புதன், 22 மே, 2013

சாகாவரம்

தவைத் திறந்துகொண்டு குளியல் அறையைவிட்டு வெளியே வந்தாள் சகுந்தலா..

இன்னும் சிறிதுநேரத்தில் சந்திரன் வேலையால் வந்துவிடுவான். அதற்குள் எல்லாவற்றையும் தயாராக்கவேண்டும். இல்லையேல் மூக்குநுனியில் கோபம் சிவப்பாக இனம்காட்ட, சந்தர்ப்பம் சூழ்நிலைகளை மறந்து கத்த ஆரம்பித்துவிடுவான்.

தலையை அரைகுறையாக உணர்த்திக் கூந்தலை வாரி நுனியில் சிறிதாக முடிச்சொன்றைப் போட்டுப் பின்னால் தள்ளியவாறு சுவாமி படங்களுக்கு முன்னால் சென்றாள். இயந்திரகதியில் சில ஊதுபத்திகளைப் பெட்டிக்குள்ளால் உருவி, கொளுத்தி, அதன் கமகம வாசனையில் சில விநாடிகள் ஏதோ ஒரு தேவாரத்தை முணுமுணுத்து முடிக்க முன்னரே சமையலறைக்கு விரைந்தாள் சகுந்தலா.

இரண்டு தினங்களாக அடுப்பு வெப்பத்துடனும் எண்ணெய் மணத்துடனும் போராடிப் போராடி செய்து வைத்த சிற்றுண்டிகளை வெள்ளித் தாம்பாளங்களில் இட்டு வரவேற்பறை மேசையில் வரிசையாக அடுக்கினாள்.

அவற்றின் நடுவே வண்ணத்தால் அலங்காரம்செய்த 'கேக்'கைக் கொண்டுவந்து வைத்தாள்.

முன்னால் நின்று பார்த்தாள்.

'வீடியோவுக்கு வடிவாக இருக்கும்.'

இல்லையேல் சந்திரன் துள்ளிக் குதிப்பான். எவர் இருந்தாலும், அவர்களைப்பற்றிக் கவலைப்படாமல் அவளை வார்த்தைகளாலேயே அவமானப்படுத்திவிடுவான்.

இத்தகைய அவமானங்கள் ஆரம்பத்தில் அவளின் இதயத்தை ஈட்டிகளாகத் தைத்து இரத்தமில்லாக் காயங்களை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். 'இப்படியொரு வாழ்க்கை தேவைதானா.... எத்தனை நாளைக்குத்தான் சந்திரனின் ஆதிக்கத்துக்கு அடிபணிந்து அடங்கிப்போன ஊமையாயிருப்பது? அறுத்துக்கொண்டு போய்விடுவோமோ?'

ஆரம்பத்தில் இப்படியான எண்ணங்கள் ஏற்பட்டதுண்டு. காலப்போக்கில் அவமானங்கள் யாவுமே பழகிப்போனவைகளாய், அவள் 'இதுதான் வாழ்க்கை' என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.

இன்று அவர்களின் திருமணநாள். இரண்டாவது ஆண்டு.

வேலைமுடித்து நண்பர்களுடன் வருவதாகக் கூறியிருந்தான் சந்திரன். வரும்பொழுது எல்லாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற உத்தரவு வேறு.

அந்த 'எல்லாம்' என்பதில் பல அர்த்தங்கள் உண்டு. அது சகுந்தலாவுக்குமட்டும்தான் புரியும்.

மற்றவர்களின் வீட்டு விசேசங்களுக்குக் கொஞ்சம்கூடக் குறையாதவிதத்தில் பலகாரவகைகள்- நாலைந்து கறிகளுடன் சாப்பாடு- நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் தண்ணிக்கு ஏற்றமாதிரிக் காரத்துடன் கூடிய பொரியல்- இவைதான் சகுந்தலாவுக்குப் புரிந்த அந்த 'எல்லாம்'.

'எல்லாம்' தயாராக சந்திரனின் வரவிற்காகக் காத்திருக்க, தன்னை அலங்காரம் செய்யவென மேசைக்கண்ணாடியின் முன்னால் சென்றாள் சகுந்தலா.

படாடோபமான அலங்காரம் அவளுக்குப் பிடிக்காததொன்று. எளிமையும் தூய்மையும் அவளுக்கு மிகவும் விருப்பமானவை.

ஆனால் சந்திரன்...?!

திருமணநாளில் அவள் எளிமையாக நின்றால்- 'என்ரை மரியாதையைக் கெடுக்கவெண்டே உப்பிடி நிக்கிறாய்? நான் உனக்கொண்டும் வேண்டிக் கொடுக்காமை வீட்டுக்கை பூட்டி வைச்சிருக்கிறன் எண்டெல்லே கதைக்கப் போறாங்கள்?' என்று சீறுவான்.

இந்த இரண்டாண்டுகளில் சந்திரன் கத்துவான்- சந்திரன் துள்ளுவான்- சந்திரன் சீறுவான் என்று அவள் சிறுகச்சிறுகத் தன்னை அவனுக்காக மாற்றியதுதான் அவள் அனுபவித்த வாழ்க்கை.

ரண்டாண்டுகளுக்கு முன்னர்....!

அப்பா வாயெல்லாம் பல்லாக வந்தார்.

"குடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்ச்சுக்கொண்டு குடுத்திருக்கு..."

"என்னப்பா.... என்ன விசயம்...?"

அம்மாவுக்குப் புரியவில்லை.

சகுந்தலாவுக்கும்தான்.

"கோமளம்.... மூத்தவளுக்கு எப்பிடிக் கலியாணம் காட்சியெண்டு பார்க்கப் போறனெண்டு கவலைப்பட்டன். இப்ப அதுக்கு ஒரு வழியை ஆண்டவன் காட்டியிருக்கிறான். கல்வீட்டுப் பாக்கியம் அக்காவின்ரை பொடியன் ஜேர்மனியிலையெல்லே இருக்கிறான்.... அவன் சகுந்தலாவைக் கேக்கிறானாம்...."

"அவையின்ரை வசதிக்கு உது  சரிவருமே?"

"கோமளம்.... அந்தப் பொடியனுக்கு ஒரு சல்லிக்காசு கூடத் தேவையில்லையாம். அழகும் குணமும்தான் முக்கியமாம். அந்தப் பொடியன் தாயைக் கேட்டு எழுதியிருக்கு. தாய்க்குப் பொடியன்ரை சந்தோசம்தான் முக்கியமாம். அதாலை பாக்கியமக்காதான் என்னைக் கேட்டவ. எங்களுக்குச் சம்மதமெண்டால் பொடியன் 'பொன்சர்' பண்ணிக் கூப்பிடுமாம்..."

"எதுக்கும் பிள்ளையிட்டை ஒரு வார்த்தை...."

"கேளன்.... கரும்பு தின்னக் கசக்கவே செய்யும்...?!"

சந்திரனை அவளுக்கு ஏற்கெனவே தெரியும்.

அவனின் உருவம் மங்கலாக மனதில் எட்டிப்பார்த்தது.

இறுதியாக அவனைக் கண்டு ஏழெட்டு வருடங்களாவது இருக்கும். இந்த ஏழெட்டு வருடங்களில் தன்னை நினைவில் வைத்துத் திருமணம்செய்ய விரும்புகிறான் என்றால்.... ஒருவிதத்தில் அவளுக்குப் பெருமையாகக்கூட இருந்தது.

மறுபுறம் பெற்றோர்களின் பொருளாதார நிலை- அதில் தனக்கு வலிய வரும் வாய்ப்பை நழுவவிட்டு, பெற்றோருக்குச் சுமையாக வாழக்கூடாது என்ற எண்ணம்- சம்மதித்தாள்.

அதன் பின்னர் அப்பாவும் அம்மாவும் ஒரு இடத்தில் நிலையாக இல்லை.

பரபரப்பாகக் காரியங்கள் நடந்தேறின.

சம்பிரதாயப்படி வீடு தேடிவந்த பாக்கியமக்கா, வாயெல்லாம் பல்லாகச் சகுந்தலாவைக் கட்டிப்பிடித்து உச்சிமோர்ந்த கையோடு.... நல்லதொரு நாளில் கொழும்பு வந்து ஜேர்மனியை அடைந்தாள்.

சந்திரன் விமானநிலையத்துக்கு வந்திருந்தான்.

சொந்தக் 'கார்' இளம் பச்சை நிறத்தில்...

'கண்ணுக்கு அழகான கணவன். வசதியானவன்.... தான் கொடுத்து வைத்தவள்' என நினைத்துக்கொண்டாள் சகுந்தலா.

அவளின் வரவை அறிந்து அவனது நண்பர்கள் குடும்பமாக வந்து போனார்கள்.

"பொம்பிளை வீட்டிலை நான் ஒரு சல்லிக்காசுகூட வாங்கேலை. எல்லாம் என்ரை செலவுதான். சீலையள் நகையள்கூடச் சிங்கப்பூரிலை இருந்து வாங்கி வந்திருக்கிறன்...." என்று தனது பரந்த மனப்பான்மையைப்பற்றி மூச்சுக்கு முந்நூறுதடவை சொல்லிக்கொண்டான்.

முதலில் அது சாதாரணமாக இருந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல அது அவளுக்கு முள்ளாக உறுத்தியது.

'தன்னையொரு வாழவழியற்றவள்' எனப் பலருக்குப்  பறைசாற்றுவதுபோல இருந்தது.

'இதற்காகவா சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டினான்...'

நாட்கள் செல்லச்செல்ல சந்திரனின் சுயரூபம் அவளுக்கு மெல்லமெல்லப் புரிய ஆரம்பித்தது.

"சகுந்தலா.... 'ரொய்லட்'டை வடிவாய்க் கழுவு.... உடுப்பைத் தோய்ச்சு 'அயன்' பண்ணி வை.... சப்பாத்தைத் துடைச்சு வை... தேத்தண்ணி கொண்டு வா... காலைப் பிடிச்சு விடு... பொடியள் வாறாங்கள்- நாலைஞ்சு கறியோடை சமைச்சு வை.... வேலையாலை களைச்சுப்போய் வாறன். உனக்கென்ன வீட்டிலை காலாட்டிக் கொண்டிருக்கிறாய்..."

சீதனமில்லாமல் திருமணம்செய்து வீட்டோடு வேலைக்காரியாக வைத்திருக்கத் தீர்மானித்துவிட்டான்போலும்.

அவளால் பெருமூச்சுத்தான் விட முடிந்தது.

''சகுந்தலா... ஐஞ்சாறு 'கிளாஸ்' கொண்டு வா..." என்றவாறு உள்ளே நுழைந்தான் சந்திரன்.

கையில் ஒரு துணி 'வாய்க்'. அதனுள் சில போத்தல்கள் சிணுங்கின. அவனைத் தொடர்ந்து ஐந்தாறு பேர்- நண்பர்கள்.

வரவேற்பறையில் இருந்த மேசையில் போத்தல்களை எடுத்து அடுக்கினான்.

"மச்சான்! முதலிலை 'வீடியோ' எடுக்கவேணும். என்னட்டை இருக்குது. நானும் சகுந்தலாவும் 'கேக்'கை வெட்டேக்கை நீ 'சூட்' பண்ணு..."

"பண்ணினால் போச்சு...."

"வடிவாய் எடுக்கவேணும். ஊரிலை அம்மா, மாமா மாமி எல்லாருக்கும் அனுப்பவேணும்.... ஏய் சகுந்தலா.... 'கிளாஸ்' எங்கை?"

"என்ன பொரிச்சனீ..... அதையும் கொண்டு வா..."

சகுந்தலா மௌனமாகப் பரிமாறினாள்.

"உதுக்குத்தான் சொல்லுறது, எங்கடை ஊர்ப் பொம்பிளையளைக் கலியாணம் செய்யவேணும் எண்டு. வேறை நாட்டுக்காரியளெண்டால் நீ உன்ரை வேலையைப் பார், நான் என்ரை அலுவலைப் பாக்கிறனெண்டு போவிடுவாளவை..." என்றான் பாலன்.

"ஓமோம்.... செல்வம் ஒரு ஜேர்மன்காரியைக் கட்டி படுறபாடுதான் தெரியுமே? காசிருக்கோ இல்லையோ ஒவ்வொரு சனிக்கிழமையும் 'றெஸ்ரோண்ட்'டிலை சாப்பிடவேணும். அவையவேன்ரை வேலையளை அவையவைதான் செய்யவேணும். வேலையாலை வந்து அதை எடு, இதை எடெண்டு அதிகாரம் செய்யேலாது.... எங்கடை பொம்பிளையள் எவ்வளவு மேல்...."

"நான் சீதனம் வேண்டாமையெல்லே கலியாணம் கட்டினனான்..." என்று பெருமையாகக் கூறினான் சந்திரன்.

ஒருநாளைக்கு ஒருமுறையாவது சொல்லாவிட்டால் அவனுக்குத் தலை வெடித்துவிடும் போலும்.

சகுந்தலாவுக்கு அவமானமாகக்கூட இருந்தது. தன் தலைவிதியை நொந்துகொண்டாள்.

"என்ன 'ம்'மெண்டிருக்pறாய்... இண்டைக்காலும் சிரிச்சுக் கொண்டிரன்...."

சிரிக்க முயன்றாள். முடியவில்லை.

"பட்டிக்காடு.... பட்டிக்காடு... ஆக்களோடை எப்பிடி 'மூவ்'பண்ணுறதெண்டே தெரியாது. எல்லாம் சொல்லிக் குடுக்கவேணும்...."

'நான் பட்டிக்காடென்றால் இவர்...?!'

இவர்களின் தண்ணியடித் திருவிழாவுக்கு திருமணநாள் ஒரு சாட்டு. ஊரில் உள்ள உறவுகளை ஏமாற்றுவதற்கு ஒரு வீடியோப் படப்பிடிப்பு.

இப்படியொரு போலி வாழ்க்கை தேவைதானா?!

'உலகமெனும் நாடக மேடையில் எல்லோரும் நடிகர்கள்' என்பதை சந்திரன் சொந்த வாழ்க்கையில் நிரூபிக்கிறானா? இதற்கு இவளையும் துணையாக....

வேதனையில் குமுறும் மனது வெறுப்படைந்து, அதில் சினம் கிளர்ந்தெழ, சகுந்தலா தன் மனவுணர்வுகளை அடக்க முயன்றாள்.

"ஏய் சகுந்தலா... "

இம்முறை சந்திரனின் குரலில் போதையும் கலந்திருந்தது.

"கெதியாய் துணியொண்டு கொண்டுவந்து 'கார்பெட்'டைத் துடைச்சு விடு. சிவா வாந்தி எடுத்துப்போட்டான்..."

சந்திரனின் உத்தரவைக்கேட்டு ஒருகணம் விறைத்துப்போனாள் சகுந்தலா.

அந்நிய ஆடவனொருவனின் வாந்தியைத் துடைக்க நானா கிடைத்தேன். இறைவா! ஏன் இப்பிடி ஒரு வாழ்க்கையை எனக்குத் தந்து சோதிக்கிறாய்? இரவிலே விபச்சாரியைப்போல அவனுக்காக என்று.... பகலிலே வேலைக்காரியிலும் கேவலமாக அவனுக்காக என்று.... இந்த இல்லற வாழ்க்கையிலே எனக்காக எந்தச் சுகத்தைத் தந்தாய்? இந்த நரக வாழ்வில் தினமும் செத்துப் பிழைப்பதைவிட என்னை ஒரேயடியாய் அழித்துவிடு...

ஆற்றாமையுடன் இறைவனை மனதில் வேண்டியவளின் கண்களில் நீர்த் துளிகள் சில வெளிக்கிளம்பின.

"நான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறன். நீ உங்கை என்ன செய்யிறாய்..." என்றவாறு அங்கே வந்த சந்திரன், அவளின் கண்ணீரைக் கண்டு முகம் சுளித்தான்.

"இப்ப என்ன நடந்து போச்செண்டு இப்பிடி அழூறாய்? வாந்தியைத் துடைக்கிறதிலை என்ன அவமானம்? இந்த வெளிநாட்டிலை இதுகள் எல்லாம் சர்வ சாதாரணம். இங்கை கனபேற்றை வேலையே எச்சில்கோப்பை கழுவுறதுதான்...."

தண்ணி சாப்பாடு எல்லாம் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள்.

"சகுந்தலா..."

"........"

"என்ன கோபமே... இங்கை வந்து பார். உனக்காக 'நெக்லஸ்' ஒண்டு வாங்கி வந்திருக்கிறன். ரண்டாயிரம் 'மார்க்'குக்கு மேலை..."

அழகாக பளபளக்கும் கற்களால் இழைக்கப்பட்டு ஜொலித்த 'நெக்லஸ்'ஸைத் தூக்கிக் காட்டினான்.

அதைப் பார்த்த சகுந்தலாவின் முகம் தாமரையாக மலர்ந்தது.

'என்னதான் ஏசினாலும் பேசினாலும் இவருக்கு என்னிலை அன்பு இருக்குதான். இறைவா! இப்பிடியொரு கணவனோடை நான் பல்லாண்டு காலம் வாழ நீதான் வரம் தரவேணும்..'

மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

இந்த ஒரு 'நெக்லஸ்'ஸை வைத்தே இன்னும் ஒரு வருடத்துக்காவது தனது தேவைகளை அவள் மனமகிழ்வுடன் நிறைவேற்றுவாள் எனக் கணக்கிட்டான் சந்திரன்.

 
(பிரசுரம்: மண் 1998)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!