ஞாயிறு, 12 மே, 2013

தாயே! தாயே!!


யிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!

-இராஜன் முருகவேல் (திருமதி முருகவேல் சரோஜினிதேவி அவர்களின் நினைவுமலரிலிருந்து.. 1.07.2005)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!