வியாழன், 16 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானே - நிறைவங்கம் (20)

வீடே முற்றிலும் மாறிவிட்டது.

சாருவின் முகத்தில் குதூகலப் பொலிவு. துள்ளியோடும் மானாகிவிட்டாள். அதைக் கண்டு அம்மாவுக்கு வாயெல்லாம் பல். கூடியளவு என்னையும் சாருவையும் தனிமையில்விட்டு, பெரிசுகள் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

தங்களது எண்ணங்கள் ஈடேறிய களிப்பு அவர்களுக்கு.

"சாரு! இண்டைக்கு உன்னோடை கொஞ்சம் மனம்விட்டு பேசணும்.." என்றவாறு அவளருகில் அமர்ந்தேன்.

கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

"ஆத்தங்கரையடில ஒருநாள் சொன்னது ஞாபகமிருக்கா... என்ரை மனக்குழப்பங்களை நிச்சயமா உன்னட்டை சொல்லுவான் எண்டு.."

வியப்புடன் என்னைப் பார்த்தாள்.

"அதை இப்ப சொன்னால்தான் எனக்கு நிம்மதி.. இல்லாட்டி அதை சொல்லும்மட்டும் குற்ற உணர்வு எனக்குள்ளை இருந்துகொண்டே இருக்கும்.. அது சரியோ... இல்லாட்டில் பிழையோ தெரியேலை... ஆனா நீ அதை அறிஞ்சிருக்கணும்.. இல்லையா?"

சிறிது குழப்பம் அவளிடம்.

என் 'சற்' பிரவேசம்... பிருந்தாவுடனான அறிமுகம்... என்று ஒவ்வொன்றாகக் கூறினேன்.
"என்னமோ தெரியலை சாரு... அவளை நான் காதலிக்கிறதாகத்தான் நினைச்சன்.. அது காதலா இல்லாட்டில் ஒரு கவர்ச்சியா.. இல்லாட்டில் ஒரு சலனமா எண்டது வேறை விசயம்... ஆனா அவள் என்ரை காதலுக்கு 'ஓகே' சொல்லியிருந்தா.. இப்ப அவள்தான் காதலியா இருந்திருப்பாள்.."

சாருவைக் கூர்ந்து பார்த்தேன்.

எதுவித சலனமும் இல்லை.

"ம்... 'சற்'றிலை இதெல்லாம் 'நோர்மல்' அத்தான்... வாயாலை கதைக்கிறதிலையும் பாக்க, எழுத்திலை வாசிக்கேக்கை பாதிப்புகள் கூடத்தான்... 'சற்'றிலை எழுத்திலைதானே கதைக்கிறாங்க... அதாலை மனப்பாதிப்புகள் வாறதுக்கு நிறையச் சந்தர்ப்பங்கள் இருக்கு..."

அறிவுபூர்வமாகப் பேசினாள்.

"நேரில சந்திக்கேக்கை காதலைத் தெரிவிக்கிறது மிகவும் கஸ்டம்.. கூச்சம்.. பயம்.. சூழ்நிலை எண்டு கனக்கக் குறுக்கிடும்.. ஆனா 'சற்'றில எதையும் சுகமாச் சொல்லிப்போடலாம்.. அதாலை காதலிக்காதவனுக்கும் காதல் வரும்.. காதல் வந்தவனுக்கும் தூக்கி எறிய மனசும் வரும்.." என்று கூறிவிட்டு நகைத்தாள்.

"சாரு... உண்மையாத்தான் கேக்கிறன்.. உனக்கு என்னிலை வெறுப்பேதும் வரேலையா?"

குறும்பாகப் பார்த்தாள்.

"ஐயோ அத்தான்.. அது காதல் இல்லை.. ஒரு வேகம் எண்டது எனக்கு தெரியும்.. சரி... காதலாய்த்தான் இருக்கட்டுமே? பரவாயில்லை... நான்தானே உங்களை காதலிச்சேன்.. நான் காதலிச்சவர் எனக்குக் கிடைச்சுட்டார்... அவரை எப்பிடி என்ரை காதலுக்கை வைச்சிருக்கிறதெண்டு எனக்குத் தெரியாதா?" என்றவாறு கரங்களை என் கழுத்தில் மாலையாக்கினாள் சாரு.

"நான் இன்னும் 'சற்' 'பிரண்ஸ்'பற்றி சொல்லி முடிக்கேலையே..." என்று அவள் பிடியுள் தடுமாறினேன்.

"ஏன்... இன்னும் ஆராலும் 'லவ்வர்ஸ்' இருக்கினமோ..?!"

"ஐயோ.. விடுடீ" என்று வலியால் அலறியவாறு அவள் கடித்த காதுச் சோணையைத் தடவிக்கொண்டேன்.

"ஐயோ மொக்கு.. அப்பிடி இல்லை... அவங்களைப்பற்றியும் உனக்குச் சொல்லவேணும்... நீ நினைக்கிறமாதிரி 'சற்'பண்ணுறவங்க எல்லாரும் கெட்டவங்களும் இல்லை... 'சற்'பண்ணாதவங்க நல்லவங்களும் இல்லை..."

"ம்... எனக்கோ... அதெல்லாம் இப்ப எதுக்கு...? 'சற்'றைப்பற்றி கதைக்கவா உங்களை காதலிச்சேன்..?"

குறும்பும் குதூகலமும் பொங்கி வழிந்தது.

"சரி... ஆரைப்பற்றிச் சொல்லாட்டிலும் என்ரை சுஜிக்குட்டியைப் பற்றி சொல்லணும்.. அவளாலைதான் இவ்வளவு விரைவா உன்னை நெருங்கி வர முடிஞ்சுது?"

"சுஜிக்குட்டியா...?"

தோளில் புதைத்த முகத்தை நிமிர்த்தி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

அவளைப்பற்றி... 'சாருவுக்கு ஐ லவ் யூ சொல்லு' என்று வற்புறுத்தியதைப்பற்றி கூறினேன்.

"ம்.. அந்த குட்டிக்கு நானும் 'தாங்ஸ்' சொல்லணும்... என் அத்தானை என்னுடன் சேர்த்ததுக்கு..."

"நிச்சயமா.. நாளைக்கு அவள் மெசன்சர்ல வருவாள்.. உன்னையும் வரச் சொன்னாள்.. "

"ஐயோ.."

"என்ன..?"

"வேண்டாம் ராசா.. ஆளை விடுங்க.. நீங்களும் உங்கடை 'சற்'றும்.."

"ப்ளீஸ்டி... நாளைக்கு ஏதோ முக்கிய விசயம் கதைக்கணுமாம்.. எனக்காக வரமாட்டியா?"

கெஞ்சலுடன் பார்த்தேன்.

ஞாயிறு பிறந்தது.

மனம் ஆலாய்ப் பறந்தது.

கணனித் திரையையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஹேய் அண்ணா..!"

அவசரமாக சைகை காட்டிய பெட்டியை அழுத்தினேன்.

அது சுதா..

"சொறிடா.. கொஞ்சம் பிசி... அதான் கனநாளா வரலை... உனக்கு ஒன்று சொல்லணும்.. அதுதான் வந்தேன்... லொள்.."

"என்ன லொள்... ஏதாலும் 'ஜோக்'கா?"

"ம்... அப்பா அம்மா கலியாணங் கட்டுன்னு ஓரே ஆக்கினைடா.. கடைசியா அவங்க ஆசையை ஏன் கெடுப்பான்னு சரின்னு சொல்லிட்டேன்.."

"ஓ.. நைஸ்.. வெரி குட்... மாப்பிளை எப்பிடி?"

"லொள்... நிறைய பேசினோம்... என்னைப்பற்றி எல்லாம் சொன்னேன்.. ஹீ ஸ் ஏ கிரேட் எண்டு நினைக்கிறேன்..யாருக்கு தெரியும்?"

"அப்பிடி சொல்லாதை... நம்பிக்கைதான் வாழ்க்கை.. எல்லாரும் கெட்டவங்களுமில்லை.. எல்லாரும் நல்லவங்களுமில்லை... எல்லாம் உன் கைலதான் இருக்கு..."

"ம்.. பெரிய மனுசன் 'அட்வைஸ்' சொல்ல வந்திட்டார்.. அண்ணா.. நீ எப்பிடி இருக்காய்?"

"ஹா.. ஹா... இப்போ சாருவோட இருக்கேன்..."

"லொள்... யார் அது..? யா.. உன் மச்சாள்தானே?"

"வருங்கால மனைவி..."

"சந்தோசம்டா... 'ஹனிமூன்'கு கனடா வாறியா... என் வீட்டிலதான் தங்கணும்.. சொல்லிட்டேன்..."

"ஐயையோ... கலியாணம் இப்ப இல்லைடா... அவவுக்கு படிப்பு முடியணும்... நிச்சயமா ஒருநாள் உன்னைப் பார்க்க வருவோம்... நீ சந்தோசமா இருக்கிறத இந்த அண்ணா பார்க்கணும்.."

"தாங்ஸ்டா... 'வெட்டிங் இன்விடேசன்' அனுப்புவேன்... பெரிய பார்சல் வரணும்.. புரியுதா..? லொள்... ஓகேடா... சாரு அண்ணி.. அண்ணாவ கவனமா பார்த்துக்கோங்க... அப்புறம் சந்திப்போம்.. பாய்..."

"சீயூடா.."

அவள் போய்விட்டாள்.

அவளது வாழ்விற்கும் ஒரு விடிவு தோன்றியதில் உண்மையிலேயே சந்தோசமாக இருந்தது.

"ஐயோ.. நாளைக்கு பயணம் போக ஆயத்தப்படுத்தணும்.. நிறைய வேலை இருக்கு.. எங்கை அந்த சுஜிக்குட்டி?"

"கொஞ்சம் பொறு.. அவளும் நாளைக்கு எங்கையோ பயணம் போறாளாம்.. கட்டாயம் வருவாள்.."

அவள் வந்தாள்.

"அண்ணாக்குட்டி.. சுகமா இருக்கியா..?"

"ம்... நீ?"

"இருக்கேன்..."

"அது தெரியும்.. நிண்டா 'சற்'பண்ணுவாங்க?"

"லொள்.. சாரு அண்ணி வந்தாவா? ஐ லவ் யூன்னு சொல்லிட்டியா? ரெல் மீ.. ரெல் மீ..."

"ஐயோடி... சாரு பக்கத்திலதான் இருக்கா..."

"வாவ்.. றியலி? பொய் சொல்லாதை..."

"ஏன்டா பொய் சொல்லணும்... உண்மையாத்தான் பக்கத்தில இருக்கா.. வேணுமெண்டா 'மைக்' போடு.. அவ பேசுவா.."

"ஐயோ.." என்று என் தலையில் செல்லமாகக் குட்டினாள் சாரு.

"நீ என் அண்ணாக்குட்டிதான்.. செல்ல அண்ணாக்குட்டி.. ரொம்ப தாங்ஸ்டா... அப்ப 'மைக்'ல பேசப் போறோம்.. அப்புறம் என்னை நீ 'வெப்காம்'ல பாக்கப் போறாய்.. ஓகே?"

என்னால் நம்பமுடியவில்லை.

"ஓ... உண்மையாயா?"

"ம்.. அதுக்கு முன்னால 'ஓடியோ ஓன்' பண்ணுறேன்.. 'ஓகே' பண்ணு.."

"ம்..."

பரபரப்புடன் இயங்கினேன்.

"ஹலோ அண்ணா.. கேக்குதா.."

ஓ... இனிமையான நாதமென்று என் கணனி ஒலிபரப்பியில் தோன்றி என்னைக் குதூகலமாக்கியது.

"வாவ்.. கேக்குது... நல்ல குரல்டா உனக்கு..."

"லொள்... அண்ணா.. முதல்லை உன்னட்டை நான் மன்னிப்பு கேக்கணும்.. உனக்கு நிறைய பொய் சொல்லிட்டேன்.. நான் வேணுமெண்டு பொய் சொல்லலை அண்ணா.."

அவள் குரல் தளுதளுத்தது.

"அண்ணா... நாளைக்கு நான் 'கொஸ்பிட்ட'லுக்கு போறன்... எவ்வளவு நாள் அங்கை இருப்பன்... பேந்து எப்பிடி இருப்பன்.. ஒண்ணும் தெரியாது.."

"என்ன..?!"

"எனக்கு 'பிறெய்ன் ரியூமர்'... மூளைப் புற்றுநோய்.."

"நோ.. பொய் சொல்லாதை..."

கத்தினேன்.

"கத்தாதைடா... கத்துறவங்க அனுதாபப்படுறவங்களை கண்டா எனக்கு கோபம்தான் வரும்.. அப்புறம் பேசமாட்டேன்.. உண்மையாதான் அண்ணா... எனக்கு புற்றுநோய்.. இஞ்சை அப்பா அம்மா என்னை கவலையோட பாக்கிறதை என்னால தாங்கிக்க முடியலை.. ஒவ்வொரு விசயத்துக்கும் அவங்களோடை சண்டை.. பாவம் அவங்க... தங்களுக்குள்ளை அழுறாங்க.. அவங்களோடை அன்பா இருக்கணும்னுதான் நினைக்கிறேன்.. ஆனா.. அவங்க என்னைப் பாத்து பதறுறதைப் பாத்ததும்.. சாமனளை எடுத்து எறிஞ்சு உடைக்கிறது.. அவங்களை திட்டுறது.. இப்பிடித்தான்.. இஞ்சை பக்கத்தில வாற போற சனங்கள் என்னை பரிதாபமாய் பாக்கிறதை என்னாலை தாங்க முடியேலை அண்ணா.. கோபம் கோபமா வருது... 'ஸ்கூ'லுக்கும் போறதை விட்டுட்டன்.. அடிக்கடி தலைவலிடா.. தாங்க முடியாத தலைவலிடா... அதான் சிலவேளை உன்னோடையே சரியா பேச முடியுறதில்லை.."

"அது பரவாயில்லைடா..."

"ஐயோ அண்ணா.. என்னை பேச விடு.. தலைவலி வந்தா என்னால பேச முடியாது... உன்னோட நிறைய பேசணும்.. பரிதாபமா பாக்கிறவங்களிட்டை இருந்து தப்ப எனக்கு 'சற்'தான் உதவிச்சு... அப்பிடித்தான் உன்னோடையும் பேசினேன்.. ஆனா என்னவோ தெரியலை... உன்னிலை அன்பு வைச்சுட்டன்... என்ரை பேர் பிருந்தாதான் அண்ணா.. வயதைமட்டும் கூட்டி சொன்னேன்.. ஆனா நீ உன்னை 'லவ்'பண்ணுற சாரு அண்ணியை விட்டுட்டு என்னை 'லவ்'பண்ணுறேன்னு சொன்னப்போ... உன்ரை வாழ்க்கையை 'வேஸ்ற்'பண்ணுறேனோன்னு பயந்துட்டேன் அண்ணா.. எண்டாலும் உன்னிலை இனம்புரியாத பாசம்... அதாலைதான் சுஜி எண்ட பெயரில உன்னோட கதைச்சன்.. ஆனா உண்மையான வயசிலை... எண்டாலும் ஒரு அண்ணாவை ஏமாத்துறமோ எண்டு தோணிச்சு.. உனக்கு கொஞ்சமாலும் என்னைப்பற்றி சொல்லவேணும்போல இருந்திச்சு... சொன்னா நீயும் என்னிலை பரிதாபப்படுவியோ எண்டு பயந்தன்... அதால என் 'பிரண்டு'க்கு 'கான்சர்' எண்டு சொன்னன் அண்ணா... நாளைக்கு 'கொஸ்பிட்டல்' போறேன்.. முளையில 'ஓப்பிறேசன்' செய்யப் போறாங்கள்.. அதுக்கு பிறகு திரும்பி வருவனோ தெரியலை அண்ணா..."

"நோ.. அப்பிடி சொல்லாதைடா.. நிச்சயமா நீ சுகமா வருவாய்டா.. இந்த அண்ணாவோட கலகலன்னு கதைப்பாய்டா..."

பொங்கியெழும் கண்ணீரைத் துடைத்தவாறு கூறினேன்.

"ஐயோ.. அவசரக்குடுக்கை.. நான் சொல்லுறதை கேள்.. நான் சொன்ன பொய்களுக்கு என்னை மன்னிச்சேன்னு சொல்லுறியா... இந்த தங்கச்சிக் குட்டீல கோபம் இல்லைன்னு சொல்லுறியா..."

இப்போது நான் நிசமாகவே குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டேன்.

"அண்ணா.. என்ன சத்தம்?"

"ஒண்ணுமில்லைடா.. நீ எப்பவும் என்ரை தங்கச்சிதான்டா.. அண்ணா தங்கச்சிக்கிடைல எதுக்குடா மன்னிப்பு எண்ட பெரிய வார்த்தையள்..?"

"தாங்க்ஸ் அண்ணா...!"

"தாங்க்ஸை நீயே வைச்சிரு..."

"ஹே.. ஹே... அண்ணா! உன்னட்டை ரண்டு கேக்கணும்.. அதுக்குதான் சாரு அண்ணிய வரச் சொன்னேன்.. சாரு அண்ணி... ஹெள ஆர் யூ? பேசமாட்டீங்களா?"

சாருவிடம் 'மைக்'கைக் கொடுத்தேன். அவளது கண்களிலும் ஈரம்.

"ஹலோ குட்டி.."

"ஹே.. ஹே.. குட்டியா... அண்ணி.. அண்ணாவை கவனமா பாக்கணும்.. அண்ணி... உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்.. சரியோ தப்போ தெரியலை... எனக்குள்ளை ஒரு ஆசை... உங்களுக்கு நான் மகளா வந்து பிறக்கணும்... என் அண்ணாட அன்பில வளரணும்... உங்களுக்கு பிறக்கிற மகளுக்கு 'பிருந்தா'ன்னு பேர் வைப்பீங்களா?"

"ஐயோ... என்னடி அலம்புறாய்.. மொக்கு மொக்கு... உனக்கு ஒண்ணும் நடக்காது... நீ எங்க கலியாணவீட்டுக்கு வரத்தான் போறாய்... சும்மா விசர்க்கதை கதையாத... சுஜிக்குட்டி... எப்புவும் நீ என் மனசில இருப்பாய்டா..." என்று 'மைக்'கை சாருவிடம் இருந்து உருவிக் கூறினேன்.

"அண்ணா... நீ இப்ப ஓம்னு சொல்லுறியா.. இல்லையா..."

அவள் குரலில் தீடீரென ஒரு கண்டிப்பு.

"ஓகே குட்டி... நீ என்ன விரும்புறியோ.. அது நடக்கும்..."

சாரு முந்திக்கொண்டாள்.

"ஐ ஆம் வெரி ஹாப்பி அண்ணி... அண்ணா... ஒண்ணு ஓகே.. இன்னொண்ணு இருக்கு.. லொள்.."

"என்ன.."

"கொஞ்சம் பொறு.. 'வெப் காம்'போடுறேன்... ஓகே பண்ணு..."

திரையில் பெட்டி வடிவில் காட்சி விரிய.. அது.. அது...?!!

"ஐயோ..."

கண்களைப் பொத்திக் கொண்டேன்.

தேகம் நடுங்கியது.

"கடவுளே.. கடவுளே..."

என்னை அறியாமல் அரற்றினேன்.

தலை முடி இடையிடையே உதிர்ந்துபோய் ஒரு ஒட்டல் உருவம் திரையில்... அந்தப் பிஞ்சின் உருவுக்கு வியாதி கொடுத்த பரிசு!

"என்ன ஐயோ... இப்பிடி கத்தினா.. நாயே பூனையேன்னு திட்டிடுவேன்.. சொல்லிட்டேன்... என்னைப் பார்க்க பேய்மாதிரியா இருக்கு?"

"இல்லைடா.. இல்லை.. உன்னைப் பாக்க.. உன்னைப் பாக்க என் அன்பான தங்கச்சிமாதிரித்தான்டா இருக்கு..."

"ம்.. அப்பிடி சொல்லு என் அண்ணா குட்டி... அண்டைக்கு ஒரு பாட்டு பாடினியே... அத இப்ப பாடு.. ஓகே... முழுக்கப் பாடணும்.."

"நோ.. என்னால இப்ப முடியாதுடா... ஐயோ..."

"என்ன ஐயோ... எம்மெம்... ஹே.. ஹே.. மண்டையப் பிளக்குற தலையிடியோட எல்லாம் உன்னோட எவ்வளவுநாள் 'சற்'பண்ணியிருப்பன்.. இப்ப ஒரு பாட்டு பாட ஏலாதா? போறத்துக்கு முதல் ஆசையாதானேடா கேக்குறன்... அந்த ஐஸ்கிறீம் சிலை பாட்டு... அப்ப ஏதோ ஒரு 'மூட்'டில பாடினாய்... ஆனால் எனக்கு பெரிய ஆச்சரியம்டா... எவளவு உண்மை அதில இருக்கு தெரியுமா? உண்மையிலயே நான் ஐஸ் கிறீம் சிலைபோல உருகிக்கொண்டுதானண்ணா இருக்கிறன்.. இன்னும் கொஞ்சந்தானிருக்கு.. உருகி ஆவியாக வேண்டியததான்..."

"ஐயோ.. திருப்பி திருப்பி அப்பிடி ஏன்டா கதைக்கிறாய்..."

"அப்ப பாடு.."

"அப்பிள் பெண்ணே நீயாரோ
ஐஸ்கிறீம் சிலையே நீயாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ?... "

"ஐயோ.. அண்ணா.. அப்பிடி இல்லை.."

"அப்போ..?"

"இப்பிடியா முந்தி பாடினாய்..?"

"அப்போ எப்பிடி..?"

"ஐஸ்கிறீம் சிலையே நீதானோ... அப்பிடி.. அப்பிடி பாடு.. அது எனக்காக பாடுறமாதிரி இருந்திச்சு.."

பொங்கியெழும் அழுகையை அடக்கியவாறு பாட முயற்சித்தேன். எங்கோ உதித்து இடையில் புகுந்து என்னுள் பதிந்த அந்த அன்புக்காக நான் பாடித்தானாக வேண்டும். உணர்ச்சிகளை அடக்கி பாட முயன்றவாறு சாருவை நோக்கினேன். விழிகளில் தாரைதாரையாகப் பீறிட்டெழும் நீரைத் துடைக்கும் சக்தியின்றி நின்றிருந்தாள். அவள்நிலையே இப்படியென்றால்.. என்னிலை..?!

"அண்ணா..!!"

"பாடுறேன்டா.. என் அன்புச் செல்லத்துக்காக பாடாமல் இருப்பேனா..?!"

"அப்பிள் பெண்ணே நீதானோ
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் தானோ
பூவின் மகளே நீதானோ
புன்னகை மகளே நீதானோ
பாதிக் கனவில் மறையும் பறவை தானோ?

என்னை நீ பார்க்கவில்லை என்னுயிர் நொந்ததடி
பெண்ணே நீ போகும்வழியில் என்னுயிர் போகுதடி
இன்றிந்த 'சற்'றின் நிழலில் என் மனம் வெம்புதடி
உன்னுடன் வந்துநின்று என்மனம் புலம்புதடி

மின்னலைக் கண்டு கண்களை மூடி கண்களைத் திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியைக் கையில்கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கிச் சிந்திய பனித்துளி எங்கே போகுது தெரியவில்லை
என்னுள் உறைந்து சிலையாய்ப் போச்சோ இதுவரை எனக்குப் புரியவில்லை..."

என்னால் தொடர்ந்து பாடமுடியவில்லை.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தேன்.
(நிறையும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!