ஞாயிறு, 12 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 16

னக்குள் புதிதாக ஒரு போராட்டம் ஆரம்பமாகிவிட்டது.

'சாரு என்னை விரும்புகிறாள். அதற்கும்மேலாக அம்மா எங்கள் இணைவை விரும்புகிறாள்..'

தெரிந்த விசயம். எனினும் எனது எண்ணத்தை, நான் சாருவின்மேல் கொண்ட
அன்பை... இல்லையில்லை.. புதிதாக ஏற்பட்ட காதலை அவளிடம் எவ்வாறு தெரிவிப்பது?!

அவளாக வலிய வந்த சந்தர்ப்பங்களை நழுவவிட்டதன் பலன் தற்போதுதான் புரிந்தது.

அவள் இலண்டனுக்குத் திரும்பிச் செல்வதற்கு இன்னும் ஐந்தாறு நாட்கள்தான் இருந்தன. அதற்குள் அவளிடம் என் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தேயாக வேண்டும். ஆனால் எவ்வாறு தெரிவிப்பது என்பதுதான் புரியவில்லை. ஏதோ ஒரு இனந்தெரியாத அச்ச உணர்வு.

அவளது கரத்தைப்பற்றியவாறு ஒரு சில மணி நேரமாவது வீதியிலாவது பூங்காவிலாவது ஆற்றங்கரை ஓரத்திலாவது கதைபேசிக் காலாற நடக்கவேண்டும்.

தயக்கமாக இருந்தது. இந்த விசயத்தைப் பொறுத்தமட்டில் துணிவு என்னைவிட்டுத் தூரவிலகி என்னைக் கோழையாக்கிவிட்டதென்னவோ உண்மைதான்.

வலியச் சென்று தெரிவிக்க கூச்சமோ... அச்சமோ.. அதனால் விளைந்த தயக்கமோ.. ஏதோ ஒன்று தடுத்தது. அதனால் மனம் குரங்காகி நிம்மதியற்றுத் தவிக்க ஆரம்பித்தது.

மனதில் எழுந்த தீயால் நான் சாருவையே கூர்ந்து பார்க்க ஆரம்பிப்பதை என்னாலேயே உணர முடிந்தது. அவள் தூரத்தில் நடமாடும்போது அவளையே பார்ப்பதும், கிட்ட வரும்போது எங்கோ பார்ப்பதும் எப்போதுமில்லாத மாற்றமாய் என்னுள் புகுந்துகொண்டது. இவ்வளவு காலமுமில்லாத ஏதோ ஒன்று என்னுள் புகுந்து அவளுடனான எனது பழக்கத்தையே மாற்றிவிட்டதை என்னால் உணர முடிந்தது. இதுதான் காதலா? என்னையே கேட்டுக்கொண்டேன்.

அலைபாயும் உள்ளத்து உணர்ச்சிகளுக்குக் கடிவாளமிட முயன்றாலும், அணையுடைத்துச் சீறும் வெள்ளம்போலப் பீறிட்டெழும் விநோத வெப்பியாரங்கள் கட்டுக்குள் நில்லாக் காவாலியாகின.

அவள் பார்வையில் தென்படும்போதெல்லாம் கண்கள் எங்கெல்லாமோ துளாவ ஆரம்பித்தன. அந்தத் துளாவலில் அவள் அழகு திரண்டுகொண்டுதானிருந்தது.

அமைதியான முகம்.. கருவண்டுகள்போல துருதுருக்கும் விழிகள்.. செதுக்கிவைத்த செங்கனிச் செவ்வாய்... பூஞ்சோலையொன்று வசந்த காலத்தில் பச்சைப்பசேலெனத் தண்மையுடன் கண்களுக்குப் பசுமை காட்டுவதைப்போலத் தெரிந்தாள்.

அந்த அருமையும் பொலிவுப் பெருமையும் தற்போதுதான் எனக்குத் தெரிய ஆரம்பித்தது. அந்தச் சோலையின் குளுமையில் குளிக்கவென எழும் எண்ணங்கள் சூறாவளியாய்த் தாக்கின. அவை என் சிந்தையில் சித்திரங்களாகிக் கனவுத் தோரணங்கள் கட்டிக் காட்சிகளாக விரிந்து இளமைத் தகிப்பின் எரிவுள் என்னை இட்டுச் சென்றவேளையில், ஒன்றைப் புதிதாக உணர்ந்தேன். அதுதான் காதலா?! அல்லது காதலின் எழுச்சிக்கு வியூகம் அமைக்க விழுந்த அடிக்கல்லா?!

காதல்...! மனங்களின் சந்திப்பின் மயக்கம் என்பார்களே! காமத்தின் பிடியுள்ளிருந்து பூத்துக் குலுங்கும் புனிதப் பிணைப்பென்பார்களே!

காமத்துக்கும் காதலுக்கும் சம்பந்தமுண்டா? இருக்கலாம்.. ஆனால் இதுநாள்வரை ஏற்படாத காமம் தற்போது ஏற்படுகிறதா? இல்லை.. இது அதற்கும்மேல்... ஆமாம்.. காதல்.. காதல்.. இது காதல்தான். எனக்குள் உண்டான கேள்விகளுக்கு நானே உருவாக்கிக்கொண்ட பதில்.

திடீரென நான் மாறித்தான் போய்விட்டேன். எனக்கே வியப்புக் கலந்த ஆனந்தம்.

அந்த ஆனந்த மாற்றத்தை அசைபோட்டவாறு வஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். செல்லவேண்டிய வஸ் வந்தது. சனம் அவ்வளவு இல்லை. உள்ளே ஏறி நோட்டமிட்டேன். சுந்தரும் நேசனும் இருந்தார்கள்.

"அடடே தரனா.. இந்த ஊரிலதான் இருக்கிறியா.. பாத்து எவ்வளவு நாளாச்சு..?"

"ம்.. வேலைகூட.." என நேசன் கேட்டதுக்கு பதிலளித்தேன்.

"முந்தி எல்லாம் புட் போல் (football) என்றால் கிறவுண்ட்ல நிற்பாய்.. இப்போ அந்தப் பக்கமே காணேல்லை.. அவ்வளவு வேலையா.. நல்லதொரு புட்போல் பிளேயர் (football player).. தொடர்ந்து வரலாம்தானே?"

"முயற்சிக்கிறேன்.. "

"உண்மையா முயற்சிப்பாயா..?" என்று கண் சிமிட்டினான் சுந்தர்.

"ஏன்..?"

"இனி உனக்கு புட்போலில எல்லாம் இன்ரறஸ்ற் இருக்குமா தெரியேலை.."

"ஏன்..?"

"உனக்கு நான்தானே 'சற் ரூம்'களை காட்டினேன்.. அதுக்கு பிறகு நீ நண்பர்களோட பழகுறது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுட்டுது.. ஐ மீன் நீ கொஞ்சம் கொஞ்சமா 'சற்'றுக்கு அடிமையாகிட்டாய் எண்டு சொல்லுறன்.. அப்பிடித்தானே தரன்?"

"அடிமை எண்டு சொல்லுறியா சுந்தர்.. அப்படி இல்லை... கவர்ச்சியான சந்திப்புகள்.. அவளவுதான்.. புதுப்புது விசயங்களிலை கவனம் செலுத்துறபோது பழைய விசயங்களுக்கு நேரத்தை ஒதுக்க முடியாம போறது சாதாரணம்.. அதுக்காக அதை அடிமை எண்டு சொல்லேலாது.."

"என்னவோ.. என்னைப் பொறுத்தளவிலை 'சற்' பிரயோசனமில்லாத பொழுதுபோக்கு எண்டுதான் சொல்லுவன்.. ஊருப்படியா ஒரு அலுவலும் செய்யேலாமை சும்மா நேரம் போறதுதான் மிச்சம். ஒரு கதிரையிலை இருந்துகொண்டு கொம்பியூட்டரையே பார்த்துக்கொண்டு கண்ணையும் மனசையும் பழுதாக்கி 'வேஸ்ற்'.. 'வேஸ்ற்'.. (waste) கதிரையிலை மணித்தியாலக்கணக்கா சிறையிருக்கிறமாதிரி... வேதனையில்லாத சிறை.. அப்பிடித்தானே.. இது தேவையா?" என்று கேட்டான் சுந்தர்.

"ம்... எதையும் பாவிக்கிற விதத்திலைதான் சுந்தர் அதன் பலன்களும் கிடைக்கும். கத்தி மாதிரித்தான். கொலைக்கும் பாவிக்கலாம். சமையலுக்கும் பாவிக்கலாம். சத்திர சிகிச்சைக்கும் பாவிக்கலாம். நீ சொல்றதும் ஒருவிதத்தில சரிதான்.. இல்லையெண்டு சொல்லலை. கடல்லை நீந்தலாம்.. மீன் பிடிக்கலாம்.. முத்தெடுக்கலாம்.. சாகலாம்.. அப்பிடித்தான்.. 'சற்'றும் அப்படித்தான்.. வீணாயும் போகலாம்.. விவேகமாயும் ஆகலாம்.. அது நாங்க 'சற்' பண்ணுறதைப் பொறுத்தது.. இல்லையா?"

மனதில் தோன்றியதைக் கேட்டேன்.

"எங்கட தமிழ் 'சற் ரூம்'களுக்கு போய்ப் பார்த்தாய்தானே? ஓரே துாசணம்.. சகிக்கேலாத வக்கிரமமான பேச்சுகள்... இல்லாட்டி பொம்பிளையளை 'சைற்' அடிக்கவெண்டே அலைவாங்க.. பொம்பிளையள் மட்டுமென்ன.. அவங்களும் அப்பிடித்தான்.. வேற என்ன அதில இருக்கு?"

"அதுக்கும் மேலயும் இருக்கு.. நட்புக்காக.. நாலு விசயம் தெரியணும்னு 'சற் ரூம்' வாறவங்களும் இருக்காங்க.. அவங்க தொடர்பு கிடைச்சா பல விசயங்களை அறியலாம்.. உதாரணத்துக்கு ஆங்கிலம் தெரிஞ்சவனோட அந்த மொழியப்பற்றி அறிய முடியும்.. இப்படி பலதை சொல்லலாமில்லையா.. எமக்கு தெரியாத விசயங்களை உடனுக்குடன் மற்றவங்களிட்ட இருந்து அறிய இது நல்ல ஊடகமில்லையா.. ஆனா அதை நாங்கதான் உண்டாக்கணும்.."

"நீ சொல்லுறது சரிதான்.. ஒரு மொழியை மற்ற தமிழனிட்ட இருந்து படிக்கிறதுன்னா... அதுக்கு ஒரு பொது மொழி அவசியமில்லையா.. அது தமிழாகத்தானே இருக்கணும்.. ஆனால் 'சற்' பண்ணுறவங்களுக்கு தமிழ் அறிவு இருக்குமா எண்டதே சந்தேகமாயிருக்கு.. நீ வேற..?" என்று அலுத்துக்கொண்டான் நேசன்.

"அதுவும் சாத்தியமாகும்.. ஒருநாள் கட்டாயம் வரும்.. ஏன் சொல்லுறன் தெரியுமா? தமிழ் சரியா தெரியாதவங்களும் தமிழ் 'சற் ரூம்' வாராங்க.. அதுதான் தாய்மொழி வாசம்.. இப்ப இல்லாட்டிலும் ஒருநாள் அவங்களுக்கும் தமிழ் தேவைப்படும்.. அப்போது வருவாங்க.."

எதிர்பார்ப்புடன் கூறினேன்.

"அதுமட்டுமில்லைடா... கனடால அங்க வாழுற தமிழர்களது வாழ்க்கை.. பிரச்சினைகள்... அவுஸ்ரேலியால அங்க வாழுற தமிழர்களது வாழ்க்கை... பிரச்சினைகள்.. ஐரோப்பால அங்க வாழுற தமிழர்களது வாழ்க்கை.. பிரச்சினைகள்.. ஏன்.. தாயகத்தில வாழுற தமிழர்கள்.. அவங்க வாழ்க்கை.. அவங்க பிரச்சினைகள்.. இவைபற்றிக்கூட அந்ததந்த தமிழரோடை பேசலாம்.."

"பேசி..?!"

"உலகத்தில விரும்பியோ விரும்பாமலோ சிதறிச் சிந்தியிருக்கிற தமிழ் சந்ததி 'சற்' மூலம் இணையலாம்.. அது நாளைய தேவைகளைப் புரிந்துகொண்டு அமைப்பு ரீதியாகவே வளரலாம்.. அப்படி வளரும்போது பல விசயங்கள் பலனுள்ளவையா அமையும்.. இல்லையா?"

"இது சாத்தியமா?"

"ஏன் சாத்தியமில்லை.. இப்பகூட சிலபேர் கருத்தால ஒன்றுபட்டவங்க.. யாகூ போன்ற 'சற்' தளங்களிலை தங்களுக்கெண்டு அறை அமைச்சு பேசுறாங்க.. இது காலப்போக்கில விரிவாகலாம்.. இப்படியானவங்களோட செயற்பாடுகள் விரிவடையும்போது.. பயன்களும் விரிவடையுமில்லையா?"

என் மனதில்பட்டதைக் கூறினேன். அவர்களுக்கும் ஏதோ புரிந்திருக்கவேண்டும். அமைதியாக இருந்தார்கள்.

நான் இறங்கும் இடம் வர அவர்களிடம் விடைபெற்றேன்.

ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 'சற்' எனது பெரும்பகுதி நேரத்தை விழுங்கிவிட்டது. அதற்கும் கட்டுப்பாடு போடவேண்டும். தீர்மானித்துக்கொண்டேன். எதுவும் ஒருவனது கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்துத்தானே?! 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்' என்று அனுபவமில்லாமலா கூறியிருப்பார்கள்?!

கணணியைப்போட்டேன்.

"ஹலோ அண்ணா..."

மெசன்சரில் 'லவ்லிபோய்' அழைத்தான்.

"அண்ணா.. பிருந்தா சரியான ஏமாத்துக்காரிபோல இருக்கிறாளே.. இப்ப தான் சுஜியாம்.. என்னைத் தெரியாதாம்.."

"ம்.."

"இவளவையே இப்படித்தான் அண்ணா.. நேரத்துக்கொரு பெயர்.. நேரத்துக்கொரு பொடியன்.. களிசடைகள்..."

'அப்ப நீ..?'

கேட்க நினைத்தேன். அடக்கிக் கொண்டேன்.

"என்னமா நடிக்கிறாள்.. நான் என்ன இளிச்சவாயனே இவளவைன்ரை நடிப்பை நம்ப..? உப்பிடித்தான் இங்க லண்டன்ல என்னை ஒருத்தி பேய்க்காட்ட வெளிக்கிட்டா.. என்கிட்டயா... அவவுக்குமேலால நான்விட்டன்.."

"ம்.."

"என்ன ம்.. அவ போட்டோகூட இருக்கு.. ஹா.. ஹா.. என்ன நடந்தது தெரியுமோ? சொல்லுறன் கேளு.."

அவன் கூற ஆயத்தமானான்.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!