சனி, 4 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 10

னோ தெரியவில்லை. அவன்மேல் எரிச்சல் ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

அந்த 'லவ்லிபோய்' மேல்தான்.

'அவள் எனக்குமட்டுமே... எனக்காகவே' என்ற சுயநலம் என்னுள் புகுந்துகொண்டது.

அதனால் அவன்மீது எரிச்சல்... சினம்.. ஆத்திரம்..!

ஆனால் அவனோ என் கோபத்தை ஒரு பொருட்டாகவே எடுப்பதாகத் தெரியவில்லை.

'அண்ணா.. அண்ணா..' என்று அடிக்கடி மெசன்சரில் வந்து என் உணர்வுகளைச் சூடாக்கிக்கொண்டிருந்தான்.

"டேய்.. இப்பிடிக் கரைச்சல் கொடுத்தியென்றால்.. உன்னை 'புளொக்'பண்ணிடுவேன்.. சொல்லிட்டேன்."

தொல்லை தாளாமல் கூறினேன்.

"ஹீ.. ஹீ... நல்லா 'புளொக்'பண்ணுடா.. பரவாயில்லை... ஆனால் விசரன்மாதிரி காதல் கீதல்னு உன்ரை வாழ்க்கையை நாசம்பண்ணிடாதை.."

"அட்வைசா.. அட்வைஸ் என்று குழப்புறதுக்கு எத்தினை பேர் வெளிக்கிட்டிருக்கிறீங்கள்? ஐஸ் என்னோட பேசுறது உனக்கு பிடிக்கேலை.. அதுக்குத்தானே இந்த அட்வைஸ்?"

"போடா அண்ணா.. என்னடா நீ இப்பிடி அப்பாவியா இருக்கிறாய்? 'சற்'றிலை ஒருத்தி பேசிட்டாளாம்.. அவளுக்காக இவர் அலையுறாராம்.. சுத்த முட்டாள்தனமா இல்லை?"

"சரி.. முட்டாள்தனம்தான்.. அவளைப் பொறுத்தவரை நான் முட்டாள்தான்.. போதுமா?"

"தரன்.. இப்ப நான் சீரியசா பேசுறன்.. 'சற்'றிலை பேசுறவங்களை நம்பாதைடா.. இது ஒரு தாமாஷ்டா.. ஒரு பொழுதுபோக்குடா.."

"இப்பிடித்தான் அன்றைக்கு அந்த ஜோதி சொன்னவள்.. இப்ப நீ வேறை..."

"குட்.. என்னை எடுத்துக் கொள்.. 'சற்'றிலை நான் உண்மையே சொல்லுறதில்லை.. ஆனால் உனக்கு சொல்லுவேணும்பொல இருக்கு..."

"ஏன்டா.."

"ம்.. நீதான் எல்லாத்தையும் நம்புறியே.. அதனால சொல்லுறேன்.. ஐ லவ் யூ என்று எத்தினை பேரிட்டை சொல்லியிருப்பேன் தெரியுமா? எத்தனை 'கேள்ஸ்' போட்டோ என்கிட்ட இருக்கு தெரியுமா?"

"அடப்பாவி... அப்போ ஐஸை காதலிக்கிறேன் என்று கரைச்சல் கொடுக்கிறது.."

"பொய்தான்.. இனியும் கரைச்சல் கொடுப்பேன்.."

"ஏன்டா..."

"அவள் போட்டோ தராமல் பேய்க்காட்டுறாள்.. எப்படியும் அவள் போட்டோ வேண்டணும்.."

"பார்த்தியா.. இதில இருந்து என்ன தெரியுது.. அவள் சம்திங் ஸ்பெசல்.. இல்லையா?"

"ஹா.. ஹா.. போடா அண்ணா.. அவளிட்டயும் போட்டோ எடுப்பேன்.."

"நோ.. உன்னால முடியாது.. நான் அவளிட்ட சொல்லிடுவேன்.. நீ பொய் என்று.."

"போடா.. அவள் நம்பினால்தானே.. எரிச்சல்லை சொல்லுறாய்னு நினைப்பாள்டா.."

"ஏன்டா இப்பிடி.."

"அவளவை ஆளுக்காள் ஒருத்தனை காதலிக்கிறேன்னு பொய் சொல்லுவாளவை.. ஏமாத்துவாளவை.. அப்பிடி என்னாலை முடியாதா? பதிலுக்குப் பதில்.."

"யார்டா.. ஐஸ் காதலிக்கிறதா சொன்னாளா?"

"அவள் சொல்லலை.."

மனதில் சிறிது பரவசம்.

"அதுதானே பார்த்தேன்.."

"போடா.. அவள் நாளைக்கு சொல்லலாம்.. 'சற்'லை கனபெட்டையள் காதல் கீதல்னு பொடியளை 'பூல்'பண்ணுறாளவை.. சிலதுகள் அதுகளை நம்பி அலையுதுகள்.."

அவன் மறைமுகமாக என்னைச் சொல்வதாக உணர்வு ஏற்பட்டது.

அவன் தொடர்ந்தான்.

"அண்ணா.. நான் யுகே யுனிவசிற்றில படிக்கிறேன்.. இங்க நடக்கிறதுகள் உனக்குத் தெரியுமா?"

"என்னடா..?"

"ஆண்களும் பெண்களும் தங்களுக்கென்று 'கொஸ்ரல்'ல 'ரூம்' எடுப்பினம்.. ஆனால் அதில தங்குறதில்லை..."

"அப்போ...?"

"யாராவது ஒருத்தற்ரை 'ரூம்'லதான் சோடியா தங்குவாங்க.. கூத்தடிப்பாங்க.. பிறகு பிரிவாங்க.. பிறகு புதுச் சோடியாவாங்க.. கூத்தடிப்பாங்க.."

"ஐயோ.. அசிங்கம்டா..."

"அசிங்கம்னு சோடி இல்லாம இருந்தா.. 'ஹோமோ செக்ஸ்'காரங்க என்று கேலியும் செய்வாங்க.. பிறகு தங்க வீட்டுக்கு அவளவை போகும்போது பார்க்கணுமே.. இந்தப் பூனையா பால் குடிச்சது என்றமாதிரி... பண்பா கலாச்சாரமா உடுத்திப் போர்த்தி போவளுகள்.."

"ஐயையோ.. இப்பிடியும் நடக்குதாடா?"

எனக்கு அது புதுஅனுபவம். நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"டேய் லவ்லிபோய்.. நம்ம சனங்களுமா?"

"ம்.. பாக்கிஸ்தான் இந்தியன் சனங்கள்தான்கூட.. அதுகளைப் பார்த்து நம்ப சனங்களும் தொடங்கீட்டாளவை.. 'கிளப்'புகளுக்கு போனால்.. எங்களைக் கண்டு வெள்ளைகளுக்கு பக்கத்திலை இருந்து நெளிவாளவை... நாங்கள் வேணுமென்று நேரைபோய்.. 'ஹலோ' என்று கைகொடுத்துட்டு வந்தீடுவம்.."

"அதுகளின்ரை எதிர்காலம்..."

"ஹே... ஹே... அதைப்பற்றி என்ன கவலை.. ஊரிலை இருந்து ஒருத்தன் விசாவுக்காக வந்து வாழ்வு கொடுப்பான்.."

"அடப்பாவிகளா..."

"அதுக்குத்தான் சொல்லுறன்டா.. நிச வாழ்க்கையிலையே இப்பிடி நடக்கேக்கை.. 'சற்' வாழ்க்கையை நம்பாதைடா..."

சுற்றி வளைத்து மீண்டும் அதே இடத்துக்கு வந்தான்.

எதை நம்புவது? எதை நம்பாமலிருப்பது?

விடை தெரியவில்லை.

என் கேள்விகளின் நாயகி என் பிருந்தாதானே?!

அவள் வருவாளா? என் கலங்கிப் போன மனதை தெளிவாக்க அவள் வருவாளா?

'உலகே மாயை' என்று சொல்லுறவங்களும் அந்த உலகத்தில்தானே வாழுறாங்கள்?!

'நம்ப நட, நம்பி நடவாதே' எனறு சொல்லுறவங்களும் ஏதோ நம்பிக்கையிலைதானே வாழுறாங்கள்?!

'சற்'றை நம்பாதே என்று சொல்லுறவங்களும் தாங்கள் சொல்லுறதை நம்பவேணும் என்ற எதிர்பார்ப்பில்தானே சொல்லுறாங்கள்?!

சிரிக்கிறதா? அழுகிறதா? குழம்புவதா?!

என் குழப்பங்களின் குந்துதல்களின் முடிவுகாலம் அவளிடமல்லாவா உள்ளது?!

அவள் வருவாளா?!

வந்தாள்.

"டேய் தரன்குட்டி.. எங்கடா போனாய்..?"

"உன்னைவிட்டு எங்க போகடி.. உன்கூடதானே இருக்கேன்.."

"லொள்.. மச்சாள் என்னவாம்டா.."

"அதை விடு.. இப்போ ரண்டு விசயம் உன்கிட்ட கேட்கணும்.. பதில் சொல்லணும்.."

"ஆசையா பேசலாம்னு வந்தால்.. என்னடா ரண்டு விசயம்..?"

"ஒன்று வயது... பத்தென்பதுதானா.. இல்லை பொய்யா..?"

"......"

"பிருந்தா!!!"

"........"

"உன்னைதான் கேட்கிறன்.. உனக்கு பத்தென்பது வயதில்லைன்னு உன் மச்சாள்.. அதுதான் அந்த ஜோதி சொல்லுறாள்.. உண்மையா.. சொல்லுடி.. இவ்வளவு நாளும் என்னை பொய் சொல்லி ஏமாத்தினாயாடி.. உன்னை 'பெஸ்ற் பிரண்ட்' என்று மெயில்போட்டாயேடி.. எல்லாரிலையும் பார்க்க என்னிலை அன்பென்று சொன்னாயேடி.. எல்லாமே பொய்யா? உன்னைப்பற்றி எவ்வளவு உயர்வா.. கற்பனைகள் செய்திருக்கேன் தெரியுமே.. அத்தனையும் மண்ணா.. சொல்லு.."

"மிஸ்டர் தரன்... நான் சொன்னனா.. கற்பனை செய்யச் சொல்லி நான் சொன்னனாடா.."

"சொல்லலை.. இற்ஸ் ஓகே... ஆனா.. ஆனா.. வயது பொய்யா.. இல்லை உண்மையா.. எனக்கு தெரியணும்.. ப்ளீஸ்டி.. எனக்கு நிம்மதி இல்லைடி.."

"என்னடா நீ.. நிம்மதி.. லொள்.. எனக்குத்தான்டா நிம்மதி போச்சுடா.."

"உனக்கா.."

"உன்னால இப்ப எனக்கு.. சரியா.. அவள் ஏதோ விளையாட்டுக்கு சொன்னால்.. நம்புறதாடா.. சரியான எம்மெம்.. சரி..ரண்டாவது விசயம் என்ன..?"

"எனக்கு உன்ர போட்டோ வேணும்.."

"போடா.. உனக்கு இப்ப எதுக்குடா போட்டோ.."

"எனக்கு வேணும்.. நான் உன்னை பார்க்கணும்டி.."

"உனக்கு முந்தி என்னடா சொன்னேன்.. நேரம் வரும்போது நிச்சயமா தருவேன்னுதானே சொன்னேன்... தொந்தரவுபண்ணினால் பிறகு பேசவேமாட்டேன்.. நான் சரியான பிடிவாதக்காரி.. மைன்ட் இற்.."

"ப்ளீஸ்டி.."

"போடா.. ஆசையோட பேசலாம்னு வந்தா.. உன்னோட பெரிய தொல்லை.. நான் போறேன்டா.. ஒரேயடியா போறேன்டா.. பாய்.."

"நில்லுடி.. நில்லுடி..."

பரபரவென எழுத்துகளைக் கோர்த்து அனுப்புவதற்குள் அவளது தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கவலை என்னைத் தழுவ ஆரம்பித்தது.

கையாலாகாத்தனத்துடன் கணனியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!