செவ்வாய், 14 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 18

ணையம் வந்த பிறகு உலகம் வெகுவாகச் சுருங்கிவிட்டது என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கூற்று என்மட்டில் இவ்வளவுதூரம் உண்மையாகும் எனக் கனவிலேகூட நினைத்துப் பார்த்ததில்லை.

உலகம் ஒரு நாடாக, ஊராக, வீதியாக, வீடாகக் குறுகிவிட்டது என்மட்டில். அதற்குச் சான்றாக கணனித் திரையில் அவளது படம்.. லவ்லிபோய் அனுப்பிய அவளது படம் கணனித்திரையில் மிதந்து என் மனதை ஆறா ரணமாக்கி, குருதி ஊற்றை உருவாக்கிக் கொண்டிருந்தது.

யாரோ தன்னுடன் 'டேட்டிங்' கேட்டாள், எவளோ தன்னுடன் தொலைபேசியில் உரையாடினாள், சினிமாவுக்கு அழைத்தாளென்று அவன் அனுப்பிய அந்தப் படத்திலிருந்த அவள்.. அவள் சாருவேதான்.

பெரியதொரு இடியொன்று சிரசிலிறங்கி மனதுள் புகுந்ததுபோலிருந்தது.

சப்தநாடிகளும் ஒருகணம் செயலிழந்தாற்போன்ற பிரமையில் சித்தம் கலங்கிச் சூழலும் அகமும் சூழும் இருளாகி அதனுள் பிணமாகி அமிழ்ந்து மிதந்து மீண்ட உணர்வில் செயலற்றேன்.

என் வாழ்வின் எழில் நிலவென எண்ணத்தில் ஏற்றிவைத்து வண்ணக்கனவுகளின் நாயகியாக நடனமிட்டவள் என் முன்னே கணனித்திரையில் 'டேட்டிங்' என்ற பெயரில் ஆண் துணையைத் தெரிவுசெய்வதற்காக 'சற்'றில் சல்லாபிப்பவள் என்ற பெயருடன் படமாக இருந்து என்னைப் பொசுக்கினாள்.

உண்மையா.. நம்ப முடியவில்லை. லவ்லிபோய் என்னைக் குழப்ப அனுப்பினானா? எப்படி? அவனுக்கெப்படித் தெரியும் அவள் என் மச்சாள் என்று? அவனைப் பொறுத்தவரையில் எவளோ ஒருத்தி. ஆனால் என்னைப் பொறுத்தவரையில்...?! அவள் என் இதய வானில் எழிலேற்றிக் கோலமிட்ட தேவதையென அவனுக்கெப்படித் தெரியும்?

'சற்'றையே வெறுப்பதுபோலக் கதைத்தாளே? ஓரு நாளோடு அந்தப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்று சொன்னாளே?! பொய்யா.. வேசமா? இவனுக்கெங்கே தெரியப் போகிறது என்ற துணிவா?

'லவ்லிபோய்' கூறுவதைப்போல பெண்கள் எல்லோருமே வேசதாரிகளா? ஆண்களின் உணர்வுகளுடன் விளையாடி அவர்களின் அழுகையில் ஆத்ம திருப்தி அடைபவர்களா?! ஆயிரமாயிரம் விசயங்களை மனதிலே புதைத்து, எதுவுமே புரியாதவர்களாய் நடமாடும் பதுமைகளா?!

நினைவுக் கோட்டைகள் நிர்மூலமாகும் வேதனையில் எண்ணங்கள் பல்வேறு கோணத்தில் எழுந்து வினாக்களாகி என்னைத் தவிக்கவைப்பதைத் தடுக்கும் வகையறியா தடுமாறினேன்.

எண்ணக் கனவுகள் யாவுமே சிலநொடிகளுள் சிறகிழந்த சிட்டுக்களாய் தரையில் விழுந்து புழுக்களாய் அவஸ்தையில் புரண்டு துடித்து நெளிந்தன. அவற்றின் துடிப்பின் உணர்வுக் கொந்தளிப்பில் சித்தங்கலங்கியவனாய் சிரசை மேசையில் சாய்த்து கைகளுள் புதைத்துக்கொண்டேன்.

அப்போது யாரோ என்னை நோக்கி வரும் அரவம்.. அம்மாதான்.

"தரன்.. உன்னோடை ஒரு முக்கியமான விசயம் பேசவேணும்.."

உள்ளத்து உணர்வுகளை அடக்கியவாறு அவளைக் கேள்விக்குறியுடன் நோக்கினேன்.

"மாமா திங்கள் கிழமை லண்டனுக்குப் பயணமாறார்... அதுக்கிடையில கதைக்க வேண்டியதுகளைக் கதைச்சால் நல்லதெண்டு உன்ரை அப்பாவும் நினைக்கிறார்.. ம்.. நாங்கள்மட்டும் நினைச்சால் போதுமே..? இந்தக் காலத்துப் பிள்ளையள் தாய் தேப்பன் ஒண்டை நினைக்க தாங்கள் ஏதோ நினைக்குதுகள்.."

சொற்களால் சுற்றி எங்கே வர விழைகிறாள் எனப் புரிந்தது.

'இனி கதைக்குறதுக்கு என்ன இருக்கு..? அதுதான் சற்றிலையே கதைச்சுட்டாங்களே..'

சொல்ல நினைத்தேன். மனதில் வெறுப்பு மூண்டது.

"இண்டைக்கு வெள்ளிக்கிழமை.. பின்னேரம் கோயிலுக்கும் போகவேணும்.. எங்கையும் போவிடாதை.. அதுகள் போக இன்னும் மூண்டுநாள்தான் இருக்கு.. அந்தப் பிள்ளை சாருவும் உன்னிலை நல்ல உயிராய் இருக்கிறாள்.. வாயாலை சொல்லாட்டிலும் அவளின்ரை போக்குகளைப் பாக்கேக்கை... உனக்குத்தான் விளங்கேலை எண்டால் எனக்கும் அப்பிடியே..?"

'வேசம்.. வேசம் அம்மா.. அது உனக்குத்தான் புரியேலை அம்மா..'

மனதுள் குமைந்தேன்.

"ஊரிலை எண்டால் பெரியாக்களே காதும் காதும் வைச்சமாதிரி ஒப்பேத்திப்போடுவினம்... இந்த நாட்டில நாங்கள் நினைச்சாப்போலை சரியே... பிள்ளையள் என்ன நினைக்குதுகள் எண்டு வாயைத் துறந்து சொன்னால்தானே தெரியுது.."

குரலில் ஏக்கம் எட்டிப் பார்த்து மறைந்தது.

'அம்மாவுக்கு என்ன பதில் கூறுவது.. நான் கூறினால் நம்புவாளா.. அல்லது ஒப்பாரிவைத்து சொந்தங்களையே பகைமையாக்கிவிடுவாளா? திருமணம் வேண்டாம் என்று சொல்லலாமா? அல்லது அதற்கு அவசரமில்லை என்று..? அல்லது சாருவைப் பிடிக்கேலை என்று..? அல்லது பிடித்ததை எல்லாம் அவள் பிரித்தெறிந்துவிட்டாள் என்று..?'

குழம்பினேன்.

"என்னடா இன்னும் யோசினை.. இண்டைக்கு ரண்டிலை ஒண்டு எனக்குத் தெரியவேணும்.. சொல்லிப்போட்டன்.. அந்தப் பிள்ளையில என்ன குறை... படிப்பில்லையா.. வடிவில்லையா.. குணமில்லையா... அதோடை ஒண்டுக்கை ஒண்டு... ஒரே உருத்து... வலிய வாற சீதேவியை வேண்டாமெண்டுபோட்டு ஆராலும் மூதேவியளை கொண்டரலாமெண்டுமட்டும் நினைச்சுப்போடாதை.. சொல்லிப்போட்டன்.."

விசயத்தைக் கூறி வெருட்டலில் இறங்கிவிட்டாள்.

ஏதாவது சொல்லித்தானாக வேண்டும். வெருட்டல் பலிக்காவிட்டால் அழ ஆரம்பித்துவிடுவாள். எதைத் தாங்கினாலும் அவளது அழுகையைத் தாங்க முடியாது.

என்ன சொல்வது.. எப்படிச் சொல்வது.. அதுதான் புரியவில்லை.

என் மனப் பாரங்களை எவரிடம் இறக்கி வைப்பது? யாரிடம் ஆறுதல் கேட்பது?

குழப்பத்துடன் கணனியைப் பார்த்தேன்.

"நான் இங்கை கதைச்சுக் கொண்டிருக்கிறன்.. அங்கை என்ன னொம்பியூட்டரிலை..?" என்றவாறு கணனியைப் பார்த்தவளின் முகம் பிரகாசமானது.

"அட.. கொம்பியூட்டரில சாருவையா பாத்துக்கொண்டிருக்கிறாய்... என்ன பிள்ளையடா நீ.. அவளைக் கூப்பிட்டு முன்னாலை இருத்திப்போட்டுப் பாரன்.. ஆர் வேண்டாமெண்டது..? அதைவிட்டுப்போட்டு கொம்பியூட்டரிலை அவளின்ரை படத்தைப்போட்டுப் பாக்கிறியோ..?" என்று குறும்பு பொங்க ஆனந்தமாக வாய்விட்டுச் சிரித்தாள் அம்மா.

அவளை அவ்வாறு சந்தோசமாகப் பார்த்து எவ்வளவு நாட்கள்?!

எண்ணம் ஈடேறிய களிப்பு அவளுக்கு.

ஆனால் நான்.. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தேன்.

"அம்மா.. " என்று கூற வாயெடுத்தேன்.

"இனி நீ ஒண்டும் சொல்லவேண்டாம் ராசா... உன்ரை மனசில என்ன இருக்கெண்டு அறிஞ்சதில எனக்கு சந்தோசம்.. அது போதுமப்பா... இனி நான் எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுறன்... சாருவும் என்ரை பிள்ளைதான்.. என்ரை பிள்ளைகள் சந்தோசமாய் இருக்கவேணும். அதுதான் என்ரை ஆசை.. நாட்டைவிட்டு வந்து சொந்தங்கள் தூரத் தூரப் போகுதே எண்டு கவலைப்பட்டன். என்ரை வயித்தில பால் வார்த்தாயப்பா.. இதுவே எனக்குப் போகும் ராசா.." என்று என் கேசத்தைக் கோதிவிட்டு அங்கிருந்து சென்றவளை பிரமை பிடித்தாற்போல் கையாலாகாநிலையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

நிமிடங்கள் கழிந்தன.

சாரு தேனீருடன் என் அறைக்கு வந்தாள்.

அம்மாதான் அனுப்பியிருப்பாள்.

சிரசு சூடாகியது.

அவளையும் கணனித் திரையையும் மாறிமாறிப் பார்த்தேன்.

அவளது பார்வை கணனித் திரையை அடைந்தது.

அவள் வைத்தகண் வாங்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் என்ன கூறப்போகிறாள் என்பதற்காகக் காத்திருந்தேன்.
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!