ஞாயிறு, 19 மே, 2013

நிதர்சனம்

து ஒரு சேரிப்புறம். பாட்டாளிவர்க்கத்தின் அரண்மனைகள் குடிசைகளாகத் தெரிகின்றன. காலச் சக்கரங்களின் சுழற்சியில் அவைகள் தேய்வதைப்போல பஞ்சம் பட்டினியில் அவர்கள் வாழ்வும் தேய்கிறது.

வள்ளி.... கைம்பெண். துணையாக ஒரு பாலகன். ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் அந்தப் பிஞ்சுதான் தஞ்சம்.

யாரோ அவளது குடிசையை நாடி வருவது ஓலைத்தட்டியின் பொத்தல்கள் வழியே தெரிகின்றது.

வயிறாறச் சோறுபோட்டு வாழ்த்தவா வருகிறார்கள்?! இல்லை.... நாள் முழுக்க இரத்தத்தை உழைப்பாக உறிஞ்சிவிட்டு, அரைவயிற்றுக் கஞ்சிக்குச் சில்லறைபோட்டுச் சமாளிக்க வருகிறார்கள்.

தட்டிக் கழிக்க முடியாது. பட்டினியுடன் போராட இனியும் தெம்பில்லை.

வந்தது கோமளம்.

"எடியே வள்ளி.... வீட்டுப் பக்கம் ஏண்டி வாறேல்லை? வரவர ஆரார் எப்பிடி இருக்க வேணுமெண்டு இல்லாமைப் போச்சு. இப்ப காலம் கலியுகம்...."

பேசத்  தொடங்கிவிட்டாள்.  தொட்டில்  பண்பாடு. கொட்டும் வார்த்தைகளில் முதலாளித்தனம். எதைப் பேசினாலும் 'இவளால் என்ன செய்யமுடியும்?' என்ற அகம்பாவம். கேட்கவேண்டிய விதி வள்ளிக்கு. அது இவளது இயலாமை.

"நாளைக்கு வீட்டை வாறியே.... இவன் பொடியன் மோகன் ஜேர்மனியாலை வாறான்.... வீடு வாசலைக் கூட்டித் துப்பரவாக்கவேணும்...."

மோகன்....

அந்தப் பெயரைக் கேட்டமாத்திரத்தில் இதயத்தில் சீறி எழுந்த சினத்தின் கொந்தளிப்புகள் எரிமலையாய் வெடித்துச் சிதற, 'வெடுக்'கென நிமிர்ந்து நோக்கினாள் வள்ளி.

எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. அதைவிட அந்தப் பாலகனின் 'வீல்' என்ற கத்தல் காதைத் துளைத்தது.

சில வருடங்களுக்கு முன்பு....

வள்ளியின் வாழ்வில் வசந்தம் வீசியது.... தியாகராசன் வடிவில். 'தியாகன்'- போலிக் கௌரவம் பிடித்த சமூகத்தினால் வழங்கப்பட்ட நாமம். தியாகராசன் என்று கூற மனம் ஒப்பவில்லை.

பருவ வாசலில் பஞ்சத்தின் கொடிய பிடியிலிருந்தும், பளபளத்த அந்த வள்ளி என்ற கரிய குயில் தியாகனிடம் தஞ்சம் புகுந்தது.

தியாகன் ஓயாது உழைத்தான். வள்ளியை மகிழ்ச்சியாக வாழவைக்க முயற்சித்தான். முடியவில்லை. நேர்மையான உழைப்பிற்குக் காலமில்லை. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்கள் மகிழ்ச்சிக்குத் தடை விதித்தபோது.... அவனது மனச்சாட்சி ஒழிந்துகொண்டது. நியாயம் ஒதுங்கி நின்றது.

கள்ளச் சாராயம் காய்ச்சினான். அதன்மூலம் அவனால் வறுமையை முற்றாக ஒழிக்க முடியாவிட்டாலும், வறுமையுடன் போட்டிபோட முடிந்தது.

'இனிமேல் கஸ்டமில்லை' என்று அவன் எண்ணியவேளையில் எண்ணத்தில் இடி விழுந்தது.

இயக்கம் என்ற போர்வையில் சிலரால் கண்டிக்கப்பட்டான்.

தன் பஞ்சத்தையும் அரைப்பட்டினி வாழ்வையும்போக்க வேறு வழியில்லை என்று வாதாடினான்.                     

தியாகராசனின் வாதாட்டம் வீணானது. சில நாட்கள் வியாபாரத்தை நிறுத்தினான்.

பட்டினி மீண்டும் தலைதூக்கியது. உழைப்பைத் தேடி அலைந்தான். வரம்பு கட்ட, வாய்க்கால் வெட்டவென்று வாரத்தில் ஓரிரு நாட்கள்தான் அவனால் ஊதியம் என்ற பெயரில் சொற்ப தொகையைக் காணமுடிந்தது. அத் தொகையைக்கொண்டு அவனால் பட்டினியை விரட்ட முடியவில்லை.

அரைகுறைப் பட்டினியால் பரிதவிக்கும் நிறைமாதக் கர்ப்பிணியான வள்ளியைப் பார்க்க மனம் சகிக்கவில்லை.

மீண்டும் கள்ளச் சாராயத்தைவிட்டால் வேறு வழி தெரியவில்லை. தொடர்ந்தான்.

ஒருநாள்.... இதே கோமளத்தின் மகன் மோகன் முன்னால் வர, பின்னால் வேறு சிலர்.

மறுநாள் தியாகராசன் 'துரோகி' என்ற பட்டத்துடன் மின்கம்பத்தில் பிணமாகத் தொங்கினான்.

வள்ளியால் 'ஓ'வென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறமட்டுந்தான் முடிந்தது.

நாட்டின் விடுதலை வீரனாகப் போகவேண்டிய மோகன், வள்ளியின் வாழ்வுக்கு யமன் ஆனான்.

இன்று.... அந்த இயக்கத்தைக் காணவில்லை. துரோகக் கும்பலில் சேர்ந்துவிட்டது.

மோகன்.... அந்த விடுதலை வீரன்....?! வெளிநாட்டில் இருந்து சகல வசதிகளுடனும் வரப்போகிறான். கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாதியான மோகனைக் கொலைகாரன் என்று கூறுவார்களா? தண்டிப்பார்களா? பணக்காரன் ஆயிற்றே.... குசலம் விசாரிப்பார்கள். சீதனச் சந்தையில் ஏலம்போட்டு, மலர் ஒன்றை அவன்மூலம் கசங்கவைப்பார்கள்.

இந்த நிலையில் தியாகராசன் என்றொருவன் இருந்ததையோ அல்லது அவனை மோகன் இயக்கம் என்ற தோரணையில் கொலை செய்ததையோ எவர் நினைத்துப் பார்க்கப்போகிறார்கள்?!

நினைத்தால் மாத்திரம் வள்ளியின் வாழ்க்கை விடியலைக் கண்டுவிடப்போகிறதா என்ன?!

அல்லது அவளது குறைகள் நிறைகளாகிவிடுமா என்ன?!

''என்னடி யோசிக்கிறாய்?"

கோமளத்தின் சத்தம் சிந்தனையைக் கலைத்தது. துளிர்த்த கண்ணீர்த் துளிகளைக் கிழிந்துபோன சேலைத் தலைப்பால் துடைத்தாள்.

'உன்ரை வீட்டு முற்றம் மிதிக்கமாட்டன்' என்று கூற நினைத்தாள்.

முடியவில்லை.

"வாறனும்...."

நாளைக்கு அந்தப் பாலகனின் பசியைத் தீர்க்கவாவது பணம் வேண்டுமே....!!

(ஏலையா-வைகாசி"1990)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!