிக் கதைக்கிறாய்? நாங்கள் என்ன அவ்வளவு இளக்காரமாய்ப் போனமா? உன்ரை கொப்பன் எப்பிடி வாழ்ந்தவன் எண்டு இஞ்சை நிக்கிற சனத்துக்குத் தெரிஞ்சதுதானே? கள்ளமாடு பிடிச்சு வன்னியிலை கொண்டுபோய் வித்துத்தானே சீவிச்சவன்....''

''கொழுப்பு ஏறிப்போச்சு....''

''என்னடா கொழுப்புக் கிழுப்பெண்டுகொண்டு.... உனக்குத்தான்டா கொழுப்புப் பிடிச்சுப்போச்சு. சங்கத்துக்கு வாற அரிசி மூட்டையளிலை பாதியை ஏரம்புகடைக்கு வித்துக் காசடிக்கிற நீயும் ஒரு மனிசனே.... ஈனப்பிறவி. இப்ப மரியாதையாய் அரிசி தரப்போறியா இல்லையா?''

''இல்லாட்டி.... இல்லைத் தெரியாமைத்தான் கேக்கிறன். இல்லாட்டி என்ன செய்யப்போறியள்? டேய் மூர்த்தி.... மடையா, அங்கை என்னடா வாய் பாத்துக்கொண்டு.... கெதியாய்ப் பூட்டடா.''

மூர்த்தி கடையைப் பூட்டப்போக, செல்லமக்கா அவனது கையைப் பிடித்துக்கொண்டாள். செல்லமக்காவுக்கே ரோசம் பொத்துக்கொண்டு வந்தபோது.... பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆண்களும் சேர்ந்துகொண்டார்கள். மனேசர் குறுக்கே பாய, யாரோ அவரைப் பிடித்து வெளியே இழுத்தெறிந்தார்கள்.

ஆவேசத்தில் ஆக்கினையில் அகப்பட்டுச் சிலிர்த்தெழுந்த அந்த மக்கள்கூட்டம் வெற்றுப்பைகளுடன் முண்டியடித்தவாறு கடைக்குள் நுழைந்து அரிசியைப் பைகளில் நிரப்பிக்கொண்டது.

செல்லமக்கா பெருமை பொங்க, 'மக்கள் சக்தியைப் பார்' என்பதுபோல மனேசரைப் பார்த்தாள். எதுவுமே செய்யமுடியாத இயலாமையுடன் பழிவாங்குவேன் என்ற கோலத்தில் நின்றிருந்தார் மனேசர்.

தற்போதைக்கு அந்த மக்களின் அரிசிப் பிரச்சினை தீர்ந்துவிட்டது. நாளையிலிருந்து சங்கக்கடையே இல்லாமல் போகலாம். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

நாளையும் அவர்கள் வாழத்தான் போகிறார்கள். ஏதாவது கிடைக்காமலா போய்விடும்?!

*****

அந்தச் சிறுகதையைப் படித்து முடித்துவிட்டுப் பெருமூச்சொன்றை உதிர்த்தான் உதயன்.

அரிசிக்காகப் போராடி அரைவயிற்றை நிரப்ப முற்படும் தாயக மக்களின் அவலத்தின் ஒரு நிகழ்வை எவ்வளவு ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறது அந்தக் கதை.

அவர்களின் எதர்காலம்தான் என்ன? அவர்களுக்கு எவர் உதவுவார்கள்? அந்த மக்களுக்கு என்றுதான் விடிவு வரும்?

வயிறு நிறையச் சாப்பிட்டு, வசதியாக வாழ ஒரு காலம் அவர்களை நாடாதா?

அவர்களைப்பற்றி இந்த ஜேர்மன் மண்ணிலோ அல்லது ஐரோப்பிய மண்ணிலோ வாழும் தமிழர்களில் எத்தனைபேர் சிந்தித்து உதவிசெய்ய விழைகிறார்கள்?

ஏன் மற்றவர்களைப்பற்றி எண்ணவேண்டும்? நானே.... அவர்களுக்காக.... என் தேவைகளை வசதிகளைக் குறைத்துச் செயற்பட்டால் என்ன?!

தன்னையே கேட்டுக்கொண்டான் உதயன். அந்தச் சிறுகதை அவனுள் பலவிதமான உணர்வுகளைத் தோற்றுவித்திருந்தது.

ஜேர்மனியில் அகதி அந்தஸ்துக் கோரி, நல்லதொரு தொழிற்சாலையில் வேலைசெய்யும் உதயன் தாயக அகதிகளுக்காக உதவிசெய்ய அப்போதே தீர்மானித்தான்.

''என்னங்க.... சாப்பாடு எடுக்கட்டே....''

சமையல் முடித்துக் குரல் கொடுத்தாள் சாந்தி.

''ம்.....''

சாப்பாட்டுச் சட்டிகள் மேசைக்கு வந்தன.

பரிமாறினாள்.

சோற்றைக் கறியுடன் பிசைந்து ஒரு கவளம் விழுங்கிய உதயனின் முகம் சுருங்கியது.

''இதென்ன கறி....'' என்று கோபம் கொப்புளிக்கக் கேட்டான்.

''சுறாக்குழம்பு.... ஏன் கேக்கிறியள்?''

''உனக்கு எத்தினை தரம் படிச்சுப் படிச்சுச் சொன்னனான் சுறாக் குழம்புக்குப் பழப்புளி விடவேணுமெண்டு. கறியிலை உப்பும் இல்லை. புளியும் இல்லை.... என்ன எண்ணத்திலை சமைச்சனீ?''

''புளி முடிஞ்சுபோச்சு...''

''அதை முந்திச் சொல்லி இருக்கலாந்தானே.... புளி இல்லாட்டி வேறை கறியைக் காய்ச்சாதன்....?''

''இறைச்சியும் முடிஞ்சுபோச்சு...'' என்று கணவனுக்கு அடங்கிய (அடிமையாகிய) அப்பாவி முணுமுணுத்தாள்.

''எல்லாத்துக்கும் முடிஞ்சுது முடிஞ்சுது எண்டத்தான் உனக்குத் தெரியும். சரியான இளவு.... நீயும் உன்ரை கறியும்'' என்றவாறு சோற்றுக் கோப்பையைத் தள்ளிவிட, சோறும் கோப்பையும் தரையில் விழுந்து நாலாபுறமும் சிதறின.

சிறிது நேரத்திற்கு முன்பு படித்த அந்தச் சிறுகதை.... அதனால் எழுந்த எண்ணங்கள்.... எல்லாமே அந்தக்கணத்தில் நீரில் எழுதிய எழுத்துக்களாக....

அந்த ஆணின் அதிகாரத்தில் அலங்கோலமாகிய அறையைச் சுத்தமாக்குவதில் முனைந்திருந்தாள் சாந்தி.

(கடல் - மார்கழி 1993)
(தமிழர் புனரமைப்பு ஒன்றியம் ராட்டிங்கன் (யேர்மனி) 4வது ஆண்டுமலர்-1995)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!