வியாழன், 9 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 13

"ஹேய்! கூ ஆர் யூ, மான்?"

துப்பாக்கி ரவையாகப் புறப்பட்டு வந்த வார்த்தைகள் என் நெஞ்சைத் துளைத்துச் சிரசைத் தாக்கியதுபோல் உணர்வு பொங்கியது. கனமான வலியுள் புதைந்து அவதிப்பட்டேன்.

'யார் நீ?'

அவளா.. என் பிருந்தாவா கேட்டாள்?! நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. எதிரே கணனித் திரை அந்த வசனத்தை இன்னமும் ஒளிர்த்தது.

"ஹேய்.. யார் நீ? பிருந்தாவ உனக்கெப்படி தெரியும்..ரெல் மீ.."

மீண்டும் அதிர்ச்சி.

மெசன்சர் யன்னலைப் பார்த்தேன்.. பிருந்தாவின் 'ஐடி'தான். அப்படியென்றால்.. ஏன் வேசம்போடுகிறாள்? விளையாட்டா? அல்லது விபரீதமா? புரியவில்லை.

"பிருந்தா.. என்ன இது..?"

"நான் பிருந்தா இல்லை.. பதில்.. பதில்.. உனக்கெப்படி பிருந்தாவ தெரியும்..?"

குழப்பம்.. குழப்பம்.. அவளில் வெறுப்பு வந்தது. விளையாட்டுக்கு ஒரு அளவுவேண்டாமா? அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே.. பகிடியாகப் பேச ஆரம்பித்துக் கைகலப்பில் முடிவுறும் சம்பவங்களுக்குத்தான் அளவேது?!

"நான் கேட்குறதுக்கு முன்னால நீ என்ன முந்திரிக்கொட்டைமாதிரி.. நீ யார் சொல்லு.."

"முந்திரிக்கொட்டையா.. அது என்ன..?"

"மண்ணாங்கட்டி.. முதல்ல நீ யார்.. எப்படி பிருந்தான்ர 'ஐடி'ல வந்தாய் சொல்லு.."

"மண்ணாங்கட்டியா.. ம்.. நீதான் மண்ணாங்கட்டி.. இது பிருந்தாட 'ஐடி' இல்லை.. என்ர 'ஐடி'.."

"என்ன...?"

"ம்.. நான் மூண்டு மாசமா கனடால இல்லை.. அவள் என்ரை 'ஐடி'ய 'யூஸ்' (use) பண்ணிட்டாள்.. மொக்கு.. மொக்கு.."

அதிர்ந்துவிட்டேன்.

நிஜமா பொய்யா எனப் புரியவில்லை. யாரை நம்புவது? எவரிடம் கேட்பது? குழப்பமாகவிருந்தது.

"என்ன சத்தமில்லை? நம்பலையா.. பிருந்தா என் பெரியப்பா மகள்.. அவளுக்கு என்ர 'ஐடி'ன்ர 'பாஸ்வேட்' தெரியும்.. கள்ளி.. எனக்குத் தெரியாம வீட்டை வந்து.. என்ரை மெசன்சரில கனபேரோட பேசியிருக்காள்.."

"ம்.. அப்ப அவளின்ரை 'ஐடி' என்ன.."

"லொள்.. அவளுக்கு 'ஐடி' இல்லையே.. அவளிட்ட 'கொம்பியூட்டரே' இல்லை.. "

தாங்கமுடியாத அதிர்ச்சி. என்னால் நம்பமுடியவில்லை. நம்பாமல் நிராகரிக்கவும் இயலவில்லை.

இப்படியும் நடக்குமா? இப்படியும் ஒரு பெண்ணால் எளிதாக என் உணர்வுகளுடன் விளையாடி ஏமாற்ற முடியுமா?! என் மனதுள் எழுந்து நிற்கும் 'ஐஸ்கிறீம் சிலை' பொய்யா? கானல்நீரின் உறைநிலை உருவமா?! என்னைக் கோரம் செய்யவெனப் புகுந்த மாயப்பிசாசா?

என்னைச் சுற்றிலும் சூழும் இருண்ட புகையுள் கண்கள் எரிந்து நீர்சுரக்க, அலங்க மலங்க முழிக்கும் அறிவுகெட்ட முண்டமாக என்னிலை.

சுழன்றடிக்கும் சூறாவளியுள் பறந்தலையும் எனக்கு ஒரு பற்றுதல் கிடையாதா? கொந்தளிக்கும் கடலுள் மூழ்கும் படகில் இருந்து தப்ப ஒரு சிறு துரும்பாவது அகப்படாதா? நிதர்சனம் என்று நினைத்தவை யாவும் துரதிஷ்டமான நிலையில் ஒரு சிறு ஊன்றுகோலாவது கிடையாதா என்ற தவிப்பில் நான்.

"பிருந்தா உன் வீட்டை வந்து 'சற்'பண்ணலாம்தானே.."

"எதுக்கு..?"

"அவளுடன் பேசவேணும்.."

"எதுக்கு..?"

"நீ யார்னு தெரியாம எப்பிடி சொல்லுறது...?"

"நான்தான் சொல்லிட்டனே.. பிருந்தாட சித்தா பொண்ணு.. அவ தங்கச்சி.. என்ன தெரியாது.. சொல்லு"

"ம்.. உன் பெயர் தெரியாது.. உன் வயது தெரியாது.. "

"தெரிஞ்சு என்ன செய்யப் போறாய்.. 'லவ் லெற்றர்' போடப் போறியா? லொள்.."

"என்ன..?"

"நீதானே என்னவோ அவளுக்கு மெயில்லை எழுதியிருந்தாய்..?"

"ஐயோ.. பார்த்துட்டியா.."

"என்ரை 'ஐடி'க்கு வாற மெயில பாக்காம வேற எந்த மெயில பாக்கிறது..?"

என்னை அறியாமலே எனக்குள் ஒரு கூச்ச உணர்வு புகுந்துகொண்டது. எவளுக்காகவோ வெளிப்படுத்திய என் எண்ணக் குவியல்கள் எவளையோ சென்றடைந்த கூச்சம்.

"உன்னை பற்றி சொல்லலையே..? ம்.. எனக்கு பெயர் தரன்.. ஜேர்மனில இருக்கேன்.."

"ம்.. இருபத்தாறு வயசு எண்டு சொல்லலை.. லொள்.."

"வாட்.. ஆர் யூ பிருந்தா..?"

"ஐயோ.. சொறி.. உங்க மெயிலை பார்த்துட்டு அவளோட ரெலிபோன்ல பேசினேன்.. அப்பதான் சொன்னாள்.. அவள் நல்லாத்தான் உங்களை ஏமாத்திட்டாள்.. உங்களை பாத்தா பாவமா இருக்கு.. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்குறன்.."

"அவளுக்காக நீ எதுக்கு மன்னிப்பு..?"

"அவள் என்ர அக்காதானே.."

"ம்.. உனக்கு எத்தினை வயசு.. என்ன பேர்..?"

"என்ர பெயர் சுஜி.. பதினைஞ்சு வயசு.."

"ஐயோ..!"

"என்ன ஐயோ.. ?"

"பதினைஞ்சு வயசில 'சற்'றா?"

"ஏன்.. 'சற்'பண்ணினால் என்ன.. உங்களைப்போல 'லவ்'பண்ணுறவங்கதான் 'சற்'பண்ணலாமா?"

'சுரீர்' என நெஞ்சில் தைத்தது.

அவளது கேள்விக்கு என்ன கூறுவது எனப் புரியாமல் மெளனித்தேன்.

"ஒரு கேள்வி.."

அவள்தான்.

"ம்.."

"நீங்கள் எனக்கு அண்ணாவா? அங்கிளா?"

அந்த வேதனையிலும் சிரிப்பு வந்தது.

"என்னவோ கூப்பிடு.."

"அண்ணாக்குட்டி... இப்பிடித்தான் கூப்பிடுவன்.."

அதுவும் இனிமையாகத்தான் இருந்தது.

"கூப்பிடு..."

"நீங்க எப்பிடி கூப்பிடுவீங்க..?"

"ம்.. சுஜிக்குட்டி..?"

"அது வேணாம்.. செல்லக்குட்டின்னு கூப்பிடணும்.. ஓகே..?"

என்னையறியாமல் சிரித்துவிட்டேன். என் குழப்பங்களையும் கவலைகளையும் ஒருகணம் மறந்து சிரித்தேன்.

"ம்.. செல்லச் சின்னக்குட்டின்னு கூப்பிடட்டா?"

"ஐய்யா.. இப்பதான் நீ என்ரை அண்ணாக்குட்டி..."

அவளே என் கழுத்தைக்கட்டிக்கொண்டு துள்ளிச் சிரிப்பதாக ஒரு பிரமை.

"அண்ணாக்குட்டி.. உன்னை ஒண்டு கேக்கணும்.."

"ம்.."

"நீ பிருந்தாவ ஏன் 'லவ்'பண்ணுறாய்..?"

"நீ சின்னப்பெண்.. உனக்கெதுக்கு.. ஒழுங்காய் படி.."

"லொள்.. அவள் சரியில்லைடா.. அதுதான் கேட்டேன்.. சொல்லலைன்னா போ.. எனக்கென்ன?"

ஜோதி மனக்கண்முன்னே வந்தாள்.. 'சற்றை நம்பாதைடா.. எல்லாம் பொய்டா..' என்றவாறு. இப்போது இவள் 'பிருந்தா சரியில்லை' என்றவாறு. என் மனமாளிகையே பொய்யாகிச் சிதைந்துகொண்டு போகிறதோ?! அங்கே குடியிருத்திய அழகுச்சிலை உருகிக் கொதிகூழாய் என் இதயத்தை அவிப்பதுபோன்ற எரிவு. தாங்கமுடியாது தவித்தேன்.

"அண்ணாக்குட்டி.. அவளை நம்பாதை.. அவள் கூடாத பெட்டை.. 'பாட் கரக்டர்' (bad charactor).. எப்பவும் மாலுக்கு போறதுதான் அவள் வேலை.. அங்க பொடியளை 'சைற்' அடிக்கிறதுதான் அவள் வேலை.. அதுதான் அவளை என்ரை 'கொம்பியூட்டரை'க்கூடத் தொட விடுறதில்லை.. நான் இல்லாபோது என்ரை 'ஐடி'ய 'மிஸ்யூஸ்'பண்ணிட்டாள்.. நீ அவளை மறந்துடு.. சொல்லிட்டேன்.."

"ம்.."

ஒருநாளில் மறக்கக்கூடிய நிகழ்வுகளா அவை?! எப்படி மறப்பேன்?! வார்த்தைகளால் என் இதயத்துள் புகுந்த நினைவுகளையும் உணர்வுகளின் உருவாக்கங்களையும், கற்பனைச் சிணுங்கல்களையும், அதிலே கலந்த அவளையும் எவ்வாறு தூக்கியெறிய முடியும்? முதன்முதலில் என்னை வலிந்தழைத்து 'மெசன்சரில்' இனியராகம் பாடி என்னைத் தாலாட்டிய உறவல்லவா?! எவ்வாறு உதறித்தள்ளுவது?!

"என்ன ம்.. அவளை மறந்துட்டு சாரு அக்காவை கலியாணம் செய்.. ஓகே?"

"ஐயோ.. உனக்கெப்படிச் சாருவை தெரியும்..?"

"லொள்.. நீதானே மெயிலில் எழுதியிருக்காய்.. உங்களையே சுத்திச்சுத்தி வாறா எண்டு.. ஓகே சொல்லு அண்ணாக்குட்டி.."

"நீ சின்னப்பிள்ளை.. சும்மா கிட.."

"நான் என்னடா சின்னப்பிள்ளை.. பெரியபிள்ளை ஆயிட்டனே.. 'சாறி' உடுத்து.. நிறையப்பேருக்கு 'இன்விடேசன்' கொடுத்து கொண்டாடினோமே.. மொக்கு.. மொக்கு.."

"ஆகா.. அதுவும் அப்படியா.."

அவளது வார்த்தைகளால் கவலைகள் சற்றுநேரம் என்னை விலகியோடின.

"அண்ணாக்குட்டி.. பிருந்தாக்கு நிறைய பிரண்ஸ்டா.. 'கானா' நாடு தெரியுமா.. கறுப்புக் கறுப்பான பொடியங்கள்.. அவங்களோடதான் சுத்துவாள்டா.. லொள்.."

"பொய் சொல்லாதை..."

"நம்புடா.."

என் கற்பனைக்கோட்டைகள் வெகுவேகமாகச் சரிந்துகொண்டிருந்தன.

"இப்ப சொல்லு.. பிருந்தா நல்லமா? சாரு அக்கா நல்லமா?"

உடனே கூறக்கூடிய பதிலா இது?

"தெரியலை.."

"இவளவு சொல்லியும் தெரியலையா.. ம்.. நாளைக்கு சொல்லுறியா?"

சின்னப்பிள்ளையேதான்.. பதிலுக்காக அடம்பிடித்தாள்.

"பாப்பம்.."

"பாப்பம் இல்லை.. நாளைக்கு வருவன்.. சொல்லணும்.. ஓகே..? ஐயோ.. அம்மாடா.. நான் நாளைக்கு வாறேன்.. டாடா அண்ணாக்குட்டி.."

அவள் போய்விட்டாள்.

எல்லாமே மாயையாகத் தோன்றியது. இப்படியும் நடக்குமா என ஏற்கமுடியாமலிருந்தது. ஏற்காமல் விலத்தவும் முடியாமல், 'ஏன் இருக்கமுடியாது' என்ற கேள்வி எழுந்து தடுத்தது.

பின்னால் யாரோ வருவதுபோன்ற உணர்வு. திரும்பினேன். அங்கே கையில் கோப்பியுடன் சாரு.

சற்றுமுன் நிகழ்ந்த சம்பவம் நினைவிலெழக் கூச்சத்துடன் நெளிந்தேன்.

"அத்தான்.. கோப்பி குடிக்காம கொம்பியூட்டரா..?"

"ரொம்ப தாங்ஸ் அத்தான்.."

முகம்சிவக்கக் கூறினாள்.

"எதுக்கு...?"

"கீழைவிழாமல் பிடிச்சதுக்கு.."

கண்கள் சிறகடித்தன.

"எனக்குத் தெரியும்.."

"என்ன...?"

"அத்தான் என்னை கீழை விழவிடமாட்டான் எண்டு.."

கூறிவிட்டுத் துள்ளியோடும் சாருவையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

'எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்..'

என் தேகமெல்லாம் புதுவித சந்தோச உணர்வு முகிழாகி மொட்டாகி மலராகி மணம்வீச ஆரம்பித்தது.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!