சனி, 11 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 15

"அண்ணாக்குட்டி! சுகமா இருக்கியா.. பதில்.. பதில்.."

வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டாள். எனது முடிவைக் கேட்பதில்தான் அவளுக்கு எவ்வளவு சந்தோசம்?! சிரிப்பாக வந்தது.

"ம்.. முதல்லை சுகமாயிருக்கிறாயா? சாப்பிட்டியா? இதுக்கு பதில சொல்லு.."

"சுகமாயிருக்கேன். சாப்பிட்டேன்.. இப்ப பதிலை சொல்லு.. சாரு அக்காவை விரும்புறியா? சொல்லடா அண்ணாக்குட்டி.. நேற்றிரவு எனக்கு நித்திரையே வரலை தெரியுமா? உன்னைத்தான் நினைச்சேன்.. சாரு அக்காவை விரும்புறேன்னு சொல்லு.."

"சொன்னால்..?"

"சொன்னால் அண்ணாக்குட்டிக்கு ஒரு ம்மா தாறேன்.. ஓகேயா?"

"ம்மாவா.. அதுக்கும் பார்க்க பெரிசா ஒன்று தருவியா..?"

"என்ன.?"

"உன் பிக் (pic).."

"வாட்..?"

"போட்டோ.. உன் போட்டோ தருவியா..?"

"உனக்கெதுக்கு என் போட்டோ.. என்ரை மெசன்சர்ல எத்தனை பேர்ட ஐடி(id) இருக்கு தெரியுமா? எழுபதுக்கு மேலை.. ஒருத்தருக்குமே போட்டோ கொடுக்கலை.."

"உன்ரை மெசன்சர்லயும் எழுபதுக்குமேலை ஐடி இருக்கு.. பிருந்தாவும் தனக்கு எழுபதுக்குமேலை 'சற் பிரண்ட்ஸ்' (chat friends) இருக்கெண்டாள்..?!"

"அவளுக்கு எங்கைடா எழுபது பேர்.. என்ரை மெசன்சர்ல இருக்கிறதைதான் சொல்லியிருக்காள்.. அதோட ரண்டு மூண்டு பேரை 'அட்' (add) பண்ணியிருக்காள்.. அதுவும் ஒரு ஐடி.. யாரோ லவ்லிபோய் என்று ஒண்டு.. அவனோடை பெரிய கரைச்சல்டா அண்ணாக்குட்டி.."

"என்ன கரைச்சல்..?"

"என்ரை படம் வேணுமாம்.. நான் பிருந்தா இல்லை என்றாலும் நம்புறானில்லை.. 'லவ் பண்ணுறேன்' அப்பிடி இப்பிடி எண்டு கண்டபடி பேசுறான் அண்ணா.. சரியான கெட்ட பொடியன்.. அவனை 'புளொக்'பண்ணப் போறன்.. சரியான லூசு.."

"அப்ப எனக்கும் படம் தரமாட்டியா.. ம்.. பிருந்தாவும் இப்பிடித்தான்.. தான் நினைக்கும்போதுதான் படம் தருவேன் என்றாள்.. இப்ப ஆளையே காணேல்லை.. நீயும் அவள் தங்கச்சிதானே.. நீமட்டும் படம் அனுப்பவா போறாய்?"

"என்ன நீ.. அவளைப்போல என்னை நினைக்கிறியா.. நான்தான் என்ரை வயது பெயர் எல்லாம் சொன்னேன்தானே? உண்மையாயே எனக்கு உன்னிலை அன்புதான் அண்ணா.. நம்பமாட்டியா?"

அவள் கெஞ்சுவதுபோல இருந்தது.

"நம்புறேன்டா.. இந்த நம்பிக்கையாவது நிலைக்குமா எண்டதுதான் என்ரை கேள்வி.. "

"அண்ணாக்குட்டி.. நான்தானே வலிய வந்து உன்னோடை பேசினேன்.. பிருந்தா வரமாட்டாள் என்று சொன்னது நான்தானே? சொல்லாமல் இருந்தால் என்ன செய்திருப்பாய்.. ஏதோ உன்னோட பேசவேணும் என்று தோணிச்சு.. பேசினபோது உன்னை அண்ணாமாதிரி நினைக்கணும்னு தோணிச்சு.. என்னை பிடிக்கலைன்னா சொல்லு.. நான் இனி வரலை.."

"ஐயையோ.. நில்லுடா.. என் செல்லச் சின்னக்குட்டிதானே.."

"உண்மையா..?"

"உண்மையா நான் உன் அண்ணன்தான்டா.. என் செல்லக்குட்டிக்கு கோபம் உடன வருது.."

"ம்.. பின்ன என்ன.. பிருந்தாவ மாதிரி என்னை நினைச்சால் கோபம் வரும்தானே..?"

"படம் அனுப்பமாட்டேன் எண்டியா.. அதுக்காக அப்பிடிச் சொன்னேன்.. சரி.. இனி நான் படம் கேட்கமாட்டேன்டா.."

மனதில் எழுந்த ஏமாற்ற உணர்வை அடக்கிக்கொண்டேன்.

"நான் கேட்பன் அண்ணா.."

"என்னடா.. படமா?"

"அது இல்லை.. சாரு அக்காவிலை விருப்பமா.. அவவை கலியாணம் கட்டுறியா எண்டு கேட்பன்.."

சரியான பிடிவாதக்காரப் பெட்டை.. மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

"ம்.. என்னடா சின்னப்பிள்ளைமாதிரி..."

"சின்னப்பிள்ளைதானே..?"

"பெரியமனுசியாகிட்டேன்.. சாறி உடுத்து கொண்டாடினாய்னு நேற்றுத்தானே சொன்னாய்..?"

"லொள்.. அண்ணாக்குட்டி.. கதையை மாத்தாதை.. அப்ப பதில் சொல்லு.. என்னாலை கனநேரம் 'சற்'பண்ண முடியாது.."

"ஏன்.."

"அப்பிடித்தான்.. சொல்லுடா.. அச்சாப்பிள்ளை.. நல்ல பிள்ளை.."

சிரித்துவிட்டேன். கணனிக்கு முன்னால் தனிமையில் வாய்விட்டுச் சிரித்த என்னை எவராவது கவனித்திருந்தால், நிச்சயமாக விசரனென்றுதான் நினைப்பார்கள்.

"ஓகே.. சாருவைத்தான் கலியாணம் செய்யலாம் எண்டு நினைக்கிறன்டா.. இப்ப சரியா..?"

"ஐய்யா.. நீதாண்டா என்ரை அண்ணாக்குட்டி.. மை செல்லச் சுவீற் குட்டி.. எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா..?"

என்னையும் சாருவையும் சேர்த்துவைப்பதில் நேற்று வந்தவளுக்கு இவளவு மகிழ்ச்சியா? எங்கோ ஒரு நாட்டில் இருந்து 'சற்'றாடும் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு ஏன் இந்த ஆனந்தம்? புரியவில்லை. வேகமான அறிமுகம்.. வேகமான உணர்வுப் பரிமாற்றங்கள்.. வேகமான முடிவெடுப்புகள்.. இதுதான் 'சற்' உலகமோ?! பிருந்தா மனதில் வந்து எள்ளிநகையாடுவதுபோல உணர்வு. உண்மைதான்.. ஒரு மூன்று மாத உரையாடல்தானே அவளைக் காதலிக்குமளவிற்கு என்னைப் பாதித்தது. அதேபோல ஒரு இரண்டுநாள் சுஜியின் உறவுதானே அவளை என் மனதிலிருந்து சுலபமாக அகற்றவும் உதவிசெய்தது?! நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தானாக வேண்டும்போலிருந்தது.

"அண்ணாக்குட்டி.. என்ன செய்றாய்.. ஓகே பண்ணடா?"

"எதை..?"

"மொக்கு மொக்கு.. நல்லா பார்.. லொள்.."

என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. அங்கே ஒரு சிறிய படம் மெசன்சர் யன்னலில் மிதந்துகொண்டிருந்தது.

அவசரமாக அந்த அனுப்புதலை ஏற்றுக்கொண்டேன்.

கைக்குள் இருந்த 'எலி'யின் அழுத்தலில படம் விரிந்தது.

குறுகுறு விழிகளுடன் ஒரு சிறு நங்கை. கழுத்தில் ஒரு மெல்லிய வெள்ளிச் சங்கிலி. காதில் இரு சிறு வளையங்கள். அழகாக இருந்தாள்.

"யார்டா இது.. நீயா?"

ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"நான்தான்.. நம்பலையா?"

"ஐயையோ.. நம்புறேன்.. ஒருத்தருக்கும் படம் கொடுக்கிறதில்லை எண்டாய்..?"

"ம்.. சாரு அக்காவை கட்டுறன் எண்டாய்.. அதுக்கு என்னவாலும் உனக்கு தரணும்போல தோணிச்சா.. அதுதான் அனுப்பினேன்.. அண்ணா.. உனக்குமட்டுந்தான் அனுப்பினேன்.. யாருக்கும் காட்டிடாதேடா.."

"நான் ஏன்டா காட்டுறேன்.. வடிவா இருக்கிறாய்டா.. நல்ல நீள கழுத்துடா உனக்கு.. டான்ஸ் ஆடினா நல்லா இருக்கும்டா.."

"லொள்.. டான்ஸ் பழகினேன்டா.. விட்டுட்டேன்.."

"ஏன்டா.."

"நானும் என் பிரண்ட் ஒருத்தியும் பழகினோம்.. ரண்டுபேரும் மேடைகளிலைகூட டான்ஸ்பண்ணியிருக்கோம்.."

"பிறகு..?"

"அரங்கேற்றம் சேர்ந்து செய்ய இருந்தோம் அண்ணா.. அதுக்கிடையில பாவம் அவள்.."

"அவளுக்கு என்னடா?"

"பிறைன் ரூமர்டா.. (Brain Tumor)"

"என்ன.. மூளைப்புற்றுநோயா.. எத்தினை வயசுடா?"

"என்ரை வயசுதான்.."

"பொய் சொல்லாதை..."

அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு இளம் வயதில் மூளைப் புற்றுநோயா?

"என்ன மெளனம்?"

"......"

"செல்ல சின்னக்குட்டி.. என்ன பேசாம இருக்கிறாய்?"

"......"

"என்னடா நீ.. ஓகே.. நீ பொய் சொல்லலைடா.. பேசு..."

"ம்..."

"கோபமா? பாவம்டா உன் பிரண்ட்.. கடவுள் இப்பிடி சோதிக்க வேண்டாம்.."

"ம்.. அதாலை அவள் டான்ஸ்க்கு வாறதில்லை.. ஸ்கூலுக்கு போறதில்லைடா.. வீட்டிலைதான்.. என்ரை பிரண்ட்தானே? நானும் டான்ஸ் பழகுறதை நிறுத்திட்டேன்..."

"ஓ... "

"அப்பிடி ஒரு பிரண்ட்.. அவளில்லாட்டி நானில்லை.. நானில்லாட்டி அவளில்லை... அப்பிடி பழகினோம் அண்ணா.."

"ஓ.. அப்ப உனக்கும் கவலைதான்.."

"கவலையா.. அதை மறக்கதானே 'சற்' இருக்கு.. லொள்.."

"அப்ப அவள்..?"

"அவளும் வீட்டிலை இருந்து 'சற்'தான்.. லொள்.. இப்ப அவளுக்கு அடிக்கடி தலையிடி வருதுடா.. வந்தா தாங்க முடியாதுடா.. எனக்கு தரன் அண்ணாக்குட்டிபோல.. அவளுக்கும் ஒரு அண்ணாக்குட்டி இருக்கான்.. அவனோடதான் கனநேரம் 'சற்'பண்ணுவாள்.. தலையிடியோடயும் 'சற்'பண்ணுவாள்டா.. அப்பிடி ஓரு பாசம் அவன்மேலை.."

"பாவம்டா.."

"சும்மா பாவம் அப்படி சொல்லாதைடா.. பிறகு எனக்கு கவலை வந்தா உன்கூட பேசமாட்டேன்.. சரியா.."

"என்னடா நீ.. நீதானே அவளைப்பற்றி சொன்னாய்.. நான் கேட்டனா? அதுக்கு பாவம்னு சொல்லக்கூடாதா?"

"ம்.. உனக்கு சொல்லணும்னு தோணிச்சு அண்ணாக்குட்டி.. ஆனா அவமேலை யாரும் இரக்கப்படுறதை என்னாலை தாங்கமுடியாது.. அதுதான்.. ஒரு புரொமிஸ் தருவியா அண்ணா?"

"என்ன?"

"இனி அவளைப்பற்றி பேசுறேல்லை எண்டு.."

அவளாக எவளையோபற்றிக் கூறிவிட்டு, அதைப்பற்றி இனிப் பேசாதேயெனச் சத்தியம் கேட்டது எனக்கு விசிதத்திரமாக தென்பட்டது. எனினும் சின்னப் பெண் என்பதால் அதை சாதாரணமாகவும் எண்ணத் தோன்றியது.

"ஓகே.. புரொமிஸ்டா.. அது சரி.. என்ன நீ.. வெள்ளி சங்கிலி போட்டிருக்காய்.. பவுண்ல போட்டா என்ன?"

"லொள்.. மொக்கு மொக்கு.. இதுதாண்டா பாஷன்.. இதையும் கழட்டிப்போட்டு கறுத்த கயிறு கட்டணும்.. அம்மா பேசுவாடா.. லொள்.."

"ஐயோ.. என்ன நீ.. இப்பிடியே பாஷன் எண்டு உடுப்புகளிலை இருந்து எல்லாத்தையும் மாத்தினா.. கடைசில தமிழினமே இருக்காதே.."

"லொள்.. ஏன்டா தமிழினம்.. பக்கத்திலை இருந்து சண்டை பிடிக்கவா.. அடுத்தவை என்ன செய்யினம் எண்டு வெளிலைபோய்.. பொய் பொய்யா கதைக்கவா?"

'பதினைந்து வயதில் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாளே?' அவள் கூறுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. இந்த உண்மைகள்தான் பலரை தம்மினம் மறந்து வாழ நிர்ப்பந்திக்கிறதோ?!

"உனக்க எப்படிடா தெரியும்..?"

"நாங்க இருக்கிற 'பில்டிங்'ல வந்து பார்.. அறுபது தமிழ் குடும்பமாலும் இருக்கும்.. டெய்லி சண்டை.. லிவ்ற்ல போனாலும் சண்டை.. படியால போனாலும் சண்டை.. "

"ஆகா.. அப்ப உனக்கு டெய்லி பொழுது போகும்.. சண்டைப் படம் பாக்கத் தேவையில்லை.."

"லொள்.. அண்ணாக்குட்டி.. போகப் போறன்டா.. தலையிடிக்குதுடா.."

"சரிடா.. ஏன்டா தலையிடி..?"

"தெரியலைடா.. நான் நாளை வாறேன்.. சரியா.. ம்மாடா.."

அவள் போய்விட்டாள்.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!