திங்கள், 13 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 17

"அண்ணா.."

"ம்.."

"பெட்டைகளை நம்பாதைடா.. பொடியங்களின்ரை உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கவெண்டே ஒரு கூட்டம் அலையுது..." என்று அறிவுரை கூறினான் லவ்லிபோய்.

"அப்பிடி எல்லாரையும் நினையாதை.. பெண்களென்ன.. ஆண்களென்ன.. எல்லாரிலையும் எல்லாமாதிரியான குணங்கள் இருக்குதானே?"

"உனக்கொண்டும் தெரியாது அண்ணா.. ஒரு ஆறுமாதம் 'சற்' பண்ணியிருப்பியா? நான் எப்ப இருந்து 'சற்' பண்ணுறன் தெரியுமா? மூன்று வருசம்.. மூன்று வருசமா 'சற்' பண்ணுறன்.. அநேகமா தமிழ் 'சற்' ரூம்களுக்கு வாற முக்காவாசிப்பேரையும் தெரியும்.. "

"ம்.. வருவாளவை.. வலியக் கூப்பிட்டு பேசுவாளவை.. படம் அனுப்புவினம். 'டேட்ரிங்' என்பினம்.. எல்லாம் கொஞ்சநாளைக்கு.. பிறகு ஏன் நாயே எண்டு திரும்பியும் பாரளவை.. தங்கடைபாட்டுக்கு வேறை எவனுடனோ 'சற்'பண்ணுவாளவை.. தாங்கள் பழகினதாலை ஒரு பொடியன்ரை மனசு என்ன பாடுபடும்.. அவன் எவளவு வேதனைப்படுவான் எண்டதெல்லாம் 'டோன்ற் கெயர்'..."

"ம்.. ஆனால் பொடியங்களிலையும் இப்பிடி இருக்கிறாங்கள்தானே?"

"நீ என்ன ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொண்டு சொல்லுறாய்.. உந்த 'டேட்டிங்' எண்டால் என்னெண்டு தெரியுமா?"

"என்ன..?"

"அவையள் வருவினம்.. ஒரு பொடியனோடை 'சற்'பண்ணுவினம்.. பிறகு படம் அனுப்பிவினம்.. பிறகு ரெலிபோனிலை பேசுவினம்.. அதுக்குப் பிறகு 'கபே'ல கோப்பி குடிக்க கூப்பிட்டு கதைப்பினம்.. சிலர் சினிமாக்குக்கூட போவினம்.."

"இதுதான் 'டேட்டிங்'கா?"

"இது பொடியன் எப்பிடி எண்டு பழகிப் பாக்கினமாம்.. பிறகு பிடிக்கேலை எண்டா.. ஓரு 'பாய்'. மறுபடி 'சற்'.. மறுபடி ஒரு பொடியன்.. இதுதான் அண்ணா இவளவைன்ரை 'டேட்டிங்'"

"ஓ.. முந்தி அரசர்கள் மகளுக்கு நடத்துற சுயம்வரம்போலை..?"

"ஆகா.. இது அவையே அவைக்கு நடத்துற சுயம்வரம் அண்ணா.. இது வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சதாம்.. லொள்.."

"என்னவோ.. ஒருத்தனோட குணங்களை அறிஞ்சு அவனோட வாழுறது நல்லதுதானே லவ்லிபோய்? காலங்காலமா இணைந்து வாழப் போறவங்களுக்கு ஒருவரை ஒருவர் புரிஞ்சுகொண்டு இணையுறது நல்லதாகத் தென்படலாம்தானே?"

மனதில் தோன்றியதைக் கேட்டேன்.

"ஓகே.. நல்லதாகவே இருக்கட்டும்.. இப்ப இவையளை நம்பி பழகுற பொடியனைப்பற்றி சிந்திச்சியா? அவனுக்கு அவளைப் பிடிச்சு எவளவு மனக்கோட்டைகளைக் கட்டுவான்.. இவை பிடிக்கேலை எண்டு தூக்கி எறிஞ்சுட்டு போனால்.. அவன் பாவம்தானே?"

அவனது கூற்றிலும் நியாயம் இருப்பதாகவே தென்பட்டது.

"என்னவோ.. இதில சொல்லுறதுக்கு என்ன இருக்கு.. அவரவர் புரிந்து நடக்கணும்.."

"அப்படி இல்லை அண்ணா.. பிருந்தாவைப் பார்.. இப்ப சுஜியாம்.. தான் பிருந்தா இல்லையாம்.. என்னை யார் எண்டு கேக்கிறாள். நான் என்ன இளிச்சவாயனே? சொல்லு பார்ப்பம்.. உப்பிடி எத்தினைபேரை 'சற்'றில பார்த்திருப்பன்.. இப்படியானவளவைக்கு அவைமாதிரியே செய்து காட்டணும்.. அப்பதான் புத்தி வரும்.."

"ம்.."

"ஒரு கொம்பியூட்டரைக் கண்டவுடனை உவைக்குத் தலைகால் புரியிறேலை.. தங்கடைபாட்டிலை பொடியளைப் பேய்க்காட்டலாம் எண்டு நினைக்கினம்.. அதுவும் எனக்கோ?"

பெண்களால் 'சற்'றில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பானோ? அல்லது எவளையாவது காதலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஈடேறாத தோல்வியால் ஏற்பட்ட மனக் கொந்தளிப்போ? அல்லது பெண்களைத் தூற்றுவதன்மூலம் தான் புத்திசாலி என்று எனக்குக் காட்ட விளைகிறானா?

இப்படியும் பலர் இருக்கிறார்கள்.

மற்றவர்களது குறைகளையும் இயலாமையையும் கூறுவதுபோலத் தமது திறமைகளை மறைமுகமாகத் தம்பட்டமடிப்பார்கள்.

அவனது பேச்சு எனக்குள் சற்று எரிச்சலைக்கூட ஏற்படுத்தியது. எனினும், வலிய வந்து 'அண்ணா' என்றழைத்து, உரையாடுபவனின் தொடர்பைத் துண்டிக்க மனம் வரவில்லை.

"எல்லாப் பெண்களையும் அப்படி நினைக்காதை லவ்லிபோய்... தனிய காதலுக்காகவோ பேய்க்காட்டறதுக்காகவோ 'சற் ரூம்'க்கு வாறாங்க எண்டு சொல்லாதை.. சிலர் என்னவோ நிச வாழ்க்கையில சொல்ல முடியாததுகளைச் 'சற் ரூம்'லை கொட்டித் திருப்திப்படுறாங்க. அவ்வளவுதான்.. அதுக்காக எல்லாரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளில்லை.."

"அண்ணா.. நூத்திலை ஒண்டு ரண்டு விதிவிலக்கா இருக்கலாம். மற்றதுகள் எல்லாம் சும்மா காதல் கீதல் எண்டு அலம்புற கேசுகள்தான்.."

"ம்.. என்னவோ? உனக்கு அப்பிடித் தெரியுது.."

"என்ர அனுபவம் அண்ணா.. அதுதான் சொல்லுறன். இப்பிடித்தான் உமா என்றொரு 'கேள்' 'சற் ரூம்'க்கு வந்தா.. லண்டன்ல இருந்து.. அங்க 'சற் ரூம்'ல கன பொடியங்களை 'சைற்' அடிக்கிறன் எண்டு பேய்க்காட்டினா.."

"ம்.."

"இவவுக்கு முறையா பாடம் படிப்பீக்கவேணும் எண்டு 'ப்ளான்'போட்டன். என்ரை நண்பன் விபுலனைச் 'செற்' பண்ணி அவளோடை 'சற்'செய்ய விட்டன்.."

"பிறகு.."

"ஒரு பக்கத்திலை அவனோடை காதல் பேச்சு.. இன்னொரு பக்கத்திலை என்னோடை காதல் பேச்சு.. பாவம் உமா.. நாங்கள் ரண்டு பேரும் அவ மெசன்சர்ல பேசுறதை ஒருத்தருக்கு ஒருத்தர் 'கொப்பி'பண்ணி போட்டு வாசிக்குறது தெரியாம ரண்டுபேரோடையும் வழிஞ்சா.."

"அட பாவி.."

"அதுக்கு பிறகு படம் அனுப்பினா.. ரெலிபோனிலயும் பேசினா.. நாங்களும் மாறிமாறி பேசினம்..."

"ஓ..."

"ஒருநாள் சினிமாக்கு என்னை கூப்பிட்டா.."

"ம்..."

"இதுதான் சரியான சந்தர்ப்பம் எண்டு விபுலனையும் கூட்டிக்கொண்டு தியேட்டருக்குப் போனன்.. ஆள் திகைச்சுப் போனா.. அதுக்குப் பிறகு ஆள் 'சற் ரூம்' பக்கமே இல்லை.. இப்பிடியானவளவைக்கு அவேன்ர வழியிலைதான் பதிலடி கொடுக்கவேணும் அண்ணா.."

"இப்படியும் நடக்குமா... நம்ப முடியேலை.."

"ம்.. அவளின்ரை போட்டோ அனுப்புறன் பார்.. அப்பவாலும் நம்புறியா இல்லையா சொல்லு.."

"வேண்டாம் லவ்லிபோய்.. எனக்கெதுக்கு அந்தப் படம்?"

"ஐயோ அண்ணா.. எதுக்கும் பார்த்து வை.. அவள் வேறை ஐடில வந்து உன்னை ஏமாத்தலாமில்லையா?"

என் பதிலை எதிர்பாராமலே அவன் அனுப்பிய படம் என் அனுமதிக்காக மெசன்சர் திரையில் காத்திருந்தது. 'ஏற்கவா வேண்டாமா' என்ற எண்ணம் என்னுள்.

"ஓகே பண்ணு அண்ணா.."

ஓகே பண்ணினேன்.

படம் வந்தது. அழுத்தினேன். கணனித்திரையில் படம் விரிந்தபோது... அது..அது... ஐயோ...!!!!!!! என்னை அறியாமல் கத்திவிட்டேன்.

என் நெஞ்சை ஏதோ அடைத்தது. கண்கள் இருண்டன. கணனித் திரை மங்கலானது.

விதி என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதுபோலிருந்தது.

அதிர்ச்சியால் நிலைகுலைந்தேன். அந்தப் படத்தில் உள்ளது அவளா? அவளா? அவளேதான்.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!