திங்கள், 20 மே, 2013

எனக்கு எல்லாம் தெரியும்

''உங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?"

கடந்த சில மாதங்களாகவே இந்த வசனத்துடன் துளைத்தெடுக்க ஆரம்பித்துவிடுவாள் மனைவி விமலா.

நாங்கள் திருமணம் என்ற பந்தத்தால் சொந்தமான இந்தப் பத்து வருடங்களாக, எமது குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளே வந்ததில்லை என்று கூறமுடியாது.
அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் முளைவிடுவதும், அவை சில நிமிடங்களிலோ அல்லது சில மணித்தியாலங்களிலோ அல்லது ஆகக் கூடியது ஒரு சில நாட்களிலோ தீர்ந்துவிடுவதும் வாடிக்கை.

ஆனால், தற்போது கடந்த சில மாதங்களாக வாடிக்கையான பிரச்சினைகளில் ஒரு வேடிக்கையாக புதுப் பிரச்சினையொன்று முகிழ்த்து, விமலாவின் வார்த்தைகள்மூலமாக முள்ளாகக் குத்திக்கொண்டே இருக்கிறது.

அந்த முள் எனது தனிப்பட்ட பிரச்சினையால் முகிழ்த்ததல்ல.

பொதுப்பிரச்சினை.

''ஒவ்வொருத்தன் தானுண்டு தன் வேலையுண்டு தன் குடும்பம் உண்டெண்டு இருக்கேக்கை.... உங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை...."

பொதுநலம் விளையவேண்டும் என்பதற்காகச் செயற்பட்டது, விமலாவைப் பொறுத்தமட்டில் தேவையில்லாத வேலையாகிவிட்டது.

சும்மா வேலை வீடு சாப்பாடு தூக்கம்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்கும் மேலாக ஏதாவது நல்லது விளையவேண்டும் என்ற நப்பாசையால் மூக்கை நுழைக்கப்போய் முகிழ்த்த முள் இது.

உடனே எடுத்தெறிந்துவிட முடியாது. பொதுவிசயமானால் அதற்கான காலம் கனிந்துவரும்வரையில் பொறுத்திருக்கத்தானே வேண்டும்?!

அதுவரையில் என்ன பிரச்சினை, எப்படி ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியுமா?!

மாலைவேளைகளில் வழமையாகக் கூடும் 'பொலி போல்' விளையாடும் மைதானத்தில் ஒருநாள்....

இப்படியே எவ்வளவு நாட்களுக்குத்தான் வீடும் வேலையும், 'பொலிபோல்' எனப்படும் வலைப்பந்தாட்டமுமாய் காலத்தை வெறுமையாகக் கழிப்பது என்ற வினா எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்ததுபோல, வேறு சிலருக்கும் இருந்திருக்க வேண்டும்.

உள்ளே அரித்துக்கொண்டிருந்த வினா அன்று விடை தேடி வெளியாகியது.

''இண்டைக்கு இந்த வெளிநாட்டிலை வாழுற நாங்கள் இப்பிடி பணம் தேடுறதிலேயே வேலை வேலை எண்டு வாழ்க்கையைப் போக்கிக்கொண்டிருக்கிறம். ஏதோ கொஞ்சநேரம் உடம்புக்கு நல்லதெண்டு இப்பிடி 'பொலிபோல்' எண்ட பேரிலை ஏதோ விளையாடுறம்.... ஆனால் இதோடை நாங்கள் நிக்கக்கூடாது. இதுக்கும் மேலையும் ஒரு வாழ்க்கை இருக்கு.... ஆகக் குறைஞ்சது எங்கடை பிள்ளையளாலும் தாங்கள் தமிழர் எண்ட அடையாளத்தைப் புரிஞ்சவர்களாக வாழுறத்துக்கு நாங்கள் ஏதாலும் செய்யவேணும்..." என்று விடயத்தை ஆரம்பித்தார் பொன்னம்பலம்.

''பொன்னண்ணை.... நீங்கள் எங்கை வாறியள் எண்டு விளங்குது. அதாவது எங்கடை பிள்ளையளுக்கு தாங்கள் ஆர், எங்கையிருந்து என்னத்துக்காக வந்தார்கள், தங்கடை தனித்தன்மை என்ன என்பதுபோன்ற விசயங்கள் தெரிஞ்சிருக்க வேண்டும். அப்பிடித்தானே...." என்று கேட்டார் பாலசுந்தரம்.

''அதுக்குத்தானே தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இருக்கு...?!"

''அது தமிழறிவை வளர்க்க.... அதுக்குமேலை எங்கடை பண்பாடு கலாச்சாரங்களை எங்கடை பிள்ளையளுக்கு அறிமுகப்படுத்த, எங்கடை கலையளைக் கற்பிக்க நாங்கள் ஒரு சங்கமோ அமைப்போ தொடங்கவேணும்.... இண்டைக்கு மற்ற நகரங்களிலை எல்லாம் தமிழாக்கள் மன்றமோ சங்கமோ தொடங்கிச் சேவை செய்யினம்...."

''உண்மைதான்...."

ஆமோதித்தேன் நான்.

எங்களது உரையாடல்கள் ஊரெல்லாம் அளந்து, உலகெல்லாம் தொட்டு வீடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கிய இறுதிநேரத்தில், 'தமிழர் நலன்புரிச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி இயங்குவதாக இணக்கம் கண்டு, அவசர அவசரமாக அதன் ஆரம்பக் கூட்டத்துக்கான காலத்தைத் தீர்மானித்து விடைபெற்றோம்.

எனது நகரத்தில் ஏறக்குறைய இருநூறு தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் எல்லோருக்கும் சங்கத்தின் ஆரம்பக் கூட்டம்பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டது.

ங்க ஆரம்பக்கூட்ட நாள் அன்று....

நான் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பல தமிழர்கள் அங்கே சமூகமளித்திருந்தார்கள். அதுவே பல தமிழர்கள் தமது எதிர்காலத்தைப்பற்றிப் பொதுநோக்கில் சிந்திக்கிறார்கள் என்பதற்குக் கட்டியமாக இருந்தது.

வழமையான அம்சங்களுடன் ஆரம்பமான கூட்டத்தில், வழமைபோலவே நிர்வாகசபைக்கான தேர்வு ஆரம்பமாகியது.

சங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்யும் நேரம்....

சிலர் சிலரைத் தெரிவு செய்வதும் சம்பத்தப்பட்டவர்கள் கூச்ச உணர்வு காரணமாகவோ அல்லது தன்னம்பிக்கை இன்மை காரணமாகவோ அல்லது வேலைப்பளு காரணமாகவோ அதைத் தட்டிக் கழிப்பதுமாக நேரம் உருண்டு கொண்டிருந்தது.

'தினகரனைத் தெரிவு செய்தால் என்ன?!' என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.

தினகரனிடம் கேட்டேன்.

''எனக்கு இதைப்பற்றி ஒண்டுமே தெரியாது.... மூஞ்சுறு தான்போகக் காணேலை.... அதுக்கை விளக்குமாறு வேறை...''

''இது விளக்குமாறில்லை தினகரன்.... உங்களுக்கு எல்லாரையும் சமாளிக்கிற திறமை இருக்கு.... இதைவிட வேறை என்ன தெரியவேணும்...."

''ஒரு அமைப்பையோ சங்கத்தையோ நடத்துறதுக்கு முன்னனுபவம் வேணும்.... இதைப்பற்றி எதுவுமே தெரியாமை எப்பிடித் தலைவர் பதவியை ஏற்கிறது.... எனக்கொண்டும் தெரியாது.... என்னை விட்டிடுங்கோ...."

''நீங்கள் உப்பிடிச் சொல்லக்கூடாது...." என்று ஆரம்பித்து அவரை ஒருவாறு தலைவர் பதவிக்குச் சம்மதிக்க வைத்துவிட்டேன்.

'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்பதுபோல தலைவர் பதவிக்குத் தினகரன் முன்வந்ததும், ஏனைய பதவிகளுக்குத் தானாகவே பலரும் முன்வர, 'தமிழர் நலன்புரிச் சங்கம்' உதயமாகி, அரையாண்டுக்கும் மேலாகக் காலம் உருண்டோடிவிட்டது.

வந்தது தலைவலி.

சங்கத்தின் நடவடிக்கைகளில் தலைவர் தன்னிச்சையாகச் செயற்படுகிறார் என்பது பலரது குற்றச்சாட்டுக்களாக வெளிவரத் தொடங்கியது.

'சங்கத்தின்ரை மேடை நிகழ்ச்சியளிலை தனக்கு நெருக்கமானவர்களுக்குத்தான் சந்தர்ப்பம் கொடுக்கிறார்....'

'நிர்வாகசபையின்ரை ஆலோசனை இல்லாமலேயே தான் நினைச்சமாதிரி தன்ரை சொந்த அலுவல்களுக்குக்கூட.... அதாவது வேறு நாட்டுக்கான 'விசா' போன்ற அலுவல்களுக்கெல்லாம் சங்கத்தின்ரை கடிதத் தாளைப் பயன்படுத்துகிறார்....'

'சங்கம் தன்ரை சொத்து என்றமாதிரியெல்லே நடக்கிறார்.... இது தமிழர் நலன்புரிச் சங்கமோ.... இல்லாட்டில் தினகரன் நலன்புரிச் சங்கமோ?!'

இப்படிப் பல குற்றச்சாட்டுகள் கிளம்பி, அவற்றுக்கெல்லாம் அத்திவாரம் நான் என்றரீதியில் என்னைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.

'நான்தான் தினகரனைத் தலைவராகப் பிரேரித்தேனாம்....'

இப்போது விளங்குகிறதா...?!

''ஒவ்வொருத்தன் தானுண்டு தன் வேலையுண்டு தன் குடும்பம் உண்டெண்டு இருக்கேக்கை... உங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை..?!" என்ற விமலாவின் நச்சரிப்புக்கு இதுதான் காரணம்.

எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த நச்சரிப்பு?!

எதற்கும் ஒரு அளவுண்டல்லவா?!

'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்!'

ன்று....

திடீரென ஒரு சந்தர்ப்பத்தில் தினகரனை சந்திக்க நேர்ந்தது.

''உதையெல்லாம் இஞ்சையே கேக்கிறது.... சங்க விசயத்தைச் சங்கக் கூட்டத்திலை கேக்கவேணும் எண்டது உங்களுக்குத் தெரியாதே...."

''அதுக்கு முன்னாலை உங்களிட்டைத் தனிப்பட்டமுறையிலை கேட்டு, இதைச் சுமூகமாகத் தீர்க்கலாம் எண்டு நினைச்சன்...."

''ஒரு சங்கத்தை நடத்துறதெண்டது லேசுப்பட்ட விசயமில்லை... சும்மா ஒண்டும் தெரியாதவங்கள் அதையும் இதையும் கதைப்பாங்கள்.... அவங்களுக்காகச் சங்கம் நடத்தேலாது.... தலைவர் பொறுப்பெண்டது ஒரு காத்திரமான பதவி. அதைப்பற்றி எல்லாருக்கும் தெரியாது.... நீங்கள் ஏதாலும் கதைக்க வேணுமெண்டால் சங்கக் கூட்டத்திலை வந்து கதையுங்கோ...."

''சங்கப் பிரச்சினையளைப்பற்றிக் கதைக்க முந்தி சங்கம் எண்டால் என்ன.... அதை எப்பிடி நடத்தவேணும் எண்டு தெரிஞ்சுகொண்டு கதைக்கவேணும்.... சனங்கள் வாயிலை வந்தபடி கதைக்கும்.... அவைக்கு என்ன சொல்லவேணும்.... சங்கத்தை எப்பிடி நடத்த வேணுமெண்டது எனக்குத் தெரியும்...."

தினகரன் சொல்லி முடித்துவிட்டார்.

அப்படியே அசந்துபோய் நின்றேன்.

'எனக்கு எதுவுமே தெரியாது' என்று அன்று கூறிய தினகரனா இவர்?!

இருக்கைகள் மாறும்போது சிலரது இயல்புகளும் மாறுகிறதுபோலும்.

(பிரசுரம்: மண் 1998)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!