செவ்வாய், 7 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 12

சாருவின் முகத்தில் சிறுவாட்டம்.

ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எதிரே தொலைக்காட்சியில் ஏதோ ஒரு தமிழ்ப்பாடலுக்கு குலுங்கி நெளிந்துகொண்டிருப்பவர்களை கவனிக்கும் நிலையில் அவளில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது.

'சற்' உலகம் என் மனச் சுமைகளைக் கூட்டி, என்னை நிம்மதியற்றவனாக்கி அலைக்கழிப்பதால் எனக்கும் ஒரு வடிகால் தேவையாக இருந்தது.

மெளனமாக அவள் எதிரேயுள்ள 'சோபா'வில் அமர்ந்து அவளையே கூர்ந்து பார்த்தேன்.

ஆழமான சிந்தனை... என் வரவைக்கூட உணராத சிந்தனை.

'கவலையா? குழப்பமா? அல்லது என்னை அலட்சியம் செய்யும் பாவனையா? இருக்காது.. ஏதோ குழப்பத்தில்தான் இருக்கிறாள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் குழப்பங்கள்.. கவலைகள்.. சுமைகள்..'

என்னையறியாமல் திடீரென என்னுள் ஒரு சிந்தனை..

'அவளது குழப்பத்திற்கு நான்தான் காரணமோ? அவள் எதிர்பார்ப்புகளுக்கால் நழுவி தொலைவுக்குச் செல்ல முயலும் என்னால் ஏதாவது குழப்பமோ?!'

அவள்மீது என்னையறியாமல் இரக்கம் தோன்றியது.

அது பரிவாகக்கூட இருக்கலாம்.

சிறுவயதில் ஓடிப்பிடித்து.. தலையில் பிடித்திழுத்து.. சீறிச் சிணுங்கி.. விம்மலும் வெப்பியாரமுமாய் கோபம் காட்டி.. முகத்தை 'ம்'மெனத் தூக்கிவைத்து.. சில மணித்துளிகளுள்.. 'தரன்.. வாடா விளையாடுவம்' என்று நாடி வரும்.. அந்த குட்டிப் பெட்டை சாரு ஒருகணம் மனக்கண் முன்னால் வந்து போனாள்.

சின்ன வயதிலேயே விளையாட்டு என்ற பெயரால் அவளை அழவைத்து வேடிக்கை பார்ப்பதுதான் எனக்குப் பிரியம். அவளும் அழுதாலும் மீண்டும் மீண்டும் என்னை நாடி வருவதே வழமை. அப்படியொரு விட்டுக்கொடுப்பு அவளுக்குள்.

அவற்றை நினைக்கும்பொழுது அவள்மீது அன்பு பொங்கியது.

ஆனால்.. அன்பு காதலாக முடியுமா என்ன?!

மெதுவாக எழுந்து, அவளது பின்புறமாகச் சென்று, வலப்பக்க காதோரம் வாயைக் குவித்து, "கூ.." எனக் கத்தினேன்.

திடுக்குற்று அலறியவாறு 'சோபா'வில் துள்ளிக் குதித்தாள். நன்றாகத்தான் பயந்துவிட்டாள்.

எனக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிரிக்கும் என்னை ஒருகணம் கோபமாகப் பார்த்தவள், ஒரு புன்முறுவலை வலிந்து வரவேற்றவளாக மெளனத்துள் அடங்கிப்போனாள்.

"சாரு..."

"ம்..."

"என்ன யோசனை.. நான் வந்ததுகூடத் தெரியாம அப்படி என்னதான் கற்பனை.. லண்டன் நினைவுகளா?"

நிமிர்ந்து என் கண்களை ஊடுருவினாள். அவளது உதடுகள் எதையோ கூறத் துடித்தன. என்ன நினைத்தாளோ? பார்வை தொலைக்காட்சிப்பெட்டியில் பதிந்தது. அதில் ஒரு காதல் பாட்டுக்கு நாயகனும் நாயகியும் உடல்களை குலுக்கி ஓடித்திரிந்துகொண்டிருந்தனர். அவர்களின் பின்னால் பாடல் தாளத்துக்கு ஏற்றவாறு நெளிந்தவாறு ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டம்.

"அத்தான்.. "

கண்களில் சிறுகலக்கம்.

"இன்னும் ஒரு கிழமை இருக்கு.."

பெருமூச்சுவிட்டாள் சாரு.

"ம்.. பிறகு.. 'கொஸ்ரல்'ல போயிருந்து படிக்கவேண்டியதுதானே? அதுக்கு என்ன யோசனை?"

"அதுக்கு யோசனை இல்லை.. இன்னும் ஒரு கிழமையால லண்டனுக்குப் போறதை நினைக்கத்தான் கவலையா இருக்கு.."

"ஏன்.. லண்டன் சரியில்லையா?"

குறும்பாகக் கேட்டேன்.

"ஜேர்மன்.. லண்டன்.. இதிலை என்ன இருக்கு.. மாமி மாமா .. இவங்களோட இன்னும் கொஞ்சக்காலம் இருக்கவேணும்போல இருக்கு.. அதுதான்.."

"அப்போ என்கூட இல்லையாடி.."

திடீரென என்னையறியாமல் கேட்டுவிட்டேன்.

அவள் 'வெடுக்'கெனத் தலைநிமிர்த்தி என்னைப் பார்த்தபோது.. கண்களில் தோன்றிய ஒளிவட்டம் என்னைத் தடுமாறச் செய்தது.

அந்த ஒளியில் பொதிந்திருந்த எதிர்பார்ப்பு என்னைத் தாக்குவதாக உணர்ந்தேன்.

'கேட்டிருக்கக் கூடாது' என்ற எண்ணம் காலம்கடந்து தோன்ற, என்னை நொந்துகொண்டேன்.

"அத்தான்.. நீ சொன்னால் இங்கேயே இருந்துடுவேன்.."

வார்த்தைகள் தடுமாறி வந்தன.

எது என்னைநோக்கி வரக்கூடாது என நினைத்தனோ.. அது நேரடியாகவே வந்துவிட்டது.

'என்ன சொல்வது.. எனது பிருந்தாவைப்பற்றியா.. யார் அவள்.. என்ன மதம்.. எத்தனை வயது.. எதுவுமே தெரியாமல் எப்படி சொல்வது?'

என் மனம் தடுமாறியது.

சிறுவயதில் இருந்தே.. என்னுடன் சண்டையிட்டாலும் வலிய அண்டி அண்டி வரும் சாருவா? ஒரு போட்டோ கேட்டதற்காக 'ஒரேயடியா போறேன்ரா' என்று ஓடி ஒழிந்துகொண்ட பிருந்தாவா?

எனக்குள் ஒரு போராட்டம் ஆரம்பமானது.

அவள் ஓடியோடி போவதால்தான் காதல் தோன்றியதோ? அக்கரைப்பச்சை மயக்கத்தில் இக்கரை இன்பத்தின் பெறுமதி உணரப்படாமல் போனதோ?!

"சாரு.. எனக்கு உன்னிலை அன்பு இல்லையெண்டு நினைக்கிறியா? என்னவோ தெரியலை.. என்னாலை எதிலையுமே ஒழுங்கா இருக்க முடியேலை.. மனம் ஒரு குரங்கு என்பாங்க.. இப்ப என் மனசும் அப்பிடித்தான்.. ஒரு நிலையா இல்லை.."

"அப்படி என்ன அத்தான் குழப்பம்..?"

அருகில் வந்து உட்கார்ந்தாள்.

"தேவைகள் வசதிகள் கூடக்கூட குழப்பங்களும் கூடுதுதானே சாரு.. அதுதான்.. "

"ஐயோ.. இப்பதான் எனக்கு குழப்பமா இருக்கு.. விளக்கமா சொல்லுங்க.."

"ம்.. நீ லண்டனுக்கு போறதுக்கிடையிலை நிச்சயமா சொல்லுறன் சாரு.. உனக்கு கட்டாயம் சொல்லுவன்.. என்னவாலும் எழுதலாம் எண்டு கணனி வாங்கினன்.. பிறகு கொஞ்சம் வசதியான கணனி நல்லாயிருக்கும் எண்டு மாத்தினன்.. அதில இன்ரர் நெற் கொனெக்சன்போட்டால் நாலு ஊர்புதினம் அறியலாம் எண்டு போட்டன்.. இன்ரர் நெற் போட்டாச்சா.. 'சற்' ரூம் போய் பார்க்க ஆசை வந்திச்சு.. இப்படி ஒவ்வொரு ஆசைகள்.. ஒவ்வொரு அறிமுகங்கள்.. ஒவ்வொரு தேவைகள்.. தேவைகள் கூடும்போது தேவையில்லாத குழப்பங்கள்.. சோகங்கள்.."

அர்த்தத்துடன் அவளைப் பார்த்தேன்.

"அத்தான்.. எதையோ சொல்ல பயப்படுறமாதிரி இருக்கு.."

"ம்.. எப்பவெண்டாலும் சொல்லத்தானே வேணும் சாரு? நிச்சயமா சொல்லுவன்.. நீ லண்டனுக்கு போறதுக்கிடையில நிச்சயமா எல்லாத்துக்கும் முடிவு வரும் சாரு.. என்னை நம்பு.."

அவளது முகத்தில் திடீரென ஒரு பிரகாசம்.

ஒரு கிழமைக்குள் அவளது குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

அப்போது வாசல் கதவு திறக்கும் ஒலி கேட்டது. வெளியே சென்ற அம்மாவும் மாமா குடும்பத்தினரும்தான் வந்தார்கள்.

"அப்பாடா.. என்ன குளிர்.. என்ன குளிர்.."

சலிப்புடன் 'சோபா'வில் அமர்ந்தாள் அம்மா.

எங்கள் இரண்டு பேரையும் அங்கே கண்டதில் அவளுக்கும் சந்தோசம். முகத்தில் தெரிந்தது.

"மாமி.. கோப்பி கொண்டு வரட்டுமா?"

"என்ன கேள்வி.. எல்லாருக்கும் போடு"

மாமாதான் கூறினார்.

சாரு புள்ளியிலா மானாகச் சமையலறைக்குத் துள்ளியோடினாள்.

"மாமீ...!!"

சமையலைறையில் இருந்து சாருவின் குரல்..

"கோப்பி எங்க இருக்கு..."

"மேல இருக்கு பிள்ளை.. தரன்.. மேல் அலுமாரில இருக்கு.. எடுத்துகொடுடா.. அவளுக்கு எட்டுமோ தெரியேலை.."

உள்ளே சென்றபோது.. அவளே நுனிக்காலில் நின்று கோப்பிப் போத்தலை எடுப்பதில் முனைந்திருந்தாள்.

சற்றும் எதிர்பாராதவகையில் அவள் நிலைதடுமாறிச் சரிய.. ஓடிச்சென்று அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டேன்.

பூக்கொத்தொன்று என் கைகளுள் விழுந்து என்னுடம்பை அதிரவைத்தது.

அவள் கரமொன்று என் தோள்மீது.. அவளாகப் போட்டாளா.. தற்செயலாகவா? புரியவில்லை.

"என்ன சத்தம் அங்கே.. என்னத்தை போட்டுடைக்கிறியள்?" என்றவாறு அம்மா வருவதை உணர்ந்து அவளைவிட்டு விலகிச் சென்றேன்.

அவளை நிமிர்ந்து பார்க்க எதுவோ தடுத்தது. தலையைக் குனிந்தவாறு 'பட,பட'க்கும் மனதுடன் எனது அறையை அடைந்தேன்.

என் மனதில் ஏதேதோ இனம்புரியாத உணர்வுகள்.. புதிய அனுபவம்.. எதிர்பாராத அனுபவம்.

நிலைகுலைந்தேன்.

என்னால் என்னை நிதானப்படுத்த இயலவில்லை.

புழுக்கமாகவிருந்தது. சித்திரவதையாக இருந்தது.

ஒருகணம் கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயன்றேன்.. மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு மனதில் வந்துகொண்டே இருந்தது.

அந்த நினைவுகளுக்குத் தடைபோட்டாகவேண்டும். எனக்கே என்னில் பயமாகவிருந்தது. இந்தநேரத்தில் என் பிருந்தாவுடன் உரையாடவேண்டும் போலிருந்தது.

கணனியைப் போட்டேன்.

'பிருந்தா.. ஓன்லைனில் இருப்பாயா.. என் உள்ளக் கொதிப்பை ஆற்றுவாயா?'

மனது கணனிக்கும் மேலான வேகத்தில் அங்கலாய்த்தது.

மெசன்சரை திறந்தேன். ம்.. அவளை காணவில்லை. மனம் சோர்ந்தது. ஏதாவது செய்தாகவேண்டும்போலிருந்தது.

அவளுக்கு 'மெயில்' எழுத ஆரம்பித்தேன்.

'என் உள்ளமெல்லாம் நிறைந்திருப்பவளே!...'

இவ்வாறு எழுதினால் அவளுக்கு எனது தமிழ் விளங்குமா.. எழுதவேண்டும்போல ஒரு வெறி.. தொடர்ந்தேன்.

'ஒவ்வொரு நிமிடத் துளிகளும் பிருந்தா பிருந்தாவென்று உன் நினைவிலேயே களிப்பின்றிக் கழிவதை நீ அறிவாயா? 'சற்' அறையொன்றில் தனிமையில் நின்று தத்தளித்தவனுக்குத் தண்மையைக் காட்டிப் பொழுதுகளை வசந்தமாக்கிய என் முகந்தெரியாத உறவே! இப்போது என்னைத் தனியேவிட்டு எங்கே சென்றாய்? பிரிவில் என்னைக் கருக்கி மறைந்திருப்பதில் எதைக் கண்டாய்? என்னிலை புரியுமா உனக்கு? நித்தம் நித்தம் அல்லாடும் மனதுடன் நிஜத்துக்கும் நிழலுக்குமிடையே உண்மை புரியாமல் உருக்குலைவதை அறியாயா? என் மச்சாள் சாருதான் என் வாழ்க்கைத்துணை எனச் சொல்லாமல் சொல்லும் என் அம்மா.. கண்களால் என் சம்மதம் கேட்டு என்னையே வளைய வரும் சாரு.. என் நல்ல முடிவுக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.. அவள்மட்டுமா? நானுந்தானே.. உன் நல்ல பதிலுக்காக உன் வருகையை நாடித் தவமிருக்கிறேன்.. எங்கு சென்றாய் என்னுயிரே? உன் மெசன்சரில் எவர் 'ஓன் லைனில்' இருந்தாலும் என்னுடன் பேசத்தான் விருப்பமென்று என் மனதினைத் தென்றாலாக வருடினாயே? அது வெறும் வார்த்தைகளா? வேசமா? மோசமா? நேசமே இல்லாத எழுத்துக்களின் சோடனைகளா? உனக்கு என்மேல் அன்பே கிடையாதா? பாசமோ.. வேசமோ.. ஓடிவந்து உண்மையைக் கூறிவிடு.. என்னைக் காக்க வைத்துக் கொஞ்சங்கொஞ்சமாகக் கொல்லாதே.. என்னையே நான் ஏமாற்றிக்கொள்கிறேனா என்றாவது வந்து சொல்லிவிடு.. இன்றேல்.. ஒருவனது அழிவுக்கு ஆளான பாவமும் பழியும் உன்னைச் சும்மாவிடாது.. உன் வரவை வெகுவிரைவாக எதிர்பார்க்கிறேன்.. நிம்மதியற்று நிலைகுலையும் உன்மேல் அன்புகொண்ட தரன்.'

ஏதோ ஒரு வேகத்தில் எழுதியதை அனுப்பிவிட்டு.. கண்களை மூடியவாறு கதிரையில் சாய்ந்தேன்.

அங்கே.. கலகலப்பாக பிருந்தா.. ஏக்கம் நிறைந்த விழிகளுடன் சாரு.. மாறிமாறிக் கோலம் காட்டினார்கள்.

எவ்வளவு நேரம்தான் அப்படியே இருந்தேனோ தெரியவில்லை.

கண்களைத் திறந்து பார்த்தேன்.

நம்பமுடியவில்லை.

மெசன்சரில் பிருந்தாவின் பொம்மை பச்சை நிறங்காட்டியது.

இனந்தெரியாத ஆனந்தப் பிரவாகம் என் உள்ளத்தில்..

"கலோ.. என் ஐஸ்கிறீம் சிலையே..."

மெளனம். பதில் இல்லை.

"பேசுடி.. என் செல்லமே.. சுகமாய் இருக்கியா..?"

"....."

"கோபம் எண்டால் சொல்லிடு.. பேசாமல் இருந்து கொல்லாதைடி.. ஆத்திரம் எண்டால் 'எம்எம்' எண்டு திட்டு.. ப்ளீஸ்.."

அவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.

"ஏண்டி என்னை சித்திரவதை பண்ணுறாய்.. ஒரு வார்த்தை பேசுடி.."

"ஹேய்! கூ ஆர் யூ மான்? (Hey! Who are you, Man?)"

நான் அதிர்ச்சியால் உறைந்தேன்.
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!